எங்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள்
1 பூர்வ கிறிஸ்தவர்கள் எங்கும் நற்செய்தியை பிரசங்கித்தார்கள். அவர்கள் அந்தளவுக்கு வைராக்கியமாக இருந்ததன் காரணமாக, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்பட்டு 30 ஆண்டுகளுக்குள்ளாகவே, ராஜ்ய செய்தி ‘வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டது.’—கொலோ. 1:23.
2 யெகோவாவின் வைராக்கியமான இன்றைய ஊழியக்காரர்கள் அதே குறிக்கோளை—ராஜ்ய நற்செய்தியை கூடுமானளவு அனைவருக்கும் பிரசங்கிக்கும் குறிக்கோளை—உடையவர்களாக இருக்கின்றனர். இந்த இலக்கை அடைய எது நமக்கு உதவக்கூடும்? அதிகமதிகமான ஜனங்கள் முழுநேர வேலை செய்கிறார்கள், நாம் செல்லும்போது அடிக்கடி அவர்கள் வீட்டில் இருப்பதில்லை. வீட்டில் இல்லாதவர்களைப் பற்றிய ஒரு நல்ல பதிவைக் கொண்டிருந்து, மீண்டும் அவர்களைச் சந்திப்பதில் உன்னிப்பாய் கவனம் செலுத்துவதற்கான அவசியத்தை இது முக்கியப்படுத்தி காட்டுகிறது. இருந்தாலும், சிலவேளைகளில், பல முறை சென்று நோக்கியபோதும், ஒருசில வீடுகளில் எவரையும் காண முடிவதில்லை. அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் வேலையில் இல்லாதபோது, ஒருவேளை பயணம் செய்துகொண்டோ கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டோ ஏதோவொரு விதமான பொழுதுபோக்கை அனுபவித்துக்கொண்டோ இருப்பார்கள். அவர்களில் பாத்திரமானவர்களுக்கு எவ்வாறு ராஜ்ய செய்தி சென்றெட்டப்படுகிறது?—மத். 10:11.
3 சிலர் வேலைபார்க்கும் இடங்களில் சந்திக்கப்படுகின்றனர். சிறிய பட்டணங்களிலும்கூட, அநேக ஜனங்கள் பெரும்பாலான நேரத்தை செலவிடும் வியாபாரப்பகுதி இருக்கிறது. நகரங்களில், தொழில்மயமான பகுதிகளிலோ அலுவலக கட்டிடங்களிலோ வேலைசெய்பவர்களுக்கும் பலத்த பாதுகாப்புள்ள குடியிருப்புக் கட்டிடங்களில் அல்லது காலனிகளில் வாழ்பவர்களுக்கும் சாட்சி கொடுக்கப்படுகிறது—அவர்களில் அநேகர் முதன்முறையாக சாட்சி பெறுகின்றனர். வாரயிறுதி நாட்களின்போது, பூங்காக்களில் ஓய்வாக இருக்கையில், கடற்கரையில், திரையரங்கங்களுக்கு வெளியே, அல்லது வாகனம் நிறுத்துமிடங்களில் காத்திருக்கையில் அல்லது கடைவீதிகளில் சந்திக்கப்பட்ட சிலர், நற்செய்திக்கு செவிசாய்க்க மனமுள்ளோராக இருந்தனர்.
4 அதிகரிக்கும் எண்ணிக்கையான பிரஸ்தாபிகள், பொதுவிடங்களில் ஜனங்களை எங்கெல்லாம் காணமுடியுமோ அங்கெல்லாம் சாட்சி கொடுப்பதற்காக விசேஷ முயற்சியை எடுத்துவருகின்றனர். வீட்டுக்குவீடு போன்ற அதிக முறைப்படியான பிரசங்கத்தை செய்தே பழக்கப்பட்டிருந்ததன் காரணமாக, இந்தச் சாட்சிகள் முதலில் தயக்கமாகவும் சற்று பயமாகவும் உணர்ந்தனர். இப்போது அவர்கள் எவ்வாறு உணருகின்றனர்?
5 “அது என் ஊழியத்திற்கு புதுத் தெம்பை அளித்திருக்கிறது!” என்பதாக அனுபவம் நிறைந்த ஒரு சகோதரர் உணர்ச்சிபொங்க கூறினார். “அது என் கவனத்தை எப்போதும் ஒருமுகப்படுத்துகிறது,” என்பதாக மற்றொருவர் கூறினார். வயதான பயனியர் ஒருவர் இவ்வாறு கண்டிருக்கிறார்: “அது மனோரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஆவிக்குரியரீதியாகவும் புத்துணர்வூட்டுவதாக இருந்திருக்கிறது, . . . நான் இன்னும் முதிர்ச்சியும் அடைகிறேன்.” மகிழ்ச்சிதரும் இந்த வேலையில் இளைஞர்களும் விறுவிறுப்பாக பங்குகொள்கின்றனர். ஓர் இளைஞன் இந்த விதத்தில் தன் உணர்ச்சியைத் தெரிவிக்கிறான்: “நீங்கள் அவ்வளவநேக மக்களோடு பேசும் வாய்ப்பிருப்பதால் ஜாலியாக இருக்கும்.” மற்றொருவன் சொல்கிறான்: “முன்னொருபோதும் இராதளவில் நான் அதிக பிரசுரங்களை அளித்துவருகிறேன்!” இவையெல்லாம் மறுபடியும் மறுபடியும் சாட்சிகொடுக்கப்பட்ட பிராந்தியத்தில் நடைபெற்றுவருகின்றன.
