1999 “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை” மாவட்ட மாநாடுகள்
1 இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழையவிருந்த தருணம். கடவுளுடைய கட்டளைகளை மதித்து நடக்கும்படி மோசே அவர்களிடம் அப்போது கேட்டுக்கொண்டார். அவர் சொன்னார்: “இத்திருச் சட்டத்தின் எவ்வார்த்தையும் வீணானதல்ல. அதுவே உங்களது வாழ்வு.” (உபா. [இணைச் சட்டம்] 32:45-47, பொது மொழிபெயர்ப்பு) யெகோவாவுக்கு நம்முடைய ஜீவன் மிகவும் அருமையானது; அதனால்தான் தம்முடைய விலைமதிக்க முடியாத வார்த்தையால் நம்மை அவர் தொடர்ந்து வழிநடத்துகிறார். அதற்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம் அல்லவா? ஆகவே, மூன்று நாட்கள் நடைபெறும் “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை” மாவட்ட மாநாட்டில் யெகோவா நமக்காக வைத்திருக்கும் ஆவிக்குரிய உணவை ருசித்து மகிழ, நாம் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறோம்.
2 இந்த வருடம் மாவட்ட மாநாடுகள் இந்தியாவில் எல்லாருக்கும் வசதியாக 27 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. முதன்முறையாக இத்தேசத்தில் மிஸோ மொழியில் மாநாட்டு நிகழ்ச்சிநிரல் சுருக்கமாக நடத்தப்பட இருக்கிறது.
3 எல்லா நாட்களும் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு நீங்கள் ஏற்கெனவே திட்டமிட்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், நீங்கள் கலந்துகொள்ள வேண்டுமென்றே யெகோவா எதிர்பார்க்கிறார் என நம்புகிறீர்கள். ஆஜராவதற்கு தம்முடைய ஊழியர்கள் எடுக்கும் தனிப்பட்ட முயற்சிகளையும் தியாகங்களையும் கடவுள் கவனிக்கிறார், இப்படிப்பட்டவர்களை அவர் பாராட்டுதலோடு நினைவுகூருகிறார் என்பதில் நிச்சயமாயிருங்கள். (எபி. 6:10) மாநாட்டின் ஒவ்வொரு நாளும் ஆரம்ப பாடல் முதல் இறுதி ஜெபம் வரை கலந்துகொள்ள வேண்டும். அப்படி செய்வதால், யெகோவா நமக்கு கொடுத்துள்ள வார்த்தைகளை உயர்வாக கருதுகிறோம் என்பதை அவருக்கு காண்பிப்போம். (உபா. 4:9) மாநாட்டுக் காரியங்களில் ஈடுபட்டுள்ள அநேக சகோதரர்களின் கடின உழைப்பை நாம் போற்றுகிறோம் என்பதையும் காண்பிக்கலாமே.
4 ஒவ்வொரு மாநாட்டிலும் கடவுளுடைய ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கூடிவருவதற்காக அநேக ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்காக முன்னதாகவே திட்டமிட்டு நன்கு ஒழுங்கமைப்பது அவசியம். மாநாட்டு ஏற்பாடுகள் அன்புடன் செய்யப்பட்டிருப்பதை நாம் அறிந்திருப்பது, அந்த ஏற்பாடுகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க நம்மை தூண்டும். இது, ‘சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படுவதற்கு’ உதவும். (1 கொ. 14:40) ஆவிக்குரிய உணவையும் கிறிஸ்தவ கூட்டுறவையும் அனுபவித்து மகிழ, நன்கு தயார்நிலையில் மாநாட்டிற்கு செல்லுங்கள். அதற்காக பின்வரும் தகவலும் நினைப்பூட்டுதலும் கொடுக்கப்படுகின்றன.
