புதிய சீஷர்களை உருவாக்குவதில் எல்லாருமே பங்குகொள்ளலாம்
1 தனி நபர் எடுக்கும் முயற்சிகளால் மட்டுமே ஒரு புதிய சீஷர் உருவாவதில்லை. பைபிள் மாணாக்கர்கள் ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு உதவுவதில், தம்முடைய ‘உடன் வேலையாட்கள்’ எல்லாரையும் யெகோவா பயன்படுத்த முடியும். (1 கொ. 3:6-9) கிறிஸ்தவ கூட்டங்களில், மனதிலிருந்து பதில்களைச் சொல்லும்போது தனிப்பட்ட விதத்தில் புதியவர்களுக்கு நாம் உதவுகிறோம்; அதுமட்டுமல்ல, நம் வாழ்க்கையில் கடவுளுடைய ஆவி செயல்படுவதற்குப் பளிச்சென அத்தாட்சி அளிக்கிற நன்னடத்தையின் மூலமாகவும் அவர்களுக்கு உதவுகிறோம். (யோவா. 13:35; கலா. 5:22, 23; எபே. 4:22, 23) வேறு என்னென்ன விதங்களில் புதியவர்களுக்கு நாம் உதவலாம்?
2 சபையாக: நாம் எல்லாருமே கூட்டங்களுக்கு வர ஆரம்பித்திருக்கிற ஆட்களிடம் நாமாகவே போய் வணக்கம் சொல்லி அவர்களை அன்பாக வரவேற்கலாம்; கூட்டத்திற்கு முன்பும், பின்பும் அவர்களிடம் உரையாடுவதன்மூலமும் அவர்கள்மீது அக்கறை இருப்பதை வெளிக்காட்டலாம். முதன்முதல் சபை கூட்டத்திற்குப் போன நாளை நினைத்துப் பார்த்து ஒருவர் இவ்வாறு சொன்னார்: “கபடமற்ற அன்பைக் காட்டுகிற, முன்பின் தெரியாத அநேக ஜனங்களை ஒரே நாளில் சந்தித்தேன்; சிறுவயதிலிருந்து நான் போய்க்கொண்டிருந்த சர்ச்சில்கூட அப்படிப்பட்ட யாரையும் நான் சந்தித்ததில்லை. இதுவே போதும் நான் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதற்கு.” இந்த முதல் கூட்டத்தில் கலந்துகொண்டதிலிருந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு அவர் முழுக்காட்டுதல் பெற்றார்.
3 பைபிள் மாணாக்கர் ஒருவர் ஆன்மீக முன்னேற்றம் செய்கிறபோது உளமார பாராட்டுங்கள். அவர் எதிர்ப்பைச் சகித்து வருகிறாரா? அவர் கூட்டங்களுக்குத் தவறாமல் வருகிறாரா? பயத்தைச் சமாளித்து அவர் பதில் சொன்னாரா? தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சுக்கொடுக்க அவர் பெயர் கொடுத்திருக்கிறாரா அல்லது ஊழியத்தில் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறாரா? முன்னேற்றப் பாதையில் அவர் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் ‘சபாஷ்’ என்று சொல்லுங்கள். இது அவருக்குப் புத்துணர்ச்சி அளித்து, அவரைப் பலப்படுத்தும்.—நீதி. 25:11.
4 பைபிள் படிப்பு நடத்துபவராக: பிரஸ்தாபிகள் சிலர் தங்களுடன் மற்ற பிரஸ்தாபிகளை பைபிள் படிப்புக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்; இதன்மூலம், சபையிலுள்ள பல்வேறு நபர்களுடன் பைபிள் மாணாக்கர்கள் நன்கு பரிச்சயமாவதற்கு உதவியிருக்கிறார்கள். முடிந்தவரை சீக்கிரத்திலேயே சபை கூட்டங்களுக்கு வரும்படி மாணாக்கரை அழையுங்கள். அவர் கூட்டங்களுக்கு வர ஆரம்பிக்கும்போது, மறக்காமல் அவரை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள். புகைபிடிப்பது போன்ற தவறான பழக்கத்தை விட்டொழிக்க அவர் பெரும்பாடு படுகிறாரா? அவர் பைபிள் படிப்பில் கலந்துகொள்வதற்கு அவருடைய வீட்டில் யாராவது எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா? இது போன்ற சவால்களைச் சந்தித்து, சமாளித்த பிரஸ்தாபிகளுடன் பேசிப் பழகும்போது அவர் பயன் அடைய முடியும்.—1 பே. 5:9.
5 புதியவர்களுக்குச் சபையாரின் ஆன்மீக ஆதரவு தேவை. தனிப்பட்ட விதத்தில், உளமார கரிசனையைக் காட்டுவதன்மூலம் அவர்கள் முன்னேற எல்லாருமே உதவ முடியும்.