ஏழைகளுக்கு நம்பிக்கை அளியுங்கள்
1 ஏழைகள்மீது இயேசு மிகுந்த கரிசனை காட்டினார். சில சமயங்களில் அவர்களுக்கு அற்புதமாக உணவளித்தார், நோயாளிகளைக் குணப்படுத்தினார்; ஆனால், ஏழைகளுக்கு ‘சுவிசேஷத்தை’ அறிவிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். (மத். 11:5) இன்று நாம் செய்துவரும் கிறிஸ்தவ ஊழியமும்கூட, ஏழைகளுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை அளிக்கிறது.—மத். 24:14; 28:19, 20.
2 நிஜ நம்பிக்கை: சர்ச்சுக்குத் தாராளமாக நன்கொடை அளித்தால் வாழ்க்கை வளமாகும் என்று ஏழைகளிடம் கிறிஸ்தவமண்டலத் தலைவர்கள் உறுதி கூறுகிறார்கள். ஆனால், பைபிள் என்ன கற்பிக்கிறது? கடவுளுடைய ராஜ்யமே ஏழ்மைக்கு முடிவுகட்டும், அதுவே மனிதரின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் என்று கற்பிக்கிறது. (சங். 9:18; 145:16; ஏசா. 65:21-23) பைபிள் உண்மையில் என்ன கற்பிக்கிறது என்பதை ஏழைகளுக்கு அறிவிப்பதன்மூலம் நாம் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறோம், கடவுளை அறிந்து அவரை வணங்க உதவுகிறோம்.—மத். 5:3.
3 இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் ஏழை மக்களை இழிவாய்க் கருதினார்கள்; அவர்களை, “ஆம்ஹாரெட்ஸ்” அல்லது “மண்ணுக்குரிய மக்கள்” என்று தரக்குறைவாக அழைத்தார்கள். என்றாலும், இயேசு அவர்களுடைய ‘இரத்தத்தை,’ அதாவது அவர்களுடைய உயிரை, ‘அருமையானதாகக்’ கருதினார். (சங். 72:13, 14) நாமும் இயேசுவைப் பின்பற்றி, ஏழைகளுக்குத் ‘தயை செய்யலாம்.’ எப்படி? அவர்கள்மீது கரிசனை காட்டி, அவர்களிடம் அனுதாபத்துடன் நடந்துகொள்வதன் மூலம். (நீதி. 14:31) நாம் ஒருபோதும் குடிசைவாழ் பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்களைத் தரக்குறைவாகப் பேசவோ, அவர்களிடம் சாட்சி கொடுக்கத் தயங்கவோ கூடாது. ராஜ்ய செய்தியைக் கேட்டு மாற்றம் செய்பவர்களில் அநேகர் ஏழை எளியோரே.
4 இப்போதே உதவுங்கள்: நம் பிராந்தியத்தில் உள்ள ஏழை மக்களுக்கு பைபிள் நியமங்களைக் கற்பித்தோமெனில், ஏழ்மையின் பாதிப்புகளை இப்போதே சமாளிப்பதற்கு அவர்கள் கற்றுக்கொள்வார்கள். உதாரணமாக, ஏழ்மைக்கு இட்டுச்செல்லும் பழக்கவழக்கங்களை பைபிள் கண்டிக்கிறது; குடிவெறி, சூதாட்டம், சோம்பேறித்தனம், புகையிலை உபயோகம் போன்ற பழக்கவழக்கங்கள் அவற்றில் அடங்கும். (நீதி. 6:10, 11; 23:21; 2 கொ. 7:1; எபே. 5:5) பணியாளர்களிடம் பொதுவாக எதிர்பார்க்கப்படுகிற பண்புகளாகிய நேர்மையையும், ‘மனப்பூர்வமான’ சேவையையும் பைபிள் வசனங்கள் ஊக்கப்படுத்துகின்றன. (கொலோ. 3:22-24; எபி. 13:18) சொல்லப்போனால், முதலாளிகளில் பெரும்பான்மையோர், வேலைக்கு ஆள் எடுக்கும்போது, நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறவர்களையே பெரிதும் விரும்பினார்கள் என ஒரு சுற்றாய்வு குறிப்பிடுகிறது.
5 ஏழைகள் படும் பாடுகளையெல்லாம் யெகோவா பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். சீக்கிரத்தில் இயேசு கிறிஸ்து, “கூப்பிடுகிற எளியவனை” விடுவிப்பார். (சங். 72:12) அதுவரை, நம்பிக்கை அளிக்கும் பைபிளின் செய்தியை ஏழைகள் உட்பட எல்லாருக்கும் அறிவிக்கிற பாக்கியம் நமக்கு இருக்கிறது.