நற்செயல்களை தூண்டுவிக்கும் நம் விசுவாசம்
1 நோவா, மோசே, ராகாப் ஆகியோரை விசுவாசம் செயல்பட தூண்டியது. நோவா பேழையைக் கட்டினார். மோசே, பார்வோனின் அரண்மனை வாழ்க்கை அளித்த தற்காலிக ஆதாயங்களை துறந்தார். ராகாப் வேவுகாரர்களை மறைத்து வைத்தாள்; பின்னர் அவர்களுடைய அறிவுரைப்படி நடந்துகொண்டு குடும்பத்தாரைக் காப்பாற்றினாள். (எபி. 11:7, 24-26, 31) இன்று என்ன நற்செயல்களை செய்ய விசுவாசம் நம்மை தூண்டுவிக்கிறது?
2 சாட்சி கொடுத்தல்: நம்முடைய அற்புதமான கடவுளையும், நித்திய சந்தோஷத்திற்காக அவர் செய்திருக்கும் ஏற்பாடுகளையும் பற்றி பேசுவதற்கு விசுவாசம் நம்மை தூண்டுவிக்கிறது. (2 கொ. 4:13) சில சமயங்களில், நாம் சாட்சி கொடுக்க தயங்கலாம். ஆனால் ‘யெகோவாவை எப்பொழுதும் நமக்கு முன்பாக வைத்திருந்தால்’ நமக்குப் பலமும் கிடைக்கும், பயமும் தணியும். (சங். 16:8) பின்னர் பொருத்தமான எல்லா சந்தர்ப்பத்திலும், நம்முடைய சொந்தபந்தங்கள், அக்கம்பக்கத்தார், சகபணியாளர்கள், பள்ளி தோழர்கள் என எல்லாரிடமும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள விசுவாசம் நம்மைத் தூண்டுவிக்கும்.—ரோ. 1:14-16.
3 கூடிவருதல்: தவறாமல் கூட்டங்களுக்கு வருவது விசுவாசம் பிறப்பிக்கும் மற்றொரு நற்செயல் ஆகும். எப்படி சொல்லலாம்? கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தவறாமல் செல்வது, அங்கு கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வாயிலாக இயேசு நம் மத்தியில் இருக்கிறார் என்ற நம்முடைய உறுதியான நம்பிக்கையை காட்டுகிறது. (மத். 18:20) “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் கேட்”பதற்கான நம் ஆசையை அது வெளிக்காட்டுகிறது. (வெளி. 3:6) நமக்குப் போதிக்கிறவர் நம்முடைய மகத்தான போதகராகிய யெகோவாவே என்பதை விசுவாசக் கண்களால் காண்பதால், கொடுக்கப்படும் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடக்கிறோம்.—ஏசா. 30:20, NW.
4 நாம் செய்யும் தெரிவு: காணக்கூடாத மெய்மைகளின் பேரிலான அசைக்க முடியாத நம்பிக்கை, வாழ்க்கையில் ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க நம்மைத் தூண்டுவிக்கிறது. (எபி. 11:1) இது பெரும்பாலும் பொருள் சம்பந்தமான தியாகங்கள் செய்வதை உட்படுத்துகிறது. உதாரணமாக, ஒரு மூப்பர் தனக்குக் கிடைத்த அருமையான பதவி உயர்வை வேண்டாம் என நிராகரித்தார்; ஏனெனில் அந்த பதவி உயர்வுக்காக சில கூட்டங்களைத் தவறவிடவும், குடும்பத்தாரிடமிருந்து விலகி இருக்கவும், பயனியர் ஊழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அவர் விரும்பவில்லை. அதே போல நாமும், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் [“தொடர்ந்து,” NW] தேடு”பவர்களை யெகோவா கவனித்துக்கொள்வார் என பைபிள் தரும் உறுதியில் முழு நம்பிக்கை வைப்போமாக.—மத். 6:33.
5 விசுவாசம் நம்முடைய வாழ்க்கையில் செலுத்தும் பலமான செல்வாக்கு மற்றவர்களுடைய கண்களிலிருந்து தப்பாது. நமக்குள்ள விசுவாசம் உலகறிந்த உண்மை. (ரோ. 1:8) எனவே நாம் அனைவரும் நற்செயல்கள் மூலம் நம்முடைய விசுவாசம் உயிருள்ளது என்பதை காட்டுவோமாக.—யாக். 2:26.