யெகோவாவுக்கு மிகச் சிறந்ததை செலுத்துதல்
1 யெகோவாவுக்கு பலியாக செலுத்தப்படும் மிருகங்கள் ‘பழுதற்றவையாக’ இருக்க வேண்டுமென்று இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாண சட்டம் திட்டவட்டமாக குறிப்பிட்டது. பழுதுள்ள மிருகம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. (லேவி. 22:18-20; மல். 1:6-9) மேலும், பலி செலுத்தப்பட்ட மிருகங்களின் மிகச் சிறந்த பகுதியான கொழுப்பு முழுவதும் யெகோவாவுக்கு உரியதானது. (லேவி. 3:14-16) இஸ்ரவேலின் தகப்பனாகவும் எஜமானாகவும் இருந்ததால் யெகோவா மிகச் சிறந்ததைப் பெற தகுதியானவரே.
2 பூர்வ காலத்தைப் போலவே இன்றும் நாம் செலுத்தும் பலிகளின் தரத்தில் கடவுள் அதிக அக்கறை காட்டுகிறார். நம் சேவை யெகோவாவுக்கு சரியான பயபக்தியை வெளிக்காட்டும் விதத்தில் இருக்க வேண்டும். நபருக்கு நபர் சூழ்நிலைகள் வேறுபடுவது உண்மைதான். எனினும் நம்மை நாமே சோதித்துப் பார்த்து, நாம் அவருக்கு மிகச் சிறந்ததை செலுத்துகிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள நியாயமான காரணம் இருக்கிறது.—எபே. 5:10.
3 முழு இருதயத்தோடு சேவை: நம் ஊழியம் யெகோவாவை கனப்படுத்தவும் நம் செய்தி கேட்பவர்களின் இருதயத்தை எட்டவும் வேண்டுமென்றால், அது இயந்திரத்தனமாக இருக்கக்கூடாது. நம் கடவுளையும் அவரது அற்புத நோக்கங்களையும் பற்றி நாம் சொல்லும் செய்தி போற்றுதல் நிறைந்த இருதயத்திலிருந்து வர வேண்டும். (சங். 145:7) தனிப்பட்ட விதத்தில் பைபிளை வாசிக்கவும் ஆழ்ந்து படிக்கவும் நல்லதோர் அட்டவணையை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை இது சிறப்பித்துக் காட்டுகிறது.—நீதி. 15:28.
4 யெகோவாவுக்கு மிகச் சிறந்ததை செலுத்துவதற்கு, அவரைப் போலவே ஜனங்களிடம் நாம் அன்பு காட்டுவதும் அவசியம். (எபே. 5:1, 2) ஜனங்கள் மீதுள்ள அந்த அன்பு, சத்தியத்தின் உயிர் காக்கும் செய்தியை எத்தனை பேருக்கு சொல்ல முடியுமோ அத்தனை பேருக்கு சொல்லும்படி நம்மை தூண்டுவிக்கிறது. (மாற். 6:34) நாம் பேசும் ஆட்களிடம் தனிப்பட்ட அக்கறையை வெளிக்காட்டவும் அது நம்மை ஊக்குவிக்கிறது. ஆட்களை முதன்முறையாக சந்தித்த பின்பு அவர்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும்படியும், தவறாமல் சென்று அவர்களை மீண்டும் சந்திக்கும்படியும் செய்விக்கிறது. ஆவிக்குரிய விதத்தில் அவர்கள் முன்னேறுவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை செய்வதற்கும் அது நம்மை உந்துவிக்கிறது.—அப். 20:24; 26:28, 29.
5 “ஸ்தோத்திர பலி”: யெகோவாவுக்கு நாம் மிகச் சிறந்ததை செலுத்துவதற்கான மற்றொரு வழி, ஊழியத்தில் மும்முரமாய் பங்குகொள்வதாகும். நன்கு திட்டமிட்டு, ஊழியத்தில் கவனத்தை ஒருமுகப்படுத்தும்போது நமக்குக் கிடைக்கும் நேரத்தில் அதிக பயனுள்ள காரியங்களை சாதிக்க முடியும். (1 தீ. 4:10) நன்கு தயாரித்துச் சென்றால், தெளிவாகவும் நம்பிக்கையோடும் பேச முடியும்; அப்போது நாம் சொல்லும் செய்தியை மற்றவர்கள் கேட்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு. (நீதி. 16:21, NW) மற்றவர்களிடம் நற்செய்தியை நம் இருதயத்திலிருந்து பகிர்ந்துகொள்ளும்போது அதை “ஸ்தோத்திர பலி” என அழைப்பது பொருத்தமானதே.—எபி. 13:15.