நீங்கள் பயனடைகிறீர்களா?
1 லட்சக்கணக்கானோர் இன்று பிரச்சினைகளை சமாளித்து, சந்தோஷமாக வாழ வழிதேடி அலைகின்றனர். அதற்கு உதவும் புத்தகங்கள் கிடைத்தால் ஆர்வமாய் வாசிக்கின்றனர் அல்லது தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஆலோசனை கேட்டு சில குழுக்களையும் அமைப்புகளையும் நாடுகின்றனர். சிலர் தாங்கள் பெற்ற கொஞ்சநஞ்ச பலன்களைப் பற்றி விவரிக்கலாம். எனினும் இன்றைய வாழ்க்கைத் தரத்தைப் பார்த்தால், பொதுவாக மக்கள், மனித ஆலோசனை திட்டங்களின் மூலம் சமாதானத்தை அனுபவிக்கவும் பரமதிருப்தியோடு வாழவும் கற்றுக்கொண்டிருக்கிறார்களா? இல்லவே இல்லை!—1 கொ. 3:18-20.
2 மறுபட்சத்தில், செவிசாய்க்க மனமுள்ளவர்களுக்கு விலையின்றி இலவசமாக அதிக பயனுள்ள வழிநடத்துதல்களை நமது படைப்பாளர் தருகிறார். தம்முடைய போதனையிலிருந்து எல்லாரும் பயனடையவே யெகோவா விரும்புகிறார். மனிதகுலத்தை நல்வழியில் நடத்த தம்முடைய ஏவப்பட்ட வார்த்தையை தாராளமாக அளித்திருக்கிறார்; பூமி முழுவதும் ராஜ்யத்தின் நற்செய்தி பரவுவதற்கு வழிசெய்திருக்கிறார். (சங். 19:7, 8; மத். 24:14; 2 தீ. 3:16) யெகோவாவின் கட்டளைகளுக்குக் கவனம் செலுத்தினால்தான் நாம் உண்மையிலேயே சந்தோஷமுள்ள வாழ்க்கையை பெற முடியும்.—ஏசா. 48:17, 18.
3 உதவியளிப்பதாக சொல்லிக்கொள்ளும் புத்தகங்களோடு அல்லது உலகம் அளிக்கும் சுயமுன்னேற்ற திட்டங்களோடு யெகோவாவின் வழிநடத்துதலை ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமுண்டு. யெகோவாவின் வார்த்தையில் சொல்லப்பட்டவற்றையும் அவருடைய அமைப்பு கற்பிப்பவற்றையும் நாம் முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் நமக்கு உண்மையான உதவியும் நிரந்தர பயனும் நிச்சயம்.—1 பே. 3:10-12.
4 சபை கூட்டங்களிலிருந்து பயனடையுங்கள்: தம்முடைய வழிகளை நமக்குப் போதிப்பதில் யெகோவா உண்மையான ஆர்வம் காட்டுகிறார்; அவருடைய அறிவுரைகளுக்கு நாம் கவனம் செலுத்துகையில் நாம் பயனடைவோம். யெகோவா நம்மிடம் காட்டும் கரிசனைக்கு ஆதாரமே நமது ஐந்து வாராந்தர கூட்டங்கள். சபை கூட்டங்களில் கலந்துகொள்கையில் கடவுளைப் பற்றிய நம் அறிவு அதிகரிக்கிறது. யெகோவாவிடம் நெருங்கி வருகையில் தீமையிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகளை கற்றறிகிறோம்; உற்சாகமும் பெறுகிறோம்.
5 இதுமட்டுமா, சபை கூட்டங்களில்தான் நம்மால் “விரிவடைய” முடிகிறது. (2 கொ. 6:13, NW) இது சபையிலுள்ளவர்களை நன்கு அறிந்துகொள்ள வழிசெய்கிறது. ரோமர்களுக்கு எழுதிய தன்னுடைய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் எழுதிய விதமாகவே, பரஸ்பர உற்சாகமூட்டுதலால் நாம் பயனடைகிறோம். (ரோ. 1:10, 11) எபிரெயர்களுக்கு எழுதுகையில் கிறிஸ்தவ கூட்டங்களை வழக்கமாக தவறவிடுவர்களை அவர் கோபத்துடன் கடிந்துகொண்டார்.—எபி. 10:24, 25.
