பயனியர் சேவை—உங்களால் செய்ய முடியுமா?
1 “வேற ஏதாவது செய்யறதப்பத்தி என்னால கற்பனைகூட செய்ய முடியாது. இதுமாதிரி மகிழ்ச்சி தரக்கூடிய வேற ஒன்னை என்னால நெனச்சுக்கூட பார்க்க முடியாது.” யார் இதை சொன்னது? முழுநேர சேவையை தங்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கைப்பணியாக ஆக்கியிருக்கிற ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர். உங்களால் பயனியர் செய்யமுடியுமா என்பதைக் குறித்து ஜெபசிந்தையோடு சிந்தித்திருக்கிறீர்களா? நம்மை யெகோவாவுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஒப்புக்கொடுத்திருப்பதால், ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் நம்மால் இன்னும் அதிகம் செய்ய முடியுமா என்பதைக் குறித்து நாம் நிச்சயமாகவே சிந்திக்க வேண்டும். இதை மனதில் வைத்து, பயனியர் சேவையைப் பற்றி அநேகர் கேட்கும் கேள்விகளை தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்.
கேள்வி 1: “எல்லாராலும் பயனியர் செய்யமுடியாது என்று சிலர் சொல்கின்றனர். என்னால் முடியுமா என்பதைப் பற்றி எனக்கு எப்படி தெரியும்?”
2 இதற்கான பதில் உங்களுடைய சூழ்நிலைமைகளையும் வேதப்பூர்வமான கடமைகளையும் பொருத்திருக்கிறது. உடல்நலமோ, தற்போதைய வாழ்க்கைச் சூழலோ ஊழியத்தில் ஒவ்வொரு மாதமும் 90 மணிநேரம் செலவிடுவதற்கு அநேக ஆட்களை அனுமதிப்பதில்லை. உதாரணமாக, கிறிஸ்தவ மனைவிகளாகவும் தாய்மார்களாகவும் இருக்கும் விசுவாசமுள்ள சகோதரிகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். தங்களுடைய சூழ்நிலைமைகள் அனுமதிக்கிற அளவுக்கு அவர்கள் ஊழியத்தில் அடிக்கடி பங்குகொள்கிறார்கள். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் வருடத்தில் ஒரு மாதமோ, பல மாதங்களோ துணைப் பயனியர் ஊழியம் செய்கின்றனர்; இவ்வாறு ஊழியத்தில் அதிகமாக பங்கு கொள்வதால் வரும் மகிழ்ச்சியை பெறுகிறார்கள். (கலா. 6:9) தற்போது முழுநேர பயனியர்களாக சேவிப்பதற்கு அவர்களுடைய சூழ்நிலை இடமளிக்காதபோதிலும்கூட, அவர்கள் பயனியர் மனநிலையை ஊக்குவிக்கிறார்கள். அதோடு, நற்செய்தியின் வைராக்கியமான பிரஸ்தாபிகளாய் சபைக்கு ஆசீர்வாதமாய் இருக்கிறார்கள்.
3 மறுபட்சத்தில், இந்தளவு குடும்பப் பொறுப்புகள் இல்லாத அநேக சகோதர சகோதரிகள், முதலிடத்தில் வைக்கவேண்டிய காரியங்களை சற்றே சரிப்படுத்துவதன்மூலம் பயனியர் சேவை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்குகின்றனர். உங்களைப் பற்றியென்ன? நீங்கள் பள்ளிப் படிப்பை முடித்திருக்கும் வாலிபரா? குடும்பத்துக்கு போதுமானவற்றை சம்பாதிக்கிற கணவரையுடைய மனைவியா? பராமரிப்பதற்கு பிள்ளைகள் இல்லாதவரா? வேலையிலிருந்து ஓய்வு பெற்றவரா? பயனியர் செய்வதா வேண்டாமா என்பது ஒவ்வொரு நபரும் தீர்மானிக்கவேண்டிய சொந்த விஷயம். கேள்வி என்னவென்றால், உங்களால் பயனியர் செய்வதற்கான வாய்ப்பை உருவாக்க முடியுமா?
