வேலையை செய்து முடிக்க நம் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்
1 ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை ஆதரிப்பதும் அதில் ஈடுபடுவதும் மிக அவசியம் என்பதை இயேசு கிறிஸ்துவின் ஒவ்வொரு சீஷனும் புரிந்துகொள்ள வேண்டும். தம்முடைய சீஷர்கள் வித்தியாசமான அளவுகளில் பலன் தருவர் என்பதை இயேசு அறிந்திருந்தார். (மத். 13:23) கடுமையாக உழைக்கும் பயனியர்களே பெருமளவு ஊழியத்தை நிறைவேற்றுகிறார்கள் என்பது உண்மையாக இருந்தாலும், கடவுளை மகிமைப்படுத்துவதற்காக தொடர்ந்து ஆர்வத்துடன் தங்களால் இயன்ற அளவிற்கு கனிகொடுக்கும் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள்.—யோவா. 15:8.
2 அதிகத்தை சாதிப்பதற்கு கூட்டு முயற்சி: சீஷர்கள் அனைவரும் சேர்ந்து செய்யப்போகும் வேலை தாம் செய்ததைவிட அதிகமாக இருக்கும் என்பதாக இயேசு கிறிஸ்து தீர்க்கதரிசனம் உரைத்தார். (யோவா. 14:12) பிரசங்கிப்பதைக் குறித்ததில் நம் சூழ்நிலை நம்மை எந்த அளவிற்கு மட்டுப்படுத்தும் அல்லது எவ்வளவு அதிக நேரத்தை அனுமதிக்கும் என்பது வேறுபட்டாலும் இந்த வேலையை செய்து முடிக்க நாம் ஒவ்வொருவரும் தேவை. ‘முழு உடலும் இசைவாய்ப் பொருந்தித் தன்னிடமுள்ள தசை நார்களால் இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட வேலையைச் செய்வதால் உடல் . . . வளர்ச்சியடைகிறது’ என்று பவுல் குறிப்பிட்டது உண்மையே.—எபே. 4:16, பொது மொழிபெயர்ப்பு.
3 கடவுளுடைய சேவையில் தாங்கள் அதிகம் செய்யவில்லை என்பதாக சிலர் நினைக்கலாம். ஆனால், யெகோவாவின் பார்வையில் நம் சேவை முழு இருதயத்துடன் செய்யப்படுவதே முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் அவருக்காக என்ன செய்தாலும் அது மதிப்புமிக்கது, மேலும் அது போற்றப்படுகிறது.—ஒப்பிடுக: லூக்கா 21:1-4.
4 தொடர்ந்து ஊழியத்தை ஆதரியுங்கள்: இப்படிப்பட்ட உலகளாவிய வேலைக்கு நன்கொடையளிக்கும் சிறப்புரிமை நம் அனைவருக்குமே உள்ளது. ராஜ்ய வேலையை ஆதரிப்பதற்கு சிலர் தங்கள் உடல் உழைப்பை அளித்து உதவ முடியும். அனைவருமே கூட்டங்களில் நன்கு தயாரிக்கப்பட்ட பதில்களைச் சொல்வதற்கும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பங்கு பெறுவதற்கும் பெரு முயற்சி எடுக்கலாம். மற்றவர்களுக்கு ஊக்கமூட்டுவதன் மூலம் சபையின் ஆவிக்குரிய தன்மை உயருவதற்கு நாம் உதவுகிறோம்; இது தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை நிறைவேற்றும் திறமையை மேம்படுத்திக்கொள்ள சபைக்கு உதவியாக இருக்கிறது.
5 நிச்சயமாகவே இந்த வேலையை நிறைவேற்ற நம் அனைவரின் கூட்டு முயற்சியும் தேவை. இதில் தன் பங்கு ஒன்றுமில்லை என்பதாக ஒருவரும் நினைக்கக்கூடாது. யெகோவாவை சேவிப்பதற்காக நாம் அனைவரும் சேர்ந்து எடுக்கும் சிறியதும் பெரியதுமான கூட்டு முயற்சிகளால் நாமே உண்மை வணக்கத்தார் என தனிப்படுத்திக் காண்பிக்கிறோம். (மல். 3:18) யெகோவாவை கனப்படுத்துவதிலும், அவரைப் பற்றி மற்றவர்கள் தெரிந்துகொண்டு சேவிக்க அவர்களுக்கு உதவி செய்வதிலும் நாம் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தமுள்ள பங்கை வகிக்கலாம்.