கடவுளிடமிருந்து பெற்ற அறிவு அநேக கேள்விகளுக்குப் பதில்களை அளிக்கிறது
1 நீங்கள் சத்தியத்தின் திருத்தமான அறிவைப் பெறுவதற்கு முன்பாக வாழ்க்கையைப் பற்றி உங்களால் பதிலளிக்க முடியாத அநேக கேள்விகள் உங்களுக்கு இருந்திருக்கலாம். அத்தகைய கேள்விகளுக்கு பைபிள் அடிப்படையிலான பதில்களை பெற்றுக் கொண்டபோது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தீர்கள்! அதே பதில்களை மற்றவர்கள் பெற்றுக் கொள்ள இப்போது உங்களால் உதவ முடிகிறது. (2 தீமோத்தேயு 2:2-ஐ ஒப்பிடுக.) நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற கடவுளுடைய அறிவை நீங்கள் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். (யோவா. 17:3) ஆனால், இந்த அறிவின் மதிப்பைப் போற்றுவதற்கு, ஒருவருக்கு நீங்கள் எவ்வாறு உதவமுடியும்? சரி, சத்தியம் உங்களுக்குப் பதில்களை அளித்திருக்கிற கேள்விகளைப் பற்றி சற்று சிந்தியுங்கள். சத்தியத்தைத் தேடுபவர்கள் எதைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர்? இவ்விதம் சிந்திப்பது, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தை மற்றவர்களுக்கு அளிக்க உங்களுக்கு உதவி செய்யும். ஜூன் மாதத்தில் சாட்சிகொடுக்க தயார் செய்கையில் பின்வரும் ஆலோசனைகள் உங்களுக்கு உதவலாம்.
2 உலகத்தில் ஏன் இந்தளவுக்கு துன்பமிருக்கிறது என்று அநேக ஆட்கள் சிந்திப்பதால், இந்த அணுகுமுறை நல்ல விளைவை ஏற்படுத்தலாம்:
◼ “பேரழிவு ஏற்படுகையிலும் அல்லது குற்றச்செயல், வன்முறை அதிகரிக்கையிலும், ஏன் இத்தகைய மோசமான காரியங்கள் சம்பவிக்கின்றன என்று அடிக்கடி மக்கள் கேட்கின்றனர். இதற்கான உங்கள் பதில் என்ன?” பதிலளிக்க அனுமதித்து அவருடைய பதிலை ஆமோதியுங்கள். பிறகு, அறிவு புத்தகத்தில், 8-ம் அதிகாரத்திற்குத் திருப்பி, பாரா 2-ல் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு கவனத்தைத் திருப்புங்கள். கெட்ட காரியங்கள் ஏன் சம்பவிக்கின்றன என்பதற்கு பைபிளின் விளக்கத்தை இந்தப் புத்தகம் அளிக்கிறது என்பதை விளக்குங்கள். புத்தகத்தை அளித்து, நீங்கள் புத்தகங்களைக் கொடுப்பதில் மாத்திரம் அல்லாமல், அவற்றை புரிந்துகொள்ள மக்களுக்கு உதவி செய்வதிலும் அக்கறை இருப்பதை விளக்குங்கள். மறுபடியும் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்.
3 “அறிவு” புத்தகத்தைப் பெற்றுக்கொண்டவரை நீங்கள் மீண்டும் சென்று சந்திக்கையில் இவ்வாறு சொல்லலாம்:
◼ “உலகத்தில் இந்தளவுக்குத் துன்பம் இருப்பதற்கான காரணத்தைக் குறித்து நீங்கள் என்ன முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் என்பதை அறிய நான் ஆவலாயிருக்கிறேன். இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிற பைபிளின் பதிலை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?” பதிலளிக்க அனுமதியுங்கள். அறிவு புத்தகத்தில், பக்கம் 77-ல் பாரா 17-ஐ வாசித்துவிட்டு, வீட்டுக்காரரிடமுள்ள பைபிளிலிருந்து ரோமர் 9:14-ஐ வாசிக்கலாமா என்று கேளுங்கள். பிறகு இவ்வாறு சொல்லுங்கள்: “நியாயமற்றவிதத்தில் கடவுள் நமக்கு வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்தமாட்டார் என்பதே நற்செய்தியாக இருக்கிறது. சமாதானமும் சந்தோஷமுமுள்ள நித்திய ஜீவனை நமக்குக் கொடுப்பதாக அவர் வாக்களித்திருக்கிறார். இந்தப் புத்தகத்தின் முதல் அதிகாரம், ‘நீங்கள் மகிழ்ச்சியான எதிர்காலத்தை கொண்டிருக்க முடியும்!’ என தலைப்பிடப்பட்டிருக்கிறது. உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் அது எவ்வாறு நிஜமானதாக ஆகலாம் என்பதை நான் விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.” முதலாம் அதிகாரத்திற்குத் திருப்பி, நாம் படிப்பு நடத்தும் முறையை நடித்துக் காட்டுங்கள். சந்தர்ப்ப சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப அதிகாரத்தில் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு கலந்தாலோசியுங்கள்.