4 கவனச்சிதறல்களால் நம் வாழ்க்கையை பாரமாக்கி, சுயநலமான வாழ்க்கைப் போக்குக்குள் நம்மை மூழ்கடிப்பதற்கு சாத்தான் தன்னுடைய உலக ஒழுங்குமுறையைப் பயன்படுத்துகிறான். நாம் இந்த உலகின் பாகமாக இல்லாமலிருக்க தீர்மானமாயிருந்தால், ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைப்பதற்கும், தேவராஜ்ய சேவையில் நமக்கு கிடைக்கும் எல்லா சிலாக்கியங்களையும் எட்டவும், தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் யெகோவா நமக்கு உதவி செய்வார். பயனியர் செய்வதற்கு ஏற்ப உங்களுடைய சூழ்நிலைமையை உங்களால் சரிசெய்ய முடியுமென்றால், ஏன் அதை செய்யக்கூடாது?
கேள்வி 2: “முழுநேர சேவை செய்வதற்கு பொருளாதார ரீதியில் என்னால் சமாளிக்க முடியுமென்று நான் எப்படி நிச்சயமாயிருக்கலாம்?”
5 அநேக நாடுகளில் வாழ்க்கையின் அத்தியாவசியமான தேவைகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு வாரமும் செலவிடும் வேலை நேரம், வருடங்கள் செல்லச்செல்ல அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான். இருந்தபோதிலும், அநேகர் பல பத்தாண்டுகளாக பயனியர் செய்திருக்கிறார்கள்; யெகோவாவும் அவர்களைத் தொடர்ந்து பராமரித்து வந்திருக்கிறார். வெற்றிகரமான பயனியராக இருக்க விசுவாசமும் சுயதியாக மனப்பான்மையும் தேவைப்படுகிறது. (மத். 17:20) சங்கீதம் 34:10-ன்படி, “கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது” என்ற உறுதி நமக்கு இருக்கிறது. பயனியர் சேவையில் அடியெடுத்து வைக்கும் எவருமே யெகோவா தன்னை பராமரிப்பார் என்ற முழு உறுதியுடன் இருக்கவேண்டும். எல்லா உண்மையுள்ள பயனியர்களுக்கும் அவர் அதைத்தான் செய்தும் வருகிறார்! (சங். 37:25) அதே சமயத்தில், 2 தெசலோனிக்கேயர் 3:8, 10; 1 தீமோத்தேயு 5:8 ஆகிய வசனங்களிலுள்ள நியமங்களின்படி, பொருளாதார ரீதியில் மற்றவர்கள் தங்களை ஆதரிக்கவேண்டுமென பயனியர்கள் எதிர்பார்க்கக்கூடாது.
6 பயனியர் செய்வதற்காக திட்டமிடும் எவரும் இயேசுவின் இந்த வார்த்தைகளுக்கு இசைவாக செயல்பட வேண்டும்: “முன்பு . . . உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பார்க்கவேண்டும்.” (லூக். 14:30) இதை செய்வது நடைமுறை ஞானத்தைக் காட்டுகிறது. பல ஆண்டுகளாக பயனியர் ஊழியத்தை வெற்றிகரமாக செய்தவர்களோடு பேசுங்கள். யெகோவா அவர்களை எவ்வாறு பராமரித்து வருகிறார் என்று கேளுங்கள். உங்கள் வட்டாரக் கண்காணி அனுபவம் வாய்ந்த பயனியராக இருப்பார்; முழுநேர ஊழியத்தில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதற்கு ஆலோசனைகளை அளிக்க அவர் மகிழ்ச்சியடைவார்.
