உங்கள் பகுத்தறியும் திறமைகளை வளருங்கள்
1 நாம் வாழும் தொல்லைகள் மிகுந்த கடைசி நாட்களில், எல்லா இடங்களிலும் கடவுளுடைய ஜனங்களுக்கு பல விதங்களில் பிரச்சினைகளும் சோதனைகளும் பெருகி வருகின்றன. (2 தீ. 3:1-5) விசுவாசத்தில் உறுதியுடன் நிலைத்திருக்க நம் அனைவருக்குமே உற்சாகம் தேவை. (1 கொ. 16:13) யெகோவாவின் வார்த்தையை தொடர்ந்து கிரகித்து, அவருடைய ஆவியில் சார்ந்து, அவருடைய அமைப்புடன் நெருங்கியிருக்கையில் அவரது உதவியுடன் நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்க முடியும்.—சங். 37:28; ரோ. 8:38, 39; வெளி. 2:10.
2 இந்த வருடத்தின் விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிகள், ‘புரிந்துகொள்ளும் திறமைகளில் முதிர்ச்சியுள்ளவர்கள் ஆகுங்கள்’ என்ற தலைப்பில் விவரிக்கப்பட்டது சரியானதுதான். அது, 1 கொரிந்தியர் 14:20-ன் (NW) அடிப்படையில் அமைந்திருந்தது; அங்கு நாம் அப்போஸ்தலன் பவுல் கூறியவற்றை பின்வருமாறு வாசிக்கிறோம்: “சகோதரரே, புரிந்துகொள்ளும் திறமைகளில் சிறு பிள்ளைகளாய் இராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புரிந்துகொள்ளும் திறமைகளிலோ முதிர்ச்சியுள்ளவர்களாயும் ஆகுங்கள்.” அந்நிகழ்ச்சிகளைப் பற்றி நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?
3 “எவ்வளவாய் உற்சாகமூட்டியது!” “இதுவே எங்களுக்குத் தேவைப்பட்டது!” என்பவை இரு அபிப்பிராயங்கள் மட்டுமே. தன் 12 வயது மகள் முழுக்காட்டுதல் பெற்றதைக் காண்பதற்காக இந்த விசேஷ மாநாட்டு தினத்துக்கு வந்திருந்த சாட்சியல்லாத ஒருவரும்கூட, அந்நிகழ்ச்சிகள் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் தன் குடும்பத்திற்கு அவை எவ்வளவாய் பயன்தரும் என்பதை புரிந்துகொண்டதாகவும் தெரிவித்தார். நீங்களும் அப்படித்தான் உணருகிறீர்களா? அந்நிகழ்ச்சிகளின் சிறப்புக் குறிப்புகள் சிலவற்றை நினைத்துப் பார்ப்போம்.
4 பகுத்தறியும் உங்கள் திறமைகளை வளர்க்க திருத்தமான அறிவு தேவை: “உங்களுடைய புரிந்துகொள்ளும் திறமைகளை வளர்க்க இதுவே சமயம்” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட ஆரம்ப பேச்சில், இன்றைய பிரச்சினைகளை எதிர்கொள்ள எது தேவை என அந்தப் பேச்சாளர் வலியுறுத்தினார்? அறிவுத் திறமை மட்டுமே போதாது. பைபிளைப் புரிந்துகொள்ளும் நம் திறமையை இன்னும் வளர்க்கவும் மெருகேற்றவும் வேண்டும்; இல்லையெனில் நம்மைச் சுற்றியுள்ள எல்லா தீய சூழ்நிலைகளாலும் பாதிக்கப்படுவோம். இதைப் புரிந்துகொள்வதற்கு கடவுளுடைய வழிநடத்துதல் தேவை. சங்கீதக்காரனைப் போலவே, யெகோவாவை முழு இருதயத்தோடு சேவிப்பதற்காக அவருடைய சட்டங்களையும் நினைப்பூட்டுதல்களையும் புரிந்துகொள்ள உதவி கேட்டு ஜெபிக்க வேண்டும்.—சங். 119:1, 2, 34.