மாநாட்டிற்கு முன்பு
5 நீங்கள் யாரோடு பைபிள் படிப்பு நடத்துகிறீர்களோ அவர்களுக்கும் அக்கறை காண்பிக்கும் நபர்களுக்கும் மாநாட்டில் கலந்துகொள்ள உதவி தேவையா? மாநாட்டில் அவர்கள் பார்ப்பதும் கேட்பதும் யெகோவாவின் வணக்கத்தாராக ஆவதற்கு அவர்களைத் தூண்டலாம். (1 கொ. 14:25) தங்குவதற்கு அல்லது பயணம் செய்வதற்கு யாருக்காவது, முக்கியமாக சபையிலுள்ள முதியோருக்கு உதவி தேவைப்படுகிறதா என்பதை மூப்பர்கள் அறிந்திருக்க வேண்டும். மேலும், அவர்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதையும் அன்போடு பார்த்துக்கொள்ள வேண்டும்.—கலா. 6:10.
6 நீங்கள் தங்குவதற்கான இடம் உறுதி செய்யப்பட்டுவிட்டதா? நீங்கள் ஹோட்டலில் தங்குவதாக இருந்தால் உங்களுடைய ரூம் புக்கிங் கன்பர்ம் செய்யப்பட்டுவிட்டதா? ரூமுக்கான முன்பணத்தை ஹோட்டலுக்கு செலுத்தி விட்டீர்களா?
7 மாநாடு சம்பந்தமாக கூடுதல் தகவல் பெற வேண்டுமா? சபை காரியதரிசி உங்களுக்கு குறிப்பிட்ட இடத்தின் விலாசத்தை கொடுப்பார். தயவுசெய்து மாநாட்டு மன்றத்திலுள்ள அலுவலகத்திற்கு போன் செய்யவோ கடிதம் எழுதவோ செய்யாதீர்கள்.
8 மாநாட்டிலுள்ள முதலுதவி இலாகா, அவசரத் தேவைக்கு மட்டுமே என்பதால், ஆஸ்பிரின், பேண்டேஜ்கள், இன்ஹேலர், ஜீரண மருந்துகள் போன்றவை உங்களுக்குத் தேவை என நீங்கள் நினைத்தால், அவற்றை நீங்களே மாநாட்டிற்கு கொண்டு வாருங்கள் என்றே ஆலோசனை வழங்குகிறோம். நீங்களோ அல்லது உங்களுக்குப் நெருக்கமானவர்களோ சுகவீனமாக இருக்கலாம். ஒருவேளை இருதயக் கோளாறு, நீரிழிவு நோய், அல்லது வலிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நீங்கள் வீட்டில் இருக்கும்போது அல்லது விடுமுறையில் செல்லும்போது மருந்துகளைக் கைவசம் வைத்திருப்பதுபோல மாநாட்டிற்கு வரும்போதும் தேவையானவற்றை கொண்டு வாருங்கள். குடும்ப அங்கத்தினரோ அல்லது நெருங்கிய நண்பரோ அந்த சுகவீனரோடு இருப்பது நல்லது. ஏனெனில் உதவி தேவைப்படும் நபருக்கு இப்படிப்பட்டவர்களே நன்கு உதவ முடியும்.
9 நீங்கள் மாநாட்டிற்கு வரும்போதோ அல்லது அங்கிருந்து திரும்பிச் செல்லும்போதோ சந்தர்ப்ப சாட்சி கொடுக்க வாய்ப்புகள் எழலாம். அந்தச் சமயத்தில் மற்றவர்களுடன் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ள நீங்கள் ஆயத்தமாக இருப்பீர்களா? சிறுபிள்ளைகள் உட்பட, நாம் அனைவருமே பெட்ரோல் பங்குகளில் வேலை செய்பவர்களுக்கு, வரிவசூலிப்பவர்களுக்கு அல்லது பிரயாணத்தில் சந்திக்கும் மற்றவர்களுக்கு துண்டுப்பிரதிகளைக் கொடுக்கலாம். அக்கறை காட்டுவோருக்கு, பத்திரிகைகள், சிற்றேடுகள் அல்லது மற்ற பிரசுரங்களை கொடுக்க வாய்ப்புகள் கிடைக்கும். ஆகவே சாதாரணமாக வீடுகளில் சந்திக்க முடியாதவர்களிடம் சந்தர்ப்ப சாட்சிகொடுப்பதற்கு எப்பொழுதும் தயாராயிருங்கள்.
