“உத்தமர்களே, நீங்களெல்லாரும் யெகோவாவில் அன்புகூருங்கள்”
இயேசுவின் மரணம் ஏப்ரல் 4-ம் தேதி நினைவுகூரப்படும்
1 பல வருடங்களுக்கு முன்பு, உக்ரைன் நாடு கம்யூனிஸ ஆட்சியின் கீழ் இருந்தபோது சகோதரர்களை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்; முக்கியமாக, கர்த்தருடைய இராப்போஜன நாளில் சகோதரர்கள் எந்த இடத்தில் கூட்டம் நடத்தப் போகிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அப்படி நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆசரிப்பு நடக்கும் தேதியை அதிகாரிகள் உத்தேசமாக அறிந்திருந்ததால் இது சகோதரர்களுக்கு பிரச்சினையாகவே இருந்து வந்தது. இச்சூழ்நிலையை சகோதரர்கள் எப்படி சமாளித்தார்கள்? ஒரு சகோதரியினுடைய வீட்டின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. அந்த இடத்தில் ஜனங்கள் கூடிவருவார்களென அதிகாரிகள் எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதால் முழங்கால் அளவு தண்ணீருக்கு மேலே சகோதரர்கள் ஒரு மேடையை அமைத்தார்கள். தாழ்வான கூரைக்கு கீழே அந்த மேடை மீது உடலைக் குறுக்கி எல்லாரும் உட்கார வேண்டியிருந்தது; என்றபோதிலும் யாருடைய தொந்தரவுமின்றி சபையார் சந்தோஷத்துடன் நினைவு ஆசரிப்பை அனுசரித்தார்கள்.
2 இயேசுவின் மரணத்தை ஆசரிக்கும்படியான கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் உக்ரைனிலிருந்த நம் சகோதரர்கள் காட்டிய உறுதி, கடவுள் மீது அவர்களுக்கிருந்த அன்பை அற்புதமாய் படம்பிடித்துக் காட்டியது. (லூக். 22:19; 1 யோ. 5:3) நம் வாழ்க்கையில் முட்டுக்கட்டைகளை எதிர்ப்படும் போதெல்லாம் அத்தகைய அனுபவங்களிலிருந்து உற்சாகத்தைப் பெறுவோமாக; இப்படி பெறுகிற உற்சாகம், ஏப்ரல் 4-ம் தேதி கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்பில் கண்டிப்பாக நம்மை கலந்துகொள்ளச் செய்யும். இவ்வாறு செய்கையில், “உத்தமர்களே, நீங்களெல்லாரும் யெகோவாவில் அன்புகூருங்கள்” என பாடிய சங்கீதக்காரனின் மனோபாவத்தை நாம் வெளிக்காட்டுகிறோம்.—சங். 31:23, NW.
3 கடவுள் மீதுள்ள அன்பில் வளர மற்றவர்களுக்கு உதவுங்கள்: நம்முடன் சேர்ந்து ஆசரிப்பில் கலந்துகொள்ள மற்றவர்களை அழைப்பதற்கும் கடவுள் மீதுள்ள அன்பு நம்மை உந்துவிக்கும். பிப்ரவரி மாத நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கை, நினைவு ஆசரிப்புக்கு யாரையெல்லாம் அழைக்கலாம் என பட்டியலிடும்படி நம் ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்தியது. உங்கள் பட்டியலிலுள்ள ஒவ்வொருவரையும் அழைப்பதற்கு ஊக்கமாய் தொடர்ந்து முயற்சி எடுக்கிறீர்களா? அந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு விளக்கிச் சொல்ல கொஞ்சம் நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தத் தேதியையும், நேரத்தையும் அன்புடன் அவர்களுக்கு நினைவுபடுத்துவதும், தேவைப்பட்டால் அவர்களை அழைத்து வருவதாக கூறுவதும் அதில் கலந்துகொள்ள அவர்களை உற்சாகப்படுத்தலாம்.
