ஊழியம் செய்யும்போது விவேகத்தோடு செயல்படுங்கள்
1 ஊழியம் செய்வது சம்பந்தமாக நடைமுறையான, சமநிலையான ஆலோசனைகளை கிறிஸ்து இயேசு தம் சீஷர்களுக்குக் கொடுத்தார். சூழ்நிலைகள் மாறும்போது அதற்கேற்றாற்போல் ஊழியம் செய்யும் விதத்தை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். உதாரணமாக, தம்முடைய பன்னிரண்டு சீஷர்களை முதன்முதலில் ஊழியத்திற்கு அனுப்பும்போது மத்தேயு 10: 9, 10-ல் பதிவு செய்யப்பட்டுள்ள ஆலோசனைகளை அவர் அளித்தார். (லூக். 9:3) அப்போதிருந்த சூழ்நிலைக்கு இந்த ஆலோசனைகள் ஏற்றதாக இருந்தன. ஆனால், பிற்பாடு சூழ்நிலைகள் மாறின. அவர்கள் பிரசங்கித்த செய்தியை அநேகர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, அதற்குத் தகுந்தபடி லூக்கா 22:35-37-ல் வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார். இதேபோல, நாமும் ஊழியம் செய்யும்போது சூழ்நிலைக்குத் தக்கபடி மாறிக்கொள்வது அவசியம்.
2 கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்து, தகுதியுள்ள மக்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே நம்முடைய குறிக்கோள். தம் ஊழியர்கள் செய்யும் ஊக்கமான வேலையை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. என்றாலும், எல்லாரும் நம்முடைய குறிக்கோளைப் புரிந்துகொள்ளவோ சமாதானத்தைப்பற்றி நாம் சொல்லும் செய்தியை ஏற்றுக்கொள்ளவோ மாட்டார்கள். ராஜ்ய நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதை பிசாசாகிய சாத்தான் விரும்பாததால் எதிர்ப்பைத் தூண்டிவிடுகிறான். (1 பே. 5:8; வெளி. 12:12, 17) ஆகவே, நாம் விவேகத்தோடும் நடைமுறை ஞானத்தோடும் செயல்பட வேண்டும். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபடுகையில் இது மிக முக்கியமாகத் தேவை. (நீதி. 3:21, 22) உங்களுடைய பிராந்தியத்தில் இப்போது எதிர்ப்பு இல்லாமல் இருக்கலாம். எனினும், இனி பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு நாம் விவேகத்தோடு செயல்படுவதே ஞானமானது.—நீதி. 22:3.
3 வெளி ஊழியக் கூட்டங்கள்: வெளி ஊழியத்திற்காக அவரவர் தங்கள் புத்தகப்படிப்பு தொகுதியோடு கூடிவருகையில், அந்தக் கூட்டத்தின் அளவு சிறியதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள முடியும். சகோதர சகோதரிகளின் வீட்டில் ஊழியத்திற்காகக் கூடிவரலாம். ஆனால், அது மத வெறியர்கள், மதப்பற்று அதிகமாக உள்ளவர்கள் வசிக்கும் பகுதியிலோ அதற்கு அருகிலோ இல்லாதிருக்க வேண்டும். இப்படி ஊழியத்திற்காகக் கூடிவருவதற்கு ஏற்ற இடங்கள் இல்லாதிருந்தால், ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்துவதே ஞானமானது. ஏனெனில், நாம் அங்கு போவதையும் வருவதையும் மக்கள் கவனித்திருப்பார்கள். அல்லது, ஊழியம் செய்ய வேண்டிய பிராந்தியத்திற்கு அருகே ஏதாவது பொதுவிடத்தில் கூடிவரலாம். அங்கிருந்து செல்வதற்கு முன்பாக, ஊழியம் செய்ய வேண்டிய பிராந்தியத்தில் இரண்டிரண்டு பேராக அமைதியாக நுழைவதற்கு ஏற்ற எல்லா ஏற்பாடுகளும் சரியாகச் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிராந்தியத்தில் கூடிவருவது, சத்தமாகப் பேசுவது போன்று மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் எதையும் செய்வது ஞானமற்றது. ஊழியம் செய்கிற பிராந்தியத்திற்கு வெளியே நம்முடைய வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். இதன்மூலம், பிரச்சினைக்குரிய ஆட்களின் கவனத்தை அவை ஈர்ப்பதைத் தவிர்க்கலாம்.
