இளைஞர்களே—கடவுளுடைய வார்த்தையை வாசியுங்கள்!
1 இளமைப் பருவம் பிரச்சினைகள் நிறைந்த பருவம், பொறுப்புடன் தீர்மானங்கள் செய்ய வேண்டிய பருவம். கிறிஸ்தவ இளைஞர்களாகிய உங்களில் அநேகர், கடவுள் வகுத்த ஒழுக்கநெறிகளை விட்டுக்கொடுக்கும்படியான அழுத்தத்தை தினம் தினம் எதிர்ப்படுகிறீர்கள். படிப்பு, வேலை, திருமணம் ஆகியவற்றைக் குறித்து நீங்கள் தனிப்பட்ட தீர்மானங்களை செய்வதற்கு முன்பே ஆவிக்குரிய இலக்குகளை வைக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் எதிர்கால வாழ்க்கையை செதுக்கி சீராக்கும் விதத்தில் பிற தீர்மானங்களை நீங்கள் செய்ய முடியும். திட்டவட்டமான ஆவிக்குரிய இலக்குகள், ஞானமான விதத்தில் நடந்துகொள்ளவும் உங்கள் பாதையில் வெற்றி காணவும் உங்களுக்கு உதவும். தவறாமல் கடவுளுடைய வார்த்தையை வாசித்து, அதை தியானிக்கும்போது அதன் புத்திமதிக்கு இசைவாக வாழ்வதற்கு தூண்டப்படுவீர்கள், அப்போது நீங்கள் எடுக்கும் சரியான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.—யோசு. 1:8; சங். 1:2, 3.
2 அது உங்களுக்கு எப்படி பயனளிக்கும்? தவறான காரியங்களில் ஈடுபட தூண்டும் கவர்ச்சிகள் சாத்தானின் உலகில் மலிந்து கிடக்கின்றன. (1 யோ. 2:15, 16) சகாக்களின் அழுத்தத்திற்கு இணங்கிப் போகாததால் துயரத்தை சந்தித்த பள்ளித் தோழர்களையோ உங்கள் வயதிலுள்ள மற்றவர்களையோ உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பைபிள் புத்திமதிக்குக் கீழ்ப்படிந்து நடப்பது, பாவ வழியில் செல்லாதிருப்பதற்குத் தேவையான தார்மீக, ஆவிக்குரிய பலத்தைத் தரும். மேலும் கடவுளுடைய வார்த்தையிலுள்ள அறிவுரை சாத்தானுடைய தந்திரமான கண்ணிகளில் சிக்கிக்கொள்ளாதிருக்க உங்களுக்கு உதவும். (2 கொ. 2:11; எபி. 5:14) கடவுளுடைய வழிகளில் நடப்பது உண்மையான சந்தோஷத்தையும், தனிப்பட்ட விதத்தில் உங்கள் வாழ்க்கையில் திருப்தியையும் அளிக்கும்.—சங். 119:1, 9, 11.
3 கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் நியமங்கள் மனித ஞானத்தைவிட மேம்பட்டவை; அவை என்றென்றும் நிலைத்திருப்பவை. (சங். 119:98-100) அந்த பைபிள் நியமங்களை அறிந்திருப்பதும் வெளிப்படுத்தப்பட்ட யெகோவாவின் நோக்கங்களைத் தியானிப்பதும் ஊக்கமாக ஜெபிப்பதும், ஈடிணையற்ற ஞானமுள்ள அதன் எழுத்தாளரான யெகோவா தேவனுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ள உதவும். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என அவர் வாக்குறுதி அளிக்கிறார்.—சங். 32:8.
4 அதை வாசிப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள்: ஓர் இளம் கிறிஸ்தவ பெண் முழு பைபிளையும் வாசிப்பதற்கு இலக்கு வைத்தாள், ஒரு வருடத்திற்குள் அதை வாசித்து முடித்தாள். அவள் எப்படி பயனடைந்தாள்? “யெகோவாவைப் பற்றி நான் அநேக விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்; அவை நான் அவரிடம் நெருங்கிச் செல்ல உதவின, என் வாழ்நாள் முழுவதும் அவருக்கு பயபக்தியோடு நடக்க வேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்தின” என்று அவள் சொல்கிறாள். (யாக். 4:8) நீங்கள் முழு பைபிளையும் வாசித்திருக்கிறீர்களா? இல்லையெனில், அதை ஏன் உங்கள் இலக்காக வைக்கக்கூடாது? உங்கள் முயற்சிகளை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார், நீங்கள் ஏராளமான பலன்களைப் பெறுவீர்கள்.