முதியோர் விட்டுவிடாமல் பிரசங்கிக்கின்றனர்
1 முதிர்வயதடையும்போது, அநேகர் தங்களது வேலையிலிருந்து ஓய்வுபெற்று, மிஞ்சியிருக்கும் காலமெல்லாம் உல்லாசமாக வாழ்வதையே எதிர்பார்க்கின்றனர். இதுநாள்வரை கடினமாக உழைத்தது போதும், இப்போது ஓய்வெடுக்க வேண்டும் என்பதாக அவர்கள் ஒருவேளை நினைக்கலாம். அல்லது மீதி காலத்தை நன்றாக அனுபவித்துவிடவேண்டும் என விரும்பலாம்.—லூக்கா 12:19.
2 யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களாக, நாம் வாழ்க்கையை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். கடவுளது சேவையிலிருந்து ஓய்வேயில்லை என்பது நமக்குத் தெரியும். நாம் “நித்திய ஜீவனை கண்முன்” வைப்பதால், நம்பிக்கையுள்ள மனநிலையோடு இருக்கிறோம். (யூதா 21) பலவருடங்களாக பெற்ற அறிவும் அனுபவமும் ஒரு நபரது பகுத்துணர்வையும் உட்பார்வையையும் மேம்படுத்தலாம். இது ஒரு நபர், இன்னுமதிக ஞானமுள்ளவராகவும், இன்னுமதிக சமநிலையுள்ளவராகவும் வாழ்க்கையை மேலும் ஆழமாக போற்றுபவராகவும் ஆவதற்கு உதவலாம். இந்த அனைத்து குணங்களுமே, நற்செய்தியின் ஊழியருக்கு அதிகளவில் பயனளிக்கின்றன.
3 முதுமை என்பது, உடலால் வயதாகிவருவதை மாத்திரமே குறிப்பதில்லை; ஒருவரது உள்ளத்தையும்கூட அது உள்ளடக்குகிறது. நீங்கள் அதிக காலம் வாழ விரும்பினாலும், இளைஞரைப்போன்ற சிந்தையைக் கொண்டிருக்க முயற்சித்தாலும், இவ்விரண்டையும் செய்வதற்கான வாய்ப்பு அதிகமிருக்கிறது. முதியோர், தங்களது ஆவிக்குரிய அறிவை அதிகரிப்பதன் மூலமாகவும் அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதன் மூலமாகவும் தங்களது வாழ்க்கையை செழிப்பாக்கலாம்.—1 கொ. 9:23.
4 மெய்-வாழ்க்கை உதாரணங்கள்: 86 வயதாயிருக்கையில் ஒரு சகோதரி இப்படிச் சொன்னார்: “எனக்கு சத்தியம் கிடைத்து 60 வருடங்கள் உருண்டோடிவிட்டன; அந்தக் காலத்தை நினைத்துப்பார்க்கும்போது, கடவுளுடைய நம்பிக்கையூட்டும் வாக்குறுதி என் இதயத்தில் ததும்புகிறது. ஆமாம், யெகோவா, உத்தமர்கள் அபரிமிதமான சந்தோஷத்தைப் பெறும்படி பார்த்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு உத்தமராக இருப்பார்.” (சங். 18:25) ஒரு வயதான சகோதரர், தனது மனைவி இறந்தது எவ்வாறு தனக்கு பேரதிர்ச்சியைத் தந்தது என்பதையும் அதற்குப் பிற்பாடு தனது உடல்நிலை எப்படி மிகவும் மோசமானது என்பதையும் நினைவுகூர்ந்தார். அவர் சொன்னார்: “ஆனாலும், யெகோவாவின் தகுதியற்ற தயவினால், இரண்டு வருடங்களுக்குப் பிற்பாடு பயனியர் ஊழியத்தைத் துவங்கும் அளவுக்கு நான் குணமானேன். இவ்வாறு பிரசங்க வேலையில் அதிகம் ஈடுபடுவதால் உண்மையில் என் உடல்நிலை முன்னேறியிருக்கிறது; அதற்காக நான் யெகோவாவிற்கு எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்!”
5 முதியோர், தங்களது உடல்நலத்தையும் பலத்தையும் பொறுத்து முடிந்தளவுக்கு தொடர்ந்து—விட்டுவிடாமல்—பிரசங்கிப்பதில் ஈடுபட தீர்மானமுள்ளவர்களாய் இருப்பது எவ்வளவு மெச்சத்தக்கது! பின்வருமாறு பூரிப்புடன் சொல்ல அவர்களுக்கு நல்ல காரணமிருக்கிறது: “தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.”—சங். 71:17.