மாநாட்டின்போது
10 மாநாட்டு மன்றத்தின் கதவுகள் தினந்தோறும் திறக்கப்பட்டப்பிறகு, உங்களுடைய நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களுக்கு அல்லது உங்களோடு வந்தவர்களுக்கு மட்டுமே நீங்கள் இருக்கைகளை ரிசர்வ் செய்யலாம். வயதான சகோதர சகோதரிகள் சௌகரியமாக அமர இருக்கை வசதிகள் செய்து தரப்படும்; ஊனமுற்றவர்களுக்கும் சக்கர நாற்காலியை பயன்படுத்துபவர்களுக்கும் தனிப்பகுதிகள் ஒதுக்கிவைக்கப்படும். சுற்றுப்புற சூழல் சம்பந்தப்பட்ட நோய்களால் அல்லது அலர்ஜியால் அவதிப்படுபவர்களுக்கு மாநாட்டு வளாகத்தில் விசேஷ அறை ஒதுக்கீடுகள் செய்வது சாத்தியமற்றது. ஒவ்வொரு நாளும் நீங்கள் திரும்பிச் செல்கையில் தயவுசெய்து உங்களுடைய எல்லா உடைமைகளையும் மறக்காமல் எடுத்துக்கொண்டீர்களா என சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
11 நம்முடைய மாவட்ட மாநாடுகளில் நாம் பெரும் திரளாய் கூடிவருகிறோம். ஆகவே நாம் உள்ளூர் சட்டங்களையும் தீயணைப்பு விதிமுறைகளையும் மற்ற பாதுகாப்பு சட்டங்களையும் பின்பற்ற வேண்டும். ஆகவே மாநாட்டு மன்றத்தின் உள்ளேயுள்ள பக்கப்பகுதியிலும் வெளியேறும் பாதைகளிலும் எவ்வித தடங்களும் இல்லாமல் இருக்க வேண்டும். ஏதாவது எமெர்ஜென்சி ஏற்படுமேயானால், மாநாட்டு வளாகத்தை விட்டு உடனடியாக காலிசெய்வதற்கு ஏற்ப எல்லா வசதிகளும் இருக்க வேண்டும்.
12 வருகிற மாவட்ட மாநாட்டில் நீங்கள் முழுக்காட்டுதல் எடுக்கப்போகிறீர்களா? உங்களுக்காக மாநாட்டில் சனிக்கிழமை காலை நிகழ்ச்சிநிரலின்போது இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இடத்திற்கு அட்டன்டன்டுகள் உங்களை அழைத்துச் செல்வார்கள். கூடுமானவரை நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தயவுசெய்து உங்களுடைய இருக்கைகளில் அமருங்கள். உங்களுடைய பைபிளையும் பாட்டு புத்தகத்தையும் டவலையும் அடக்கமான குளியல் உடையையும் கொண்டுவாருங்கள். ஸ்லோகன் பொறிக்கப்பட்ட T ஷர்ட்டுகளும் இதற்கு ஒப்பான வேறுவகையான உடைகளும் இப்படிப்பட்ட மதிப்புமிக்க நிகழ்ச்சிக்கு பொருத்தமற்றவை. முழுக்காட்டுதல் பெறப்போகிறவர்களிடம் நம் ஊழியம் புத்தகத்திலிருந்து முழுக்காட்டுதலுக்கான கேள்விகளை மூப்பர்கள் கலந்தாலோசிக்கும்போதே இந்த எல்லா அம்சங்களையும் அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். கடவுளுக்கு ஒருவருடைய வாழ்க்கையை தனிப்பட்ட விதத்தில் ஒப்புக்கொடுத்ததற்கான அடையாளமே முழுக்காட்டுதல். ஆகவே முழுக்காட்டுதல் எடுக்கும் நபர்கள், முழுக்காட்டுதலின்போது ஒருவர் மற்றவருடைய கையை கோர்த்துக்கொண்டிருப்பது பொருத்தமற்றது.