7 ஒரு நபர் தன்னை யெகோவாவின் கைகளில் ஒப்படைக்காத வரை மத்தேயு 6:33-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை அவரால் ஒருபோதும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. உண்மையுள்ள ஒரு பயனியர் சொன்னார்: “நானும் என்னுடைய பார்ட்னரும் ஒரு புதிய நியமிப்புக்கு சென்றபோது, எங்களிடம் கொஞ்சம் காய்கறிகளும், ஒரு பாக்கெட் வனஸ்பதியும் இருந்தன. கையிலோ காசில்லை. ராத்திரி சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, ‘நாளைக்கு சாப்பிட ஒண்ணுமில்ல’ என்று சொல்லிக்கொண்டோம். ஜெபத்தில் இதை தெரிவித்துவிட்டு படுக்கைக்கு சென்றோம். விடிந்ததும் உள்ளூர் சாட்சி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சொன்னதாவது: ‘பயனியர்கள அனுப்பச்சொல்லி நான் யெகோவா தேவன்கிட்ட ஜெபம் பண்ணினேன். அதனால இன்னைக்கு முழுவதும் நான் உங்களோட ஊழியம் செய்யப் போறேன். என் வீடு ரொம்ப தொலைவில இருக்கிறதனால மத்தியானம் உங்களோடு சேர்ந்து சாப்பிட தீர்மானிச்சு, உங்களுக்கும் சேர்த்து கொண்டு வந்திருக்கிறேன்.’ கொண்டு வந்த உணவில் இறைச்சியும் காய்கறியும் எக்கச்சக்கமாக இருந்தன.” ‘சரீரத்துக்காக கவலைப்பட வேண்டாம்’ என்று இயேசு நிச்சயமளித்ததில் எவ்வித ஆச்சரியமுமில்லை! அதோடு, “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” என்றும் அவர் சொன்னார்.—மத். 6:25, 27.
8 இந்த உலகம் பொருளாசை வெறிபிடித்ததாய் மாறி வருகிறது. நாமும் அவ்வாறே ஆகும்படி நம்மை அதிகமாக வற்புறுத்துகிறது. இருந்தபோதிலும், முழுநேர சேவைக்கான நம்முடைய தாழ்மையான போற்றுதல் மனப்பான்மை பொருள்சம்பந்தமாக உள்ளதை வைத்து திருப்தியுடனிருக்க நமக்கு உதவுகிறது. (1 தீ. 6:8) தங்களுடைய வாழ்க்கையை எளிமையாகவும் ஒழுங்குடனும் வைத்திருக்கும் பயனியர்களுக்கு ஊழியத்தில் செலவிட அதிக நேரம் இருக்கிறது; அதோடு மற்றவர்களுக்கு சத்தியத்தை கற்பிப்பதால் பேரானந்தத்தையும் ஆவிக்குரிய பலத்தையும் பெறுகிறார்கள். துறவு வாழ்க்கை வாழாதபோதிலும்கூட, தங்களுடைய பொருளாதார சூழ்நிலைமையை சமநிலையோடு வைத்திருப்பது பயனியர் ஊழியத்தின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கு அவர்களுக்கு உதவியிருக்கிறது.
9 நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோமென்பதையும் இந்தத் துன்மார்க்க உலகத்திற்கான முடிவு நெருங்கி வருகிறது என்பதையும் நீங்கள் ஆழ்ந்து யோசித்தால் நற்செய்தியை எல்லா சந்தர்ப்பங்களிலும் பிரசங்கிப்பதற்கு தேவையான தியாகங்களை செய்வதற்கு ஆவிக்குரிய பிரகாரமாக தூண்டப்படுவீர்கள். உங்களுடைய பொருளாதார சூழ்நிலைமையை கொஞ்சம் சீர்தூக்கிப் பார்ப்பதன் மூலமும் காரியங்களை யெகோவாவின் கைகளில் ஒப்படைப்பதன் மூலமும், நீங்கள் அவரை முழுநேரமாக சேவிக்க முடியுமென்பதை உணருவீர்கள். பயனியர் செய்வதற்காக சில பொருள்சம்பந்தமான தேவைகளை துறக்க வேண்டியிருந்தாலும்கூட, நீங்கள் யெகோவாவின் அபரிமிதமான ஆசீர்வாதங்களை அனுபவிப்பீர்கள்.—சங். 145:16.
