கேள்விப் பெட்டி
◼ தேவராஜ்ய ஊழியப் பள்ளி, ஊழியக் கூட்டம், பொதுக் கூட்டம், காவற்கோபுர படிப்பு ஆகிய கூட்டங்களின் ஆரம்ப பாடலை எவ்வாறு அறிமுகம் செய்ய வேண்டும்? அதனை யார் அறிமுகம் செய்வார்?
ஒவ்வொரு வாரத்திற்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் ஆரம்ப பாடல், அக்டோபர் மாத நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் வரும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வார ஊழியக் கூட்டத்தின் ஆரம்ப பாடல்களும் முடிவு பாடல்களும் நம் ராஜ்ய ஊழியத்தின் 2-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதுபோலவே, வாராந்தர காவற்கோபுர படிப்பின் பாடல்களையும் ஒவ்வொரு காவற்கோபுர இதழின் 2-ம் பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம். நியமிக்கப்பட்டிருக்கும் பாடல்கள் அந்தந்த கூட்டங்களின் பாகமாகவே இருக்கின்றன. எனவே, அந்தக் கூட்டத்தை நடத்தவிருக்கும் சகோதரரே அந்தப் பாடல்களை அறிமுகம் செய்வார், முந்தைய கூட்டத்தின் சேர்மன் அவ்வாறு செய்யக்கூடாது.
உதாரணத்திற்கு, தேவராஜ்ய ஊழியப் பள்ளி கண்காணி கூட்டத்தினரை வரவேற்று, ஆரம்ப பாடலை அறிமுகம் செய்து, பள்ளியை நடத்தி முடிப்பார். அதன் பின்னர், ஊழியக் கூட்டத்தின் முதல் பேச்சாளரை மேடைக்கு அழைப்பார். ஊழியக் கூட்டத்தின் பகுதியை கையாளும் சகோதரரே ஊழியக் கூட்டத்தின் ஆரம்ப பாடலை அறிமுகம் செய்து வைப்பார்.
அதே விதமாக, பொதுக் கூட்டத்தை ஒரு சேர்மன் துவங்கி வைப்பார். அவர் கூடி வந்திருக்கும் அனைவரையும் அன்போடு வரவேற்று, பேச்சாளரால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஆரம்ப பாடலை பாட அனைவரையும் உற்சாகப்படுத்துவார். அந்தக் கூட்டத்தின் ஆரம்பமாக சேர்மன் (அல்லது ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருக்கும் தகுதியுள்ள வேறொரு சகோதரர்) ஜெபம் செய்வார். அவர் பேச்சாளரை அறிமுகம் செய்தப் பின்னர் அவர் பேசவிருக்கும் பொருளையும் குறிப்பிடுவார். பேச்சிற்குப் பிறகு, அந்தப் பேச்சில் சொல்லப்பட்ட குறிப்புகளை மறுபடியும் சொல்லாமல், கொடுக்கப்பட்ட பேச்சிற்காக நன்றியையும் போற்றுதலையும் மட்டுமே சேர்மன் சுருக்கமாக தெரிவிப்பார். அதை தொடர்ந்து வரும் வாரத்தில் கொடுக்கப்படவிருக்கும் பொதுப் பேச்சின் தலைப்பைச் சொன்னப் பிறகு காவற்கோபுர படிப்பிற்காக தொடர்ந்து இருக்கும்படி சபையாரை அழைப்பார். சிறப்புப் பேச்சாளரின் சபைக்கு அன்பையும் வாழ்த்துதலையும் தெரிவிக்க விரும்புகிறார்களா என்று சபையினரை சேர்மன் கேட்க வேண்டியதில்லை. அடுத்ததாக, சேர்மன் காவற்கோபுர படிப்பின் நடத்துநரை மேடைக்கு அழைப்பார்.
அந்தப் படிப்புடன் பாட வேண்டிய முதல் பாடலை காவற்கோபுர படிப்பின் நடத்துநர் அறிமுகம் செய்வார். கொடுக்கப்பட்டிருக்கும் போதனைகளுக்கு இசைவாக படிப்பை நடத்தி முடித்தப் பின்னர் முடிவு பாடலை அவரே அறிவிப்பார். பொதுவாக, காவற்கோபுர படிப்பின் நடத்துநர், பொதுப் பேச்சைக் கொடுத்தப் பேச்சாளரை முடிவு ஜெபம் செய்யும்படி அழைப்பார்.
இந்தப் பொதுவான வழிமுறைகளைப் பின்பற்றுவதால், நம்முடைய சபைக் கூட்டங்கள் ஒன்றுபட்ட விதமாய் நடப்பதை உறுதிசெய்துகொள்வோம்.