உபத்திரவத்தின் மத்தியிலும் சந்தோஷப்படுதல்
1 தமது சீஷர்களுக்கு உபத்திரவம் வருமென்று நம்முடைய எஜமானர் இயேசு முன்கூட்டியே சொல்லியிருக்கிறார். (மத். 24:9) சோதனைகளை நாம் எப்படிக் கருத வேண்டும்? உபத்திரவத்தை சகிக்க எது நமக்கு உதவும்? இந்தக் கேள்விகளுக்கு, 2004 ஊழிய ஆண்டில் நடைபெற்ற வட்டார மாநாடு பதிலளித்தது. அதன் பொருள்: “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே சகித்திருங்கள்.”—ரோமர் 12:12, NW.
2 இரண்டு தொடர்பேச்சுகள்: “சகித்திருந்து பலன் கொடுங்கள்” என்பது முதல் தொடர்பேச்சின் தலைப்பாகும். நேரடி தாக்குதல்கள், இயற்கைப் பேரழிவுகள், கஷ்டநஷ்டங்கள் ஆகியவற்றின் மத்தியிலும் யெகோவாவின் ஜனங்கள் பலன் தருகிறவர்களாக இருப்பதைப் பற்றி அப்பேச்சு கலந்தாலோசித்தது. நம் கவலைகளுக்காகவும், ஏதோவொரு விதத்தில் கஷ்டப்படுகிற மற்ற சகோதரர்களுக்காகவும் இடைவிடாமல் ஜெபிப்பது மிக முக்கியம். (1 தெ. 5:17) பிரசங்கிப்பதிலும் கற்பிப்பதிலும் தாங்கள் எப்படி அவசர உணர்வுடன் ஈடுபடுகிறார்களென சொல்லுமாறு அநேக பிரஸ்தாபிகளிடம் பேட்டி காணப்பட்டது. “யெகோவா சிட்சிக்கையில்” என்ற பேச்சிலிருந்து குறிப்பாக பெற்றோர்கள் பயனடைந்தனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் நியாயங்காட்டிப் பேசி, யெகோவாவுக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்கள் என்பதை எப்படி அவர்களுக்கு புரிய வைக்கலாம் என்று இந்தப் பேச்சில் கலந்தாலோசிக்கப்பட்டது. (பிர. 11:9) இந்த உலகின் மனப்பான்மை நம்மில் படிப்படியாக நுழைவதை எப்படித் தடுக்கலாம் என்றும், கவலைகள் அல்லது ஐசுவரியத்தின் மயக்கம் நம்மை பலன் கொடாதவர்களாக்கி விடாதவாறு எப்படி பார்த்துக்கொள்ளலாம் என்றும் இத்தொடர்பேச்சின் கடைசி பேச்சாளர் சிறப்பித்துக் காட்டினார்.—மத். 6:22; மாற். 4:18.
3 “பந்தயத்தில் சகிப்புத்தன்மையுடன் ஓடுங்கள்” என்பதே இரண்டாவது தொடர்பேச்சின் தலைப்பாகும். ஒப்புக்கொடுக்கப்பட்ட நம் வாழ்க்கை முறை, நித்திய ஜீவனுக்குரிய ஓட்டம் என்பதையும், இது எல்லா பந்தயத்தைக் காட்டிலும் மிகப் பெரிய பந்தயம் என்பதையும் அப்பேச்சு தெளிவாக விளக்கியது. நாம் ஏன் சட்டதிட்டங்களுக்கு இசைய ஓட வேண்டும்? (2 தீ. 1:13; 2 கொ. 13:5) பாரமான எல்லாவற்றையும் எப்படி வெற்றிகரமாக களைந்து போட முடியும்? அதே சமயம், ஜீவனுக்கான பந்தயத்தில் சோர்ந்து போகாதிருப்பது எப்படி? (லூக். 12:16-21; 10:40-42; 2 கொ. 6:14-15) இந்த மாநாட்டில் தரப்பட்ட காலத்துக்கேற்ற வேதப்பூர்வ ஆலோசனை, சகிப்புத்தன்மையுடன் தொடர்ந்து ஓடுவதற்கு நம் அனைவருக்குமே உதவும்.—எபி. 12:1.
4 சகிப்புத்தன்மையால் கடவுளின் அங்கீகாரத்தைப் பெறுதல்: பயணக் கண்காணிகள் கொடுத்த பேச்சுகள் விசுவாசத்தை உறுதிப்படுத்துபவையாய் இருந்தன. “சகிப்புத்தன்மை அங்கீகரிக்கப்பட்ட நிலைக்கு வழிநடத்துகிறது” என்ற தலைப்பில் மாவட்டக் கண்காணி ஒரு பேச்சைக் கொடுத்தார். ஆவிக்குரிய ஜனங்களாக நாம், “பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும்” ஆவதற்கு சகிப்புத்தன்மை உதவுகிறது என்பது அந்த பேச்சில் விளக்கப்பட்டது. (யாக். 1:4) சகிப்புத்தன்மைக்கு மிகச் சிறந்த முன்மாதிரி யெகோவா தேவனே; தமது சர்வலோக பேரரசுரிமைக்கு எதிரான கலகத்தை அவர் நீண்ட காலமாக சகித்து வந்திருக்கிறார். தேசங்கள் யாருடைய பெயரில் நம்பிக்கை வைக்க வேண்டும், இதில் என்ன உட்பட்டுள்ளது ஆகிய கேள்விகளுக்கு பொதுப் பேச்சு பதிலளித்தது. “சகித்திருப்பதன் மூலம் உங்கள் ஜீவனைக் காத்துக்கொள்வீர்கள்” என்பதே முடிவான பேச்சின் தலைப்பு. மனக்கசப்பின்றி இயேசுவால் எப்படி அநீதியை சகிக்க முடிந்ததென்று இந்தப் பேச்சில் கலந்தாலோசிக்கப்பட்டது.—1 பே. 2:21-23.
5 இந்த ஆவிக்குரிய விருந்தை யெகோவா தேவனே நமக்கு தயாரித்து அளித்திருக்கிறார். ஆகவே, இந்த மாநாட்டில் பெற்ற அருமையான ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கவும், அதிலிருந்து பெற்ற உற்சாகத்திலிருந்து பலனடையவும் நாம் உறுதியாய் இருப்போமாக.