6 பயணக் கண்காணிகள் முன்நின்று நடத்துகின்றனர்: “இவ்வுலகத்தின் காட்சி மாறிவருகிறது” என்பதை உணர்ந்து, கூடுமானளவு அநேக ஜனங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக வாராவாரம் வெளி ஊழிய அட்டவணையை மாற்றியமைத்துக்கொள்ளுமாறு பயணக் கண்காணிகளுக்கு சங்கம் சமீபத்தில் ஆலோசனையளித்தது. (1 கொ. 7:31, NW) பல வருடங்களாக, வட்டாரக் கண்காணிகள் வாரநாட்களின் காலைவேளைகளை வீட்டுக்குவீடு ஊழியம் செய்வதற்கும், மதியவேளைகளை மறுசந்திப்புகள் செய்வதற்கும் வீட்டு பைபிள் படிப்புகள் நடத்துவதற்கும் ஒதுக்குகின்றனர். இந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், அந்தத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கலாம். மற்ற இடங்களில், குறிப்பிட்ட வாரநாட்களின் காலைவேளைகளில் வீட்டுக்குவீடு ஊழியம் செய்வது அதிக பிரயோஜனமாய் இருக்காது. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களின்போது, காலைவேளையில் கடைக்குக் கடை ஊழியத்திலோ தெரு ஊழியத்திலோ ஈடுபடுவது நல்லதென பயணக் கண்காணி ஒருவேளை தீர்மானிக்கலாம். அல்லது அலுவலக கட்டிடங்கள், கடைவீதிகள், வாகனம் நிறுத்துமிடங்கள் அல்லது மற்ற பொதுவிடங்கள் ஆகியவற்றில் சாட்சி கொடுப்பதற்காக சிறு தொகுதிகளை அவர் ஒருவேளை ஏற்பாடு செய்யலாம். வெளி ஊழியத்தில் செலவிடப்படும் நேரத்தை அதிக திறம்பட்ட விதத்தில் பிரஸ்தாபிகள் பயன்படுத்துவதன் மூலம், இன்னுமதிக ஜனங்களை சந்திக்க முடியும்.
7 இந்த மாற்றம், பயணக் கண்காணிகளாலும் பிரஸ்தாபிகளாலும் ஒரேவிதமாக வரவேற்கப்பட்டிருக்கிறது என்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன. அநேக மூப்பர் குழுக்கள், உள்ளூரில் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஊழிய அம்சங்களில் சில பிரஸ்தாபிகளை பயற்றுவிப்பதற்காக வட்டாரக் கண்காணியை அழைத்திருக்கின்றன. இந்த நடவடிக்கைகள் ஒன்றில் பயணக் கண்காணி ஈடுபடும்போது அவரோடு சேர்ந்து செல்வது பிரஸ்தாபிகளுக்கு அதிக உதவியாக இருந்திருக்கிறது. அவர்கள், தங்கள் பங்கில், மற்றவர்களுக்கு பயிற்சியளிக்க முடிந்திருக்கிறது. (2 தீ. 2:2) அதன் விளைவாக, இப்போது இன்னுமதிக ஜனங்களை நற்செய்தி சென்றெட்டுகிறது.
8 சந்தேகமில்லாமல், பிரசங்கிப்பதன் இப்படிப்பட்ட மற்ற வழிகள் சிலவற்றை முயற்சி செய்து பார்ப்பதற்கு வட்டாரக் கண்காணி வரும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. உங்களது பிராந்தியத்தில் நடைமுறையானதாக நீங்கள் ஒருவேளை காணும் வெவ்வேறு ஆலோசனைகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன:
9 தெரு ஊழியம்: வாரநாட்களில் ஒரு காலையில், வெறிச்சோடி கிடக்கும் குடியிருப்பு பகுதிக்குச் செல்கையில், ‘மக்கள் அனைவரும் எங்கே?’ என்று நாம் சிலநேரங்களில் யோசிப்பதுண்டு. சிலர் ஏதாவது சிறு வேலைகளைக் கவனிக்க அல்லது கடைக்குச் சென்றிருக்கக்கூடும். தெரு ஊழியத்தின் மூலம் அவர்களை சந்திக்க நீங்கள் முயன்றிருக்கிறீர்களா? ஊழியத்தின் இந்த அம்சம், சரியாக செய்யப்படும்போது மிகவும் பலன்தருவதாய் அமையக்கூடும். ஒரே இடத்தில் பத்திரிகைகளை வைத்துக்கொண்டு நிற்பதற்கு பதிலாக, ஆட்களை அணுகி சிநேகப்பான்மையான உரையாடலை ஆரம்பிப்பது சிறந்தது. கடந்துசெல்லும் ஒவ்வொருவருக்கும் சாட்சி கொடுக்க வேண்டும் என்பது அவசியமல்ல. கடையிலுள்ள பொருட்களை வெறுமனே பார்வையிடுபவர்கள், நிறுத்தப்பட்ட கார்களில் இருப்பவர்கள் போன்ற சாவகாசமாக இருப்பவர்களிடம் அல்லது பொதுப் போக்குவரத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களிடம் பேசுங்கள். முதலில், வெறுமனே நீங்கள் ஒருவேளை சிநேகப்பான்மையோடு அவர்களை வாழ்த்தி, பின் பிரதிபலிப்பிற்காக காத்திருக்கலாம். அந்த நபர் பேசுவதற்கு மனமுள்ளவராக இருந்தால், அவருக்கு அக்கறையூட்டும் என நீங்கள் நினைக்கும் ஒரு பொருளின்பேரில் அவரது அபிப்பிராயத்தைக் கேளுங்கள்.