13 வீடியோ கேமராக்கள், கேமராக்கள், டேப் ரெக்கார்டர்கள் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால், இவற்றை நடைபாதைகளில் வைக்கக்கூடாது. உட்கார்ந்திருப்பவர்களின் பார்வையை மறைக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். நிகழ்ச்சிகளை கவனிப்பதிலிருந்து மற்றவர்களின் கவனத்தை சிதறடிக்காதீர்கள். இக்கருவிகளை மின் இணைப்புகளுடனோ, ஒலி அமைப்புகளுடனோ இணைக்கக்கூடாது.
14 செல்லுலார் போன்களையும் பேஜர்களையும் இந்நாட்களில் பயன்படுத்துவது சகஜமாகிவிட்டது. ஆகவே இப்படிப்பட்ட சாதனங்கள் உங்களுடைய அல்லது உங்களை சுற்றி அமர்ந்திருக்கும் மற்றவர்களுடைய கவனத்தை நிகழ்ச்சி நிரலிலிருந்து திசைதிருப்பாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் மன்றத்திலிருக்கையில் இப்படிப்பட்ட சாதனங்கள் ஒலி எழுப்பாதபடியோ அல்லது மற்றவர்களுக்கு கேட்கும்படியாக ‘பீப்பீப்’ என சத்தமிடாதபடியோ பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுடைய செல்லுலார் போனை பயன்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டால், தயவுசெய்து மாநாட்டு மன்றத்திற்கு வெளியே சென்று பயன்படுத்துங்கள்.
15 மாநாட்டிற்கு வரும்போது, நேரத்தையும் வேலையையும் மிச்சப்படுத்துவதற்காக ஒவ்வொரு நாளும் நம்முடைய மதிய உணவை நாமே கொண்டுவரும்படி சங்கம் ஆலோசனை கொடுத்தது. இந்த ஆலோசனையை அநேக சகோதரர்கள் பின்பற்றியிருக்கின்றனர். இது மதிய இடைவேளையின்போது குடும்பமாக அமர்ந்து, உணவை சாப்பிடுவதற்கு வசதியாக இருப்பதாய் இவர்கள் சொல்லுகிறார்கள். மேலுமாக, மதிய இடைவேளையில் நன்கு ஓய்வெடுப்பதற்கும் சகோதர சகோதரிகளோடு நல்ல கூட்டுறவை அனுபவித்து மகிழுவதற்கும் அதிக நேரத்தை செலவிடுவது இதமாய் இருப்பதாக அநேகர் சொன்னார்கள். அவ்வாறு நீங்களும் உணரவேண்டுமாகில், உணவுப் பண்டங்களையும் பானங்களையும் முன்கூட்டியே வாங்கி, அவற்றை இருக்கைக்கு அடியில் வைக்குமளவுக்குள்ள சிறிய கன்டெய்னரில் கொண்டுவாருங்கள். மாநாட்டுக்கு ஆஜராகும் அனைவரும் இந்த அறிவுரைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மாநாட்டு வளாகத்திலுள்ள கேன்டீன்களிலோ அல்லது வெளியில் உள்ள ஹோட்டல்களிலோ உணவை வாங்குவதற்காக அநேக சகோதரர்கள் நிகழ்ச்சிநிரல் நடந்துகொண்டிருக்கும்போது மன்றத்தை விட்டு வெளியே செல்வதாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இது மற்றவர்களுடைய கவனத்தை திசைதிருப்புவது மட்டமல்லாமல் மாநாட்டு மேடையில் வழங்கப்படும் ஆவிக்குரிய உணவிற்கு அவமரியாதையை