கேள்வி 3: “என்னுடைய வாலிபப் பருவத்தில், பயனியர் சேவையை நான் ஏன் வாழ்க்கைப்பணியாக தேர்ந்தெடுக்க வேண்டும்?”
10 நீங்கள் உங்களுடைய பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டுகளில் இருக்கையில், எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது இயல்பானதுதான். அது பாதுகாப்பளிப்பதாக, மகிழ்ச்சி நிரம்பியதாக, திருப்திகரமானதாக இருக்கவேண்டுமென்று விரும்புவீர்கள். பள்ளிப்படிப்புக்கான ஆலோசகர்கள், பணம்கொழிக்கும் வாழ்க்கைப்பணிக்காக அநேக ஆண்டுகள் கல்லூரிப் படிப்பில் செலவிட வேண்டிய ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி உங்களைத் தூண்டலாம். உங்களுடைய பயிற்றுவிக்கப்பட்ட கிறிஸ்தவ மனசாட்சி முடிந்தளவு முழுமையாக யெகோவாவை சேவிப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டுமென சொல்கிறது. (பிர. 12:1) கொஞ்ச காலம்கழித்து திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தவும்கூட நீங்கள் விரும்பலாம். நீங்கள் என்ன செய்வீர்கள்?
11 வாழ்க்கையின் இந்தப் பகுதியில் நீங்கள் செய்யும் தீர்மானம் உங்களுடைய முழு எதிர்காலத்தையுமே நிர்ணயிக்கலாம். நீங்கள் ஏற்கெனவே யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட சாட்சியாக இருந்தால், உங்களை யெகோவாவுக்கு முழு ஆத்துமாவோடு அர்ப்பணித்திருக்கிறீர்கள். (எபி. 10:7) ஒரு மாதமோ, பல மாதங்களுக்கோ துணைப் பயனியர் செய்வது உங்களுக்கிருக்கும் முதல் வாய்ப்பு. இது ஒழுங்கான பயனியராக இருப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் பொறுப்பையும் பற்றிய அனுபவத்தைக் கொடுக்கும்; அதோடு உங்களுடைய வாழ்க்கையை எப்படி செலவிட போகிறீர்கள் என்பதைப் பற்றிய கருத்தும் தெளிவடையும். பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, முழுநேர வேலைக்கு சென்று வெற்றிடத்தை நிரப்புவதற்கு பதிலாக, ஏன் ஒழுங்கான பயனியர் ஊழியத்தை தொடங்கக்கூடாது? பயனியர் சேவையின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியைப் பெற தாமதமாக அதை துவங்கியவர்கள், முன்பே ஆரம்பிக்காததற்காக வருந்துகிறார்கள்.
12 இளம் நபராக, மணமாகாத நிலையைத் தொடர்வதற்கான உங்கள் வாய்ப்புகளை அனுகூலப்படுத்திக் கொள்ளுங்கள்; முழுநேர பிரசங்க வேலையில் அது அளிக்கும் நன்மைகளை அனுபவியுங்கள். என்றாவது ஒருநாள் மணம் செய்யவேண்டுமென நீங்கள் விரும்பினாலும், ஒழுங்கான பயனியர் வேலையை முதலாவது செய்வது திருமணத்திற்கு சிறந்தவொரு அஸ்திவாரமாக அமையும். முதிர்ச்சியிலும் ஆவிக்குரியரீதியிலும் நீங்கள் வளரும்போது, பயனியர் மனப்பான்மையுள்ள ஒரு துணையுடன் பயனியர் ஊழியத்தை உங்களுடைய வாழ்க்கைப்பணியாக தொடரலாம். ஒன்றுசேர்ந்து பயனியர் சேவை செய்த சில தம்பதிகள் வட்டார ஊழியத்திலோ விசேஷ பயனியர்களாகவோ ஆகியிருக்கிறார்கள். இதுவே மெய்யான திருப்தியளிக்கும் வாழ்க்கை முறை!