10 ஒரு பயணக் கண்காணி, ஆறு பிரஸ்தாபிகளை தெரு ஊழியத்தில் தன்னுடனும் தனது மனைவியுடனும் சேர்ந்துகொள்ளும்படி அழைத்தார். என்ன விளைவுகளுடன்? “நாங்கள் ஒரு அருமையான காலைப்பொழுதை அனுபவித்தோம்!” என்பதாக அவர் சொல்கிறார். “வீட்டிலில்லை என்ற பிரச்சினையே இல்லை. எண்பது பத்திரிகைகளும் அநேக துண்டுப்பிரதிகளும் அளிக்கப்பட்டன. ஆர்வத்தைத் தூண்டும் அநேக உரையாடல்களை நாங்கள் நடத்தினோம். முதன்முறையாக தெரு ஊழியத்தில் ஈடுபட்ட ஒரு பிரஸ்தாபி இவ்வாறு உணர்ச்சிபொங்க கூறினார்: ‘நான் பல வருடங்களாக சத்தியத்தில் இருந்து வருகிறேன், ஆனால் நான் எதை இழந்திருந்தேன் என்பதை உணரவில்லை!’ அந்த வாரத்தின் முடிவிற்குள், சபையில் மலைபோல் குவிந்திருந்த பத்திரிகைகள் போன இடம் தெரியவில்லை.”
11 அடுத்த சபைக்கு சென்றபோது, ஒருநாள் அதிகாலை அநேக பிரஸ்தாபிகள் தெரு ஊழியத்தில் பங்குகொண்டதையும் அதிக வெற்றியைக் காணவில்லை என்பதையும் அதே பயணக் கண்காணி தெரிந்துகொண்டார். ஒரு சகோதரி சாட்சி கொடுத்த அந்த முழு சமயத்தின்போதும் வெறுமனே இரண்டு ஆட்களிடம்தான் பேசியிருந்தார், ஏனெனில் அவர் சந்தித்த மற்ற அனைவரும் அவசரமாக வேலைக்கு சென்றுகொண்டிருந்தனர். அதே தெருவிற்கு காலைவேளையில் கொஞ்சம் தாமதமாக மறுபடியும் செல்லுமாறு அந்தப் பயணக் கண்காணி அவர்களுக்கு ஆலோசனையளித்தார். அதை அவர்கள் செய்தார்கள், மதியவேளைவரை அங்கேயே இருந்தார்கள். வெறுமனே இரண்டு பேரிடம் மாத்திரமே பேசியிருந்த அந்தச் சகோதரி, மறுபடியும் சென்றபோது எவ்வளவோ நன்றாக செய்தார். அவர் 31 பத்திரிகைகளையும் 15 சிற்றேடுகளையும் அளித்து, ஏழு நபர்களின் பெயர்கள் மற்றும் விலாசங்களை பெற்றுக்கொண்டு, இரண்டு வீட்டு பைபிள் படிப்புகளை ஆரம்பித்தார்! அந்தத் தொகுதியிலிருந்த மற்றவர்கள் அதேவிதமான உற்சாகமூட்டும் பலன்களைப் பெற்றனர்.
12 ஆர்வம் காட்டும் ஒருவரை நீங்கள் சந்தித்தால், அந்த நபரின் பெயரையும், விலாசம் அல்லது தொலைபேசி எண்ணையும் பெற்றுக்கொள்ள முயலுங்கள். விவரங்களை நேரடியாகவே கேட்பதற்குப் பதிலாக, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “இந்த உரையாடலை நான் மகிழ்ந்தனுபவித்தேன். மற்றொரு சமயம் தொடர்ந்து பேச ஏதாவது வழி இருக்கிறதா?” அல்லது இவ்வாறு கேளுங்கள்: “உங்களை வீட்டில் நான் சந்திப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?” இந்த முறையில் சந்திக்கப்படும் அநேகர் மறுசந்திப்பிற்கு ஒப்புக்கொள்கின்றனர். பயன்படுத்துவதற்கு போதுமானளவு துண்டுபிரதிகளை வைத்திருக்க நிச்சயமாயிருங்கள்; அக்கறை காட்டுவோரை நம் கூட்டங்களுக்கு வரும்படி அழைக்கையில், மிக அருகிலுள்ள கூடும் இடத்தையும் கூட்டங்களின் நேரங்களையும் ஒருவேளை ஒரு துண்டுபிரதியில் உடனடியாக எழுதிக்கொடுக்க தயாராக இருங்கள்.
13 நீங்கள் பேசிய ஆர்வம்காட்டும் நபர் மற்றொரு சபைக்கு நியமிக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தில் வாழ்ந்துவந்தால், அங்குள்ள சகோதரர்கள் அவரை சந்திக்கும்படி நீங்கள் விவரங்களை அங்கு அனுப்ப வேண்டும். உங்களது பகுதியில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு தெரு ஊழியம் திறம்பட்ட ஒரு வழியாக இருக்குமா? அவ்வாறு இருந்தால், நம் ராஜ்ய ஊழியம் ஜூலை 1994-வது பிரதியில் கொடுக்கப்பட்டுள்ள “அக்கறைகாட்டுவோரை, பலன்தரும் தெரு ஊழியத்தின்மூலம் கண்டுபிடித்தல்” என்ற கட்டுரையை மறுபார்வை செய்யுங்கள். பின்பு, கூடுமானவரை அநேக மக்களையும் சந்திப்பதற்கு உங்களுக்கு உதவும் பொருத்தமான சமயத்தில் தெரு ஊழியத்தில் பங்குகொள்ள ஏற்பாடு செய்யுங்கள்.