காட்டுவதையும் குறிக்கிறது. உங்களுக்கு விருப்பமான ஹோட்டல்களில் உணவு பண்டங்களையும் பானங்களையும் நீங்கள் வாங்குவதை பற்றி ஆட்சேபனை இல்லை. ஆனால் இந்த காரியங்களை இடைவேளையின்போது செய்தால் நன்றாக இருக்கும். ஹோட்டல்களுக்கு முன்பாக பெரும் கூட்டமாக இருப்பது உலகப்பிரகாரமான ஆட்களை கவர்ந்திழுத்து, மாநாட்டு பிரதிநிதிகளும் உலகப்பிரகாரமான ஆட்களும் ஒன்றர கலந்துவிடுவதில் முடிவடையும். இவர்களில் சிலர் இச்சந்தர்ப்பத்தை தீய நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளக்கூடும். ஆகவே தினந்தோறும் மாநாட்டிற்கு வரும்போது, தயவுசெய்து உங்களுக்கு வேண்டிய உணவுப் பண்டங்களையும் பானங்களையும் கையோடு கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களோடு வரும் ஆர்வமுள்ள ஆட்களுக்கும் இந்த வேண்டுகோள் பொருந்தும். கண்ணாடி டம்ளர்களுக்கும் மதுபானங்களுக்கும் மாநாட்டு வளாகத்திற்குள் அனுமதியில்லை.
16 நிகழ்ச்சிநிரல் முடிந்த பிறகு மாநாட்டு வளாகத்தை சுத்தம் செய்வதற்கு ஒவ்வொரு நாளும் உங்களுடைய உதவிக்கரங்களை நீட்ட முடியுமா? அல்லது மாநாட்டின் வேறு இலாகாக்களில் வேலைசெய்ய முடியுமா? முடியுமென்றால், தயவுசெய்து வாலண்டியர் சேவை இலாகாவை அணுகவும். 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளும் இந்த வேலையை செய்ய முன்வரலாம்; ஆனால் இவர்கள் தங்களுடைய பெற்றோருடன் அல்லது பொறுப்பான வயதுவந்தவரோடு வேலை செய்வார்கள். ஏதாவது குப்பைக்கூளங்களை பார்த்தால் அவற்றை உடனடியாக குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவதன் மூலம் எல்லாரும் மாநாட்டு வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு உதவி செய்வோம் என்பதில் சந்தேகமில்லை.
17 நம்முடைய மாநாடுகளில் எப்படிப்பட்ட உடை மற்றும் சிகையலங்காரங்கள் பொருத்தமாக இருக்கும் என்பதைப் பற்றி சிறந்த ஆலோசனைகளை நாம் பெற்றிருக்கிறோம். உதாரணமாக நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கைகளில் இது சம்பந்தமாக அறிவுரைகளைப் பெற்றுக்கொள்கிறோம். நம்முடைய பிரசுரங்களில் உதாரணங்களையும் படங்களையும் பார்க்கிறோம்; அதிமுக்கியமாக பைபிளில் யெகோவா என்ன சொல்லுகிறார் என்பதையும் நாம் தெரிந்திருக்கிறோம். (ரோ. 12:2; 1 தீ. 