6 மற்றவர்களிடம் கரிசனை காட்டும்போதுதான் சந்தோஷமும் திருப்தியும் அளிக்கும் வாழ்க்கையை நாம் அனுபவிப்போம். மற்றவர்களை எப்படியெல்லாம் சந்தோஷப்படுத்தலாம் என்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க நாம் ஊக்குவிக்கப்படுகிறோம். எனவே நம்முடைய கிறிஸ்தவ கூட்டங்கள் உண்மையிலேயே நமக்கு பயனளிக்கின்றன; அத்தோடு நாம் யாருடன் நல்ல தோழமையை அனுபவிக்கிறோமோ அவர்களுக்கும் அவை நன்மை அளிக்கின்றன. அப்படியென்றால் நாம் கண்டிப்பாக கூட்டங்களில் பங்கெடுக்க வேண்டும்.
7 இதே விதமான குறிப்பைத்தான் புத்திமதியாக தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.” (1 தீ. 4:7) சுயபரிசோதனைக்கு நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்: ‘நானும் முயற்சி பண்ணுகிறேனா? சபைக் கூட்டங்களில் பயனடையும் விதத்தில் கற்றுக்கொள்கிறேனா?’ இக்கேள்விகளுக்கு “ஆம்” என்று விடையளிக்க வேண்டுமென்றால் சபைக் கூட்டங்களில் காதுகொடுத்துக் கேட்டவற்றிற்கு இசைவாக வாழ முயற்சி செய்ய வேண்டும். நமக்குக் கற்பிப்பவர்கள் நம் சகோதரர்கள்தானே என நினைக்க மாட்டோம்; தம்முடைய ஜனத்திற்கு கற்பிப்பவர் உண்மையில் மகத்தான போதகராகிய யெகோவாவே என்பதை நம்முடைய விசுவாசக் கண்களால் காண்போம்.—ஏசா. 30:20, NW.
8 தேவராஜ்ய ஊழியப் பள்ளியும் ஊழியக் கூட்டமும்: கிறிஸ்தவ ஊழியத்தில் நாம் சிறந்து விளங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவையே இந்த இரண்டு கூட்டங்களும். தேவராஜ்ய ஊழியப் பள்ளி முழுக்க முழுக்க அந்த நோக்கத்திற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது; இந்தப் பள்ளியில் பங்கெடுக்கும் மாணாக்கர்களுக்கு அறிவுரையும் முன்னேறுவதற்கான வழிகளும் தவறாமல் அளிக்கப்படும். நல்ல பேச்சாளர்களாகவும் கடவுளுடைய வார்த்தையின் போதகர்களாகவும் உங்கள் முன்னேற்றத்தை யாவரறிய செய்ய இக்கூட்டம் வாய்ப்பளிக்கிறது. நீங்கள் இந்தப் பள்ளியிலிருந்து முழுமையாய் பலனடைய அந்தப் பள்ளியில் சேர வேண்டும், கலந்துகொள்ள வேண்டும், தவறாமல் பங்கெடுக்க வேண்டும்; அத்தோடு உங்களுக்கு நியமிக்கப்படும் பேச்சுகளை அருமையாய் தயாரித்து கொடுக்க வேண்டும். உங்களுக்குக் கொடுக்கப்படும் அறிவுரையை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப நடப்பது நீங்கள் முன்னேற்றம் செய்ய வழிவகுக்கும்.
9 கிறிஸ்தவ ஊழியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஊழியக் கூட்டம் நமக்கு கற்பிக்கிறது; சீஷராக்கும் வேலையில் நாம் எப்படி பங்கெடுக்கலாம் என்பதை நமக்குக் காட்டுகிறது. இந்த இரண்டு கூட்டங்களிலிருந்து நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் முழுமையாய் பயனடைகிறீர்களா? “குடும்பமாக நாம் தினவசனத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என சொல்லப்படுவதை ஊழியக்கூட்டம் ஒன்றில் நாங்கள் கேட்டோம். அதை நாங்கள் முன்பு பின்பற்றவில்லை ஆனால் இப்போது பின்பற்றுகிறோம்” என்று ஒரு கிறிஸ்தவ தம்பதியினர் சொல்கின்றனர். அதிலிருந்து அவர்கள் எப்படி பயனடைந்தனர்? அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்: “சாப்பிடும்போது நாங்கள் பேசிக்கொள்ளும் விஷயங்கள் சந்தோஷத்தை அளிக்கின்றன. இரவு சாப்பாட்டு நேரத்தில் இப்போது எந்த அக்கப்போரும் இல்லை.” கூட்டங்களிலிருந்து அவர்களுடைய சின்னஞ்சிறுசுகள் பயனடைகிறார்களா? அவர்களுடைய தாய் சொல்கிறார்: “கூட்டங்கள் எங்கள் பிள்ளைகளை மாற்றுவது தெளிவாக தெரிகிறது. ஒருநாள் எங்கள் ஆறு வயது மகன் ஏதோ பொய் சொல்லி மாட்டிக்கொண்டான். ஆனால் அதே வாரத்தில் நடந்த கூட்டத்தில் போதனா பேச்சு பொய் சொல்வதைப் பற்றி இருந்தது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதை அவனுடைய முகம் படம்பிடித்துக் காட்டியது; அவன் தன் அப்பாவின் முகத்தைப் பார்த்தான், வெட்கமும் அவமானமும் ஒருசேர கூனிக்குறுகி சீட்டில் உட்கார்ந்திருந்தான். அவன் நல்ல பாடத்தைக் கற்றுக்கொண்டான், அதன் பின் அப்படிப்பட்ட சம்பவம் ஏற்படவேயில்லை.”