5 அடுத்த பேச்சில், யெகோவா தம் வார்த்தை மற்றும் அமைப்பின் மூலமாக “பைபிளை புரிந்துகொள்வதில் முதிர்ச்சியுள்ளவர்கள் ஆவதற்கு உதவி” அளிப்பதாக வட்டார கண்காணி காட்டினார். புரிந்துகொள்ளுதல் என்பது, “ஒரு விஷயத்தை ஆராய்ந்து அதன் எல்லா அம்சங்களையும் பகுத்துணர்ந்து, இவற்றிற்கும் அந்த விஷயத்திற்கும் இடையேயுள்ள பொருத்தங்களை கிரகித்துக் கொள்வதாகும்” என வரையறுக்கப்பட்டது. இத்திறமையை வளர்க்க யார் நமக்கு உதவ முடியும்? ஆவிக்குரிய முன்னேற்றத்தை செய்வதற்கு மனிதர்களில் வரங்களை யெகோவா நமக்கு அளித்துள்ளார். (எபே. 4:11, 12, NW) நாம் ஒவ்வொரு நாளும் கடவுளுடைய வார்த்தையை வாசிக்கவும் எல்லா சபைக் கூட்டங்களுக்கும் தவறாமல் செல்லவும் அவருடைய பூமிக்குரிய அமைப்பு நமக்கு அறிவுறுத்துகிறது. (சங். 1:2) தனிப்பட்ட மற்றும் குடும்ப படிப்பின்போதும், கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்திற்கும் தயாரிக்கும்போதும் பைபிளையும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் எவ்வாறு பயன்படுத்துவது என்று நமக்கு கற்பிக்கப்படுகிறது. இந்த ஏற்பாடுகள் அனைத்திலிருந்தும் பயன் பெற்று வருகிறீர்களா? ஓர் ஒழுங்கான தனிப்பட்ட பைபிள் வாசிப்பு அட்டவணையை நீங்கள் பின்பற்றுகிறீர்களா? உலக போக்குகள், பாணிகள், தத்துவங்கள், மோசம்போக்கும் செல்வாக்குகள் ஆகிய வலைகளில் சிக்கிவிடாமல் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் இது மிகவும் அவசியம்.—கொலோ. 2:6-8.
6 பகுத்தறியும் நம் திறமை பயிற்றுவிக்கப்பட வேண்டும்: “பகுத்துணரும் திறமைகளை பயிற்றுவிப்பதன் மூலம் ஆவிக்குரிய தன்மையை காத்துக்கொள்ளுங்கள்” என்ற தலைப்பிலிருந்த தன் முதல் பேச்சில், சரி எது, தவறு எது என இனம் பிரிக்க தெரியாமல் இந்த உலகத்தார் தடுமாறுகின்றனர் என்பதை சிறப்பு பேச்சாளர் விளக்கினார். (ஏசா. 5:20, 21) கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களை ஏற்று, கடைப்பிடிக்க தவறியதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு முரணாக, யெகோவாவின் அமைப்பிலிருந்து ஆவிக்குரிய போதனை பெற்று வரும் நாமோ அவருடைய தராதரங்களை ஏற்றுக்கொள்கிறோம். அவையே நம் செயல்களுக்கும் நடத்தைக்கும் வழிகாட்டி. ஆகவே, யெகோவாவுடைய பார்வையில் நன்மையும் பிரியமுமானது எது எனவும் அவருடைய பரிபூரண சித்தத்திற்கு இசைவானது எது எனவும் நம்மால் நிச்சயப்படுத்திக்கொள்ள முடிகிறது.—ரோ. 12:2.
7 இவ்வுலகின் குழப்பமான சிந்தனையையும் அதன் கெட்ட விளைவுகளையும் தவிர்க்க நாம் தொடர்ந்து நம் பகுத்தறியும் திறமைகளை பயிற்றுவிக்க வேண்டும். இதை எவ்வாறு செய்யலாம்? எபிரெயர் 5:12-14-ல், வசனத்தின் “பாலை” மட்டும் உட்கொண்டால் போதாது என அப்போஸ்தலன் பவுல் வலியுறுத்தினார். ஆகவே, சபை புத்தகப் படிப்பில் நாம் உட்கொள்ளும் ஏசாயா தீர்க்கதரிசனம் போன்ற திடமான ஆவிக்குரிய உணவு நமக்கு தேவை. அத்துடன் நாம் கற்றுக்கொள்ளும் காரியங்களை உடனே கடைப்பிடிப்பதும் முக்கியம். அவ்வாறு செய்கையில், யெகோவாவின் நியமங்கள் மற்றும் தராதரங்கள் எந்தளவு சரியானவை என்பதை நாம் புரிந்துகொள்வோம். இது, சரி எது தவறு எது என்பதை தெளிவாக அடையாளங்காண நம் பகுத்துணரும் திறமைகளை பயிற்றுவிக்கிறது.
