முன்கூட்டியே திட்டமிடுதல்—எதற்கு?
1 நாம் எல்லாருமே நம் எதிர்கால திட்டங்களைக் குறித்து கொஞ்சமாவது யோசிக்கிறோம். பூமிக்குரிய நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகில் என்றென்றும் வாழ்வதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த நம்பிக்கையை இருதயத்திலிருந்து தட்டிப் பறிக்கும் அளவுக்கு மோசமான செல்வாக்குகள் உள்ளன. ராஜ்யத்தை மையமாக வைத்து நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் கவர்ந்திழுக்கும் சரீர ஆசைகளிடம் பாதை மாறி போகாதிருக்கவும் கடும் முயற்சி தேவை.—1 யோ. 2:15-17.
2 ஆவிக்குரிய விஷயங்களை மதித்து நடக்கும் ஜனங்களின் இலக்குகளை இந்த உலகத்தால் புரிந்துகொள்ள முடியாது. (1 கொ. 2:14) மற்றவர்கள் புகழையும், பதவியையும், பொருளையும் அடைய ஆலாய் பறக்கையில் நாம் ஆவிக்குரிய செல்வத்தை சேர்ப்பதற்கு பாடாய்படுகிறோம். (மத். 6:19-21) எதிர்காலத்தைப் பற்றிய உலகின் சிந்தனையோடு நாம் ஒத்துப்போக முயன்றால் ஆவிக்குரிய இலக்குகளை என்றாவது அடைய முடியுமா? சொல்லப்போனால், சீக்கிரத்தில் நம் இதயம் இவ்வுலக விஷயங்களிலேயே மூழ்கிவிடும். இதை எப்படி தவிர்க்கலாம்?
3 “இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்”: ராஜ்ய அக்கறைகளை மையமாக வைத்து நம் எதிர்காலத்தை அமைக்கிறோமா என்பதை தீர்மானிப்பதற்கு ஒரு வழி, நம்முடைய சம்பாஷணையை ஆராய்வதாகும். நாம் எப்போது பார்த்தாலும் பொருள் சம்பந்தமான காரியங்களையும் உலக விஷயங்களையும் பற்றியே பேசிக்கொண்டிருகிறோமா? அப்படியென்றால், ஆவிக்குரிய விதத்தில் மதிப்புவாய்ந்த காரியங்களிலிருந்து நம் மனம் விலகுகிறதா என்பதை நாம் கவனிக்க வேண்டும். ‘சரீரப்பிரகாரமான ஆசைகளுக்காக முன்கூட்டியே திட்டமிடாமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்வதற்கு’ நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கலாம்.—ரோ. 13:14, NW.
4 முழுநேர ஊழியத்தை ஆரம்பிக்கும் நாளை எதிர்நோக்கி முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் இளைஞர்கள் ‘கிறிஸ்துவை அணிந்து கொள்ளலாம்.’ ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய ஆசைப்பட்ட ஓர் இளைஞன், எதிர்காலத்துக்காக வாலிபர்கள் நிறைய பணம் சேர்க்கும் பழக்கமுள்ள சமுதாயத்தில் வளர்க்கப்பட்டான். ஆகவே அவன் வியாபாரத்தில் பெருமளவு மூழ்கிவிட்டான். அதனால் ஏதோ பெயருக்கு கூட்டங்களுக்கு வந்துபோனான், ஊழியத்திலும் கலந்துகொண்டான். மத்தேயு 6:33-லுள்ள இயேசுவின் வார்த்தைகளின் மீது அவனுக்கு நம்பிக்கை பிறந்தது முதற்கொண்டு செக்குமாடுபோல் உழன்றுகொண்டிருந்த வியாபாரத்திற்கு முழுக்குப் போட்டுவிட்டு முழுநேர ஊழியத்தை ஏற்றுக்கொண்டான். ‘தன் திறமை முழுவதையும்’ அதற்காக செலவிடுவதாக சொல்வதோடு இப்போது, நல்மனசாட்சியுடன் யெகோவாவை அவன் சேவிக்கிறான்.
5 எதிர்காலத்திற்காக திட்டமிடுவது புத்திசாலித்தனம் என பைபிள் சொல்கிறது. (நீதி. 21:5, NW) கடவுளுடைய சித்தத்தை முக்கியமாக மனதில் வைத்து எதிர்காலத்திற்காக திட்டமிடுவோமாக.—எபே. 5:15-17.