தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—கனிவுடனும் மரியாதையுடனும் நடந்துகொள்வதன் மூலம்
1 யெகோவா சர்வலோக பேரரசராய் இருந்தபோதிலும், அபூரண மனிதர்களிடம் தயவு தாட்சண்யத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொள்கிறார். (ஆதி. 13:14; 19:18-21, 29, NW) எனவே, கனிவான நம் கடவுளைப் பின்பற்றும்போது, நற்செய்தியின் மதிப்பைக் கூட்டுவோம். (கொலோ. 4:6) கண்ணியத்தோடும் மரியாதையோடும் பேசுவது மட்டுமே கனிவுடன் நடப்பதை அர்த்தப்படுத்தாது.
2 வீட்டுக்கு வீடு ஊழியத்தில்: வீட்டுக்காரருக்கு சௌகரியப்படாத நேரத்தில் நாம் போய் நின்றாலோ, நம்மிடம் பேசக்கூட முடியாத அளவுக்கு அவர் அதிக வேலையாய் இருந்தாலோ நாம் என்ன செய்வது? சுருக்கமாகப் பேசிவிட்டு வரலாம்; அல்லது வேறொரு சமயம் வருவதாகச் சொல்லிவிட்டு வரலாம். இவ்வாறு செய்வது, அவருடைய சூழ்நிலையை மதித்து நடந்துகொள்கிறோம் என்பதைக் காட்டும். பிரசுரத்தைப் பெற்றுக்கொள்ள மனமில்லாதவர்களை வற்புறுத்தாதிருப்பதன் மூலம் நாம் தயவு காட்டலாம். வீட்டுக்காரர்களுடைய சொத்திற்கு மதிப்பு காட்டும் விதத்தில், வீட்டுக் கதவையும் வெளிக் கதவையும் மூடிவிட்டுச் செல்வதன் மூலமாகவும், நம் பிள்ளைகளும் அப்படிச் செய்ய பயிற்சி அளிப்பதன் மூலமாகவும் மரியாதையுடன் நடந்துகொள்ளலாம். வீட்டில் யாரும் இல்லையென்றால், பிரசுரங்களை மற்றவர்கள் கண்ணில் படாதவாறு நாம் வைத்துவிட்டு வர வேண்டும். இப்படியெல்லாம் கனிவுடனும் மரியாதையுடனும் நடந்துகொள்வது, மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டுமென விரும்புகிறோமோ அவ்வாறே அவர்களை நடத்த நம்மை உந்துவிக்கும்.—லூக். 6:31.
3 தெரு ஊழியத்தில்: தெரு ஊழியம் செய்கையில், வருகிறவர்கள் போகிறவர்களுக்கு இடைஞ்சலாய் வழியை அடைத்துக்கொண்டு நிற்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்; கடைகளுக்கு முன் கூட்டம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களுடைய சூழ்நிலையைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்; அவசரமாய் போகிறவர்களை நிறுத்தாமல், சாவகாசமாக நடப்பவர்களை நிறுத்திப் பேசுவதே ஞானமான காரியமாகும். சில சமயங்களில் தெருவில் சத்தமும் சந்தடியுமாய் இருக்குமென்பதால் உரக்கப் பேச வேண்டியிருக்கலாம்; அப்போதும் நம்மிடம் கவனத்தை ஈர்த்துவிடாதபடி கண்ணியமாகவே பேச வேண்டும்.—மத். 12:19.
4 டெலிபோனில் சாட்சி கொடுக்கையில்: நமக்கு மற்றவர்கள்மீது கரிசனை இருந்தால், டெலிபோனில் சாட்சி கொடுக்கையில் அமைதியான சூழல் இருக்கும்படி பார்த்துக்கொள்வோம். மற்றவர்களிடம் மரியாதை இருந்தால், பேசுபவரின் குரலை டெலிபோனில் கேட்டவுடன் சட்டென்று நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு நேரடியாக விஷயத்திற்கு வருவோம். ரிஸீவரை வாய்க்கு நேரே பிடித்துக்கொண்டு இனிய தொனியில் பேசினால், வேதப்பூர்வ விஷயங்களைச் சுவாரஸ்யமாக உரையாட முடியும். (1 கொ. 14:8, 9) இப்படியாகப் பல்வேறு வழிகளில் தயவு தாட்சண்யத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ளும்போது, நம் கனிவான தேவனாகிய யெகோவாவைப் பின்பற்றுவோம்.