“கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்” மாவட்ட மாநாட்டில் கற்றவற்றை கடைப்பிடிக்கிறீர்களா?
1 கடவுளுடைய வார்த்தையை கற்பிக்கும் நியமிப்பை நிறைவேற்றுவதில் யெகோவாவின் ஜனங்கள் கருத்தாக இருப்பதை இந்த ஆண்டின் மாவட்ட மாநாட்டுக்குச் சென்ற எவருமே பார்த்திருக்க முடியும். (மத். 28:19, 20) வீட்டுக்குத் திரும்புகையில் என்னென்ன முக்கிய அறிவுரைகளை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெளி ஊழியத்திலும் பொருத்த தீர்மானித்தீர்கள்?
2 ஆவியால் அருளப்பட்ட வேதவாக்கியங்கள் உபதேசத்துக்கு பிரயோஜனமுள்ளவை: முதல் நாளின் பொருள், 2 தீமோத்தேயு 3:16, 17-ஐ சிறப்பித்துக் காட்டியது. ‘கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போராக முழுமையான தகுதி பெறுவதற்கு’ கடவுளுடைய வார்த்தையை உயர்வாக மதிக்க வேண்டும், மனிதனின் எந்த கருத்திற்கோ பாரம்பரியத்திற்கோ மேலாக அதற்கு மரியாதை காட்ட வேண்டும், தவறாமல் உபயோகிக்கவும் வேண்டும் என்பதை முக்கிய பேச்சு காட்டியது. நம் ஊழியத்தில் பரிசுத்த ஆவியின் உதவிக்காக நாம் தினமும் ஜெபிக்க வேண்டும்; அதன் முதல் கனியாகிய அன்பை வளர்ப்பதற்கு உழைக்க வேண்டும். யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பு எல்லா சபை கூட்டங்களின் வாயிலாகவும் நம்மை பயிற்றுவிக்க நாம் இடமளிக்க வேண்டும்.
3 வெள்ளிக்கிழமை, “மற்றவர்களுக்கு கற்பிக்கையில் நமக்கும் கற்பித்துக்கொள்ளுதல்” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட தொடர்பேச்சு, (1) கிறிஸ்தவ ஒழுக்கத்தின் எல்லா அம்சங்களிலும் கடவுளுடைய சட்டங்களுக்கு இசைய நடப்பதில், (2) நல்ல படிப்பு பழக்கங்களை வளர்த்துக்கொள்வதில், (3) பிசாசுக்கு இடம் கொடுக்கும் வகையில் ஏதாவது சூழ்நிலையோ மனப்பான்மைகளோ நம் மனதிலும் இருதயத்திலும் இருந்தால் அவற்றை அடியோடு அகற்றுவதில் நாம் முன்மாதிரிகளாய் இருக்க வேண்டும் என விளக்கியது. இந்த உலகில் பரவிவரும் ஆபாசம் எனப்படும் கொள்ளை நோயிலிருந்து நம் குடும்பங்களைக் காக்க நடைமுறையான வழிகளையும் நாம் கற்றோம். கணநேரம்கூட செக்ஸ் காட்சிகளை பார்ப்பதை தவிர்ப்பதில் பெற்றோர் நல்ல முன்மாதிரி வைக்க வேண்டும், பிள்ளைகள் இன்டர்நெட்டை பயன்படுத்துவதையும் டிவி பார்ப்பதையும் கண்காணிக்க வேண்டும் என்றும் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகளிலிருந்து எந்தக் குறிப்புகளை நீங்கள் வாழ்க்கையில் பொருத்த தொடங்கியிருக்கிறீர்கள்?
4 அந்நாளின் கடைசி பேச்சு, யெகோவாவின் ஒளியை நெஞ்சார நேசிக்கவும் கடவுளுடைய அபிஷேகம் பண்ணப்பட்ட உண்மையுள்ள வகுப்புடன் நெருங்கியிருக்கவும் யெகோவாவின் ஜனங்களுக்கு மத்தியில் சமாதானம் பெருக நம்மாலானதை செய்யவும் வேண்டுமென்ற நம் தீர்மானத்தை பலப்படுத்தியது. ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு II என்ற புதிய வெளியீட்டை வாசித்துவிட்டீர்களா?
5 மற்றவர்களுக்குக் கற்பிக்க போதிய தகுதி பெற்றிருத்தல்: இரண்டாம் நாளின் முக்கிய வசனம் 2 தீமோத்தேயு 2:2. சனிக்கிழமை காலை தொடர்பேச்சில், (1) தகுதியுள்ளவர்களை தேடி கண்டுபிடிப்பதும், (2) அவர்களுடைய ஆர்வத்தை வளர்ப்பதும், (3) கிறிஸ்து கட்டளையிட்ட எல்லாவற்றையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு கற்பிப்பதும் எப்படி என்பதற்கான ஆலோசனைகளை கவனித்தீர்களா? பைபிளிலிருந்து குறைந்தபட்சம் ஒரு குறிப்பையாவது வீட்டுக்காரரிடம் எடுத்துக்காட்டி அடுத்த சந்திப்பிற்காக அடித்தளம் போட்டு வரும்படி கற்றுக்கொண்டதை கடைப்பிடிக்கிறீர்களா?
