ஊழியத்தில் நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
2014-ஆம் ஊழிய ஆண்டில், யெகோவாவின் சாட்சிகள் 194,54,87,604 மணிநேரம் ஊழியம் செய்திருக்கிறார்கள். யெகோவாவுக்கு சுறுசுறுப்பாக சேவை செய்வதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பது இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது. (சங். 110:3; 1 கொ. 15:58) முடிவு வருவதற்கு முன்னால் “இன்னும் கொஞ்சக் காலமே மீந்திருக்கிறது.” ஆகவே, நிறைய பேரிடம் சாட்சி கொடுப்பதற்காக நம்முடைய பொன்னான நேரத்தை எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம்?—1 கொ. 7:29.
சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி நாம் வளைந்து கொடுத்தால், ஊழியம் செய்கிற நேரத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, ஒரு மணிநேரத்துக்கு மேல் ஊழியம் செய்தும் ஒருவரிடம்கூட பேச முடியாத சூழ்நிலை அடிக்கடி ஏற்பட்டால், ஊழியத்தில் ஏதாவது மாற்றம் செய்யலாம். இடத்துக்கு இடம் சூழ்நிலை வித்தியாசப்படும் என்பது உண்மைதான். இருந்தாலும், கீழே கொடுத்திருக்கிற சில ஆலோசனைகள், ‘காற்றோடு குத்துச்சண்டை போடுகிறவர்களாக இல்லாமல்,’ ஊழியத்தை நன்றாக செய்ய உங்களுக்கு உதவும்.—1 கொ. 9:26.
வீட்டுக்கு வீடு ஊழியம்: பொதுவாக, வீட்டுக்கு வீடு ஊழியத்தை செய்துவிட்டுதான் மறுசந்திப்புக்கோ பைபிள் படிப்புக்கோ போவோம். ஆனால், காலை நேரத்தில் ஜனங்களை வீட்டில் பார்க்க முடியவில்லை என்றால், அந்த நேரத்தில் தெரு ஊழியமோ கடைக்கு கடை ஊழியமோ செய்யலாம். வீட்டுக்கு வீடு ஊழியத்தை மாலை 4 மணிக்குமேல் செய்யலாம். அந்த நேரத்தில், ஜனங்களும் வேலையை முடித்துவிட்டு ஓய்வாக இருப்பார்கள்.
பொது ஊழியம்: சபை பிராந்தியத்தில் ஜன நடமாட்டம் அதிகமாக இருக்கிற இடத்தில்தான் மேஜைகளையோ வீல் ஸ்டாண்டுகளையோ வைக்க வேண்டும். (ஜூன் 2014 நம் ராஜ்ய ஊழியம், பக். 3-ஐ பாருங்கள்.) வழக்கமாக பொது ஊழியம் செய்கிற இடத்தில் ஜன நடமாட்டம் குறைந்துவிட்டால், அந்த இடத்துக்கு பதிலாக வேறு இடத்தில் பொது ஊழியம் செய்ய சபையின் ஊழியக் குழு ஏற்பாடு செய்யும்.
மறுசந்திப்பு, பைபிள் படிப்பு: ஊழியத்தில் ஜனங்களை அதிகமாக பார்க்க முடியாத நேரத்தில், மறுசந்திப்புக்கோ பைபிள் படிப்புக்கோ போக முடியுமா? உதாரணமாக, சனிக்கிழமை காலையில் நிறைய பேரை வீட்டில் பார்க்க முடிந்தால், அந்த நேரத்தில் வீட்டுக்கு வீடு ஊழியத்தை செய்துவிட்டு மதியமோ மாலை நேரத்திலோ பைபிள் படிப்புக்கு போகலாம்.
நாம் எந்த நேரத்தில் ஊழியம் செய்தாலும் அதை ஊழிய அறிக்கையில் போடலாம் என்பது உண்மைதான். ஆனால், நாம் செய்கிற ஊழியம் பலன் தரும்போதுதான் நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். எனவே, எந்த நேரத்தில் எந்த ஊழியம் பலன் தருமோ அந்த ஊழியத்தை செய்யுங்கள். சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி ஊழியத்தை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் பொன்னான நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள ‘அறுவடையின் எஜமானரான’ யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்.—மத். 9:38.