இருபதாயிரம்!
இந்தியாவில், இந்த ஊழிய ஆண்டின் முடிவில் அறிக்கை செய்யும் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை தலைப்பில் குறிப்பிட்டவாறு இருக்கவேண்டுமென்றே நாங்கள் விரும்புகிறோம். அதை நம்மால் எட்ட முடியுமா? கண்டிப்பாக முடியும்! ஆகஸ்ட் 1997-ன் முடிவில் இந்தியாவிலுள்ள அனைத்து சபைகளிலும் மொத்தமாக 18,781 பிரஸ்தாபிகள் இருந்தனர். இருந்தபோதிலும், அந்த மாதம் வரையிலுமாக மொத்த உச்சநிலை 17,534-ஆக இருந்தது. கடந்த ஊழிய ஆண்டில் 1,247 பேர் ஏதோவொரு மாதத்தில் ஒழுங்கற்ற பிரஸ்தாபிகளாக இருந்திருக்கின்றனர் என்பதை இது காட்டுகிறது! பெரும்பாலான சபைகளில் சிலர் தொடர்ந்து ஒழுங்கற்ற பிரஸ்தாபிகளாக இருந்திருக்கின்றனர் என வட்டாரக் கண்காணியின் அறிக்கை காட்டுகிறது. மழைக்கால மாதங்களில் ஒவ்வொரு பிரஸ்தாபியும் ஊழியத்தில் பங்குகொள்வதற்கு சரியான ஏற்பாடுகளை செய்து, அதை தக்க சமயத்தில் அறிக்கை செய்வாரென்றால், 20,000 பிரஸ்தாபிகள் என்ற இலக்கை நாம் நிச்சயம் எட்டி விடலாம். மாதத்தின் ஆரம்பத்திலேயே ஊழியத்தை துவங்குவதன்மூலம், சாட்சிகொடுக்கும் வேலையில் சில மணிநேரமாவது செலவழிக்க நாம் தவறமாட்டோம். சபை புத்தகப் படிப்பு நடத்துபவர்கள் தங்கள் தொகுதியிலுள்ள ஒழுங்கற்ற பிரஸ்தாபிகளுக்கு உதவி செய்ய ஊக்கமான முயற்சி எடுக்கவேண்டும். முந்தைய மாதங்களில் நீங்கள் ஒழுங்கான பிரஸ்தாபியாக இருந்திராவிட்டால், உங்களுடைய புத்தகப் படிப்பு நடத்துபவரிடம் உதவியைக் கேட்கும்படி நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம்; உங்களோடு ஊழியம் செய்ய ஒருவரை நியமிப்பதில் அவர் மகிழ்ச்சியுள்ளவராயிருப்பார். ஒருங்கிணைந்த முயற்சியால், முதன்முறையாக, இந்தியாவில் 20,000 பிரஸ்தாபிகள் என்ற இலக்கை தாண்டுகிற புதிய உச்சநிலையை நாம் காண முடியும். அது யெகோவா தேவனுக்கு செலுத்தப்படும் என்னே கெம்பீர சத்தமான துதி!—சங். 47:1.