13 நீங்கள் எவ்வளவு காலத்துக்கு பயனியராக சேவை செய்தாலும்சரி, உங்களுடைய அறிவில் பெருகியிருப்பீர்கள்; இந்த உலகிலுள்ள எந்தவொரு தொழிலும் அளிக்கமுடியாத மதிப்புமிக்க பயிற்சியைப் பெற்றிருப்பீர்கள். சிட்சை, சொந்த காரியங்களை ஒழுங்குபடுத்துவது, மக்களுடன் பழகுவது, யெகோவாவின்மீது சார்ந்திருப்பது, பொறுமையையும் தயவையும் வளர்ப்பது போன்றவற்றை பயனியர் சேவை கற்பிக்கிறது; இத்தகைய குணங்கள் மிகப்பெரிய பொறுப்புகளை கையாளுவதற்கு உங்களைத் தயாராக்குகின்றன.
14 மனிதவர்க்கத்துக்கு வாழ்க்கை முன்னொருபோதும் இந்தளவு நிச்சயமற்றதாய் இருக்கவில்லை. யெகோவா வாக்குறுதி அளித்திருப்பவற்றைத் தவிர, சொற்ப காரியங்களே உண்மையில் நிரந்தரமானவையாய் இருக்கின்றன. உங்கள் எதிர்காலம் உங்களுக்கு முன்பு இருப்பதால், வரக்கூடிய ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கு இதைவிட சிறந்த நேரம் வேறு எது? பயனியர் சேவையின் சிலாக்கியங்களை கவனமாக சீர்தூக்கிப் பாருங்கள். பயனியர் சேவையை உங்களுடைய வாழ்க்கைப்பணியாக ஏற்றதைக் குறித்து நீங்கள் ஒருபோதும் வருந்தமாட்டீர்கள்.
கேள்வி 4: “மணிநேரங்களை எட்டுவது எப்போதும் ஒரு பிரச்சினையாக இருக்காதா? ஒருவேளை முடியவில்லையென்றால் என்ன செய்வது?”
15 நீங்கள் ஒழுங்கான பயனியர் செய்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்கையில் பின்வரும் இக்கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்: “வருடத்தில் 1,000 மணிநேரத்தை எட்டுவதற்காக நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி விட்டீர்களா?” அதை எட்டுவதற்கு ஊழியத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் மூன்று மணிநேரம் செலவழிக்க வேண்டும். இது தெளிவாகவே, நல்ல அட்டவணையையும் சுயகட்டுப்பாட்டையும் தேவைப்படுத்துகிறது. பெரும்பாலான பயனியர்கள் நடைமுறையான, பயனுள்ள வாழ்க்கைப் போக்கை ஒருசில மாதங்களுக்குள்ளாகவே அமைத்துக்கொண்டு விடுகிறார்கள்.
16 இருந்தாலும், “எல்லாருக்கும் சமயமும் எதிர்பாராத சம்பவங்களும் நிகழ்கின்றன” என்ற பிரசங்கி 9:12-ன் (NW) வார்த்தைகள் உண்மையாக இருக்கின்றன. கடுமையான வியாதியோ மற்ற எதிர்பாராத சம்பவங்களோ ஒரு பயனியர் தன் மணிநேரத்தை அடையமுடியாமல் செய்யலாம். அந்தப் பிரச்சினை நீண்ட காலத்திற்கு இருக்காது என்றாலோ, ஊழிய ஆண்டின் ஆரம்பத்திலேயே ஏற்பட்டாலோ, இழந்த நேரத்தை எட்டுவதற்கு துரிதமான நடவடிக்கையை தேவைப்படுத்தும் அட்டவணை மட்டுமே போதுமானதாக இருக்கலாம். ஊழிய ஆண்டு முடிவதற்கு ஒருசில மாதங்களே இருக்கையில் கடுமையான பிரச்சினை ஏற்பட்டு, பயனியர் அந்த மணிநேரத்தை எட்டமுடியாமல் போகையில் என்ன செய்வது?