2:9, 10) நாம் யார் என்பதும் அந்நகரத்தில் எதற்காக கூடியிருக்கிறோம் என்பதும் பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே நம்முடைய உடை மற்றும் சிகை அலங்காரம் மிகச் சிறந்த சாட்சியைக் கொடுக்கின்றன. யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பான்மையோர் இந்த அம்சத்தில் சிறந்த முன்மாதிரிகளாய் திகழுகிறார்கள். இருந்தபோதிலும், சில சமயங்களில் நம்முடைய மாநாடுகளுக்கு வருகைதரும் சிலருடைய நடை உடை பாவனையில் உலக மனநிலை தொற்றிக்கொண்டிருப்பது தெரிகிறது. ஆவிக்குரிய நபர்கள் என அவர்கள் சொல்லிக்கொண்டாலும் உடல் அங்கங்களை வெளிக்காட்டும் உடைகளை அணிவது அவர்கள் சொல்வதை பொய்யாக்குகிறது. அடக்க ஒடுக்கமான, சுத்தமான, நேர்த்தியான தோற்றமே ஒரு தனி அழகுதான். ஆகவே குடும்பத் தலைவர்கள், தங்கள் குடும்பத்தினர்கள் மாநாட்டில் எந்த விதமான உடைகளை அணிய திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதற்கு சற்று கவனம் செலுத்த வேண்டும். மாநாட்டு வளாகத்திற்கு வெளியே இருக்கும் சமயத்திலும் இந்த ஆலோசனை பின்பற்றப்பட வேண்டும். மேலுமாக நிகழ்ச்சிநிரலுக்கு முன்பும் பின்பும் பேட்ஜ் கார்டுகளை அணிவது, நாம் யெகோவாவின் சாட்சிகள் என்றும் அவருடைய சுத்தமான மக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காட்ட உதவும்.—மாற்கு 8:38-ஐ ஒப்பிடுக.
18 தெய்வீக ஏவுதலோடு ஞானமுள்ள அரசனாகிய சாலொமோன் பின்வருமாறு கருத்துரைத்தார்: “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்,” “தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.” (நீதி. 22:15; 29:15) மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது நிகழ்ச்சிநிரலிலிருந்து நன்மைகளை பெற முயலும் சகோதர சகோதரிகளை கவனிக்க விடாமல், ஏனோதானோவென விடப்பட்ட இளம் சாட்சிகள் தொந்தரவு செய்திருக்கின்றனர். கடந்த வருடம், சில இளம் பிள்ளைகள் சரியான விதத்தில் மேற்பார்வை செய்யப்படாதவர்களாக அங்குமிங்குமாக திரிந்து கொண்டிருந்தது கவனிக்கப்பட்டது. அதே சமயம் சில இளைஞர்கள் மாநாட்டு மன்றத்தின் வெளிப்புறத்திலும் கழிவறைகள் இருக்கும் பகுதிகளிலும் கதையடித்துக்கொண்டு அலைந்ததாகவும் தெரிகிறது. இந்த இளம் பிள்ளைகளை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட ஆவிக்குரிய நிகழ்ச்சிநிரலிலிருந்து இவர்கள் கொஞ்சம்கூட பயனடையவில்லை என்பதில் சந்தேகமேயில்லை. பிள்ளைகளின் நடத்தைக்கு பெற்றோர்களே பொறுப்பு. பிள்ளைகள் பெற்றோர்களோடு உட்கார வேண்டும். அப்போதுதான் தங்களுடைய பிள்ளைகள் யெகோவாவின் அறிவுரைகளுக்கு ஏற்ப ஒழுங்காக நடக்கிறார்களா என்பதை பெற்றோர் கவனித்துக்கொள்ள முடியும். இடைஞ்சல் உண்டாக்குபவர்களை அட்டன்டன்டுகள் அணுகி, அமைதியாக இருக்க வேண்டுகோள் விடுப்பார்கள். நிகழ்ச்சிநிரலுக்கு கவனம் செலுத்தும்படியாகவும் அவர்களை கனிவோடு நினைப்பூட்டுவார்கள்.