14 பொதுப் போக்குவரத்தில் சாட்சிகொடுத்தல்: ஒருநாள் காலை, அநேக பயனியர்கள், உள்ளூர் கல்லூரி ஒன்றின் அருகே பஸ்ஸிற்காக காத்துக்கொண்டிருந்த நபர்களிடம் சாட்சிகொடுக்க தீர்மானித்தனர். மகிழ்வளித்த உரையாடல்கள் சிலவற்றை அவர்கள் நடத்தியபோதிலும், ஒரு பிரச்சினை இருந்தது. கலந்தாலோசிப்பு மும்முரமாக நடக்கும்போதுதான், பஸ் வந்து, உரையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும். பயனியர்கள் பஸ்ஸில் ஏறி, பட்டணத்தில் பயணிகளுடன் பிரயாணம் செய்துகொண்டே தொடர்ந்து சாட்சிகொடுப்பதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகண்டனர். கடைசி ஸ்டாப்பை அடைந்தவுடன், பயனியர்கள் மறுபடியும் பஸ் பிரயாணத்தை மேற்கொண்டு, சாட்சிகொடுத்துக்கொண்டே திரும்பினர். இவ்வாறு அநேகமுறை போய்வந்த பிறகு, அவர்கள் தங்கள் முயற்சியின் பலன்களை ஒன்றுசேர்த்து கணக்கிட்டனர்: 200-க்கும் அதிகமான பத்திரிகைகள் அளிக்கப்பட்டன, மேலும் ஆறு பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. சில பயணிகள், தங்களை வீட்டில் சந்திக்கும்படி மனப்பூர்வமாக தங்களது விலாசத்தையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்கள். அடுத்த வாரம், பயனியர்கள் பஸ் நிலையத்திற்கு மீண்டும் சென்று அதே முறையை பின்பற்றினர். அவர்கள் 164 பத்திரிகைகளை அளித்தனர்; மற்றொரு பைபிள் படிப்பையும் ஆரம்பித்தனர். ஒரு நிறுத்தத்தின்போது, ஒரு பயணி பஸ்ஸில் ஏறி, காலியாக இருந்த ஒரே இருக்கையில்—ஒரு பயனியருக்கு அருகே—அமர்ந்தார். அவர் சகோதரரைப் பார்த்து புன்முறுவலுடன் இவ்வாறு சொன்னார்: “எனக்குத் தெரியும், நீங்கள் எனக்கு ஒரு காவற்கோபுரம் கொடுக்கப்போகிறீர்கள்.”
15 பஸ் அல்லது இரயில் மூலம் பயணம் செய்கையில் அநேக பிரஸ்தாபிகள் திறம்பட்ட சாட்சிகொடுக்கின்றனர். உங்களுக்கருகே அமர்ந்திருக்கும் ஒரு பயணியிடம் நீங்கள் எவ்வாறு பேச ஆரம்பிக்கலாம்? ஒரு 12-வயது பிரஸ்தாபி, பஸ்ஸில் தனக்கருகே அமர்ந்திருந்த ஒரு பருவவயதுப் பெண்ணின் ஆர்வத்தைத் தூண்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பில், விழித்தெழு! பிரதியை வாசிக்க ஆரம்பித்தான். பலன் கிடைத்தது. அவன் என்ன வாசித்துக்கொண்டிருந்தான் என அந்தப் பெண் கேட்டாள்; இளைஞர் எதிர்ப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கான தீர்வைக் குறித்து வாசித்துக்கொண்டிருந்ததாக அவன் பதிலளித்தான். அவன் அந்தக் கட்டுரையிலிருந்து அதிக நன்மையடைந்ததாகவும் அவளுக்கும் அது உதவக்கூடும் என்பதாகவும் கூடுதலாக சொன்னான். அவள் சந்தோஷமாக பத்திரிகைகளை ஏற்றுக்கொண்டாள். அவர்கள் பேசியதை மற்ற இரண்டு இளைஞர்கள் கேட்டனர், அவர்களும் பத்திரிகைகளைக் கேட்டனர். பின், பஸ் ஓட்டுனர் சாலையோரத்தில் பஸ்ஸை நிறுத்தி, இந்தப் பத்திரிகைகளில் ஏன் அந்தளவுக்கு ஆர்வம் காட்டினர் என்பதாக கேட்டார். அதைத் தெரிந்துகொண்ட பிறகு, அவரும் பத்திரிகைகளை ஏற்றுக்கொண்டார். சந்தேகமில்லாமல், அந்த இளம் பிரஸ்தாபி, ஆர்வம் காட்டிய அனைவருக்கும் கொடுக்குமளவுக்கு போதுமானளவு பத்திரிகைகளை வைத்திருக்கவில்லையென்றால் இவை எவையுமே நடந்திருக்க வாய்ப்பில்லை!
