தெய்வீக ஞானத்தின் அபார மதிப்பு
1 யெகோவாவின் சாட்சிகள் நேரடியாக மக்களுக்கு உதவ வேண்டும் என்பது சிலரின் கருத்து; இன்று மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென சிலர் நினைக்கின்றனர். அப்படி நினைப்பவர்கள், பைபிள் கல்வி புகட்டும் நம் வேலையின் அபார மதிப்பைப் புரிந்துகொள்ள தவறுகின்றனர். இது அப்போஸ்தலன் பவுல் கூறிய விதமாகவே உள்ளது. அவர் கூறினதாவது: “சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபலனாயிருக்கிறது.” (1 கொ. 1:18) ஆம், கிறிஸ்தவ ஊழியமே பூமியில் செய்யப்படும் அதிமுக்கிய வேலை என்பது நமக்குத் தெரியும்.
2 இப்போதும் மேம்பட்ட வாழ்க்கை: மனிதகுலத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எடுக்கப்படும் மனித முயற்சிகள் ஓரளவுதான் வெற்றி பெற்றுள்ளன. சட்டங்களினால் குற்றச்செயல்களைத் தடுக்க முடியவில்லை; மாறாக அவை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டுதான் வருகின்றன. சமாதான ஒப்பந்தங்களாலும் சமாதானப் படைகளாலும் போருக்கு முடிவுகட்ட முடியவில்லை. சமுதாய நலன் கருதி போடப்படும் திட்டங்களாலும் வறுமையை ஒழிக்க முடியவில்லை. (சங். 146:3, 4; எரே. 8:9) மறுபட்சத்தில் ராஜ்ய செய்தியோ கடவுளுக்குப் பிடித்தமான குணங்களை வளர்த்துக்கொள்ள லட்சக்கணக்கானோருக்கு உதவியிருக்கிறது; இவ்வாறு அவர்களது வாழ்க்கையை அடியோடு மாற்றியிருக்கிறது. (ரோ. 12:2; கொலோ. 3:9, 10) இதனால் அவர்களது வாழ்க்கைத் தரம் இப்பொழுதே மேம்பட்டுள்ளது.—1 தீ. 4:8.
3 ஒளிமயமான எதிர்காலம்: வாழ்க்கையில் இன்று நாம் எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுவதுடன், எதிர்காலத்திற்காக நன்கு திட்டமிடவும் தெய்வீக ஞானம் நமக்கு உதவுகிறது. (சங். 119:105) தற்போதைய உலகத்தை மேம்படுத்த எடுக்கப்படும் பயனற்ற முயற்சிகளில் இறங்குவதிலிருந்து அது நம்மை காக்கிறது. (பிர. 1:15; ரோ. 8:20) நிறைவேறா லட்சியங்களை நாடியே நம் வாழ்க்கையை வீணடிக்காமல் இருப்பதற்காக நாம் எவ்வளவாய் நன்றியுடன் இருக்கிறோம்! அதற்கு பதிலாக, நீதி நிலைத்திருக்கும் “புதிய வானங்களும் புதிய பூமியும்” வருமென்ற யெகோவாவின் நிச்சய வாக்குறுதியின் அடிப்படையிலேயே நாம் உழைக்கிறோம். யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் வருகையில், தெய்வீக ஞானத்தைச் சார்ந்திருந்தவர்களே சரியான தெரிவை செய்திருப்பவர்கள் என்பது தெள்ளத் தெளிவாக இருக்கும்.—2 பே. 3:10-13; சங். 37:34.
4 “இந்த உலக ஞானத்தில்” ஊறிப்போயிருக்கும் ஆட்களுக்கு தெய்வீக ஞானம் நடைமுறைக்கு ஒத்து வராததுபோல் தோன்றினாலும், நிஜத்தில் அதுவே பின்பற்றுவதற்கு ஏற்ற நடைமுறையான வழியாகும். (1 கொ. 1:21; 2:6-8; NW) எனவே, ‘தாம் ஒருவரே ஞானமுள்ளவராயிருக்கிற’ கடவுளிடமிருந்து பெற்ற செய்தியை உலகெங்கும் தொடர்ந்து அறிவிக்கிறோம்.—ரோ. 16:27.