19 மாநாடுகளுக்கு பொதுமக்களும் வருவதால், நம்முடைய பிள்ளைகளையும் உடைமைகளையும் குறித்து கவனமாய் இருப்பது ஞானமானது. பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து வந்த பரிசு. ஆனால், இந்த உலகம் சாத்தானின் ஈவிரக்கமற்ற ஈனச்செயல்களை பின்பற்றுகிறது என்பது நமக்குத் தெரியும். ஆகவே எல்லா சமயங்களிலும் பிள்ளைகள் எங்கிருக்கிறார்கள் என்பதில் கவனமாய் இருங்கள். மேலும் உங்களுடைய கேமரா, பர்ஸ் மற்றும் மதிப்பு வாய்ந்த வேறு பொருட்களை எல்லா சமயங்களிலும் உங்களிடமே வைத்திருங்கள். இவற்றை உங்களுடைய இருக்கைகளில் வைத்துவிட்டு வெளியே செல்லாதீர்கள். உங்களுடைய வாகனத்தை பூட்டிவையுங்கள். உங்களுடைய சொந்த உடைமைகளை டிக்கியில் வைத்து பூட்டிவிடுங்கள்; அல்லது கையோடு எடுத்து வந்துவிடுங்கள். இவ்வாறு செய்வது மற்றவர்கள் யாராவது உங்களுடைய காரை உடைத்து அதிலுள்ள பொருட்களை எடுப்பதைத் தடுக்கும்.
20 நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் ரூம் ரிசர்வேஷன் சம்பந்தமாக ஏதாவது பிரச்சினை வந்தால் உள்ளூர் ரூமிங் டிபார்ட்மெண்ட் உங்களுக்கு உதவிட காத்திருக்கிறது. அவ்வாறு பிரச்சினை ஏற்பட்டால், தயவுசெய்து உடனடியாக ரூமிங் டிபார்ட்மெண்டிற்கு தெரியப்படுத்துங்கள். இதை நீங்கள் மாநாடு நடக்கும் இடத்தில் இருக்கும்போதே தெரியப்படுத்திவிடுங்கள். பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு சகோதரர்கள் அதிக மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள். இதன் விளைவாக நீங்கள் நிம்மதியாக மாநாட்டை அனுபவித்து மகிழலாம். உங்களுடைய தங்குமிடம் சம்பந்தமாக கீழ்க்கண்ட விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:
▪ பெரும்பான்மையான யெகோவாவின் ஜனங்கள் ஹோட்டல்களில் தங்குகிறார்கள். ஆகவே ‘புகைபிடிக்க அனுமதியில்லை’ என்ற பகுதியில் எல்லாருக்கும் இடம் கிடைக்கும் என்பது சாத்தியமல்ல. ஒருவேளை நீங்கள் முன்பதிவு செய்யும்போது ‘புகைபிடிக்க அனுமதியில்லை’ என்ற பகுதியில்தான் இடம் வேண்டும் என்பதாக கேட்டிருந்தாலும் இது சாத்தியமல்ல. மேலும், போன வருடம் நடைபெற்ற மாநாட்டின் சமயத்தில் ஹோட்டல்களில் தங்கியிருந்த சில சகோதரர்கள், கூடுதலான வசதிகளை கேட்டு, ஹோட்டல் நிர்வாகத்துடன் வாயளவான சச்சரவில் ஈடுபட்டதாக அறிக்கைகள் வந்திருக்கின்றன.
▪ நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் செக்-இன் மற்றும் செக்-அவுட் நேரத்தை பின்பற்றுங்கள். நீங்கள் செக்-இன் மற்றும் செக்-அவுட் நேரத்தில் மாற்றம் செய்ய ஹோட்டல் நிர்வாகத்தை முன்கூட்டியே கேட்டிருந்தால், உங்களுடைய வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படலாம்.
▪ பணத்தை கையோடு எடுத்துச் செல்வது கொஞ்சங்கூட பாதுகாப்பானது அல்ல. உணவிற்கான அல்லது மற்ற பில்களை நீங்கள் ஹோட்டலை காலிசெய்யும்போது செலுத்துவது உங்களுக்கு வசதியாக இருக்கலாம்.