16 பூங்காக்களிலும் வாகனம் நிறுத்துமிடங்களிலும் சாட்சிகொடுத்தல்: பூங்காக்களிலும் வாகனம் நிறுத்துமிடங்களிலும் சாட்சி கொடுத்தல், மக்களைச் சென்றெட்டுவதற்கான மிகச் சிறந்த ஒரு வழியாகும். ஒரு ஷாப்பிங் சென்டரின் வாகனம் நிறுத்துமிடத்தில் சாட்சி கொடுக்க முயற்சி செய்திருக்கிறீர்களா? உங்களைச் சுற்றியுள்ள சூழலைக் கவனிப்பதற்கு எப்போதுமே சற்று நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவசரமாக இல்லாத ஒருவரை அல்லது நிறுத்தப்பட்ட வாகனத்தில் காத்துக்கொண்டிருக்கும் ஒருவரை அல்லது ஒரு ஸ்கூட்டருக்குப் பக்கத்தில் நிற்கும் ஒருவரைக் கண்டு, சிநேகபான்மையான உரையாடலைத் தொடங்க முயலுங்கள். அந்த உரையாடல் தொடருமானால், ராஜ்ய செய்தியை அதில் உட்படுத்துங்கள். பக்கத்திலேயே வேறொரு பிரஸ்தாபி வேலை செய்யும்படி பார்த்துக்கொண்டு, தனியாக ஊழியம் செய்ய முயலுங்கள். பெரிய, பருமனான பையை எடுத்துச் செல்வதை அல்லது மற்ற வழிகளில் உங்கள் வேலைக்குக் கவனத்தை ஈர்ப்பதைத் தவிருங்கள். விவேகமாக இருங்கள். வாகனம் நிறுத்துமிடம் ஒன்றில் கொஞ்ச நேரத்தை மட்டும் செலவிட்ட பின்னர், வேறொன்றுக்கு சென்றுவிடுவது நல்லதாக இருக்கக்கூடும். உங்களிடம் பேச ஒருவருக்கு இஷ்டமில்லை என்றால், பண்பட்ட விதத்தில் அவரை விட்டுவிட்டு, அணுகத்தக்க வேறொருவரை தேடி செல்லுங்கள். இந்த முறைகளைப் பின்பற்றி, வாகனம் நிறுத்துமிடங்களில் சாட்சி கொடுக்கையில் ஒரு சகோதரர் ஒரு மாதத்தில் 90 பத்திரிகைகளைக் கொடுத்தார்.
17 சிலர் பூங்காக்களுக்கு ஓய்வெடுக்க செல்கின்றனர்; மற்றவர்கள் விளையாடுவதற்கோ தங்கள் பிள்ளைகளோடு நேரத்தை செலவிடுவதற்கோ அங்கு செல்கின்றனர். அவர்களது நடவடிக்கைகளில் அதிகமாக குறுக்கிடாமல், சாட்சி கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பிற்காக உன்னிப்போடு காத்திருங்கள். ஒரு சகோதரர் ஒரு பூங்காவின் தோட்டக்காரரோடு பேச ஆரம்பித்தார்; அவர் போதைப்பொருட்களைப் பற்றியும் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைக்கொண்டிருப்பதாக கண்டார். ஒரு வீட்டு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, பூங்காவில் அது தொடர்ந்து நடத்தப்பட்டது.
18 கடைவீதிகளில் சந்தர்ப்ப சாட்சிகொடுத்தல்: ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் முறைப்படி கடைக்குக் கடை பிரசங்கிப்பது, இத்தகைய ஊழியத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளின் காரணமாக, எப்போதுமே சாத்தியமாயிருக்காத சமயங்களில், சில பிரஸ்தாபிகள் அங்கே சந்தர்ப்ப சாட்சிகொடுப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் இருக்கையின்மீது அமர்ந்து, ஓய்வெடுக்க அங்கே வருவோரிடம் சிநேகப்பான்மையான உரையாடலைத் துவங்குகின்றனர். ஆர்வம் காட்டப்படும்போது, அவர்கள் விவேகத்தோடு ஒரு துண்டுப்பிரதியையோ பத்திரிகையையோ அளித்து, மறுசந்திப்பு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முயற்சி செய்கின்றனர். கடைப்பகுதியின் ஒரு இடத்தில் சில நிமிடங்கள் சாட்சிகொடுத்த பின்பு, அவர்கள் மற்றொரு இடத்துக்கு சென்று வேறெவரிடமாவது பேசுகின்றனர். நிச்சயமாகவே, இந்த முறையில் சந்தர்ப்ப சாட்சிகொடுக்கும்போது அதிக கவனத்தை ஈர்க்காமலிருக்க ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
19 ஒரு நபரை வாழ்த்தும்போது, சிநேகப்பான்மையான ஒரு குறிப்பின்பேரில் உரையாடலை ஆரம்பியுங்கள். அந்த நபர் பிரதிபலித்தால், ஒரு கேள்வியைக் கேட்டு, பின் அவரது எண்ணங்களை சொல்லும்போது கூர்ந்து கவனித்துக் கேளுங்கள். அவர் சொல்வதன்பேரில் தனிப்பட்ட அக்கறை காண்பியுங்கள். அவரது அபிப்பிராயத்தை நீங்கள் மதிக்கிறீர்களென காண்பியுங்கள். எப்போது கூடுமோ அப்போதெல்லாம் அவரோடு ஒத்துப்போங்கள்.