8 வருத்தகரமாக, சிலர் ஆவிக்குரிய வகையில் தவறிவிட்டிருக்கின்றனர். ஏன்? யெகோவாவின் பார்வையில் நன்மையும் நேர்மையுமானது எது என்ற விஷயத்தில் தங்கள் கவனத்தை அவர்கள் ஒருமுகப்படுத்தவில்லை. அதன் விளைவாக, பைபிள் ஆட்சேபிக்கும் விஷயங்களடங்கிய ரேடியோ அல்லது டிவி அரட்டை அரங்கங்கள், மட்டமான இசை, அல்லது கம்ப்யூட்டர் சாட் ரூம்களின் தீய செல்வாக்குகள் ஆகியவற்றுக்கு அடிமைப்பட்டிருக்கின்றனர். ஞானமாக நடந்துகொள்வதன் மூலம், ஒழுக்கங்கெட்ட, முட்டாள்தனமான, பொல்லாத மனிதரால் செல்வாக்கு செலுத்தப்படுவதை தவிர்ப்போம்.—நீதி. 13:20; கலா. 5:7; 1 தீ. 6:20, 21.
9 இளைஞர்கள் ‘துர்குணத்தில் குழந்தைகளாயிருக்க’ வேண்டும்: இந்நிகழ்ச்சி இரண்டு பகுதிகளைக் கொண்டிருந்தது; அவை பகுத்தறியும் திறமைகளை வளர்க்க இளைஞர்களை உற்சாகப்படுத்தின. ‘துர்குணத்தில் குழந்தைகளாய்’ இருப்பது என்றால், யெகோவாவின் பார்வையில் அசுத்தமாய் இருக்கும் காரியங்களை பொருத்தவரையில் அனுபவமில்லாதவர்களாகவே இருப்பதை, அதாவது குழந்தைகளைப் போல அப்பாவிகளாய் இருப்பதை அர்த்தப்படுத்துகிறது என்பதாக பேச்சாளர்கள் காட்டினர். (1 கொ. 14:20) நாம் நேரத்தை எவ்வாறு உபயோகிக்கிறோம் என்பதில் மிகவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்; அப்போதுதான் எல்லா விதமான துர்குணத்தையும் எதிர்த்து நின்று, அது நம்மை கறைபடுத்தாதபடிக்கு காத்துக்கொள்ள முடியும் என நம் எல்லாருக்குமே உற்சாகம் அளிக்கப்பட்டது. (எபே. 5:15-17) நம் ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதலின் முன்னேற்றத்திற்கு நேரடியாக வழிவகுக்காத விஷயங்களை வாசிக்க எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பதை கணக்குப்போட்டு பார்க்கும்படி நமக்கு அறிவுறுத்தப்பட்டது. நீங்கள் கணக்குப்போட்டு பார்த்தீர்களா? அது எதைக் காட்டியது? தினமும் பைபிளை வாசிப்பதோடு சங்கத்தின் மற்ற பிரசுரங்களையும் வாசிக்க தீர்மானமாய் இருங்கள். இவ்வாறு செய்வது, ‘புரிந்துகொள்ளுதலை பெற்றுக்கொள்ள’ (NW) இளைஞர்கள் உட்பட நம் எல்லாருக்குமே உதவும்.—நீதி. 4:7-9.
10 “பைபிள் நியமங்களை புரிந்துகொள்ளுதலோடு பின்பற்றி பயனடையுங்கள்”: விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிகளில் கடைசிப் பேச்சின் தலைப்பு இதுதான். ஜீவனளிக்கும் புரிந்துகொள்ளுதலின் ஊற்றுமூலம் யெகோவா தேவனே என்பதாகவும் அது மனிதகுலம் அனைத்தினுடையதோடு ஒப்பிட மிக உன்னதமானது என்பதாகவும் சிறப்பு பேச்சாளர் விளக்கினார். யெகோவாவின் புரிந்துகொள்ளுதலை கற்றுக்கொள்ளும் வாய்ப்பை சற்று கற்பனை செய்து பாருங்கள்! அதை உண்மையாய் நாடி விசுவாசத்தோடு கேட்பவர்களுக்கு அவர் தாராளமாய் அருளுகிறார். (நீதி. 2:3-5, 9; 28:5) அவர் அளிக்கும் வாய்ப்பை முழுமையாய் பயன்படுத்திக்கொள்கிறீர்களா?
11 பைபிளை வாசிக்கையில் நியமங்களை கண்டுபிடிக்க கற்றுக்கொள்ளும்படி நமக்கு அறிவுறுத்தப்பட்டது. (2 தீ. 3:16, 17) யெகோவா சொல்பவற்றை திருத்தமாக புரிந்துகொள்ள அவற்றை கவனத்துடன் படியுங்கள். இந்நியமங்களை தியானிக்கவும் அவற்றை உங்கள் மனதிலும் இருதயத்திலும் பதிக்கவும் நேரமெடுத்துக் கொள்ளுங்கள். இது, வாழ்க்கையில் நீங்கள் தீர்மானங்கள் செய்கையில் வெற்றி காணுமாறு உங்கள் பகுத்தறியும் திறன்களை பயிற்றுவிக்கும். (யோசு. 1:8) அநேகர் எதிர்ப்படும் சூழ்நிலைகள் சிலவற்றை சிந்திப்போம்; பைபிள் நியமங்களை பொருத்துவது வெற்றிபெற எவ்வாறு உதவக்கூடும் என்பதைக் காண்போம்.