10 நம்முடைய ஊழியத்தில் முன்னேற்றம் செய்வதற்கு ஊழியக் கூட்டத்தில் கொடுக்கப்படும் ஆலோசனைகள் தனக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுப்பதாக ஒரு பயனியர் சகோதரி சொல்கிறார். ஏன்? “நான் கீறல் விழுந்த ரெக்கார்டைப் போல ஊழியத்தில் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தேன். நம் ராஜ்ய ஊழியத்தில் ஆலோசனையாக குறிப்பிடப்பட்டவை பலனளிக்காது என சிலசமயங்களில் நான் நினைத்ததுண்டு. ஆனால் அதை நாம் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என ஊழியக் கூட்டத்தில் சொல்லப்பட்டதைக் கேட்டபோது, அந்த ஆலோசனைகளைப் பின்பற்ற எனக்குள் ஆசை ஏற்பட்டது. உண்மையிலேயே ஊழியத்தை ‘அணு அணுவாக’ ருசித்து மகிழ்ந்தேன்!” என்கிறார் அவர். முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிக்கும்படியான ஆலோசனையை அநேக வாரங்கள் பின்பற்றிய பின்பு, உதவிக்காக ஜெபித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பைத் தொடங்கினார்.
11 நீங்களே தெரிவுகள் செய்ய உதவும் பைபிள் புத்திமதிகள் அடங்கிய பேச்சை கேட்கையில் யெகோவாவே உங்களிடம் பேசுவதாக உணருகிறீர்களா? ஒரு சகோதரர் அவ்வாறுதான் உணர்ந்தார். “சமீபத்தில் ஒரு கூட்டத்தில் எப்படிப்பட்ட பொழுதுபோக்குகள் கிறிஸ்தவர்களுக்கு உரியவை, எவை உரியவையல்ல என்பதை பற்றிய கலந்தாலோசிப்பை ஒரு சகோதரர் அளித்தார். எனக்கு டிவியில் குத்துச்சண்டையைப் பார்ப்பதென்றால் கொள்ளை ஆசை. ஆனால் அந்த கூட்டத்திற்குப் பின்பு, இந்த விதமான போட்டி விளையாட்டு கிறிஸ்தவர்கள் பார்ப்பதற்கு தகுதியற்றவை என்பதை நானே தீர்மானித்தேன். அத்தோடு அதைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்” என்றார் அவர். வன்முறை நிறைந்த விளையாட்டில் இந்த சகோதரர் ஆர்வத்தை வளர்த்திருந்தாலும் யெகோவாவின் வழிநடத்துதலுக்கு அவர் தாழ்மையோடு கீழ்ப்படிந்தார்.—சங். 11:5.
12 பொதுப் பேச்சும், காவற்கோபுர படிப்பும், சபை புத்தகப் படிப்பும்: ஒவ்வொரு வாரமும் நாம் கேட்கும் பொதுப் பேச்சு பலதரப்பட்ட பைபிள் தலைப்புகளில் கொடுக்கப்படுகின்றது. இந்தப் பேச்சுக்களிலிருந்து நீங்கள் என்ன பயனடைகிறீர்கள்? கிறிஸ்தவ கணவர் ஒருவர் தான் பெற்ற பயன்களைப் பற்றி சொல்வதாவது: “ஒரு பொதுப் பேச்சில், ஆவியின் கனிகள் எல்லாவற்றையும் பற்றி அந்தப் பேச்சாளர் விளக்கமாக சொன்னார். இந்தக் கனிகளை வளர்த்துக்கொள்வதற்கு, முதலில் ஒரு கனியை ‘செலக்ட்’ பண்ணி அதை வளர்க்க ஒரு வாரத்திற்கு உழைப்பதாக அவர் சொன்னார். அந்த வாரத்தின் கடைசியில், ஒவ்வொரு நாளும் அந்தக் கனியை வாழ்க்கையில் எப்படி காண்பித்தார் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பாராம். பிறகு அடுத்த வாரத்தில் மற்றொரு குணத்தை முன்னேற்றுவிப்பதற்கு உழைத்தாராம். எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்தது, நானும் அதே மாதிரி செய்ய ஆரம்பித்தேன்.” கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கு என்னே சிறந்த முன்மாதிரி!
