கேள்விப் பெட்டி
◼ யெகோவாவின் சேவைக்காகப் பயன்படுத்தப்படும் இடங்களுக்குச் செல்லும்போது எப்படிப்பட்ட உடையை அணிவது தகுந்தது?
உலகெங்கும் உள்ள ராஜ்ய மன்றங்கள், மாநாட்டு மன்றங்கள், பெத்தேல் வீடுகள், கிளை அலுவலக கட்டடங்கள் ஆகியவை யெகோவாவின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட விசேஷ இடங்களாகும். இவை எளிமையாக, சுத்தமாக, நன்கு பராமரிக்கப்படுபவையாக இருக்கின்றன. இதனால், இவற்றைப் பார்க்கும்போதே மரியாதை ஏற்படுகிறது. இந்த இடங்களுக்கும் சாத்தானின் உலகத்தில் இருப்பவற்றிற்கும் இடையே எப்பேர்ப்பட்ட வித்தியாசம்! யெகோவாவின் சேவைக்காகப் பயன்படுத்தப்படுகிற இடங்களுக்கு நாம் செல்லும்போது, நம்மைப் பார்த்ததுமே நாம் அவருக்குச் சொந்தமான ஜனங்கள், அவருடைய சித்தத்தைச் செய்கிறவர்கள் என்பது பளிச்செனத் தெரியவேண்டும்.
கிறிஸ்தவர்களான நாம் எல்லா விதத்திலும் நம்மை “தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.” தகுந்த, நேர்த்தியான உடையும் தோற்றமும் இதில் உட்படுகின்றன. (2 கொ. 6:3, 4) நாம் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டுமென்று நம்மிடம் எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா சமயங்களிலும், நம்முடைய உடையும் தோற்றமும் யெகோவா தேவனின் ஊழியர்களுக்கு ஏற்ற விதமாக கண்ணியமாய் இருக்க வேண்டும். தலைமை அலுவலகத்தையும் உலகெங்கும் உள்ள கிளை அலுவலகங்களையும் பார்க்கச் செல்லும்போது இதை முக்கியமாக மனதில் வைக்க வேண்டும்.
தகுந்த உடை, தோற்றம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகம், ஊழியத்திற்கும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் செல்லும்போது உடல் சுத்தம், அடக்கமான ஆடை, நல்ல தோற்றம் ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதைக் குறிப்பிடுகின்றது. பிறகு, பக்கம் 138, பாரா 3-ல் இவ்வாறு குறிப்பிடுகிறது: “பெத்தேல் என்பதற்கு ‘கடவுளுடைய வீடு’ என்று அர்த்தம் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆகவே, ராஜ்ய மன்றத்தில் வழிபாட்டிற்காக நாம் கூட்டங்களுக்குச் செல்லும்போது நம்முடைய உடை, தோற்றம், நடத்தை எப்படி இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறதோ அப்படியே பெத்தேல் செல்லும்போதும் எதிர்பார்க்கப்படுகிறது.” பெத்தேல் அமைந்திருக்கும் ஊரில் வசிப்பவர்களும்சரி, தொலை தூரத்திலிருந்து வருகிறவர்களும்சரி, ராஜ்ய அறிவிப்பாளர்கள் எல்லாருமே பெத்தேலைப் பார்க்கச் செல்லும்போது இந்த உயர்ந்த நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும். இதன்மூலம், பெத்தேலைப் பார்க்க வருகிறவர்கள் தங்களுடைய நன்றியுணர்வையும் மரியாதையையும் காட்டலாம்.—சங். 29:2.
‘தேவபக்தியுள்ளவர்களுக்கு’ ஏற்றவிதமாக நம்முடைய உடை இருக்க வேண்டும். (1 தீ. 2:10) தகுந்த உடையும் தோற்றமும் யெகோவாவின் வணக்கத்தின்மீது மற்றவர்களுக்கு மரியாதையை ஏற்படுத்தும். எனினும், யெகோவாவின் சேவைக்காக பயன்படுத்தப்படும் இத்தகைய இடங்களுக்குச் செல்லும்போது சில சகோதர சகோதரிகள் ஏனோதானோவென்று, ஒழுங்கற்று அல்லது அங்கங்களை வெளிக்காட்டுகிற விதத்தில் உடுத்துவது கவனிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட உடைகள் கிறிஸ்தவர்களுக்கு எப்போதுமே தகுந்தவை அல்ல. நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் எல்லா காரியங்களிலும் செய்வது போலவே, இவ்விஷயத்திலும் கடவுளுக்கு மகிமை சேர்க்கும் உயர்ந்த நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க விரும்புகிறோம்.—ரோ. 12:2; 1 கொ. 10:31.
தலைமை அலுவலகத்தையோ மற்ற கிளை அலுவலகங்களையோ பார்க்க ஒருவேளை நீங்கள் செல்லலாம். இவற்றைப் பார்ப்பதற்கென்றே நீங்கள் அங்கு திட்டமிட்டு செல்லலாம், அல்லது சுற்றுலா தலங்களுக்குச் சென்றிருக்கும்போது அப்படியே இவற்றையும் பார்க்கச் செல்லலாம். அச்சமயத்தில் உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் செல்லவிருக்கும் இந்த இடம் எளிமையானது, சுத்தமானது, கண்ணியமானது போல, என்னுடைய உடையும் தோற்றமும் இருக்கிறதா? நான் வணங்கும் கடவுளைப்பற்றி நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதாக இருக்குமா? என்னுடைய தோற்றம் பிறரின் கவனத்தைத் திரும்புவதாகவோ, எரிச்சல் ஏற்படுத்துவதாகவோ இருக்குமா? நம்முடைய உடை மற்றும் தோற்றத்தின் மூலமாக, எப்போதும் ‘நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிப்போமாக!’—தீத். 2:9.