17 நீங்கள் ஒருசில மாதங்களுக்கு வியாதிப்பட்டதாலோ, சமாளிக்கமுடியாத சில அவசர பிரச்சினைகள் எழும்பினதாலோ உங்களால் தேவையான மணிநேரத்தை எட்டமுடியாமல் போனால், சபை ஊழியக் குழுவின் அங்கத்தினரை அணுகி பிரச்சினையை விளக்குங்கள். எட்டமுடியாத மணிநேரத்தைப் பற்றி கவலைப்படாமல் பயனியர் சேவையைத் தொடருவதற்கு உங்களை அனுமதிக்கலாம் என்று இந்த மூப்பர்கள் நினைத்தார்களென்றால் அவர்கள் அத்தீர்மானத்தைச் செய்யலாம். நீங்கள் இழந்துபோன மணிநேரத்தை எட்டவேண்டியதில்லை என்று காட்டுவதற்கு செயலர் உங்களுடைய சபை பிரஸ்தாபி அட்டையில் மார்க் செய்வார். இது உங்களுக்கு விடுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது எனக் குறிக்காது; ஆனால், இது உங்களுடைய சூழ்நிலையின் காரணமாக காட்டப்படும் விசேஷ சலுகையாக உள்ளது.—அக்டோபர் 1986 ஆங்கில நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் பாரா 18-ஐக் காண்க.
18 அனுபவம்வாய்ந்த பயனியர்கள் ஊழிய ஆண்டின் ஆரம்பத்திலேயே அதிக மணிநேரம் ஊழியம் செய்கின்றனர். அவர்களுடைய பயனியர் சேவை முதலிடத்தில் வைக்கப்படுகிறது; இதனால் தேவையற்ற சில செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது அவசியமென காண்கின்றனர். சரியான அட்டவணை இல்லாததாலோ, சுயகட்டுப்பாட்டை இழந்ததால் அட்டவணையைப் பின்பற்ற முடியாமல் போனதாலோ, எட்டமுடியாத மணிநேரங்களுக்கு தானே பொறுப்பு என்பதை அவர் உணரவேண்டும்; அதோடு எந்தவித தனிச் சலுகையையும் எதிர்பார்க்கக்கூடாது.
19 ஒரு பயனியர் தன்னுடைய சூழ்நிலைமைகளில் தவிர்க்கமுடியாத மாற்றங்களை எதிர்ப்படுகிற சமயங்களும் உண்டு. நீடித்திருக்கிற உடல்நலக் கோளாறு, அதிகரித்திருக்கும் குடும்பப் பொறுப்பு, இன்னும் இதுபோன்றவற்றால் நீண்ட காலத்திற்கு தன்னால் மணிநேரத்தை எட்டமுடியாமல் போகலாம் என்று அவர் நினைக்கலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில், பிரஸ்தாபி என்ற நிலைக்கு வந்து, முடிந்தபோதெல்லாம் துணைப் பயனியர் சேவையில் பங்குகொள்வது ஞானமான செயலாக இருக்கலாம். அவருடைய சூழ்நிலை மணிநேர தேவையை எட்டுவதற்கு இனிமேலும் அனுமதிக்காதபோது அவரை பயனியர் பட்டியலில் தொடர்ந்திருக்க அனுமதிப்பதற்கு எந்தவொரு ஏற்பாடுமில்லை.
20 தகுதியுள்ள நபர்களுக்கு விசேஷ சலுகை காட்டும் இந்த ஏற்பாடு கவலைப்படாமல் பயனியர் சேவையைத் தொடர அநேகருக்கு உற்சாகமளிக்கும் என நாங்கள் நம்புகிறோம். ஏற்கெனவே முழுநேர சேவையில் இருப்பவர்கள் அதை தொடர உற்சாகப்படுத்தும். பயனியர்கள் தங்களுடைய முழுநேர சேவையில் வெற்றி அடையவேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.