20 விலைவாசியின் ஏற்றத்தைப் பற்றி குறிப்பிடுவதன் மூலம் ஒரு முதிர்வயதான பெண்ணுடன் ஒரு சகோதரி இன்பகரமான பேச்சைக் கொண்டிருந்தார். அந்தப் பெண் விலைவாசி உயர்ந்திருப்பதை உடனடியாக ஒப்புக்கொண்டாள், சுவாரஸ்யமான உரையாடலே அதன் விளைவு. அந்தச் சகோதரி அந்தப் பெண்ணின் பெயரையும் விலாசத்தையும் பெற்றுக்கொண்டார், அதே வாரத்தில் மறுசந்திப்பும் செய்யப்பட்டது.
21 கடைக்குக் கடை ஊழியம் செய்தல்: பெரும்பாலான சபைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பிராந்தியத்தில் வியாபார பகுதிகளும் இருக்கின்றன. பிராந்தியத்தைக் கவனித்துக்கொள்ளும் சகோதரர், முழுமையாகவே வியாபாரத்தாலும் கடைப்பகுதிகளாலும் நிறைந்திருக்கும் பகுதிகளுக்குரிய விசேஷ வரைபட கார்டுகளை ஒருவேளை தயார்செய்யலாம். குடியிருப்புப் பிராந்திய வரைபட கார்டுகள் இவற்றில் சிலபகுதிகளை உள்ளடக்கினால், வியாபார இடங்கள் அந்தப் பிராந்தியத்தின் ஒரு பாகமாக கருதப்பட்டு ஊழியம் செய்யப்படக்கூடாதென கார்டில் தெளிவாக காண்பிக்க வேண்டும். மற்ற பிராந்தியங்களில், வியாபார இடங்கள் குடியிருப்புப் பகுதிகளோடு சேர்த்து ஊழியம் செய்யப்படலாம். கடைக்குக் கடை ஊழியத்திற்கு கவனம் செலுத்தாமலிருப்பதைத் தவிர்ப்பதற்கு, மூப்பர்கள் தகுதிபெற்ற பிரஸ்தாபிகளை வியாபார பிராந்தியங்களில் தவறாமல் ஊழியம் செய்வதற்கு அழைக்கலாம்.
22 இந்த ஊழியத்தில் பங்குகொள்ளும்படி நீங்கள் அழைக்கப்பட்டால், அதை முன்னொருபோதும் நீங்கள் செய்திருக்காவிட்டால், ‘தைரியங்கொள்வதற்கான’ ஒரு நல்ல வழி, சில சிறிய கடைகளில் முதலில் ஊழியம் செய்து, பின் இன்னும் தன்னம்பிக்கை வந்த பிறகு பெரிய கடைகளில் ஊழியம் செய்வதாகும். (1 தெ. 2:2) ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டத்திற்குச் செல்லும்போது நீங்கள் எவ்வாறு உடை உடுத்துவீர்களோ அவ்வாறே கடைக்குக் கடை ஊழியம் செய்யும்போதும் உடுத்துங்கள். கூடுமானால், வாடிக்கையாளர்கள் காத்துக்கொண்டிருக்காத கடையில் நுழையுங்கள். மானேஜரிடமோ பொறுப்பிலிருக்கும் நபரிடமோ பேசுவதற்காக அனுமதி கேளுங்கள். உள்ளன்போடும், எல்லாவற்றிற்கும் மேலாக, சுருக்கமாகவும் பேசுங்கள். வருந்துவதாக காட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அநேக வியாபாரங்கள் வாடிக்கையாளர்மீது கவனம் செலுத்துவதால், குறுக்கீடுகளை எதிர்பார்த்தேயிருக்கின்றன.
23 கடைக்காரரை வாழ்த்திய பிறகு, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “வர்த்தகர்கள் அவ்வளவு பிஸியாக இருப்பதன் காரணமாக, அவர்களை வீட்டில் அரிதாகவே பார்க்கிறோம், ஆகவே சிந்தனையைத் தூண்டும் கட்டுரை ஒன்றை நீங்கள் வாசிப்பதற்காக விட்டுச்செல்ல, நாங்கள் இங்கே உங்கள் வியாபார இடத்தில் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்.” பின்பு அளிக்கப்படும் பத்திரிகையின்பேரில் ஓரிரண்டு குறிப்புகளை சொல்லுங்கள்.
24 அல்லது ஒரு மானேஜரை அணுகும்போது இவ்வாறு நீங்கள் முயற்சி செய்யலாம்: “வர்த்தகர்கள் நன்கு தகவலறிந்தவர்களாய் இருக்க முயற்சி செய்கின்றனர் என்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம். காவற்கோபுரம் (அல்லது விழித்தெழு!) பத்திரிகையின் சமீபத்திய இதழ் நம் அனைவரையும் தனிப்பட்ட விதமாக பாதிக்கும் ஒரு கட்டுரையை சிறப்பித்துக் காட்டுகிறது.” அது என்ன என்பதை விளக்கி, இவ்வாறு சொல்லி முடியுங்கள்: “அதை வாசிப்பதில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள் என்பதில் நாங்கள் நிச்சயமாயிருக்கிறோம்.”
25 வேலையாட்கள் இருந்தால், பொருத்தமானதாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், இவ்வாறு ஒருவேளை நீங்கள் சொல்லலாம்: “உங்கள் வேலையாட்களோடும் இதேபோன்று சுருக்கமாக பேசுவதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா?” அனுமதி வழங்கப்பட்டால், நீங்கள் சுருக்கமாக பேச வாக்களித்திருக்கிறீர்கள் என்பதையும் உங்கள் வாக்கை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என மானேஜர் எதிர்பார்ப்பார் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். நீண்டநேர கலந்தாலோசிப்பு செய்ய வேலையாட்களில் எவராவது விரும்பினால், அவர்களது வீட்டில் அவர்களை சந்திப்பது சிறந்ததாக இருக்கும்.
