‘என்னை தொடர்ந்து பின்பற்றக்கடவன்’
1 அநேகர் தங்களுக்குப் பிரியமான விதத்தில் வாழ்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், ஆனால் அவர்கள் சந்தோஷமாய் இருக்கிறார்களா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு நேர்மாறாக, இயேசு எதை சிபாரிசு செய்தார்? மற்றவர்களுக்குத் தன்னலமின்றி கொடுப்பதன் மூலமாகவே உண்மையான சந்தோஷத்தைப் பெற முடியும் என்பதை அவர் சிபாரிசு செய்தார். (அப். 20:35) ‘ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, . . . என்னை [தொடர்ந்து] பின்பற்றக்கடவன்’ என்றார். (மாற். 8:34) இவ்வாறு செய்வது, எப்பொழுதாவது மட்டுமே நமக்கு விருப்பமான சிலவற்றை விட்டுக்கொடுப்பதை அர்த்தப்படுத்தாது. மாறாக, நம்மை நாமே பிரியப்படுத்திக்கொள்ளாமல் யெகோவாவைப் பிரியப்படுத்தும் விதத்தில் அன்றாடம் வாழ்வதையே அர்த்தப்படுத்துகிறது.—ரோ. 14:8; 15:3.
2 அப்போஸ்தலன் பவுலின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். “கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக,” அவர் தன் லட்சியத்தைக் கைவிட்டு ராஜ்ய வேலையை அதிகளவு செய்ய தன்னையே அர்ப்பணித்தார். (பிலி. 3:7, 8) மற்றவர்களுக்கு சேவை செய்ய “எனக்குள்ளவற்றையும், ஏன் என்னையுமே மனமுவந்து அளித்திடுவேன்” என்று அவர் கூறினார். (2 கொ. 12:15, பொ.மொ.) எனவே நாம் ஒவ்வொருவரும் இப்படிக் கேட்டுக்கொள்வது நல்லது: ‘என்னுடைய நேரம், சக்தி, திறமை, வளம் என எல்லாவற்றையும் நான் எப்படி உபயோகித்து வருகிறேன்? என் வேலை முடிந்தால் போதுமென அதிலேயே குறியாக இருக்கிறேனா அல்லது யெகோவாவைப் பிரியப்படுத்த முயல்கிறேனா?’
3 கொடுப்பதற்கான சந்தர்ப்பங்கள்: ஒவ்வொரு வருடமும் கடவுளுடைய ஜனங்கள் 100 கோடிக்கும் அதிகமான மணிநேரத்தை ராஜ்ய பிரசங்க வேலைக்கென செலவிடுகின்றனர். இது உயிர்காக்கும் வேலை என்பதால் அவ்வளவு நேரத்தை அதற்கென்று செலவிடுகின்றனர். சபையில், மற்றவர்களுக்கு நன்மை தரும் விதத்தில் சிறியவர்களும் பெரியவர்களும் பலதரப்பட்ட வேலைகளைச் செய்கின்றனர். மாநாடுகள் சம்பந்தமாகவும் நிறைய வேலைகளைச் செய்கின்றனர். அதுமட்டுமின்றி மெய் வணக்கத்தை விஸ்தரிக்கும் விதத்தில் கட்டடங்களைக் கட்டும் பணியிலும் அவற்றைப் பராமரிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர். இன்னும் சிலரோ மருத்துவமனை தொடர்பு ஆலோசனை குழுக்களில் அல்லது நோயாளி சந்திப்பு குழுக்களில் சேவை செய்வதன் மூலம் அன்புடன் உதவுகின்றனர். இப்படியெல்லாம் சுயதியாகம் செய்வது, நம் கிறிஸ்தவ சகோதரத்துவத்திற்கு எவ்வளவாய் பயன் அளிக்கிறது!—சங். 110:3.
4 பேரழிவு சம்பவித்தாலோ அவசர சூழ்நிலை ஏற்பட்டாலோ பல வழிகளில் உதவுவதற்கு வாய்ப்பு கிடைக்கலாம். அவ்வளவு ஏன், சக கிறிஸ்தவர் ஒருவருக்கு உதவியோ உற்சாகமோ தேவைப்படுகையில், அதைப் புரிந்துகொண்டு தேவையானவற்றைச் செய்வதே பெரும்பாலும் போதுமானதாய் இருக்கலாம். (நீதி. 17:17) மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் ராஜ்யம் சம்பந்தப்பட்ட வேலைகளை அதிகளவு செய்வதற்கும் நம்மை நாமே மனமுவந்து அளிப்பது, இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றுவதைக் குறிக்கிறது. (பிலி. 2:5-8) ஆகவே, தொடர்ந்து இயேசுவைப் பின்பற்ற நாம் கடினமாய் உழைப்போமாக.