அதிமுக்கிய காரியங்களை முதலிடத்தில் வையுங்கள்
1 நம்மை ஆவிக்குரிய நலத்துடன் வைத்துக்கொள்வதற்கு தேவைப்படும் முக்கியமான சில காரியங்கள் யாவை? இவைகளில் முக்கியமாக உட்படுவது தனிப்பட்டப் படிப்பு, கூட்டங்களுக்கு ஆஜராதல், இடைவிடாத ஜெபம், நற்கூட்டுறவு மற்றும் கிறிஸ்தவ ஊழியம் முதலியவைகளாகும். நம்முடைய வாழ்வில் இதுமாதிரியான முக்கிய காரியங்களை முதலிடத்தில் வைக்காவிட்டால் நாம் தொடர்ந்து ஆவிக்குரிய திட ஆரோக்கியமுள்ளவர்களாய் இருக்க முடியாது.
2 ஆனாலும் நாம் அனைவருமே மாம்ச இச்சைகளுக்கு எதிராக போராட வேண்டியவர்களாயும், சிட்சை தேவைப்படுகிறவர்களாயும் இருக்கிறோம். (கலா. 5:17) சொந்த ஆசைகளைத் திருப்தி செய்ய முயலுவதால் அதிக பயனடைய முடியும் என்று நாம் ஒருபோதும் எண்ணக்கூடாது. (எரே. 17:9) ஆகவே, நாம் நம்முடைய இருதயத்தை காத்துக்கொள்ளவும் தவறாக வழிநடத்தப்படுவதை தவிர்க்கவும் வேண்டுமானால், ஒழுங்காக சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம்.—நீதி. 4:23; 2 கொ. 13:5.
3 உங்களுடைய சொந்த இருதயத்தை சோதியுங்கள்: சில வெளிப்படையான கேள்விகளை உங்களையே கேட்டுக்கொள்வதன் மூலம் நீங்கள் இதைச் செய்யலாம்: கடவுளுடைய வார்த்தையை வாசிக்க நான் அதிக ஆவல் கொள்கிறேனா? (1 பே. 2:3) நான் எல்லா சபை கூட்டங்களுக்கும் ஆஜராவதை முக்கியத்துவம் உடையதாக கருதுகிறேனா? (எபி. 10:24, 25) நான் இடைவிடாது ஜெபத்தில் தரித்திருக்கிறேனா? (ரோ. 12:12) நான் ஆவிக்குரிய சிந்தையுள்ளவர்களிடம் கூட்டுறவு வைத்துக்கொள்ள முயற்சிசெய்கிறேனா? (ரோ. 1:11, 12) நற்செய்தியை அறிவிப்பதை என்னுடைய சொந்த கடமையாக நான் கருதுகிறேனா? (1 கொ. 9:16) இந்தக் கேள்விகளுக்கு உங்களால் சாதகமான பதிலை அளிக்கமுடியும் என்றால், நீங்கள் அதிமுக்கிய காரியங்களை முதலாவது வைக்க விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதை அது காட்டும்.
4 உங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை சோதியுங்கள்: நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பட்டியலிடுவதன்மூலம் உங்களுடைய இருதயத்தின் வாஞ்சைகளை சோதித்தறிய வேண்டும். இது, தொடர்ந்து பைபிளைப் படிப்பதற்கும், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் ஒவ்வொரு பிரதியையும் படிப்பதற்கும், மேலுமாக கூட்டங்களுக்கு தயார் செய்வதற்கும் தவறாமல் நேரத்தை ஒதுக்குவதை உட்படுத்துகிறது. மேலும் குடும்பமாக சேர்ந்து படிப்பதற்கும் ஜெபிப்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். தொலைக்காட்சி காண அல்லது மற்ற பொழுதுபோக்கிற்காக எவ்வளவு நேரம் செலவழிக்கவேண்டும் என்பதில் வரம்பை வைக்கவேண்டும். எல்லா சபை கூட்டங்களுக்கும் ஆஜராவதற்கு தீர்மானமாய் இருந்து, மற்றெல்லா காரியங்களும் அதை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வாரமும் முழு குடும்பமும் வெளி ஊழியத்தில் ஈடுபடுவதற்கு திட்டமிடுங்கள்.
5 நம் வாழ்க்கையில் அதிமுக்கிய காரியங்களை முதலிடத்தில் வைப்பது நிச்சயமாகவே சந்தோஷத்தில் விளைவடையும்.