26 சமீபத்தில், ஒரு சிறிய பட்டணத்தில் ஒருசில பிரஸ்தாபிகள் கடைக்குக் கடை ஊழியத்தை வட்டாரக் கண்காணியோடு செய்தனர். முன்னொருபோதும் இந்த ஊழியத்தை செய்திராததன் காரணமாக, சில பிரஸ்தாபிகள் முதலில் பயந்திருந்தனர்; ஆனால் விரைவில் அவர்கள் பயம் நீங்கி அதை மகிழ்ந்தனுபவிக்க ஆரம்பித்தனர். ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே, அவர்கள் 37 நபர்களிடம் பேசி 24 பத்திரிகைகளையும் 4 சிற்றேடுகளையும் அளித்தனர். கடைக்குக் கடை ஊழியம் செய்கையில் அவ்வளவு குறுகிய நேரத்தில் அவர்கள் சந்தித்த அளவு மக்களை, ஒரு மாதம் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது பொதுவாக அவர்களால் சந்திக்க முடியாது என்று ஒரு சகோதரர் குறிப்பிட்டார்.
27 பிரசங்கிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல்: இயேசு எப்போதும் முறைப்படியாக மாத்திரமே சாட்சி கொடுக்கவில்லை. பொருத்தமான ஒவ்வொரு சந்தர்ப்பத்தின்போதும் அவர் நற்செய்தியை பிரசங்கித்தார். (மத். 9:9; லூக். 19:1-10; யோவா. 4:6-15) சில பிரஸ்தாபிகள் பிரசங்கிப்பதற்கான வாய்ப்புகளை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.
28 பள்ளி நுழைவாயிலுக்கு அருகே தங்கள் பிள்ளைகளுக்காக காத்துக்கொண்டிருக்கும் பெற்றோரிடம் சிலர் வழக்கமாக சாட்சி கொடுத்துவருகின்றனர். அநேக பெற்றோர் 20 நிமிடங்களுக்கு முன்பாகவே அங்கே வந்துவிடுவதன் காரணமாக, வேதப்பூர்வமான ஒரு தலைப்பின்பேரில் அவர்களோடு ஆர்வத்தைத் தூண்டுமாறு உரையாடுவதற்கு நேரம் இருக்கிறது.
29 நமது பத்திரிகைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பொருளின்பேரில் விசேஷ அக்கறை கொண்டிருப்போரை சந்திக்க அநேக பயனியர்கள் உணர்வுள்ளவர்களாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, டிசம்பர் 22, 1995 விழித்தெழு! பிரதியில் வெளியான “பள்ளிகள் நெருக்கடியில்” என்ற கட்டுரைத்தொடரைப் பயன்படுத்தி தனது சபை பிராந்தியத்திலுள்ள ஆறு பள்ளிகளில் சாட்சி கொடுத்ததில் நல்ல பிரதிபலிப்பை ஒரு சகோதரி பெற்றார். குடும்ப வாழ்க்கை மற்றும் பிள்ளைத் துர்ப்பிரயோகத்தின்பேரில் பத்திரிகைகளை எடுத்துச்சென்று, உடல்நல மையங்களையும் அவர் சந்தித்தார்; அங்கு, அதேபோன்ற தலைப்புகளின்பேரில் வெளிவரவிருக்கும் எதிர்கால பிரதிகளை மறுபடியும் எடுத்துச்செல்வதற்கு நிரந்தரமான அனுமதியைப் பெற்றார். வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வேலையில்லா திண்டாட்டத்தின் பேரிலான மார்ச் 8, 1996, விழித்தெழு! பத்திரிகைக்கு கிடைத்த பிரதிபலிப்பு “பிரமாதம்” என விவரிக்கப்பட்டது.
30 ஒரு மாவட்டக் கண்காணி, மளிகை சாமான்கள் வாங்கும்போது எப்போதுமே தானும் தன் மனைவியும் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதாக சொல்கிறார். கடைகள் அளவுக்கதிக நெரிசலாக இல்லாத சமயமாகவும், வாடிக்கையாளர்கள் சாவகாசமாக அங்குமிங்கும் நடந்துகொண்டிருக்கும் சமயமாகவும் இருக்கும் ஒரு நேரத்தில் அவர்கள் கடைக்குச் செல்கின்றனர். அநேக நல்ல உரையாடல்கள் நடந்ததாக அவர்கள் சொல்கின்றனர்.
31 திரை அரங்கங்கள், க்ளினிக்குகள் அல்லது மருத்துவமனைகளுக்கு வெளியில் அல்லது பக்கத்தில் காணப்படும் ஆட்களிடம் சாட்சி கொடுக்கையில் நல்ல விளைவுகளை அநேக பிரஸ்தாபிகள் அறிக்கை செய்கின்றனர். மருத்துவமனைகளையும் க்ளினிக்குகளையும் பொறுத்தவரையில், வரவேற்பு பகுதியில் அவர்கள் வெறுமனே துண்டுபிரதிகளை அல்லது பழைய பத்திரிகைகளை விட்டுச் செல்வதில்லை. மக்களை நற்செய்தியுடன் சென்றெட்டுவதே அவர்களுடைய இலக்காகும்; ஆகவே பொருத்தமாக இருக்கும்போது, வேலையின்றியும் உரையாடலுக்கு மனமுள்ளவராகவும் இருப்பவர்களிடம் அவர்கள் தனிப்பட்ட விதத்தில் பேச முயலுகின்றனர்.
