ஊழியம் செய்வதில் தொடர்ந்து முன்னேறுங்கள்
1. நாம் ஊழியம் செய்வதில் முன்னேற வேண்டும் என்பதற்கு சில உதாரணங்கள் கொடுங்கள்?
1 நாம் எல்லாருமே நன்றாக ஊழியம் செய்வதற்கு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இயேசுவும்கூட தன்னுடைய சீடர்கள் முன்னேற வேண்டும் என்று தொடர்ந்து ஆலோசனை கொடுத்தார். (லூக். 9:1-5; 10:1-11) அப்பொல்லோ இன்னும் நன்றாக ஊழியம் செய்ய வேண்டும் என்று ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் “கடவுளுடைய வழிகளைப் பற்றி இன்னும் திருத்தமாக அவருக்கு விளக்கி” சொன்னார்கள். (அப். 18:24-26) தீமோத்தேயு ஏற்கெனவே நன்றாக ஊழியம் செய்கிறவராக இருந்தார்; ஆனால், அவர் கற்றுக்கொண்ட விஷயங்களை தொடர்ந்து கடைப்பிடித்தால்தான், அவருடைய “முன்னேற்றம் எல்லாருக்கும்” தெரியும் என்று பவுல் சொன்னார். (1 தீ. 4:13-15) நாம் நிறைய வருடங்களாக ஊழியம் செய்தாலும் சரி, இப்போதுதான் ஊழியத்திற்கு போக ஆரம்பித்திருந்தாலும் சரி, நம்முடைய திறமைகளை வளர்த்துக்கொண்டே இருப்பது ரொம்ப முக்கியம்.
2. நன்றாக ஊழியம் செய்வதற்கு, எப்படி மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்?
2 மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்: மற்றவர்களிடம் இருந்து நாம் நன்றாக ஊழியம் செய்ய கற்றுக்கொள்ளலாம். (நீதி. 27:17) மற்றவர்கள் ஊழியத்தில் பேசும்போது நன்றாக கவனியுங்கள். நன்றாக ஊழியம் செய்பவர்களிடம் அறிவுரை கேளுங்கள். அவர்கள் சொல்லும் விஷயங்களை செய்யுங்கள். (நீதி. 1:5) மறுசந்திப்பு செய்வது, பைபிள் படிப்பு எடுப்பது, எல்லா விதமான ஊழியங்களில் கலந்துகொள்வது உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா? உங்கள் தொகுதி கண்காணியிடமோ நன்றாக ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகளிடமோ உதவி கேளுங்கள். நன்றாக ஊழியம் செய்வதற்கு யெகோவாவுடைய சக்தியும் உங்களுக்கு உதவி செய்யும். அந்த சக்திக்காக எப்போதும் ஜெபம் செய்யுங்கள்.—லூக். 11:13.
3. ஆலோசனை கொடுத்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
3 சில சமயம், நாமே போய் கேட்கவில்லை என்றாலும் சிலர் ஆலோசனை கொடுப்பார்கள். அப்போது, அவர்கள் சொல்வதை பொறுமையாக கேளுங்கள்; அவர்கள் சொன்ன விஷயத்திற்காக வருத்தப்படாதீர்கள். (பிர. 7:9) அதை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொள்ளுங்கள், அவங்களுக்கு நன்றி சொல்லுங்கள். இதை செய்யும்போது அப்பொல்லோ போல நடந்துகொள்வீர்கள், ஞானமாக இருப்பீர்கள்.—நீதி. 12:15.
4. நாம் ஏன் தொடர்ந்து ஊழியத்தில் முன்னேற்றம் செய்ய வேண்டும்?
4 நாம் முன்னேறும்போது யெகோவா புகழப்படுவார்: ஊழியத்தில் தொடர்ந்து முன்னேற்றம் செய்வது முக்கியம் என்று இயேசு ஒரு உதாரணம் மூலமாக சொன்னார். அந்த உதாரணத்தில், இயேசு ஒரு திராட்சை கொடியாக இருக்கிறார், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அந்த கொடியில் இருக்கிற கிளைகளாக இருக்கிறார்கள். அந்த கிளைகள் “அதிகமாகக் கனிகொடுக்கும்படி” யெகோவா அதை சுத்தம் செய்கிறார். (யோவா. 15:2) திராட்சை தோட்டத்திற்கு சொந்தக்காரர், கிளைகள் நிறைய கனி கொடுக்க வேண்டும் என்று விரும்புவார்; அதேபோல், நாமும் “உதடுகளின் கனியை” நிறைய கொடுக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். அதாவது, ஊழியத்தில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். (எபி. 13:15) நாம் ஊழியத்தில் முன்னேற்றம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும்? ‘நீங்கள் தொடர்ந்து அதிகமாகக் கனிகொடுக்கும்போது, என் தகப்பன் மகிமைப்படுகிறார்’ என்று இயேசு சொல்கிறார்.—யோவா. 15:8.