பெற்றோரே—பிரசங்கிப்பதற்கு உங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவியுங்கள்
1 யெகோவாவை சேவிப்பதற்கு உள்ளப்பூர்வமாய் விரும்பும் அநேக பிள்ளைகளால் நம்முடைய சபைகள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றன. (பிர. 12:1) யெகோவாவை துதிப்பதற்கு அவரால் அழைக்கப்பட்டவர்கள் மத்தியில் இவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். (சங். 148:12-14) எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் அன்றாட பயிற்றுவிப்பில், ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் மற்றவர்களுடன் எவ்வாறு விசுவாசத்தை பகிர்ந்துகொள்வது என்பதன் பேரில் அவர்களுக்கு போதனையளிப்பதும் உட்பட்டிருக்க வேண்டும்.—உபா. 6:6, 7.
2 படிப்படியாக பிள்ளைகளைப் பயிற்றுவியுங்கள்: பிள்ளைகள், தங்களுடைய பெற்றோருடன் ஊழியத்தில் செல்வதற்கு மிக இளம் வயதிலேயே பயிற்றுவிக்கப்பட தகுதியானவர்கள். ஊழியத்தில் செல்வதற்கு முன்பு, உங்கள் பிள்ளைகள் அர்த்தமுள்ள விதத்தில் பங்குகொள்ள அவர்களைத் தயார்செய்யுங்கள். ஊழியத்தில் என்ன செய்யும்படி நீங்கள் அவர்களிடம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். சின்னஞ்சிறிய பிள்ளைகள் துண்டுப்பிரதிகளையும் கைப்பிரதிகளையும் விநியோகித்து ராஜ்ய மன்றத்திற்கு வரும்படி ஆட்களை அழைக்கலாம். நன்றாக வாசிக்கும் சிறுபிள்ளைகளிடம் வீட்டுக்காரருக்காக வேதவசனங்களை வாசிக்கும்படி சொல்லலாம். சுருக்கமான பிரசங்கத்தைப் பயன்படுத்தி பத்திரிகைகளை அவர்கள் கொடுக்கலாம். அவர்கள் படிப்படியாக அனுபவமடைகையில், தங்களுடைய பிரசங்கத்தில் பைபிளைப் பயன்படுத்தும்படி பயிற்றுவியுங்கள். இளம் பிரஸ்தாபிகள் அநேகர் தாங்களாகவே பத்திரிகை மார்க்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள், தவறாமல் மறுசந்திப்புகளையும் செய்கிறார்கள். ஒரு பிள்ளையை மற்றொரு இளம் பிள்ளையுடன் ஊழியம் செய்ய விடுவதற்குப் பதிலாக பெரியவர்களுடன் ஊழியம் செய்யவிடுவது மிகவும் சிறந்தது. சிறுபிள்ளைகள் ஊழியத்தில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்று பெரியவர்கள்தாமே வீட்டுக்காரரிடம் விளக்கிக் கூறலாம்.
3 ஒரு சிறுமி, தான் ஒரு ராஜ்ய பிரஸ்தாபியாக தகுதிபெறுவதற்கு மூப்பர்களிடம் உதவி கேட்டாள். அந்தச் சமயத்தில் அவள் ஐந்தே வயதுடையவளாயும் வாசிக்கக்கூட தெரியாதவளாயும் இருந்தபோதிலும், ஊழியத்தில் ராஜ்ய செய்தியை திறம்பட்ட முறையில் அவளால் சொல்ல முடிந்தது. வேதவசனங்கள் இருக்கும் இடத்தை அவள் மனப்பாடம் செய்துகொண்டாள், அந்தப் பக்கத்திற்குத் திருப்பி அவற்றை வாசிக்கும்படி வீட்டுக்காரரிடம் கேட்டுக்கொண்டு, அதன் பின்பு விளக்கத்தை அவள் கொடுத்தாள்.
4 ஊழியத்தில் ஒழுங்காக பங்குகொள்வதற்கு ஒரு நல்ல அட்டவணையை வைத்திருப்பதன் மதிப்பைக் குறித்து பெற்றோர் தங்களுடைய முன்மாதிரியின் மூலம் பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். ஊழியத்தில் வழக்கமாய் ஒவ்வொரு வாரமும் பங்குகொள்ளும் பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்தி, அதை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும்; இதன்மூலம் வாரத்தில் எந்த நாள் பிரசங்க வேலைக்காக எப்பொழுதும் ஒதுக்கி வைக்கப்படுகிறது என்பதை பிள்ளைகள் தெரிந்துகொள்வார்கள்.
5 ஊழியத்தை விரும்புவதற்கும் அதை அனுபவித்து மகிழ்வதற்கும் இளம் பிராயத்திலேயே பிள்ளைகள் பயிற்றுவிக்கப்படுகையில், எதிர்காலத்தில் பெரிய சிலாக்கியங்களுக்காக, ஒருவேளை பயனியர் சேவையில் சேருவதற்காக முன்னேறிச் செல்வதற்கு தூண்டுவிக்கப்படுவார்கள். (1 கொ. 15:58) யெகோவாவை துதிப்பவர்களாக நன்கு முன்னேறுவதற்கு நம் மத்தியிலுள்ள பிள்ளைகளை நாமனைவருமே உற்சாகப்படுத்த வேண்டும்.