6 பெரிய போதகர் இயேசுவை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை பிற்பகல் நிகழ்ச்சி வலியுறுத்தியது. என்னென்ன வழிகளில் நீங்கள் அவரைப் போலவே இருக்க முயலுகிறீர்கள்? அந்நாளின் இரண்டாவது தொடர்பேச்சில் கற்றுக்கொண்டதிலிருந்து, நீங்கள் எவ்வாறு ‘கடவுள் அளிக்கும் கல்வியிலிருந்து இன்னுமதிகமாக பயன் பெற’ முடியுமென நினைக்கிறீர்கள்? தனிப்பட்ட படிப்பிலும் சபை கூட்டங்களிலும் நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தும் நேரத்தை அதிகரிக்க என்ன ஆலோசனைகளை பொருத்தியிருக்கிறீர்கள்?
7 தயாரிக்கப்பட்டுவரும், தேவராஜ்ய ஊழியப் பள்ளி கல்வியிலிருந்து பயனடையுங்கள் என்ற புத்தகம் கடவுளுடைய வார்த்தையை பேசவும் கற்பிக்கவும் நமக்கிருக்கும் திறமைகளை வளர்க்க உதவும் என்பதில் சந்தேகமில்லை. பைபிள் காலங்களில் கடவுளின் உண்மையுள்ள ஊழியர்களை சிறப்பித்துக்காட்டிய பேச்சுப் பண்புகளுக்கு அதிக கவனம் கொடுக்கப்படும். புதிய பாடபுத்தகத்தில், நாம் என்ன செய்ய வேண்டும், ஏன் அது முக்கியம், எப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் சுருக்கமாக பெட்டிகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நடைமுறை பயிற்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சகோதரிகளுக்கென 29 பேச்சு அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன; தங்கள் பேச்சுக்களுக்கு அவற்றிலிருந்து எதையாவது தெரிந்தெடுத்துக்கொள்ளலாம். சமயம் வரும்போது, அறிவிக்கப்பட்டபடி பள்ளியில் மாற்றங்கள் செய்யப்படும். ஒவ்வொரு வாரமும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து முழுமையாக பயனடைவதற்காக தவறாமல் படிக்கும், தயாரிக்கும் பழக்கம் உங்களுக்கு உண்டா?
8 காலத்தைப் பார்த்தால் போதகராய் இருக்க வேண்டும்: எபிரெயர் 5:12 ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளுக்கென கேட்போரை தயார்படுத்தியது. காலையில், “மல்கியாவின் தீர்க்கதரிசனம் யெகோவாவின் நாளுக்காக நம்மை தயார்படுத்துகிறது” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட தொடர்பேச்சு, கடவுளுக்கு நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைக் கொடுக்கவும், யெகோவாவின் பெரிதும் மகா பயங்கரமுமான நாளை நாம் தப்பும்படி நம்பிக்கை துரோகத்தின் எல்லா வகைகளையும் வெறுக்கவும் நம்மை அறிவுறுத்தியது. “யெகோவாவின் அதிகாரத்திற்கு மரியாதை காட்டுங்கள்” என்ற தலைப்பிலுள்ள நாடகம், பண்டைய காலத்தில் வாழ்ந்த கோராகு மற்றும் அவன் கூட்டாளிகளின் பெருமையும், பேராசையும், பொறாமையும், தவறான பற்றுறுதியும் யெகோவாவுக்கே எதிராக கலகத்தனமான செயல்களை துணிந்து செய்ய வைத்தது எவ்வாறு என்பதை வலியுறுத்திக் காட்டியது. நாடகத்தைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட பேச்சு, குடும்பத்திலும் சபையிலும் கடவுள் ஏற்படுத்தியிருக்கும் அதிகாரத்திற்கு தற்காலத்தில் கீழ்ப்படிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்திக் காட்டியது. “எல்லா தேசத்தாருக்கும் சத்தியத்தை யார் கற்பிக்கிறார்கள்?” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட பொதுப் பேச்சு, பைபிள் சத்தியத்தை கற்பிப்பதாக வெறுமனே சொல்லிக்கொள்ளும் கிறிஸ்தவமண்டலத்திற்கு எதிர்மாறாக, யெகோவாவின் சாட்சிகள் உண்மையில் அவ்வாறு செய்கிறார்கள் என்பதற்கு ஆதாரத்தை அளித்தது.
9 யெகோவாவின் வார்த்தைகளை இன்னும் சிறப்பாக கற்பிப்பதற்கு அவரே நமக்கு பயிற்சி அளிக்கிறார் என்பது தெளிவாக இருக்கிறது. நாம் கற்றுக்கொண்டவற்றை கடைப்பிடித்து, ‘நம்மைக் குறித்தும் நம் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருந்து, . . . அப்படி செய்வதால் நம்மையும் நம் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்வோமாக’!—1 தீ. 4:16.