12 ‘உடை, சிகை அலங்காரத்தில் குறிப்பிட்ட பாணியை நான் பின்பற்ற வேண்டுமா?’ உடையிலும் சிகை அலங்காரத்திலும் இவ்வுலகம் கடைப்பிடிக்கும் நவீன பாணிகள் கலக ஆவியை வெளிக்காட்டுகின்றன. அப்படிப்பட்ட மனப்பான்மை அலங்கோலமாகவும் ஏனோதானோவென்றும் உடை உடுத்தவோ, அடக்கமின்றி அங்கம் தெரிய உடை உடுத்தவோ தூண்டுகிறது. அப்படிப்பட்ட போக்குகளை எதிர்க்க எந்த பைபிள் நியமங்கள் நமக்கு உதவும்? நம் பகுத்தறியும் திறமைகளுக்குப் பயிற்சி அளித்துள்ள நாம், 1 தீமோத்தேயு 2:9, 10-ல் காணப்படும், ‘தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிறவர்களுக்கு ஏற்றபடியே . . . நாணத்தினாலும் [“அடக்கத்துடனும்,” NW] தெளிந்த புத்தியினாலும்’ அலங்கரிக்க வேண்டும் என்ற நியமத்திற்கு கவனம் செலுத்துவோம். 2 கொரிந்தியர் 6:3, கொலோசெயர் 3:18, 20 ஆகியவற்றில் காணப்படும் நியமங்களும் பொருந்தும்.
13 ‘என் குடும்ப பந்தத்தை பலமாக வைத்துக்கொள்ள நான் என்ன செய்யலாம்?’ குடும்ப அங்கத்தினர்களுக்கு மத்தியில் நல்ல பேச்சுத்தொடர்பு இருக்க வேண்டியது அவசியம். யாக்கோபு 1:19 நமக்கு கூறுவதாவது: “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.” குடும்பத்தில் பேச்சுத்தொடர்பு இருவழிப் பாதையாக இருப்பதால், குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் செவிகொடுக்கவும் வேண்டும், பேசிக்கொள்ளவும் வேண்டும். நாம் சொல்வது உண்மையாய் இருந்தாலும், அதை கடுமையாக, கர்வத்துடன், கரிசனையின்றி சொன்னால் நல்லதுக்கு பதிலாக கெடுதலையே உண்டாக்கும். ஆகவே, நாம் கணவராகவோ, மனைவியாகவோ, பெற்றோராகவோ, பிள்ளையாகவோ, யாராய் இருந்தாலும் சரி, நம் பேச்சு ‘எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருக்க’ அனுமதிக்க வேண்டும்.—கொலோ. 4:6.
14 ‘பொருளாசையால் பாதிக்கப்படுகிறேனா?’ பொருளாசை இவ்வுலக அழுத்தங்களில் ஒன்று; இது ஒருவருடைய வாழ்க்கையை சிக்கலாக்குகிறது. மகிழ்ச்சிக்கு அது வழிதிறப்பதில்லை. (பிர. 5:10; லூக். 12:15; 1 தீ. 6:9, 10) பொருளாசை என்னும் வலையில் சிக்குவதை தவிர்க்க நமக்கு உதவுவதற்காக, பின்வரும் முக்கிய நியமத்தை இயேசு கற்பித்தார்: உங்கள் கண்களை எளிமையாக வைத்திருங்கள். சமநிலையான, சிக்கல் குறைந்த வாழ்க்கை வாழ்வது, நம் கண்களை ராஜ்ய அக்கறைகளில் ஊன்ற வைப்பதையும், மற்ற அனைத்திற்கும் அதைவிட குறைந்த முக்கியத்துவம் கொடுப்பதையும் உட்படுத்துகிறது.—மத். 6:22, 23, 33.
15 நம் குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும்: தீர்மானங்கள் செய்வதில் நம்மை வழிநடத்தும் நீதியான நியமங்களின் நம்பத்தக்க ஊற்றுமூலம் கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிறது. நாம் இந்நியமங்களை கற்றுக்கொண்டு, அவற்றின்பேரில் தியானித்து, நம் வாழ்க்கையில் அவற்றை பொருத்துவது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு ‘நன்மை தீமையின்னதென்று பகுத்தறியும் திறமைகளை பயிற்றுவிப்பது’ நமக்கும் நன்மை செய்யும்; யெகோவாவையும் கனப்படுத்தும்.—எபி. 5:14.