4 நம் அழைப்பை ஏற்று நினைவு ஆசரிப்பு கூட்டத்திற்கு வந்திருக்கும் நபர்களை வரவேற்பதற்கு விசேஷ முயற்சி எடுங்கள்; புது இடமென்ற பயமோ கூச்சமோ இல்லாதவாறு அவர்களை சௌகரியமாக உணரச் செய்யுங்கள். யெகோவாவின் மீதுள்ள அவர்களது அன்பு வளருவதற்கு நீங்கள் எப்படி உதவலாம்? அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க மனமுள்ளவர்களாய் இருங்கள். முடிந்தால் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி சொல்ல தயாராக இருங்கள். நம் வாராந்தர சபைக் கூட்டங்களுக்கு வரும்படி அழையுங்கள். முக்கியமாக மூப்பர்கள், அங்கு வந்திருக்கும் செயலற்ற கிறிஸ்தவர்களுக்குக் கவனம் செலுத்துவார்கள். அத்தகையவர்களைப் போய் சந்திக்க மூப்பர்கள் ஏற்பாடு செய்யலாம்; நினைவு ஆசரிப்பு பேச்சில் கொடுக்கப்பட்ட சில குறிப்புகளை அவர்களுடன் கலந்தாலோசிப்பதன் மூலம், சபைக் காரியங்களில் மீண்டும் ஈடுபடுவதற்கு அவர்களை உற்சாகப்படுத்தலாம்.—ரோ. 5:6-8.
5 யெகோவாவின் மீது நமக்குள்ள அன்பை அதிகரித்தல்: மீட்கும் பலியெனும் பரிசைக் குறித்து ஆழ்ந்து சிந்திப்பது யெகோவாவின் மீதும் அவருடைய குமாரன் மீதுமுள்ள நம் அன்பை அதிகரிக்க செய்யும். (2 கொ. 5:14, 15) அநேக வருடங்களாக நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்ளும் ஒரு சகோதரி இவ்வாறு சொன்னார்: “நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்ள நாங்கள் ஆவலாய் இருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் அது எங்களுக்கு அதிக விசேஷித்த ஒன்றாக ஆகியிருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பு, சவ அடக்க ஏற்பாடுகள் நடைபெறும் இடத்தில், என் அருமை அப்பாவின் சடலத்தைப் பார்த்துக்கொண்டு நின்றதும் எப்போதையும்விட அப்போது மீட்கும் பலிக்கு இருதயப்பூர்வ போற்றுதலை உணர்ந்ததும் எனக்கு நினைவிருக்கிறது. அதற்கு முன்பெல்லாம் அதைப் பற்றிய அறிவு மட்டுமே எனக்கிருந்தது. எல்லா வேதவசனங்களும் எனக்கு அத்துப்படி, அவற்றை விளக்கவும் அறிந்திருந்தேன்! ஆனால் மரணம் ஏற்படுத்தும் வலியை உண்மையில் அனுபவித்தபோதுதான், அந்த அருமையான மீட்கும் பலியின் மூலம் நமக்கு கிடைக்கும் பலனை எண்ணி என் உள்ளம் பூரித்தது.”—யோவா. 5:28, 29.
6 இந்த வருட நினைவு ஆசரிப்பு நாள் நெருங்கி வருகையில் அதை அனுசரிப்பதற்கு உங்கள் இருதயத்தைத் தயார்படுத்த நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். (2 நா. 19:3) 2004 காலண்டர், தினந்தோறும் வேதவசனங்களை ஆராய்தல்—2004 ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ள விசேஷ நினைவு ஆசரிப்பு பைபிள் வாசிப்பு பகுதியை தியானியுங்கள். சிலர் தங்கள் குடும்பப் படிப்பில் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தில் 112-16 வரையான அதிகாரங்களை மறுபார்வை செய்து மகிழ்கிறார்கள். இன்னும் சிலர், உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் கொடுத்துள்ள பைபிள் படிப்பிற்கான பிற ஏதுக்களைப் பயன்படுத்தி கூடுதல் ஆராய்ச்சி செய்கிறார்கள். (மத். 24:45-47, NW) மீட்கும் பலியெனும் பரிசுக்கான போற்றுதலை நாமனைவரும் நம் ஊக்கமான ஜெபங்களில் தெரிவிக்கலாம். (சங். 50:14, 23) ஆம், இந்த நினைவு ஆசரிப்பு சமயத்தில், யெகோவா நம்மிடம் காட்டிய அன்பைக் குறித்து தொடர்ந்து சிந்திப்போமாக, அவரிடம் நமக்குள்ள அன்பை வெளிக்காட்ட வழிகளைத் தேடுவோமாக.—மாற். 12:30; 1 யோ. 4:10.