4 “நியாயங்காட்டிப் பேசுதல்” புத்தகத்தில் பக்கம் 14-லுள்ள “முதிர்வயது/மரணம்” என்ற தலைப்பின்கீழ் காணப்படும் அறிமுகத்தை உபயோகிக்க நீங்கள் ஒருவேளை தெரிவுசெய்யலாம்:
◼ “நீங்கள் எப்போதாவது இவ்வாறு கேட்டதுண்டா: ‘எல்லாவற்றிற்கும் மரணமே முடிவா? அல்லது மரணத்துக்குப் பின் வேறு ஏதாவது உண்டா?’ [பதிலளிக்க அனுமதியுங்கள்.] மரணத்தைப் பற்றி நமக்கு இருக்கும் எந்தக் கேள்விக்கும் தெளிவான பதிலை பைபிள் கொடுக்கிறது. [பிரசங்கி 9:5, 10-ஐ வாசியுங்கள்.] விசுவாசமுள்ள ஆட்களுக்கு உண்மையான நம்பிக்கை இருக்கிறதெனவும் அது காட்டுகிறது. [அறிவு புத்தகத்தில் பக்கம் 84-லுள்ள பாரா 13-க்குத் திருப்புங்கள்; யோவான் 11:25-ல் காணப்படும் இயேசுவின் வார்த்தைகளை வாசித்து விளக்குங்கள்.] இறந்துபோன நம் அன்பானவர்களுக்கு என்ன நேரிடுகிறது என்ற கேள்விக்கு பதிலளிப்பதற்காக இந்த முழு அதிகாரமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் குறித்து மக்களுக்கு இருக்கும் அநேக கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்திலிருக்கும் மற்ற அதிகாரங்கள் பதிலளிக்கின்றன.” புத்தகத்தை அளியுங்கள்.
5 மறுசந்திப்பு செய்கையில் சுகநலத்தை விசாரித்தபின் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “ஒருவர் இறந்துபோகையில் என்ன சம்பவிக்கிறது என்பதைப் பற்றி நாம் முன்பு பேசினோம். அநேக ஆட்கள், மறுபிறவியில் அல்லது மரணத்திற்குப்பின் பரலோகத்திலோ நரகத்திலோ வாழ்க்கை தொடருகிறது என்பதில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால், இறந்தவர்கள் இங்கே இதே பூமியில் மீண்டும் வாழப்போகும் சாத்தியத்தைப் பற்றி எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] பைபிளின்படி, பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளும் சாந்தகுணமுள்ளவர்களின் மத்தியில் உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் இருப்பார்கள். [சங்கீதம் 37:11, 29-ஐ வாசித்து, அறிவு புத்தகத்தில் பக்கம் 88-லுள்ள பாரா 20-ஐக் கலந்தாலோசியுங்கள்.] மரண பயத்தில் வாழ்ந்துகொண்டிருந்த லட்சக்கணக்கான ஆட்களுக்கு இந்த நம்பிக்கை ஆறுதலை அளித்திருக்கிறது. இந்த விஷயத்தை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும். எப்படி என்று உங்களுக்கு நடித்துக் காட்டட்டுமா?”
6 ஓர் எளிய அறிமுகத்தை உபயோகிக்க நீங்கள் விரும்பினால், இதை நீங்கள் முயற்சிசெய்து பார்க்கலாம்:
◼ “நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு” என்ற இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு படத்தை உங்களுக்குக் காட்ட நான் விரும்புகிறேன். இது ஓர் அழகான படம் இல்லையா?” 4-ம் 5-ம் பக்கங்களை வீட்டுக்காரர் காணும்படி புத்தகத்தை திறந்து காட்டுங்கள். பதிலளிக்க அவரை அனுமதியுங்கள். பக்கம் 5-லுள்ள வார்த்தைகளை வாசித்துக் காட்டுங்கள். இவ்வாறு சொல்வதன்மூலம் முடியுங்கள்: “நீங்களே படித்துப் பார்க்க இந்தப் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். பிரதி ஒன்றுக்கு 20 ரூபாய் என்ற சிறிய நன்கொடைக்கு இதை நாங்கள் விநியோகிக்கிறோம்.” சிறிது அக்கறையைக் காட்டியிருந்தாலும் மறுபடியும் போய் சந்திக்க பொருத்தமான சமயம் எதுவாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
7 கடவுளிடமிருந்து வரும் அறிவை நாம் பெற்றிருக்கிறோம்; அது வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்கு பதில்களை அளிக்கிறது. ஊக்கமாக தயாரியுங்கள்; சத்தியத்தைத் தேடிக்கொண்டிருக்கும் ஆட்களிடம் ஜீவனை அளிக்கும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் உங்கள் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார்.