கேள்வி 5: “நான் எதையாவது சாதிக்க வேண்டுமென்றும், அதை செய்வதில் மகிழ்ச்சியடைய வேண்டுமென்றும் விரும்புகிறேன். இதற்கு பயனியர் சேவை எனக்கு உதவுமா?”
21 யெகோவாவோடு நெருக்கமான, தனிப்பட்ட உறவை வைத்திருப்பதிலும், அவரை உண்மையோடு சேவித்து வருகிறோம் என்ற உறுதியான நம்பிக்கையிலுமே உண்மையான மகிழ்ச்சி பெரிதும் சார்ந்திருக்கிறது. இயேசு, “தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு” வாதனையின் கழுமரத்தை சகித்தார். (எபி. 12:2) கடவுளுடைய சித்தத்தை செய்வதில்தான் அவருக்கு மகிழ்ச்சி கிடைத்தது. (சங். 40:8) இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையில், நம்முடைய செயல்கள் பெரும்பாலும் யெகோவாவின் வணக்கத்தோடு தொடர்புடையதாக இருந்தால், நாம் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். ஆவிக்குரிய செயல்கள், நோக்கத்தோடு செயல்படும் உணர்வை கொடுக்கின்றன; ஏனென்றால் சரியானதைச் செய்கிறோம் என்ற ஆத்ம திருப்தி நமக்கு கிடைக்கிறது. கொடுப்பதில்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது; கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவனை அடைவது எப்படி என்பதை கற்றுக் கொடுப்பதைவிட மற்றவர்களுக்கு கொடுக்க நம்மிடம் சிறந்தது வேறேதும் உண்டோ?—அப். 20:35.
22 முதல் பாராவில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த பயனியர் இவ்வாறு விளக்கினார்: “நீங்கள் பைபிள் படிப்பு நடத்திவருகிற ஒருவர், யெகோவாவைத் துதிப்பவராகிச் செயல்படுவதைக் காணும் மகிழ்ச்சியைப் பார்க்கிலும் மேம்பட்ட மகிழ்ச்சி ஏதாவது இருக்கக்கூடுமா? யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்காக, தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்யும்படி ஆட்களைத் தூண்டியியக்குவதில் கடவுளுடைய வசனம் எவ்வளவு வல்லமை வாய்ந்ததாக இருக்கிறது என்பதைக் காண்பது கிளர்ச்சியூட்டுவதாயும் விசுவாசத்தைப் பலப்படுத்துவதாயும் இருக்கிறது.” (அக்டோபர் 15, 1997, காவற்கோபுரம், பக்கங்கள் 18-23-ஐக் காண்க.) எனவே, எது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது? உலகம் அளிக்கும் தற்காலிக சந்தோஷங்களுக்கு மாறாக, நிரந்தரமான, பயன்மிக்க முயற்சி எடுக்க விரும்பினீர்களானால், பயனியர் சேவை உங்களுக்கு சாதனை உணர்வை ஏற்படுத்தும், அது உங்களுக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
கேள்வி 6: “நித்திய ஜீவனைப் பெறுவதற்கு பயனியர் சேவை தேவையில்லையென்றால், நான் அதைச் செய்கிறேனா இல்லையா என்பது என்னுடைய தனிப்பட்ட விஷயம்தானே?”