4 அக்கம்பக்கம் நடப்பதைக் கவனியுங்கள்: பெரும்பாலும், நாம் ஊழியம் செய்வதை யாரோ ஒருவர் கவனித்து, கூட்டத்தைக் கூட்டிவிடுகிறார் என்று தெரியவந்திருக்கிறது. பிற்பாடு, அந்தக் கூட்டத்தார் பிரஸ்தாபிகளை எதிர்க்கிறார்கள். எனவே, பிரசங்கிக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள், அக்கம்பக்கம் நடப்பதைக் கவனியுங்கள். இதன்மூலம், முடிந்தளவு இப்படிப்பட்ட பிரச்சினைகள் வருவதைத் தவிர்க்கலாம். ஒரு பிரஸ்தாபி பேசிக்கொண்டிருக்கையில், மற்றவர் வீட்டுக்காரரின் கவனத்தைச் சிதறடிக்காமல் சுற்றும்முற்றும் என்ன நடக்கிறதென கவனிக்க வேண்டும். (மத். 10:16) யாரோ ஒருவர் உங்களையே உற்று பார்ப்பதாகத் தெரிந்தால், உங்களைப் பார்த்துக்கொண்டே மொபைல் ஃபோனை பயன்படுத்தினால், பேச்சை முடித்துக்கொண்டு, அமைதியாக அங்கிருந்து வெளியேறுவது நல்லது. (நீதி. 17:14) இதுபோன்ற சூழ்நிலையில் வேறெங்காவது ஊழியம் செய்வதற்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்துகொள்ளலாம். இப்படி ஊழியம் செய்வதற்கு முதிர்ச்சியும் ஞானமும் அவசியம் என்பதால், புதிய பிரஸ்தாபிகள் எப்போதும் அதிக அனுபவமுள்ள பிரஸ்தாபிகளுடன் ஊழியம் செய்வது நல்லது.
5 நேர்த்தியான, அதேசமயம் கவனத்தை ஈர்க்காத தோற்றம்: நம்முடைய தோற்றத்தை பொறுத்ததிலும் நாம் விவேகமாக நடந்துகொள்ள வேண்டும், மற்றவர்கள் நம்மை வித்தியாசமாக பார்க்காதபடி இருக்க வேண்டும். நம்முடைய உடையும் தோற்றமும் எப்போதுமே நேர்த்தியாக, சுத்தமாக, அடக்கமாக இருக்கும். அதேசமயத்தில், நாம் வாழும் இடத்திலுள்ள மக்கள் உடுத்தும் விதமாக உடையணிவது தகுந்தது என்று பைபிள் சொல்கிறது. எல்லாரும் நம்மைப் பார்க்கும் விதமாக வித்தியாசமாக உடுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும். ஏனெனில், வெளிநாட்டவர் போல் உடுத்தினால், நாம் சொல்லும் செய்தியை மக்கள் கேட்காமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. இயேசுவும் தாம் வாழ்ந்த காலத்தில் இருந்த மக்களைப் போன்றே உடையணிந்தார். அதனால்தான், யூதாஸ் அவரை முத்தமிட்டு காட்டிக்கொடுக்க வேண்டியிருந்தது. மற்றவர்களில் இருந்து வித்தியாசமாக இயேசு உடுத்திக்கொள்ளவில்லை. (மத். 26:48; மாற். 14:44) ஆகவே, ஒவ்வொருவரும் இந்த விஷயத்தைக் குறித்து யோசித்துப் பார்க்க வேண்டும். மேலே சொல்லப்பட்டுள்ள நியமங்கள், குறிப்புகளின் அடிப்படையில் யாரேனும் மாற்றங்கள் செய்யத் தீர்மானித்தால், அதுபோன்ற தனிப்பட்ட தீர்மானங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும். நாம் எந்தவிதத்திலும் நம் ஊழியம் குற்றப்படாமல் பார்த்துக்கொள்கிறோம்.—2 கொ. 6:3.
6 ஊழியத்தில் ஈடுபடுகையில் விவேகமாகச் செயல்படும்போது, பிரச்சினைகள் வருவதை நாம் குறைக்கலாம். இதன்மூலம், கடினமான கடைசி நாட்களில் நாம் வாழ்ந்தாலும், யெகோவாவுக்கு துதியையும் மகிமையையும் கொண்டுவரும் விதத்தில் நம்மால் யெகோவாவின் சித்தத்தைத் தொடர்ந்து செய்ய முடியும்.