ஊழியத்தில் எதிர்ப்பைச் சந்திக்கத் தயாராய் இருங்கள்
1. கிறிஸ்தவர்கள் ஊழியத்தில் எதை எதிர்பார்க்கலாம், என்னென்ன கேள்விகள் எழுகின்றன?
1 தம்முடைய சீடர்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்று இயேசு முன்னுரைத்தார். (யோவா. 15:20) கடைசி நாட்களின் முடிவு நெருங்க நெருங்க, சாத்தானும் கடுங்கோபத்தில் இருக்கிறான். எனவே, நாம் இன்னும் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கலாம். (வெளி. 12:12) அப்படியானால், ஊழியத்தில் நாம் தாக்கப்படுகையில் எப்படி நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்? உதவி தேவைப்பட்டால் நாம் போலீஸை அழைக்கலாமா? நம்மைத் தாக்குபவர்களுக்கு எதிராகப் புகார் கொடுக்கலாமா?
2. தாக்குதலிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள கிறிஸ்தவர்கள் தேவையான முயற்சிகளை ஏன் எடுக்க வேண்டும்?
2 உயிர் விலைமதிப்புள்ளது: யெகோவா உயிரை விலைமதிப்புள்ளதாகக் கருதுகிறார். இஸ்ரவேல் தேசத்துக்கு அவர் திருச்சட்டத்தை அளித்தபோது, உயிரையும் ஆரோக்கியத்தையும் பாதுகாத்த சட்டங்களையும் அளித்தார். (யாத். 21:22-29) ஆனால், இன்று கிறிஸ்தவர்கள் திருச்சட்டத்தின்கீழ் இல்லாவிட்டாலும் உயிரை ஒரு மகத்தான பரிசாகவே கருதுகிறார்கள். எனவே, எதிரிகள் நம்மைத் தாக்க முற்பட்டால் நம்மைத் தற்காத்துக்கொள்ள தேவையான முயற்சிகளை எடுப்பது சரியே.
3. பிராந்தியத்தில் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டால் நாம் என்ன செய்யவேண்டும்?
3 எப்படித் தற்காத்துக்கொள்ளலாம்: ஒன்றுக்கும் மேற்பட்ட சமயங்களில், எதிரிகள் கோபமாக இயேசுவைத் தாக்க முற்பட்டபோது, அவர் அந்த இடத்திலிருந்து நழுவிவிட்டார். (லூக். 4:28-30; யோவா. 8:59) நம்முடைய பிராந்தியத்திலும் ஆபத்தான சூழ்நிலை ஏற்படும்போது அந்த இடத்தைவிட்டு வெளியேறுவதே ஞானமானது. எதிர்ப்பு தணியும்வரை வேறு பிராந்தியங்களில் ஊழியம் செய்வது நல்லது.—மத். 10:23.
4. ஒருவேளை வீட்டுக்காரர் அங்கிருந்து வெளியேற விடாமல் நம்மைத் தடுத்தால் என்ன செய்யலாம்?
4 ஒருவேளை அங்கிருந்து வெளியேற விடாமல் வீட்டுக்காரர் நம்மைத் தடுத்தாலோ வீட்டிற்குள் வைத்து பூட்டினாலோ என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய வேண்டும் என்பதை அவரவர்தான் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தீர்மானிக்க வேண்டும். என்றாலும், இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களை ஒரு கிறிஸ்தவர் அமைதியாக தாங்கிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. நம்மை அவர்கள் தாக்க வரும்போது அவர்களை நாம் தடுக்கலாம்; முடிந்தால் அந்த நபரைத் தள்ளிவிட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து ஓடிவிடலாம். ஒருவர் தன்னைத் தாக்குவதால் தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்படலாம் அல்லது உயிருக்கும்கூட ஆபத்து ஏற்படலாம் என ஒரு கிறிஸ்தவர் உணர்ந்தால் தன்மீது அடி விழாதவாறு தடுக்கலாம், அடிக்க விடாதபடி அவருடைய கையைப் பிடித்துக்கொள்ளலாம், அல்லது அவரை நிலைகுலையச் செய்வதற்கோ சற்று நேரத்திற்குச் செயல்பட முடியாதபடி செய்வதற்கோ ஒரு அடி கொடுக்கலாம்.—ஜூன் 2008, ஆங்கில விழித்தெழு! பக்கங்கள் 10, 11-ல் “பைபிளின் கருத்து: எந்தச் சமயங்களில் நம்மைத் தற்காத்துக்கொள்வது சரியானது” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
5. ஊழியத்தை நிறைவேற்ற அதிகாரிகளிடமிருந்து சட்டப்பூர்வமான என்ன உதவிகளை நாம் நாடலாம்?
5 போலீஸை அழைக்கலாமா? ஊழியம் செய்த சமயத்தில், அப்போஸ்தலன் பவுல் ரோமச் சட்டத்தின்படி தனக்கிருந்த உரிமைகளைப் பயன்படுத்திக்கொண்டார். உதாரணத்திற்கு, எதிரிகள் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியபோது சட்டப்படி தனக்கிருந்த உரிமையை, அதாவது ரோம அரசரிடம் மேல்முறையீடு செய்யும் உரிமையை, பயன்படுத்திக்கொண்டார். (அப். 25:11) முன்பு ஒரு சமயம், ரோமக் குடிமகனாகத் தனக்கிருந்த உரிமையைப் பயன்படுத்தி சாட்டையடியிலிருந்து தப்பித்துக்கொண்டார். (அப். 22:25, 29) எனவே, கிறிஸ்தவர்களும் பாதுகாப்பிற்காக அதிகாரிகளின் உதவியை நாடுவதில் எந்தத் தவறுமில்லை; ஏனென்றால், ‘நம்முடைய நன்மைக்காக அவர்கள் கடவுளுடைய பணியாளர்களாய் இருக்கிறார்கள்.’—ரோ. 13:4.
