யெகோவாவின் பெயரையும் செயல்களையும் அறிவியுங்கள்
1 “யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்; அவர் திருநாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவர் செயல்களை ஜனங்களுக்குள்ளே பிரஸ்தாபப்படுத்துங்கள். . . . யெகோவாவைத் தேடுகிறவர்கள் இருதயம் மகிழ்வதாக.” (சங். 105:1, 3, தி.மொ.) இந்த வார்த்தைகளை எழுதிய சங்கீதக்காரன் யெகோவாவையும் அவருடைய ‘செயல்களையும்’ பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதில் அகமகிழ்ந்தார். எந்த செயல்களை? அவை கடவுளுடைய மகத்துவமான ராஜ்யத்துடனும் ‘அவருடைய இரட்சிப்பின் சுவிசேஷத்துடனும்’ சம்பந்தப்பட்ட செயல்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.—சங். 96:2, 3; 145:11, 12.
2 2001-ம் ஆண்டு நினைவு ஆசரிப்பு நாள் சமீபித்துவிட்டது. இந்த சமயத்தில் யெகோவா நமக்கு செய்திருப்பவற்றிற்காக நாம் மகிழ அநேக காரணங்கள் உள்ளன. எப்படி? கர்த்தருடைய இராப்போஜனம்தான், உண்மை கிறிஸ்தவர்களுக்கு வருடத்தின் மாபெரும் ஆசரிப்பு என்பதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால் முக்கியத்துவத்திலும், நோக்கத்திலும், ஆசரிப்பு முறையிலும் இதுபோன்று நமக்கு வேறேதுமில்லை. நாம் இரட்சிக்கப்படுவதற்கு யெகோவாவும் இயேசுவும் செய்திருக்கும் ஏற்பாடுகளை நாம் அனைவருமே நினைத்துப் பார்க்க இதுவே சரியான சமயம். நினைவு ஆசரிப்பு காலத்தில், ‘இரட்சிப்பின் சுவிசேஷத்தை’ நாம் அறிவிக்கையில் வெளி ஊழியம் தீவிரமடைவதைக் காண்பதில் ஆச்சரியம் இல்லை.
3 நீங்கள் துணைப்பயனியர் ஊழியம் செய்வீர்களா? கடந்த ஏப்ரலில் உச்ச எண்ணிக்கையாக 3,287 பேர் துணைப்பயனியர் ஊழியம் செய்தனர். இந்த வருடத்தைப் பற்றி என்ன? வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஊழியத்தில் அதிகளவு ஈடுபடுவதன்மூலம் அவற்றை விசேஷித்த மாதங்களாக்க முடியுமா? மார்ச் மாதத்தில் 5 சனிக்கிழமைகளும் ஏப்ரல் மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமைகளும் உள்ளன. சனி, ஞாயிறுகளில் முழுநாளும் ஊழியத்தில் ஈடுபட திட்டமிடுகையில் தங்களாலும் துணைப்பயனியர் ஊழியம் செய்ய முடியும் என வேலைக்குப் போகும் அநேக பிரஸ்தாபிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். மாதத்திற்கு 50 மணிநேரம் என்ற இலக்கை துணைப்பயனியர்கள் எட்டுவதற்கு, சராசரியாக வாரத்திற்கு சுமார் 12 மணிநேரத்தை செலவழிக்க வேண்டும். பக்கம் 4-ல் மாதிரியாக கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைகளை கவனமாக ஆராய்ந்து பாருங்கள். இவற்றில் உங்கள் சூழ்நிலைக்கு ஒத்துவரும் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுங்கள். இல்லாவிட்டால், உங்களுடைய வசதிக்கேற்ப நீங்களாகவே ஒரு அட்டவணையைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.
4 ஊழியத்திற்கு ஆதரவு தந்து, அதில் அதிக நேரம் செலவிட தேவையான ஆர்வத்தை தூண்டுவிக்க மூப்பர்கள் இப்போதே முயற்சி எடுக்க வேண்டும். கடந்த வருடம், ஒரு சபையிலுள்ள எல்லா மூப்பர்களும் உதவி ஊழியர்களும் துணைப்பயனியர் ஊழியம் செய்தனர். இதனால் ஏப்ரல் மாதம் அந்த சபையிலிருந்த 121 பிரஸ்தாபிகளில் 64 பேர் பயனியர் செய்தனர்! முழுக்காட்டப்படாத 6 பிரஸ்தாபிகள்கூட, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஊழியத்தில் அறிக்கை செய்ய ஆரம்பித்ததைக் கண்டு சபையினரும் அதிக சந்தோஷப்பட்டனர். வெளி ஊழியத்தில் ஈடுபட தாங்கள் தகுதியானவர்களா என்பதை பிள்ளைகளும் புதியவர்களும் மூப்பர்களிடம் கேட்டறிவதற்கு இதைவிட சிறந்த சமயம் வேறில்லை.