13 வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளில் பைபிள் நியமங்களைப் பொருத்திப் பயன்படுத்துவதற்கு காவற்கோபுர படிப்பு நமக்கு கற்பிக்கிறது. வாழ்க்கையில் எவ்வளவுதான் கவலைகள் இருந்தாலும், மனதையும் இருதயத்தையும் ரம்மியமாக வைத்துக்கொள்வதற்கு இது உதவுகிறது. படிப்படியாக வெளிப்படுத்தப்படும் புதுப்புது சத்தியங்களை நன்கு தெரிந்துகொள்வதற்கும் காவற்கோபுர படிப்பு உதவி செய்கிறது. உதாரணமாக, “இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டியதே,” “வாசிக்கிறவன் பகுத்தறிவைப் பயன்படுத்தக்கடவன்,” “விழிப்புடனும் சுறுசுறுப்புடனும் இருங்கள்!” என்று தலைப்பிடப்பட்ட மே 1, 1999 காவற்கோபுர கட்டுரைகளைப் படித்து நாம் பயனடையவில்லையா? இந்தக் கட்டுரைகள் தனிப்பட்ட விதமாக உங்களை எவ்வாறு பாதித்தன? எதிர்காலத்தைப் பற்றிய இயேசுவின் எச்சரிப்புக்கு நீங்கள் செவிசாய்க்கிறீர்கள் என்பதை உங்களுடைய செயலில் காட்டுகிறீர்களா? ‘பாழாக்குகிற அருவருப்பை . . . நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது’ வரப்போகும் சோதனைகளுக்காக உங்களை நீங்கள் தயார்படுத்துகிறீர்களா? (மத். 24:15-22) செல்வங்களை திரட்டுவதை அல்ல, ஆனால் யெகோவாவின் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவதே மிகவும் இன்றியமையாதது என்பதை உங்களுடைய இலக்குகளும் வாழ்க்கை முறையும் வெளிப்படுத்துகின்றனவா? இப்பொழுதே நாம் நன்மையடைவதற்கு காவற்கோபுர படிப்பில் கற்றுக்கொள்கிறோம் அல்லவா?
14 ஒவ்வொரு வாரமும் சபை புத்தகப் படிப்பில் எத்தனை எத்தனை விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். தற்பொழுது நாம் பைபிளிலுள்ள தானியேல் புத்தகத்தைப் பற்றி படித்து வருகிறோம். நான்கு மாதங்களாக நாம் அந்த பைபிள் புத்தகத்திலிருந்து படித்துவருகிறோம். ஒவ்வொரு வாரமும் நம்முடைய விசுவாசம் வளர்வதை கவனிக்கிறோம் அல்லவா? யெகோவாவின் நேசத்திற்குரிய தானியேல் தீர்க்கதரிசியைப் போலவே, நாம் சகித்திருப்பதற்கு நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறோம்.
15 ஆனந்தமாக வாழ யெகோவா நமக்கு போதிக்கிறார்: கடவுளுடைய கட்டளைகளுக்கு கவனம் செலுத்துகையில் அநேக மனவேதனைகளை நாம் தவிர்க்கிறோம். மேலும், ஆனந்தமான வாழ்க்கை என்றால் என்ன என்பதை நாம் அனுபவிக்கிறோம். யெகோவாவின் வழிநடத்துதலை பின்பற்றுவதன் மூலம், வெறுமனே வேடிக்கை பார்ப்பவர்களாக அல்ல, ஆனால் நாம் அவருடைய வேலையில் பங்குகொள்கிறவர்களாக இருக்கிறோம். கடவுளுடைய வேலையை செய்கிறவர்கள் மகிழ்ச்சியுள்ள மக்கள்.—1 கொ. 3:9; யாக். 1:25.
16 சபை கூட்டங்களில், நீங்கள் காதுகொடுத்துக் கேட்கிற விஷயங்களை எப்படி வாழக்கையில் பொருத்தலாம் என்பதைப் பற்றி நன்கு சிந்தியுங்கள். (யோவா. 13:17) யெகோவாவை உற்சாகத்தோடே, முழு இருதயத்தோடே சேவியுங்கள். உங்களுக்குள் சந்தோஷ வெள்ளம் பெருக்கெடுக்கும். உங்களுடைய வாழ்க்கை செழிக்கும், அதிக அர்த்தமுள்ளதாகவும் ஆகும். ஆம், நீங்கள் ஈடில்லா பயனடைவீர்கள்.