முழு இருதயத்தோடு யெகோவாவை சேவியுங்கள்
1 சந்தோஷமாக நெடுநாள் வாழ சொல்லர்த்தமான நம் இருதயத்தை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்வது அவசியம்; இதைப் பராமரிப்பது பற்றி ஏராளமான தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், நம் அடையாளப்பூர்வ இருதயத்தை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்வது அதைவிட முக்கியம். ஆகவே, 2004 ஊழிய ஆண்டில் நடைபெற்ற விசேஷ மாநாடு, “முழு இருதயத்தோடு யெகோவாவை சேவித்தல்” என்ற தலைப்பில் இருந்தது எத்தனை பொருத்தமானது! (1 நா. 28:9, NW) அந்த மாநாட்டிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்?
2 “சந்தோஷத்தோடு யெகோவாவை சேவிக்க மற்றவர்களுக்கு உதவுதல்” என்ற தலைப்பில் வட்டாரக் கண்காணி பேசினார். யெகோவாவை சேவிக்க விரும்புகிறவர்களின் ஆர்வத்தை வளர்த்து, அவர்களிடம் பைபிள் படிப்பை நடத்தியதால் பெற்ற மகிழ்ச்சியை பேட்டிகள் சிறப்பித்துக் காட்டின. யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தைப் படித்த பின்னர் சிலர் யெகோவாவிடம் நெருங்கி வந்திருக்கின்றனர். உங்களுடைய அனுபவமும் அதுதானா? “துன்பம் நிறைந்த உலகில் நம் இருதயங்களை பாதுகாத்தல்” என்ற தலைப்பில் சிறப்புப் பேச்சாளர் கொடுத்த முதல் பேச்சிலிருந்து அளவிலா ஆறுதலையும் உற்சாகத்தையும் எல்லாருமே பெற்றிருப்பர் என்பதில் சந்தேகமில்லை. முழுக்காட்டுதல் பேச்சுடன் காலை நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.
3 பிற்பகலில் கொடுக்கப்பட்ட “உதவிக்கரம் நீட்டுதல்” என்ற பேச்சு, புதியவர்கள், பலவீனர்கள், செயலற்றவர்கள் ஆகியோருக்கு உதவும் விதத்தை கலந்தாலோசித்தது. தவறான செல்வாக்குகளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்து, யெகோவாவிடம் அவர்கள் நெருங்கி வருவதற்கு பெற்றோர்கள் எப்படி உதவலாம்? “யெகோவாவில் களிகூர உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்” என்ற பேச்சு இதற்கான நடைமுறை ஆலோசனைகளை அளித்தது, அதை எப்படிச் செய்யலாம் என்றும் காட்டியது.
4 நம் அடையாளப்பூர்வ இருதயத்தை ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் வைத்துக்கொள்ள யெகோவா செய்திருக்கும் ஒவ்வொரு ஏற்பாட்டையும் நாம் பயன்படுத்துகிறோமா? “யெகோவாவை சேவிக்கையில் முழு இருதயத்தை காத்துக்கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் சிறப்புப் பேச்சாளர் கடைசிப் பேச்சைக் கொடுத்தார்; அதில், நம் இருதயத்தைப் பராமரிக்கும் திட்டத்தில் உட்பட்டுள்ள நான்கு அடிப்படை அம்சங்கள் முக்கியமாக கலந்தாலோசிக்கப்பட்டன. அவை உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஊக்கமாக ஜெபிப்பது, கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது, ஊழியத்தில் வைராக்கியத்துடன் ஈடுபடுவது, உடன் விசுவாசிகளோடு கூடிவருவது ஆகியவற்றுக்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறோம்? அவற்றிற்காக எவ்வளவு முயற்சி எடுக்கிறோம்? இதில் ஏதாவது ஓர் அம்சத்தில் நாம் இன்னும் சற்று முன்னேற்றம் செய்ய வேண்டியிருக்கிறதா?
5 “உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக” என்ற அழைப்பை யெகோவா விடுக்கிறார். (நீதி. 23:12) அந்த மாநாட்டில் கற்றுக்கொண்ட அருமையான விஷயங்களைப் பொருத்திப் பிரயோகிப்பது முழு இருதயத்தோடும் உற்சாக மனதோடும் யெகோவாவை தொடர்ந்து சேவிக்க உங்களைப் பலப்படுத்தும்.