துண்டுப்பிரதியின் விசேஷ வினியோகிப்பு —நவம்பர் 10-டிசம்பர் 7!
1 நவம்பர் 10, திங்கட்கிழமை முதற்கொண்டு நான்கு வாரங்களுக்கு உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற புதிய துண்டுப்பிரதியின் விசேஷ வினியோகிப்பில் நாம் கலந்துகொள்ளப் போகிறோம். உலகெங்கும் நடைபெற உள்ள இந்த விசேஷ வினியோகிப்பு உண்மையின் ஒரே ஊற்றுமூலத்திடம் அநேகருடைய ஆர்வத்தைத் தூண்டும் என எதிர்பார்க்கிறோம்.—யோவா. 17:17.
2 பின்வரும் ஆறு முக்கிய கேள்விகளுக்கு பைபிளிலிருந்து ரத்தின சுருக்கமான பதில்களை இந்தத் துண்டுப்பிரதி தருகிறது: “கடவுளுக்கு நம்மீது உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா?,” “போரும் துன்பமும் இல்லாத காலம் வருமா?,” “சாகும்போது நமக்கு என்ன ஏற்படுகிறது?,” “இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு பார்க்க முடியுமா?,” “கடவுள் என் ஜெபத்தைக் கேட்க வேண்டுமென்றால் அதை நான் எப்படிச் செய்ய வேண்டும்?,” “சந்தோஷமாக வாழ நான் என்ன செய்ய வேண்டும்?” இந்தக் கேள்விகளுக்கு கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் திருப்தியான பதில்களை ஒருபோதும் தந்ததில்லை. வேறு மதத்தைச் சேர்ந்த பலரும்கூட இந்த விஷயங்களைக் குறித்து யோசித்திருக்கிறார்கள்; ஆனால், இவற்றிற்கு பைபிளில் தெளிவான பதில்கள் இருப்பது அவர்களுக்குத் தெரியாதிருக்கலாம். எனவே, இந்தத் துண்டுப்பிரதியிலுள்ள செய்தி பெரும்பாலோரின் ஆர்வத்தைத் தூண்டுமென எதிர்பார்க்கிறோம்.
3 பிராந்தியம் முழுவதும் வினியோகித்திடுங்கள்: முடிந்தவரை வீட்டுக்கு வீடு ஊழியத்தின்மூலம் உங்கள் பிராந்தியத்திலுள்ள எல்லாருக்கும் இந்தத் துண்டுப்பிரதியை வினியோகிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுடைய பிராந்தியம் மிகப் பெரியதாக இருந்தால், முதல் சந்திப்பின்போது பூட்டப்பட்ட வீடுகளில் துண்டுப்பிரதியை விட்டுவர மூப்பர்கள் ஆலோசனை தரலாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் உறவினர்களுக்கும் உடன் வேலை செய்பவர்களுக்கும் சக மாணவர்களுக்கும் அடிக்கடி நீங்கள் சந்திப்பவர்களுக்கும் மறக்காமல் இதன் ஒரு பிரதியைக் கொடுங்கள். நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்ய நீங்கள் திட்டமிடலாம். உங்கள் பிள்ளையோ பைபிள் மாணாக்கரோ சத்தியத்தில் நல்ல முன்னேற்றம் செய்து வருகிறார்களா? இந்தத் துண்டுப்பிரதி வினியோகிப்பில் நம்மோடு கலந்துகொள்ள முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி ஆவதற்குத் தகுதி பெற்றிருக்கிறார்களா? அப்படியென்றால், மூப்பர்களிடம் தெரிவியுங்கள்.
4 ஆர்வம் இருக்கிறதாவென கண்டுபிடியுங்கள்: வீட்டுக்காரருடன் அன்பாக உரையாட ஆரம்பியுங்கள். அவருக்கு ஆர்வம் இருக்கிறதாவென சீக்கிரத்தில் கண்டுபிடியுங்கள். அவருக்கு ஆன்மீக விஷயத்தில் ஈடுபாடு இல்லாததுபோல் தெரிந்தால் “உங்களைச் சந்தித்ததில் சந்தோஷம்” என சொல்லிவிட்டு புறப்பட்டுவிடுங்கள். வீட்டுக்காரருக்கு ஆர்வம் இருப்பது தெரிந்தால் மட்டுமே அவருடன் தொடர்ந்து உரையாடுங்கள்.
5 என்ன சொல்லுவது: அநேகருக்குத் துண்டுப்பிரதியைக் கொடுக்க விரும்பினால் நீங்கள் சொல்கிற செய்தி சுருக்கமாக இருக்க வேண்டும். துண்டுப்பிரதியின் முதல் பக்கத்திலுள்ள ஆறு கேள்விகளில் வீட்டுக்காரருக்குப் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு, துண்டுப்பிரதியிலுள்ள பதிலை அவரிடம் காட்டுங்கள். இப்படிச் செய்வது, தங்கள் பிராந்தியத்திலுள்ளவர்களுக்கு ஏற்ப தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ள எல்லா பிரஸ்தாபிகளுக்கும் உதவும். யாராவது ஆர்வம் காட்டினால் குறித்து வைத்துக்கொண்டு மீண்டும் போய் சந்தியுங்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பத்திரிகைகளோடு சேர்த்து இந்தத் துண்டுப்பிரதியையும் கொடுக்கலாம். டிசம்பர் 7-ஆம் தேதி இந்த வினியோகிப்பு முடிந்த பிறகு மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை நாம் கொடுப்போம். மீதமுள்ள இந்தத் துண்டுப்பிரதிகள் மற்ற துண்டுப்பிரதிகளைப் போலவே பயன்படுத்தப்படும்.
6 ஒரு பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள்: முக்கியமாக, பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க உதவும் விதத்தில் இந்தத் துண்டுப்பிரதி தயாரிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் காட்டியவர்களை மீண்டும் போய் சந்திக்கும்போது பைபிளிலுள்ள எந்த உண்மை அவருக்கு ஆறுதலை அல்லது நிம்மதியை அளித்ததென கேளுங்கள். அதன் கடைசிப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி சொல்லிவிட்டு, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அவருக்குக் கொடுங்கள். முடிந்தால், அவர் தேர்ந்தெடுத்த தலைப்பில் கூடுதல் தகவல் காணப்படும் அதிகாரத்திற்குத் திருப்பி ஓரிரு பாராக்களை அவருடன் சுருக்கமாகக் கலந்தாலோசியுங்கள்.
7 “ஆவியோடும் உண்மையோடும்” தம்மை வழிபட விரும்புகிறவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று யெகோவா தேடுகிறார். (யோவா. 4:23) உண்மையை அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு உதவ இந்த விசேஷ வினியோகிப்பில் நாம் எல்லாரும் கலந்துகொள்வோமாக.