5 பெரும் முயற்சி தரும் ஆசீர்வாதங்கள்: புதிய இலக்குகளை வைத்து, அதை எட்டுவதற்கு பெரும் முயற்சி எடுக்கும் சபைகள் அநேக ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்கின்றன. ஊழியம் செய்யப்படாத பிராந்தியங்களில் ஊழியம் செய்வது, வித்தியாசப்பட்ட ஊழிய முறைகளை முயன்று பார்ப்பது, வீட்டில் இல்லாதவர்களையும் உள்ளே நுழைய முடியாத குடியிருப்புகளில் வசிப்பவர்களையும் அணுக டெலிபோன் ஊழியம் செய்வது போன்றவற்றிற்கு சில சபைகள் முக்கியமாய் கவனம் செலுத்தலாம்.
6 உடல்நல குறைவோ முதுமையோ அடைந்த யாராலுமே, ஊழியத்தில் முடிந்தளவு செய்ய முடியாதா? அப்படியல்ல. உதாரணமாக, புற்றுநோயுள்ள 86 வயது சகோதரி தன்னுடைய இரண்டு கால்களும் வீங்கியிருந்தபோதிலும், ஏப்ரல் மாதம் துணைப்பயனியர் ஊழியம் செய்தார். அவர் ஊழியத்தில் முழுமையாய் பங்குகொள்ள டெலிபோன் ஊழியம் பெரிதும் உதவியது; இவ்வாறு அவரால் யெகோவாவை அதிகளவில் துதிக்க முடிந்தது. இதனால் உற்சாகமடைந்தது அவர் மட்டுமல்ல, இதைக் கண்ட சபையினரும்தான்.
7 நினைவு ஆசரிப்புக்கு நன்கு தயாரியுங்கள்: இந்த வருடம் நினைவு ஆசரிப்பு, ஏப்ரல் 8-ம் தேதி ஆசரிக்கப்படும். அது ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் அநேகர் இதில் நிச்சயம் கலந்துகொள்ள முடியும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (1) நாமும் கலந்துகொள்ள வேண்டும் (2) மற்றவர்களையும் நினைவுநாள் ஆசரிப்புக்கு வரும்படி அழைக்க வேண்டும். அவ்வாறு செய்கையில் இதுவரை இல்லாதளவுக்கு பெரும் எண்ணிக்கையானோர் வருவதைக் காண்போம். யாரையெல்லாம் அழைக்கலாம்?
8 உங்கள் வெளி ஊழிய பதிவுகளைப் புரட்டிப் பாருங்கள். சத்தியத்தில் ஓரளவுக்கு ஆர்வம் காட்டிய ஆனால் நீங்கள் தவறாமல் சென்று சந்திக்க முடியாதவர்களின் பெயர்களை அதில் குறித்து வைத்திருக்கலாம். நினைவு ஆசரிப்புக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பே இப்படிப்பட்ட அனைவரையும் சந்தித்து நினைவு ஆசரிப்புக்கு வரும்படி அழைப்பிதழ் கொடுக்க மறவாதீர்கள். உங்களுடைய சூழ்நிலை அனுமதிக்குமானால், வர மனமுள்ளவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுங்கள்.
9 சில சபைகள், அச்சடிக்கப்பட்ட நினைவு ஆசரிப்பு அழைப்பிதழ்கள் அனைத்தையுமே அளித்து முடிப்பதில்லை. இந்த அழைப்பிதழ்கள் அனைத்தையும் விநியோகிக்க, அதிக நாட்களுக்கு முன்பே அவை கிடைக்கும்படி சபை செயலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அழைப்பிதழின் கீழே நினைவு ஆசரிப்பு நடைபெறும் நேரத்தையும் இடத்தையும் டைப் செய்தோ நேர்த்தியாக எழுதியோ கொடுக்கலாம். அல்லது, ராஜ்ய மன்றத்திலேயே நினைவு ஆசரிப்பு நடைபெறவிருந்தால் அதன் விலாசம் அச்சடிக்கப்பட்ட கைப்பிரதியையும் சேர்த்துக் கொடுக்கலாம். வீட்டுக்காரரை நேராக சந்தித்து இந்த நினைவு ஆசரிப்பு அழைப்பிதழ்களை கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள்.