23 உண்மைதான், பயனியர் செய்வதென்பது உங்களுடைய தீர்மானமாக இருக்கவேண்டும். யெகோவா மட்டுமே உங்களுடைய வாழ்க்கையின் தனிப்பட்ட சூழ்நிலைமைகளை நியாயந்தீர்க்க முடியும். (ரோ. 14:4) உங்களுடைய முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் அவரை சேவிக்கவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். (மாற். 12:30; கலா. 6:4, 5) மனப்பூர்வமாக கொடுப்பவரையே அவர் நேசிக்கிறார்; கட்டாயத்தின் பேரிலோ சலித்துக் கொண்டோ செய்பவரை அல்ல, மனமகிழ்ச்சியோடு அவரை சேவிப்பவரையே விரும்புகிறார். (2 கொ. 9:7; கொலோ. 3:24) யெகோவாவையும் உங்களுடைய பிராந்தியத்திலுள்ள மக்களையும் நேசிப்பதே முழுநேர சேவை செய்வதற்கான காரணமாய் இருக்க வேண்டும். (மத். 9:6-38; மாற். 12:30, 31) இவ்விதமாகத்தான் நீங்கள் உணருவீர்களென்றால், பயனியர் சேவை செய்வதைக் குறித்து சிந்திப்பதை தகுதியானதாக கருதுவீர்கள்.
24 இங்கே குறிப்பிடப்பட்டவை பயனியர் செய்வதன் எதிர்பார்ப்புகளை சீர்தூக்கிப் பார்க்க உங்களுக்கு உதவுமென நாங்கள் நம்புகிறோம். ஒழுங்கான பயனியர் செய்வதற்கு நீங்கள் உங்களுடைய சூழ்நிலைமையை சற்றே சரிப்படுத்த முடியுமா? “என்னுடைய வாராந்தர பயனியர் சேவை அட்டவணை” என்ற காலண்டர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சுமார் 23 மணிநேரத்தை ஊழியத்தில் செலவிடுமாறு நீங்களாகவே நடைமுறையான அட்டவணை போட முடியுமா என்பதைப் பாருங்கள். பிறகு, யெகோவாமீது உங்களுடைய முழு நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வையுங்கள். அவருடைய உதவியோடு நீங்கள் வெற்றிபெற முடியும்! அவர் இவ்வாறு வாக்களித்திருக்கிறார்: “நான் . . . இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்.”—மல். 3:10.
25 எனவே, “பயனியர் சேவை—உங்களால் செய்ய முடியுமா?” என நாங்கள் கேட்கிறோம். உங்கள் பதில் “ஆம்” என இருந்தால், ஒழுங்கான பயனியர் சேவையை சீக்கிரத்தில் துவங்குவதற்கான நாளை தீர்மானியுங்கள்; யெகோவா அளிக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை உங்களுடையதே என்பதில் நிச்சயமாயிருங்கள்!
[பக்கம் 6-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
என்னுடைய வாராந்தர பயனியர் சேவை அட்டவணை
திங்கள் காலை வெளி ஊழியம்
செவ்வாய் காலை வெளி ஊழியம்
புதன் காலை வெளி ஊழியம்
வியாழன் காலை வெளி ஊழியம்
வெள்ளி காலை வெளி ஊழியம்
சனி காலை வெளி ஊழியம்
ஞாயிறு காலை வெளி ஊழியம்
திங்கள் மதியம் வெளி ஊழியம்
செவ்வாய் மதியம் வெளி ஊழியம்
புதன் மதியம் வெளி ஊழியம்
வியாழன் மதியம் வெளி ஊழியம்
வெள்ளி மதியம் வெளி ஊழியம்
சனி மதியம் வெளி ஊழியம்
ஞாயிறு மதியம் வெளி ஊழியம்
திங்கள் மாலை வெளி ஊழியம்
செவ்வாய் மாலை வெளி ஊழியம்
புதன் மாலை வெளி ஊழியம்
வியாழன் மாலை வெளி ஊழியம்
வெள்ளி மாலை வெளி ஊழியம்
சனி மாலை வெளி ஊழியம்
ஞாயிறு மாலை வெளி ஊழியம்
அட்டவணையில் எழுத பென்சிலைப் பயன்படுத்துங்கள்.
வெளி ஊழியத்தில் ஒவ்வொரு வாரமும் சுமார் 23 மணிநேரம் செலவிடும்படி அட்டவணையிடுங்கள். அட்டவணையிடப்பட்ட மொத்த வாராந்தர மணிநேரங்கள் ___________________