6. தப்பிக்க முடியாத ஒரு ஆபத்தான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?
6 இதுவரை சிந்தித்ததை வைத்துப் பார்க்கையில், ஊழியத்தின்போது தப்பிக்க முடியாத ஒரு ஆபத்தான சூழ்நிலையில் நாம் மாட்டிக்கொண்டால், உடனடியாக போலீஸைக் கூப்பிட வேண்டும். சிலர் முன்ஜாக்கிரதையாக தங்களுடைய பிராந்தியத்திற்கு அருகிலுள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணை தங்கள் மொபைல் ஃபோனில் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள்; பிரச்சினை தலைதூக்கப் போகிறது என்று தெரிந்தவுடனேயே போலீஸைத் தொடர்புகொள்வதற்காக இப்படிச் செய்கிறார்கள். வெளி ஊழியக் கூட்டத்தை நடத்தும் சகோதரர்கள் தங்களுடன் சேர்ந்து ஊழியம் செய்துகொண்டிருப்பவர்கள்மீது ஒருகண் வைத்திருக்க வேண்டும்.—1 பே. 5:2, 3.
7. ஊழியத்தில் நாம் தாக்கப்பட்டால் அதை எதிர்த்து புகார் கொடுப்பது ஏன் ஞானமானது?
7 புகார் கொடுக்கலாமா? ஊழியம் செய்கையில் வீட்டுக்காரர் நம்மைத் தாக்கினால் அவருக்கு எதிராக நாம் புகார் கொடுக்கலாமா? சிலர் அப்படிச் செய்ய விரும்புவதில்லை. ஒருவேளை, ‘எதற்கு தேவையில்லாமல் பிரச்சினையில் மாட்டிக்கொள்ள வேண்டும்’ என்று அவர்கள் நினைக்கலாம்; அதோடு, சத்தியத்தில் இல்லாத உறவினர்கள் அல்லது அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தங்களைப் பற்றித் தவறாகப் பேசுவார்களோ என நினைத்து பயப்படலாம். ஆனால், நாம் புகார் கொடுக்காவிட்டால், யெகோவாவின் சாட்சிகளை என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு தாங்கள் தப்பித்துக்கொள்ளலாம் என நம்முடைய எதிரிகள் நினைக்க வாய்ப்பிருக்கிறது, அல்லவா? அந்தத் தைரியத்தில் நம்மை இன்னும் கடுமையாக தாக்கவும்கூட அவர்கள் துணியலாம், அல்லவா? (பிர. 8:11) எனவே, நாம் புகார் கொடுக்கும்போது ‘நற்செய்திக்காக வழக்காடி அதைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்டுவதில்’ பங்குகொள்கிறோம்; இதனால், நம்முடைய சகோதரர்கள் அந்தப் பிராந்தியத்தில் மீண்டும் ஊழியம் செய்யும்போது, தாக்கப்படும் அபாயமும் குறையலாம்.—பிலி. 1:7.
8. எதிர்ப்புகள் வருமென நாம் எதிர்பார்த்தாலும் ஏன் பயப்படாமல் பிரசங்கிக்க வேண்டும்?
8 எதிரிகள் ஜெயிக்க மாட்டார்கள்: எதிர்ப்புகள் வரும் என்று நாம் ‘எதிர்பார்த்தாலும், அதை நினைத்து நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இந்தப் பிரபஞ்சத்திலேயே மகா பலம் பொருந்தியவர் நமக்குப் பக்கபலமாக இருக்கிறார். (ஏசா. 41:10; எபி. 13:6) பிரசங்க வேலையை எதிரிகள் தடுத்து நிறுத்த யெகோவா ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். (ஏசா. 54:17) ஊழியத்தில் எதிர்ப்புகள் வந்தாலும் நாம் உண்மையுடன் அதைச் செய்து வந்தால் அது ‘கடவுளுக்குப் பிரியமானதாக’ இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது; எதிரிகள் நமக்கு எந்தத் தீங்கு செய்தாலும் சரி, அதையெல்லாம் யெகோவா சரிசெய்துவிடுவார். (1 பே. 2:19, 20) யெகோவாவின் அமைப்பு நமக்கு ஆதரவாக இருக்கிறது. ஊழியத்தில் நாம் தாக்கப்பட்டாலோ நம்முடைய ஊழியம் சட்டவிரோதமானது என்பதுபோல் அதிகாரிகள் நடந்துகொண்டாலோ நாம் அதை உடனடியாக மூப்பர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்; அவர்கள் உடனே கிளை அலுவலகத்திற்குத் தெரிவிப்பார்கள். சமாளிப்பதற்கு கடினமான இந்தக் கடைசி காலத்தில் முன்ஜாக்கிரதையோடும் விவேகத்தோடும் செயல்பட்டு, இடைவிடாமல் நற்செய்தியை அறிவித்து வருவோமாக!—அப். 5:41, 42.