▪ ஹோட்டல்களில் உள்ள டெலிவிஷனிலும் வீடியோவிலும் பெரும்பாலும் கிறிஸ்தவர்களுக்கு பொருத்தமற்ற நிகழ்ச்சிகளே ஒளிபரப்பப்படுகின்றன. முன்கூட்டியே தெரியப்படுத்தினால், பெரும்பாலான ஹோட்டல்கள் குறிப்பிட்ட சில சேனல்களை, நீங்கள் அந்த ஹோட்டல் அறையில் தங்கியிருக்கிற நாள் வரைக்கும் கட் செய்துவிடுகின்றன. வீட்டில் செய்வதுபோலவே தயவுசெய்து இங்கேயும் உங்கள் பிள்ளைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.
21 மாநாட்டு நிகழ்ச்சிநிரலின்போது சகோதர சகோதரிகள் குறிப்புகள் எடுப்பதை பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. சுருக்கமான குறிப்புகள் எடுப்பது முக்கியமான கருத்துக்களை மீண்டும் உங்கள் மனதிற்கு கொண்டுவர உதவுகிறது. இக்குறிப்புகளை மீண்டுமாக உங்களுடைய குடும்பத்தோடும் நண்பர்களோடும் கலந்தாலோசியுங்கள். இவ்வாறு செய்யும்போது மாநாட்டின் சிறப்புக் குறிப்புகளை தியானிக்க இயலும். மேலும் அவை மறந்தும் போகாது.
22 தேவராஜ்ய காரியங்களுக்காக தாராளமாக நன்கொடைகளை வாரி வழங்குவதில் யெகோவாவின் மக்கள் எல்லா சமயங்களிலும் பிரசித்திபெற்றவர்கள். (யாத். 36:5-7; 2 நா. 31:10; ரோ. 15:26, 27) உலகளாவிய வேலைக்கு நீங்கள் மனமுவந்து அளிக்கும் நன்கொடைகள், பெரிய மாநாட்டு மன்றங்களுக்கு ஆகும் வாடகை செலவுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. உங்களுடைய நன்கொடைகளை செக் மூலம் கொடுத்தால், தயவுசெய்து “Watchtower Society”-க்கு என அதில் குறிப்பிடுங்கள். அதோடு “கார்ப்பஸ்க்காக நன்கொடை” (donation towards corpus) என்பதாக குறிப்பிடப்பட்ட அறிமுக கடிதத்தையும் சேர்த்து அனுப்புங்கள்.
23 ஆமோஸ் 3:7-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, “கர்த்தராகிய [“யெகோவாவாகிய,” NW] ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.” “இரகசியத்தை வெளிப்படுத்துபவராக” யெகோவா, திருத்தமாகவும் முழுமையாகவும் நிறைவேறின நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்களை பைபிளில் பதிவு செய்து வைத்திருக்கிறார். (தானி. 2:28, 47) இன்னும் மகத்தான வாக்குறுதிகள் நிறைவேறக் காத்துக்கொண்டிருக்கின்றன. 1999-2000 “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை” மாவட்ட மாநாடு, கடவுளுடைய வாக்குறுதிகளில் உங்கள் விசுவாசத்தை பலப்படுத்தும். உங்களுக்காக யெகோவா ஏற்பாடு செய்திருக்கும் அவருடைய வார்த்தைகளை கவனமாக செவிகொடுத்துக் கேளுங்கள். நீங்கள் அங்கு பார்ப்பதையும் கேட்பதையும், ஊழியத்திலும் சபையிலும் உங்களுடைய சொந்த வாழ்க்கையிலும் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு நாளும் அங்கு வழங்கப்படும் ஊட்டமிக்க ஆவிக்குரிய விருந்தில் ஆஜராயிருப்பதற்கு, நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதிக்க நாங்கள் ஜெபிக்கிறோம்.
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
வெள்ளி, சனி, ஞாயிறு—இந்த எல்லா நாட்களிலும் கலந்துகொள்வதற்கு திட்டமிடுங்கள்!