பிரசங்கிப்பதற்கு இதுவே சரியான நேரம்!
1 “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்.” தேவதூதர்களின் வழிநடத்துதலால் “சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்” இந்தச் செய்தியே அறிவிக்கப்படுகிறது. ஆனால் இது ஏன் அறிவிக்கப்படுகிறது? ஏனென்றால் ‘கடவுள் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்துவிட்டது.’ அந்த ‘நியாயத்தீர்ப்பு வேளையில்தான்’ நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; அந்த வேளையின் முடிவில் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை அழியும். எனவே, ஜனங்கள் எல்லோரும் ‘வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்வது’ மிக அவசியம். “நித்திய சுவிசேஷத்தை” அறிவிக்க வேண்டிய வேலைதான் வேறெந்த வேலையையும்விட இன்று மிக முக்கியமானதும் அவசரமானதுமாக இருக்கிறது. ஆம், நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு இதுவே சரியான நேரம்!—வெளி. 14:6, 7.
2 கடந்த பத்தாண்டுகளாக யெகோவாவின் ஊழியர்கள் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் சீஷராக்குவதற்கும் கிட்டத்தட்ட 1,200 கோடி மணிநேரம் செலவிட்டுள்ளனர். ஆவிக்குரிய அறுப்பு வேலையில் இன்னும் முழுமையாக ஈடுபட அநேகர் தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களைச் செய்திருக்கின்றனர். (மத். 9:37, 38) உதாரணத்திற்கு, கடந்த வருடத்தில் மட்டும் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 8,50,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் பயனியர்களாகச் சேவை செய்துள்ளனர். ஒழுங்கான பயனியர்கள் பிரசங்க வேலையில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 70 மணிநேரம் செலவிடுகின்றனர். துணைப் பயனியர்கள் 50 மணிநேரம் செலவிடுகின்றனர்.
3 பயனியர் செய்வதற்கு என்ன தேவை: ‘காலம் குறுகி’ இருப்பதை உணரும் பயனியர்கள் தங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். (1 கொ. 7:29, 31) அவர்கள், உலகப்பிரகாரமான வேலையில் குறைந்த நேரத்தை செலவழிப்பதற்காக, செலவுகளைக் குறைக்கும் வழிகளைத் தேடுகின்றனர். உதாரணமாக, சிலர் சிறிய வீடுகளுக்குக் குடிமாறியிருக்கின்றனர். மற்றவர்கள் தேவையில்லாத பொருளுடைமைகளை அப்புறப்படுத்தியிருக்கின்றனர். (மத். 6:19-21) சில சமயங்களில், தங்களுடைய தனிப்பட்ட நாட்டங்களைக்கூட குறைத்திருக்கின்றனர். இதையெல்லாம் இவர்கள் செய்வதற்கு முக்கிய காரணம் ஊழியத்தில் அதிக நேரத்தையும் கவனத்தையும் கொடுப்பதற்கே. (எபே. 5:15, 16) விடாமுயற்சியோடும், சுய தியாக ஆவியோடும், ஜெபத்தில் யெகோவாமீது முழுமையாகச் சார்ந்திருப்பதன் மூலமும், அநேக பிரஸ்தாபிகள் பயனியர் சேவை செய்வதற்கான நடைமுறை அட்டவணையை அமைத்திருக்கின்றனர்.
4 உங்களால் பயனியர் ஊழியம் செய்ய முடியுமா? ஏற்கெனவே பயனியர் ஊழியத்தை சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறவர்களிடம் அதை அவர்களால் எப்படிச் செய்ய முடிகிறதென்று நீங்கள் கேட்டுப் பார்க்கலாம், அல்லவா? அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்து அவர்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தை நீங்களும் அனுபவியுங்கள். பயனியர் சேவையைப் பற்றி நம்முடைய பிரசுரங்களில் வெளியான கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். பயனியர் சேவை செய்வதற்குப் படிகளாக அமையும் நடைமுறையான இலக்குகளை வையுங்கள். பயனியர் சேவை செய்ய ஏதேனும் முட்டுக்கட்டைகள் இருந்தால், அதைக் குறித்து யெகோவாவிடம் ஜெபியுங்கள். அவற்றைத் தகர்ப்பதற்காக அவரிடம் உதவி கேளுங்கள்.—நீதி. 16:3.
