நமது பிராந்தியத்தில் பாத்திரமானவர்களைக் கண்டுபிடித்தல்
1 நாம் சொல்லிவருகிற செய்தியை இந்த நாட்டினர் வேறொரு கோணத்தில் பார்ப்பதைக் குறித்து ஜனவரி 2008 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தின் விசேஷ உட்சேர்க்கை நம்மை எச்சரித்தது; இந்த மாற்றத்திற்குத் தக்கவாறு நடந்துகொள்ள நமக்கு உதவும் பைபிள் நியமங்களையும் அது நம் கவனத்திற்குக் கொண்டுவந்தது. இந்த மாற்றம் உங்கள் பிராந்தியத்தில் தெரிகிறதா? நாம் வற்புறுத்தி அல்லது கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்கிற வேலையில் ஈடுபட்டிருப்பதாகப் பலர் தவறாக நினைப்பதாலேயே நம்மை எதிர்க்கிறார்கள். இதனால், கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த தீவிர பிரசங்கிமார்களை அவர்கள் எப்படிக் கருதுகிறார்களோ அப்படியே நம்மையும் கருதலாம். இப்படிப்பட்ட எதிர்ப்பினால் கலகக் கும்பல்கள் கூடிவிடுகின்றன, சகோதர சகோதரிகள் கைதுசெய்யப்படுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளை நாம் எப்படித் தவிர்க்கலாம், அல்லது குறைக்கலாம்? சூழ்நிலைக்குத் தக்கவாறு நம் அணுகுமுறையை மாற்றிக்கொள்வது ஒரு வழியாகும்.
2 வீட்டுக்கு வீடு ஊழியமானாலும் சரி, கடைக்குக் கடை ஊழியமானாலும் சரி, சந்தர்ப்ப சாட்சியானாலும் சரி, ஜனங்கள் நம்மை அழைக்காமல் நாமாகவே அவர்களைச் சந்திக்கச் செல்கிறோம்; எனவே, நாம் பேசிக்கொண்டிருக்கும் நபர், நாம் சொல்லும் செய்தியைக் கேட்க விருப்பப்படுகிறாரா என்பதை முதலில் கண்டறிய வேண்டும்; ஆவேசப்படப்போகிற ஒரு நபரிடமோ கலகக் கும்பலை வரவைக்கப்போகிற ஒருவரிடமோ நாம் பேசவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். இப்படிச் செய்வது மிக மிக முக்கியம்; குறிப்பாக, உங்கள் பிராந்தியத்தில் பரவலாக எதிர்ப்பு நிலவும்போது. இவ்வாறு கண்டறிவது, தேவையற்ற மோதலைத் தவிர்க்கும்; இதைத்தான் கடவுளுடைய வார்த்தையும் சிபாரிசு செய்கிறது.—லூக். 10:5, 6.
3 யாருக்கு ஆன்மீக உதவி தேவை என்பதை நாம் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? ஒரு விஷயத்தின் பேரில் உரையாடலை ஆரம்பித்து அல்லது உரையாடலுக்கு வழிவகுக்கும் ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு அவர்கள் எப்படிப் பதில் சொல்கிறார்கள் என்பதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். சற்று நேரத்திற்கு, பைபிளைப் பற்றிக் குறிப்பிடாமல் அல்லது எந்தப் பிரசுரத்தையும் காட்டாமல் பொதுவான விஷயத்தின்பேரில் பேசுங்கள். பெரும்பாலும் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று காட்டிக்கொள்ளாமலேயே அந்த நபர் எப்படிப்பட்டவர் என்பதைக் கணித்துவிட முடியும். அந்த நபரிடம் ஓரளவு பேசினபின், தொடர்ந்து பேசலாமா என அவரிடம் கேட்பது ஒருவேளை பொருத்தமாக இருக்கும். அந்த நபருக்குப் பேச விருப்பமில்லை என்பது தெளிவாகத் தெரியும்போதோ, அவரே அப்படிச் சொல்லும்போதோ, நாம் தொடர்ந்து பேசக் கூடாது. (மத். 7:6) உடனே சிநேகபாவத்துடன் உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விடுவது நல்லதாகும்.
4 இனிவரும் நம் ராஜ்ய ஊழிய இதழ்களில் ஊழியத்திற்கெனக் கொடுக்கப்படும் மாதிரி அறிமுகங்களில் இந்த வித்தியாசமான அணுகுமுறை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். இதை எந்தளவுக்குக் கடைப்பிடிக்கத் தேவையுள்ளது என்பதுபற்றிச் சபையாருடன் கலந்துபேசும்படி மூப்பர் குழுக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். உங்கள் சபையின் பிராந்தியத்தில் சந்திக்கப்படுகிற எதிர்ப்பைப் பொறுத்தே இதைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.
5 ஊழியத்திற்குச் செல்வதற்காகத் தம் அப்போஸ்தலர்களை இயேசு அனுப்புவதற்குமுன், ‘எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரியுங்கள்’ என்று கூறினார். (மத். 10:11) நாம் சொல்கிற செய்தியை ஜனங்கள் எடுத்துக்கொள்கிற விதத்திலிருந்தே, எல்லா ஆட்களும் பாத்திரமானவர்களாய் இருக்க மாட்டார்கள் எனத் தெரிகிறது. சிலர் நாம் சொல்வதை எதிர்க்கிறார்கள். இயேசு இதை எதிர்பார்த்துத்தான் மத்தேயு 10:12-14-ல் காணப்படுகிற அறிவுரைகளைக் கொடுத்தார். இந்த அறிவுரைகளுக்கு இசைய, நாம் மேன்மேலும் பேசி அந்நபரின் கோபத்தைக் கிளறாமல், சமாதானத்தோடு அங்கிருந்து போய்விட வேண்டும். யெகோவாவே நீதியாய் நியாயந்தீர்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு அவரிடம் காரியத்தை ஒப்படைத்துவிட வேண்டும்.