10 செயலற்றவர்களை மறவாதீர்கள்: பைபிள் மாணாக்கர் யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அதை அடையாளப்படுத்துவதைக் காண்பது சந்தோஷமான விஷயம். எனினும் ஒவ்வொரு வருடமும், நம் மத்தியிலுள்ள சிலர் நம்மோடு தொடர்புகொள்வதை நிறுத்திவிடுகின்றனர். யெகோவாவுடைய பெயரையும் அவருடைய செயல்களையும் பற்றி மற்றவர்களிடம் சொல்வதை நிறுத்திவிடுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு முக்கிய கவனம் செலுத்துவது அவசியம். செயலற்றவர்களில் அநேகர் சத்தியத்தை ஒரேயடியாக ஒதுக்கிவிடுவதில்லை. சோர்வு, சொந்த பிரச்சினைகள், அல்லது வாழ்க்கை கவலைகள் போன்றவற்றின் காரணமாக ஒருவேளை பிரசங்கிப்பதை நிறுத்திவிட்டிருக்கலாம். (மத். 13:20-22) ஆவிக்குரிய விதத்தில் பலவீனமாக இருப்பவர்களை சாத்தானிய உலகம் விழுங்கிவிடும் முன்பு காப்பாற்றுவதற்கு உதவிக்கரத்தை நீட்ட வேண்டியது அவசியம். (1 பே. 5:8) இந்த நினைவு ஆசரிப்பு காலத்தில் செயலற்றிருப்பவர்களில் தகுதியான அனைவரும் மீண்டும் நற்செய்தியை பிரசங்கிக்க உதவுவதற்கு நாம் விசேஷ முயற்சி எடுக்க வேண்டும்.
11 தங்கள் தொகுதியில் செயலற்றவர் யாரேனும் உள்ளனரா என்பதை புத்தகப் படிப்பு நடத்துனர்கள் கவனிக்கும்படி சபை செயலர் நினைப்பூட்ட வேண்டும். செயலற்றிருக்கும் அனைவரையும் மேய்ப்பு சந்திப்பு செய்வதற்கு சபையின் ஊழியக் குழு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் தனிப்பட்ட பைபிள் படிப்பிலிருந்து பயனடைவார் என்பது உறுதியாய் தெரிந்தால் படிப்பு நடத்துவதற்கு யாரை ஏற்பாடு செய்வது அதிக பொருத்தமாய் இருக்கும் என்பதை ஊழியக் கண்காணி மற்ற ஊழியக் குழு அங்கத்தினர்களுடன் கலந்தாலோசித்து தீர்மானித்தபின் அதற்கான ஏற்பாடுகளை செய்வார். நீண்ட நாட்களுக்குப் படிப்பு நடத்த வேண்டிய தேவை இராதபோதிலும் அதற்காக நியமிக்கப்பட்டவர் மணிநேரத்தையும், மறுசந்திப்புகளையும், பைபிள் படிப்பையும் அறிக்கை செய்யலாம்.
12 கடந்த ஏப்ரல் மாதத்தில், வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருந்த ஒரு சகோதரி தெருவில் சந்தித்த ஓர் இளம் மனிதருக்கு பத்திரிகைகளைக் கொடுத்தார். அப்போது, தன் மனைவி செயலற்ற சாட்சி என அவர் சொன்னார். அதன்பின், ராஜ்ய மன்றத்தின் விலாசத்தை கேட்டுத் தெரிந்துகொண்டதோடு தன்னையும் தன் மனைவியையும் வந்து சந்திக்கும்படி அழைத்தார். அதன் பலனாக, அடுத்த கூட்டத்திற்கே அந்தத் தம்பதியினர் வந்தனர், பைபிள் படிப்புக்கும் ஒப்புக்கொண்டனர்.
13 அதிகளவு ஊழியத்தில் ஈடுபட தயாராகுங்கள்! யெகோவாவையும் அவருடைய செயல்களையும் நாம் அறிவிக்கும்படி சொன்ன சங்கீதக்காரன், “அவரைப் பாடுங்கள்; அவரைத் துதித்துப்பாடுங்கள்; அவர் அதிசயச் செயல்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். அவர் பரிசுத்த நாமத்தைப்பற்றி மேன்மை பாராட்டுங்கள்” எனவும் சொன்னார். (சங். 105:2, 3, தி.மொ.) ஊழியத்தில் அதிக நேரம் செலவிட்டு, நினைவு ஆசரிப்பு காலத்தை தலைசிறந்ததாக்குவதன் மூலம் யெகோவாவின் ஒப்பற்ற பெயரிடமும் அவருடைய ‘அதிசயச் செயல்களிடமும்’ நமக்குள்ள அக்கறையை வெளிப்படுத்துவோமாக!
[பக்கம் 4-ன் பெட்டி]
துணைப் பயனியர் செய்ய வாரத்திற்கு 12 மணிநேரத்தை வெவ்வேறு வழிகளில் அட்டவணையிடுதல்
நாள் மணிநேரம்
திங்கள் 1 2 − −
செவ்வாய் 1 − 3 −
புதன் 1 2 − 5
வியாழன் 1 − 3 −
வெள்ளி 1 2 − −
சனி 5 4 3 5
ஞாயிறு 2 2 3 2
மொத்தம்: 12 12 12 12
இந்த அட்டவணையில் ஏதாவதொன்று உங்களுக்கு ஒத்து வருமா?
இல்லாவிட்டால், நீங்களே ஏன் ஓர் அட்டவணை தயாரிக்கக்கூடாது?