5 ஆசீர்வாதங்களும் சந்தோஷங்களும்: பயனியர் சேவை, கடவுளுடைய வார்த்தையை மேன்மேலும் திறம்பட்ட விதத்தில் உபயோகிக்க உதவுகிறது. நம் சந்தோஷத்தையும் அதிகரிக்கிறது. “கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தைச் சரியாக போதிப்பது ஒரு பெரிய ஆசீர்வாதம்” என ஓர் இளம் பயனியர் சகோதரி சொல்கிறார். “பயனியர் செய்யும்போது அடிக்கடி பைபிளை பயன்படுத்த முடிகிறது. இதனால் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது ஒவ்வொரு வீட்டுக்காரருக்கும் ஏற்ற விதத்தில் இப்போது என்னால் வசனங்களை எடுத்துக் காட்ட முடிகிறது.”—2 தீ. 2:15.
6 வாழ்க்கைக்குத் தேவையான அரிய திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் பயனியர் சேவை நமக்கு உதவுகிறது. இளைஞர்கள் தங்களுடைய நேரத்தை ஞானமாகச் செலவழிக்கவும், வரவு செலவுகளைச் சமாளிக்கவும், மற்றவர்களோடு நன்றாக ஒத்துப்போகவும் அது கற்றுக்கொடுக்கிறது. தங்களுடைய வாழ்க்கையை இன்னுமதிக ஆன்மீகக் கண்ணோட்டத்தில் பார்க்க அநேக பயனியர்களுக்கு அது உதவியிருக்கிறது. (எபே. 4:11) அதோடு, யெகோவாவின் கரம் தங்கள் சார்பாகச் செயல்படுவதைப் பார்க்கும் சிலாக்கியத்தையும் அது அவர்களுக்குத் தருகிறது.—அப். 11:21; பிலி. 4:11-13.
7 பயனியர் சேவையால் நமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று, யெகோவா தேவனிடம் நெருங்கிச் செல்ல அது நமக்கு உதவுவதாகும். அவ்வாறு நெருங்கிச் செல்வது சோதனைகளைச் சமாளிக்க நமக்கு உதவும். கொஞ்ச காலமாகவே கடும் சோதனையைச் சகித்துக்கொண்டிருந்த ஒரு சகோதரி இவ்வாறு சொன்னார்: “பயனியர் செய்தபோது யெகோவாவுடன் நான் வளர்த்துக்கொண்ட நெருங்கிய உறவுதான் எல்லாப் பிரச்சினைகளையும் சகித்துக்கொள்ள எனக்கு உதவியது.” அவர் மேலும் சொல்கிறார்: “யெகோவாவுக்கு முழுநேரமாக ஊழியம் செய்ய என் வாழ்க்கையைச் செலவிட்டதை நினைத்துப் பூரித்துப்போகிறேன். நான் நினைத்துப் பார்க்காத வழிகளிலெல்லாம் என்னை அவருக்கு அர்ப்பணிக்க இந்தப் பயனியர் ஊழியம் எனக்கு உதவியிருக்கிறது.” (அப். 20:35) நாமும் இதுபோன்ற அபரிமிதமான ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கு, மிக முக்கியமான பிரசங்க வேலையில் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோமாக.—நீதி. 10:22.
[கேள்விகள்]
1. பிரசங்கிப்பதற்கு ஏன் இதுவே சரியான நேரமாக இருக்கிறது?
2. யெகோவாவின் ஊழியர்கள் காலத்தின் அவசரத்தன்மையை உணர்ந்திருப்பதை எவ்வாறு காட்டுகின்றனர்?
3. பயனியர் ஊழியம் செய்வதற்குப் பிரஸ்தாபிகள் எவ்விதமான மாற்றங்களை அடிக்கடி செய்ய வேண்டியிருக்கிறது?
4. பயனியர் இலக்கை அடைவதற்கு என்ன நடைமுறையான படிகள் உங்களுக்கு உதவும்?
5. ஊழியத்தில் நம்முடைய திறமைகளை முன்னேற்றுவிக்க பயனியர் ஊழியம் நமக்கு எவ்வாறு உதவுகிறது?
6. பயனியர் சேவை எவ்விதமான பயிற்சியை அளிக்கிறது?
7. யெகோவாவிடம் நெருங்கிச் செல்வதற்கு பயனியர் ஊழியம் எவ்வாறு நமக்கு உதவுகிறது?