32 சில இடங்களில், ரயில் நிலையங்கள் அல்லது பஸ் நிலையங்களுக்கு அருகிலுள்ள மக்களிடம் பிரஸ்தாபிகள் பேசுகின்றனர். தேவையின்றி உள்ளே செல்வதை அல்லது நீண்ட நேரம் அப்படிப்பட்ட இடங்களில் இருப்பதை சட்டங்கள் தடை செய்வதாலும் பிளாட்ஃபாரங்களில் பத்திரிகைகளை அளிப்பது சட்ட விரோதமாக இருக்கும் என்பதாலும், ரயில் வரும்போது ஒருவரை சந்திப்பதற்காக ஒருவேளை காத்திருப்பதால், ஓரளவு சாவகாசமாகவும் வேறு வேலையின்றியும் இருக்கும் மக்களை நிலையத்திற்கு வெளியே சாதுரியமாக பிரஸ்தாபிகள் அணுகுகிறார்கள்.
33 சபையின் பிராந்தியத்தில் பலத்த பாதுகாப்புள்ள குடியிருப்புக் கட்டிடங்களிலும் காலனிகளிலும் உள்ளவர்களிடம் தனிப்பட்ட விதமாக சாட்சி கொடுக்க அனுமதிக்கப்படாவிட்டால், பணியிலிருக்கும் காவற்காரர்களிடமோ அந்த காலனியின் மானேஜர்களிடமோ சாதுரியமாக சாட்சி கொடுப்பதை சிலர் வழக்கமாக செய்துவருகின்றனர். அதேமுறைதான் பாதுகாவலுள்ள வாயில்களைக் கொண்ட தனிப்பட்ட அல்லது பாதுகாப்புள்ள கம்பெனி குடியிருப்புப் பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில்தான் ஒரு வட்டாரக் கண்காணியும் ஒருசில பிரஸ்தாபிகளும் ஏழு வளாகங்களில் பிரசங்கித்தார்கள். ஒவ்வொரு முறையும், வேறு பகுதிகளில் செய்வதுபோல் வீடுகளுக்குச் செல்ல தங்களுக்கு அனுமதி அளிக்கப்படாவிட்டாலும், சமீபத்திய பத்திரிகைகளிலுள்ள தகவலை அவர் இழந்துவிட தாங்கள் விரும்பவில்லை என்பதாக மானேஜரிடம் அவர்கள் சொன்னார்கள். அந்த எல்லா ஏழு வளாகங்களிலிருந்த மானேஜர்களும் பத்திரிகைகளை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு, அடுத்த இதழ்களையும் கேட்டனர்! அப்படிப்பட்ட வளாகங்களில் குடியிருப்போர் பின்பு கடிதத்தின் மூலம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்புகொள்ளப்படுகின்றனர்.
34 எங்கும் பிரசங்கிக்க பிரயாசப்படுங்கள்: நம் ஒப்புக்கொடுத்தலுக்கு ஏற்ப வாழ்வதென்பது, ராஜ்ய செய்தியை பிரசங்கிக்கும் நமது நியமனத்தின் அவசரத்தன்மையை உணர்வதை உட்படுத்துகிறது. இந்த நாட்டில் நாம் இன்னும் அநேக மக்களை அவர்களுடைய வீடுகளில் காணலாம் என்றாலும், மக்களுக்கு சௌகரியமான ஒரு சமயத்தில் நற்செய்தியை சொல்வதற்கு, “எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு” நமது தனிப்பட்ட விருப்புவெறுப்புகளை நாம் ஒதுக்கித்தள்ள வேண்டும். அனைத்து ஒப்புக்கொடுக்கப்பட்ட யெகோவாவின் ஊழியர்களும் அப்போஸ்தலனாகிய பவுல் சொன்ன விதமாகவே சொல்ல விரும்புவர்: “சுவிசேஷத்தினிமித்தமே, அதில் உடன் பங்காளியாகவேண்டுமென்றே, எல்லாவற்றையுஞ் செய்கிறேன்.”—1 கொ. 9:22, 23, தி.மொ.
35 பவுல் கூடுதலாக இவ்வாறு சொன்னார்: “ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்.” (2 கொ. 12:9, 10) வேறு வார்த்தைகளில், நம்மில் எவரும் நமது சொந்த பலத்தினால் இந்த ஊழியத்தை நிறைவேற்ற முடியாது. யெகோவாவிடம் அவரது வல்லமைமிக்க பரிசுத்த ஆவிக்காக ஜெபம் செய்ய வேண்டும். நாம் கடவுளிடம் பலத்திற்காக ஜெபம் செய்தால், நமது ஜெபங்களுக்கு அவர் பதிலளிப்பார் என்பதில் நாம் நம்பிக்கையாய் இருக்கலாம். அப்போது, மக்கள்பேரிலுள்ள நமது அன்பு, அவர்கள் எங்கே காணப்பட்டாலும் அவர்களுக்கு நற்செய்தியை பிரசங்கிக்கும் வாய்ப்புகளை நாடும்படி நம்மை தூண்டுவிக்கும். வரவிருக்கும் வாரத்தில், இந்த உட்சேர்க்கையில் சிறப்பித்துக் காண்பிக்கப்பட்ட ஆலோசனைகளில் ஒன்றை ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது?