காரியங்களை விளையச்செய்வதற்கு யெகோவாவின்மேல் சார்ந்திருங்கள்
1 “ஒரு புதிய சபையை நிறுவுவதற்கு உதவியதால் ஒரு புதுவிதமான சந்தோஷத்தை நான் வாழ்க்கையில் முதன்முறையாக அனுபவித்தேன். இரண்டு வருடங்களுக்கும் மேலாக கடினமாக உழைத்ததாலும் இடைவிடாமல் ஜெபித்ததாலும் ‘விளையச்செய்கிற’ யெகோவாவின்மீது சார்ந்திருந்ததாலும் அதை சாதிக்க முடிந்தது.” வளர்ச்சிக்காக யெகோவாவின்மீது சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தை கற்றுக்கொண்ட ஒரு நல்மனசாட்சியுள்ள பயனியர் இப்படி எழுதினார். (1 கொ. 3:5-9) ஆவிக்குரிய நாட்டமுள்ள மக்களைத் தேடுகையில், நமது ஊழியம் கனிதரும் வகையில் அமைய நமக்கு கடவுளது உதவி தேவைப்படுகிறது.—நீதி. 3:5, 6.
2 வளர்ச்சிக்கு பண்படுத்துதல் அவசியம்: சத்தியத்தின் விதை வளரவேண்டுமானால் அது பண்படுத்தப்பட வேண்டும். முதல் சந்திப்பிற்குப் பிறகு ஓரிரண்டு நாட்களில் மறுசந்திப்பு செய்வது பெரும்பாலும் நல்ல பலன்களைக் கொடுக்கிறது. அன்பாகவும் நட்பாகவும் இருங்கள். அந்த நபரை சௌகரியமாக உணரச்செய்யுங்கள். நீங்களே பேசிக்கொண்டிருக்காதீர்கள். அந்த நபர் உங்களை அறிந்துகொள்வதற்கு வாய்ப்பளியுங்கள்; தனிப்பட்ட விதமாக அவர்மீது உங்களுக்கு அக்கறை இருப்பதைக் காண்பியுங்கள்.
3 ஜூலை மாதத்திலும் அதைத் தொடர்ந்து ஆகஸ்ட்டிலும், நாம் சந்திக்கப்போகும் நபர்களுக்கு வெவ்வேறு சிற்றேடுகளை அளிப்பதில் கவனம் செலுத்துவோம். ஆனாலும், அக்கறை காண்பித்தவர்களையும் பிரசுரங்கள் ஏற்றுக்கொண்டவர்களையும் நாம் தொடர்புகொள்வது அவசியம். மறுசந்திப்புகள் செய்வதன் மூலமாகவும் பைபிள் படிப்புகளை அளிப்பதன் மூலமாகவும் நாம் இதைச் செய்கிறோம். (மத். 28:19, 20) அதற்காக, தேவைப்படுத்துகிறார் சிற்றேடு, படிப்புகளை ஆரம்பிப்பதற்கு பயன்படுத்தப்படலாம். பின்வரும் இந்த நான்கு ஆலோசனைகளையும் நீங்கள் பயனளிப்பதாய் காணலாம்.
4 உலக நிலைமைகள் மோசமாகிவருவதைக் குறித்து கவலை தெரிவித்த ஒருவரோடு நீங்கள் பேசியிருந்தால், இப்படிச் சொல்வதன் மூலம் பேச்சைத் தொடரலாம்:
◼ “மனித சமுதாயத்தில் ஒழுக்கம் சீரழிந்துவருவதைக் குறித்து எனக்கிருக்கும் அதே கவலைதான் உங்களுக்குமிருக்கிறது என நினைக்கிறேன். குடும்பங்களில் நிகழும் வன்முறையையும் அதனால் பிள்ளைகள், பெற்றோர், திருமணத் துணைகள் தவறாக நடத்தப்படுவதையும் குறித்த வருத்தமூட்டும் அறிக்கைகளை நாம் கேள்விப்படுகிறோம். அநேக நபர்கள் தங்களது சொந்த ஆசைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக பொய்சொல்வதாகவோ திருடுவதாகவோ தெரிகிறது. மக்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்துகின்றனர் என்பது கடவுளுக்கு முக்கியமென நீங்கள் நினைக்கிறீர்களா? [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] மனிதன் எவ்வாறு வாழவேண்டுமென்பதற்கு கடவுள் குறிப்பிட்ட தராதரங்களை வைத்தார், அவை நிச்சயமாகவே நமக்கு பாரமானவையல்ல.” 1 யோவான் 5:3-ஐ வாசியுங்கள். பின்பு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளித்து 10-வது பாடத்திற்குத் திருப்புங்கள். முதல் பாராவை வாசியுங்கள். பாராக்கள் 2-6-ன் ஆரம்பத்திலுள்ள நேரெழுத்து வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் சுட்டிக்காட்டி, அவரது அபிப்பிராயத்தின்படி எந்தப் பழக்கம் சமுதாயத்திற்கு மிகவும் தீங்குவிளைவிப்பதாக இருக்கிறது என கேளுங்கள். சம்பந்தப்பட்ட பாராவை வாசித்து, சூழ்நிலையைப் பொறுத்து ஓரிரண்டு வசனங்களை எடுத்துக் காண்பியுங்கள். 7-வது பாராவை வாசிப்பதன்மூலம் முடிவுசெய்யுங்கள்; பின், பேச்சைத் தொடர மீண்டும் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
5 குடும்பத்தின்பேரில் அக்கறையுள்ளோரை நீங்கள் சந்தித்திருந்தால், இதுபோன்ற ஒன்றை நீங்கள் சொல்லலாம்:
◼ “வெற்றிகரமான ஒரு குடும்பம் என்னும் இல்லறத்தைக் கட்டியமைக்க நமக்குத் தேவைப்படும் கருவிகளை சிருஷ்டிகர் கொடுப்பார் என எதிர்பார்ப்பது நியாயமானதென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” பதில்சொல்ல அனுமதியுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை காட்டி, 8-வது பாடத்திற்குத் திருப்புங்கள். குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் தேவையான பைபிள் நியமங்கள் அதில் இருக்கிறது என விளக்குங்கள். சிற்றேட்டிலிருந்து மிகச் சிறந்த நன்மைபெற பைபிளோடு சேர்த்து அதை எவ்வாறு வாசிக்கலாம் என நடித்துக்காட்டுவதாக சொல்லுங்கள். சிற்றேட்டின் 2-வது பக்கத்திலுள்ள அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். பாடத்தைத் தொடர்ந்து படியுங்கள். அல்லது அதை முடித்துவிட்டிருந்தால் சிற்றேட்டிலிருந்து வீட்டுக்காரர் தேர்ந்தெடுக்கும் மற்றொரு பாடத்தைப் படிப்பதற்கு மறுசந்திப்பு செய்ய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
6 பைபிள் படிப்பை அளிப்பதற்கு இதோ ஒரு நேரடி அணுகுமுறை. “தேவைப்படுத்துகிறார்” சிற்றேட்டைக் காண்பித்து இப்படிச் சொல்லுங்கள்:
◼ “இந்தச் சிற்றேட்டில், பைபிளின் அடிப்படை போதனைகளை உள்ளடக்கிய விரிவான பைபிள் படிப்பு முறை உள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும், பல நூற்றாண்டுகளாக மக்களை திணறடித்திருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில்களைக் காண்பீர்கள். உதாரணத்திற்கு, பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?” 5-ம் பாடத்திற்குத் திருப்பி, பாடத்தின் ஆரம்பத்திலுள்ள கேள்விகளை வாசியுங்கள். வீட்டுக்காரருக்கு எதில் மிகவும் ஆர்வம் என அவரிடமே கேட்டு, பின் அதற்குரிய பாராவை அல்லது பாராக்களை வாசித்து, அதிலுள்ள பொருத்தமான வேதவசனங்களை எடுத்துப்பாருங்கள். மற்ற கேள்விகளுக்கும் இதைப்போன்றே திருப்தியான பதில்கள் எளிதில் கண்டுபிடிக்கப்படலாம் என விளக்குங்கள். வேறொரு கேள்வியையும் பதிலையும் கலந்தாலோசிப்பதற்கு மீண்டும் வருவதாக சொல்லுங்கள்.
7 அல்லது பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு ஓர் எளிய அணுகுமுறையைப் பயன்படுத்த நீங்கள் விரும்பினால், இப்படிச் சொல்லலாம்:
◼ “ஒருசில நிமிடங்களில், ஒரு முக்கிய கேள்விக்கு நீங்கள் பதிலைக் கண்டுபிடிக்கலாம் என்பது தெரியுமா? உதாரணத்திற்கு, . . . ” அதன்பிறகு, சிற்றேட்டிலுள்ள ஏதாவதொரு பாடத்தின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கேள்வியை, அந்த நபரது ஆர்வத்தைத் தூண்டுமென நீங்கள் நினைக்கும் ஒரு கேள்வியைக் குறிப்பிடுங்கள். நீங்கள் எப்படிப்பட்ட கேள்விகளைப் பயன்படுத்தலாம் என்பதன்பேரில், மார்ச் 1997 நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கையில், “தைரியத்தை ஒன்றுதிரட்டி மறுசந்திப்புகள் செய்யுங்கள்” என்ற தலைப்பின்கீழ் பாராக்கள் 15, 16-ஐப் பாருங்கள்.
8 மறுசந்திப்புகள் செய்து பைபிள் படிப்புகளை நடத்துவதன் சவாலை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வது, கடவுளுடைய ‘உடன்வேலையாட்களாய்’ இருப்பதன் ஒரு அம்சமாக இருக்கிறது. (1 கொ. 3:9) அக்கறையை பண்படுத்துவதற்கு நாம் கடினமாக உழைத்து, பின், காரியங்களை விளையச்செய்வதற்கு யெகோவாவின்மீது சார்ந்திருந்தால், மற்ற எந்த வேலையும் அளிக்கமுடியாத உண்மையான திருப்தியை நாம் அனுபவிப்போம்.