‘பயமில்லாமல் திருவசனத்தைப் பேசுங்கள்’
1 பள்ளியிலோ வேலை செய்யும் இடத்திலோ உங்கள் மத நம்பிக்கையைக் குறித்துப் பேச வாய்ப்புக் கிடைக்கையில், தாராளமாகப் பேசாமல் சிலசமயங்களில் தயங்குகிறீர்களா? உறவினர்களிடம், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் அல்லது முன்பின் தெரியாதவர்களிடம் சந்தர்ப்ப சாட்சிகொடுக்க உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? பொருத்தமான சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, ‘பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்வதற்கு [அதாவது பேசுவதற்கு]’ நம் எல்லாருக்கும் எது உதவும்?—பிலி. 1:14.
2 தயங்காதீர்கள்: உங்கள் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் ஒருவரைப்பற்றி மற்றவர்கள் இல்லாததையும் பொல்லாததையும் பேசும்போது அவருக்காகப் பரிந்துபேச தயங்குவீர்களா? நம்முடைய மிக நெருங்கிய நண்பரான யெகோவாவைப்பற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இல்லாததும் பொல்லாததும் பேசப்பட்டு வருகிறது. நம் மகத்தான கடவுளின் சார்பாகச் சாட்சிகொடுப்பதற்கு விசேஷ பாக்கியம் பெற்றிருக்கிறோம்! (ஏசா. 43:10-12) எல்லாரும் நம்மை கவனிக்கிறார்களே என்ற எண்ணத்தையோ பயத்தையோ சமாளிப்பதற்கு, யெகோவாவை நெஞ்சார நேசிப்பது நமக்கு உதவலாம்; அதோடு, சத்தியத்தைக் குறித்து தைரியமாய் சாட்சிகொடுக்காதிருப்பதற்கு மாறாக தாராளமாய் பேசுவதற்கு அது தூண்டுதலையும் அளிக்கலாம்.—அப். 4:26, 29-31.
3 நாம் சொல்கிற செய்தி நற்செய்தி என்பதை மறந்துவிடாதீர்கள். அதற்குச் செவிசாய்க்கிற ஜனங்களுக்கு அது நிரந்தர நன்மைகளை அளிக்கும். நம்மைப் பற்றியோ நம்மை எதிர்ப்பவர்களைப் பற்றியோ சிந்திப்பதற்கு மாறாக பிரசங்க வேலை எந்தளவு பயன் அளிப்பதாய் இருக்கிறது என்பதில் மனதை ஒருமுகப்படுத்துவது தைரியமாய் பிரசங்கிக்க நமக்கு உதவும்.
4 மற்றவர்களுடைய முன்மாதிரிகள்: கடவுளுடைய வார்த்தையைப் பயமில்லாமல் பேசி, உண்மையாய் வாழ்ந்தவர்களின் முன்மாதிரியிலிருந்து நாம் பலம் பெறலாம். உதாரணத்திற்கு, ஏனோக்கை எடுத்துக்கொண்டால், அவபக்தியுள்ள பாவிகளுக்கு எதிராக யெகோவாவின் நியாயத்தீர்ப்பு செய்தியை இவர் பயமில்லாமல் அறிவித்தார். (யூ. 14, 15) நோவாவை எடுத்துக்கொண்டால், அக்கறை காட்டாதவர்களிடம் இவர் உண்மையாய் பிரசங்கித்தார். (மத். 24:37-39) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை எடுத்துக்கொண்டால், ‘படிப்பறியாதவர்களாகவும் பேதைமையுள்ளவர்களாகவும்’ இருந்தபோதிலும், கடும் எதிர்ப்பின் மத்தியிலும் இவர்கள் தொடர்ந்து பிரசங்கித்தார்கள். (அப். 4:13, 18-20) யெகோவா மீதுள்ள விசுவாசத்தால், மனிதருக்குப் பயப்படுவதைச் சமாளித்து, பக்தி வைராக்கியமுள்ள சுவிசேஷ ஊழியராய் விளங்குகிற தற்கால சாட்சிகளின் வாழ்க்கை சரிதைகள் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் அடிக்கடி வெளிவருகின்றன.
5 பூர்வ காலங்களில் கடினமான சூழ்நிலைகளைச் சந்தித்த உண்மை ஊழியர்களின் வாழ்க்கைப் போக்கைச் சிந்தித்துப் பார்த்து நாம் தைரியம் பெறலாம். (1 இரா. 19:2, 3; மாற். 14:66-71) அவர்கள் ‘நம்முடைய தேவனுக்குள் தைரியங் கொண்டு’ பயமில்லாமல் பேசினார்கள். நாமும் பேச முடியும்!—1 தெ. 2:2.