ஆவிக்குரிய பலமிக்க குடும்பங்கள்—எப்படி?
1 ‘தங்கள் குடும்பங்களில் தேவ பக்தியை பழக்கப்படுத்திக் கொள்வதற்கு’ கிறிஸ்தவ குடும்பங்கள் பாராட்டப்படுகின்றன. (1 தீ. 5:4, NW) நம்முடைய விசுவாசத்தைப் பலவீனப்படுத்தும் எத்தனையோ மோசமான காரியங்கள் நம்மை சுற்றிலும் இருப்பதால் ஆவிக்குரிய விதத்தில் பலமுள்ள குடும்பங்களாக திகழ பாடுபடுவது முக்கியம். இதை எப்படி சாதிக்கலாம்?
2 கிறிஸ்துவைப் போன்ற தலைமை வகிப்பு: தங்கள் குடும்பங்களைப் பலப்படுத்தும் பொறுப்பை ஏற்று நடத்துவதில் குடும்பத் தலைவர்கள் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவது அவசியம். தம்முடைய பலிக்குரிய மரணத்தின் மூலம் நம்மீதுள்ள அன்பை ஒரேவொரு முறை வெளிக்காட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இயேசு தொடர்ந்து சபையைப் ‘போஷித்துக் காப்பாற்றுகிறார்.’ (எபே. 5:25-29) இத்தகைய அன்பான கவனிப்பின் முன்மாதிரியைப் பின்பற்றும் பாசமுள்ள பெற்றோர்கள் தங்கள் குடும்பத்தாரின் அன்றாட ஆவிக்குரிய தேவைகளுக்குக் கவனம் செலுத்துகிறார்கள். இது, வாரந்தவறாமல் குடும்ப பைபிள் படிப்பு நடத்துவதையும், முடிந்த போதெல்லாம் கருத்தாழமிக்க ஆவிக்குரிய கலந்துரையாடல்களில் ஈடுபடுவதையும், பிரச்சினைகள் தலைகாட்டுகையில் அவற்றைத் தீர்த்து வைப்பதையும் உட்படுத்துகிறது.—உபா. 6:6, 7.
3 வெளி ஊழியத்தில்: யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி மற்றவர்களுக்குச் சாட்சி கொடுப்பது தங்கள் வணக்கத்தின் முக்கிய அம்சம் என்பதை குடும்பத்தார் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். (ஏசா. 43:10-12) பெற்றோர்களாக, உங்கள் பிள்ளைகள் யெகோவாவுக்கு உண்மையுள்ள சாட்சிகளாக இருக்க விரும்பினால் சின்னஞ்சிறு வயதிலேயே அவர்களுடைய பிஞ்சு மனதை ஊழியத்துக்குத் தயார்படுத்த வேண்டும். ஊழியத்தில் சுயதியாக மனப்பான்மையுடன் ஒவ்வொரு வாரமும் ஈடுபடுவதற்கான காரணங்களை அவர்களுடன் கலந்தாலோசியுங்கள். (மத். 22:37-39) பின்னர் வெளி ஊழியத்திற்கு செல்கையில் தவறாமல் அவர்களையும் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யுங்கள்.
4 வாராந்தர குடும்ப படிப்பின்போது பயன் தரும் பிரசங்கத்தைத் தயாரித்து, பழகிப் பார்ப்பதற்கு நேரத்தை ஒதுக்குவதன் மூலம் பிரசங்க ஊழியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள குடும்பத்தாருக்கு மேலும் உதவுங்கள். ஒவ்வொரு பிள்ளையையும் தனித்தனியாக ஊழியத்தில் பயிற்றுவியுங்கள், அவரவரது வயதுக்கும் திறமைக்கும் ஏற்ப முன்னேற உதவுங்கள். சேர்ந்து ஊழியம் செய்து முடித்த பின்பு, யெகோவாவின் நற்குணத்தை தனிப்பட்ட விதத்தில் எப்படி ஊழியத்தில் அனுபவித்தார்கள் என்பதை கலந்து பேசுங்கள். விசுவாசத்தைப் பலப்படுத்தும் அனுபவங்களை சொல்லுங்கள். “கர்த்தர் தயையுள்ளவரென்பதை” குடும்பத்தார் ருசிக்க ருசிக்க, “சகல துர்க்குணத்தையும்” எதிர்த்து நிற்க தயாரானவர்களாக அவர்கள் யெகோவாவிடம் அதிகம் நெருங்கி வருவார்கள்.—1 பே. 2:1-3.
5 கூட்டங்களில்: எல்லா சபை கூட்டங்களிலும் கலந்துகொள்வதற்கு வசதியாக குடும்பத்தார் ஒருவருக்கொருவர் உதவுவது, அதிலும் முக்கியமாக, ஒருவர் அதிக களைப்பாகவோ, உற்சாகமிழந்தவராகவோ, அல்லது கவலைகளில் மூழ்கியவராகவோ இருக்கையில் இப்படி உதவுவது எவ்வளவு நன்றாக இருக்கும்! “எங்கப்பா வேலையிலிருந்து வீட்டுக்கு வரும்போது ரொம்ப களைத்துப் போய் வருவார். ஆனால் அன்றைக்கு கூட்டத்தில் கேட்கப் போகும் ஒரு நல்ல குறிப்பைப் பற்றி அவரிடம் பேசுவேன். அவர் கூட்டத்துக்கு ரெடியாகிவிடுவார். நான் எப்பவாவது களைப்பாக இருந்தேன்னா கூட்டத்துக்குப் போக உற்சாகப்படுத்தும் விதத்தில் அவர் என்னிடம் பேசுவார்” என்றாள் ஓர் இளம் பெண்.—எபி. 10:24, 25.
6 எல்லாவற்றையும் சேர்ந்தே செய்வது: வீட்டு வேலைகள் போன்ற எல்லாவற்றையும் எல்லாரும் சேர்ந்து செய்வது குடும்பங்களுக்கு அவசியம். உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் தரும் பொழுதுபோக்கிற்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். பிக்னிக் போவது, உலாவுவது, விளையாடுவது, உறவினர்களையோ நண்பர்களையோ பார்க்க போவது ஆகியவை சந்தோஷம் தரும் சமயங்கள், அவை நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகளைப் பதிப்பவை.—பிர. 3:4.
7 பலமிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் தங்கள் ஆவிக்குரிய தன்மைக்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் அன்றாட சவால்களை சமாளிக்கின்றன. யெகோவாவிடம் இன்னும் நெருங்கி வருவதன் மூலம் அவர் அருளும் பலத்தை அனுபவப்பூர்வமாக உணருகின்றன.—எபே. 6:10.