வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
© 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
ஜனவரி 6-12
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 127-134
பெற்றோர்களே—உங்கள் சொத்தைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்
யெகோவாவின் குடும்பத்தில் உங்களுக்கு இருக்கும் இடத்தை உயர்வாக மதியுங்கள்
9 பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் திறனை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். யெகோவாவை நேசிக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒரு பெற்றோரா? அப்படியென்றால், யெகோவா கொடுத்திருக்கிற இந்தத் திறனையும் பொறுப்பையும் நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்களா? தேவதூதர்களுக்கு யெகோவா நிறைய திறன்களைக் கொடுத்திருந்தாலும் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் திறன் அவர்களுக்கு இல்லை. இதை மனதில் வைத்து, பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை முக்கியமாக நினையுங்கள். “யெகோவா சொல்கிற விதத்தில் அவர்களைக் கண்டித்து, அவர் தருகிற புத்திமதியின்படி” வளர்க்கும் பொறுப்பை யெகோவா உங்களை நம்பி கொடுத்திருக்கிறார். (எபே. 6:4; உபா. 6:5-7; சங். 127:3) அதை நல்லபடியாகச் செய்வதற்கும் உதவுகிறார். அமைப்பைப் பயன்படுத்தி பிரசுரங்கள், வீடியோக்கள், பாடல்கள், வெப்சைட்டில் இருக்கும் கட்டுரைகள் என நிறைய உதவி செய்கிறார். நம்முடைய பிள்ளைகளை யெகோவாவும் இயேசுவும் ரொம்ப நேசிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. (லூக். 18:15-17) பெற்றோர்கள் யெகோவாவை நம்பியிருக்கும்போதும்... பிள்ளைகளை நல்லபடியாகப் பார்த்துக்கொள்வதற்கு முடிந்ததையெல்லாம் செய்யும்போதும்... யெகோவா சந்தோஷப்படுகிறார். இப்படிச் செய்யும் பெற்றோர்கள், யெகோவாவின் குடும்பத்தில் என்றென்றைக்கும் ஒருவராக இருப்பதற்கு பிள்ளைகளுக்கு உதவுகிறார்கள்.
பெற்றோர்களே, யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்
20 பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுங்கள். 127-ம் சங்கீதம், பிள்ளைகளை அம்புகளுக்கு ஒப்பிடுகிறது. (சங்கீதம் 127:4-ஐ வாசியுங்கள்.) பொதுவாக, எல்லா அம்புகளும் ஒரேமாதிரி இருக்காது. சில அம்புகள் உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும், சில அம்புகள் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அவற்றின் அளவுகளும் ஒரேமாதிரி இருக்காது. சில அம்புகள் பெரியதாக இருக்கும், சில அம்புகள் சிறியதாக இருக்கும். அதேபோல், பிள்ளைகளும் ஒரேமாதிரி இருப்பதில்லை. அதனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் எப்படிப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று அப்பா அம்மா முடிவு செய்ய வேண்டும். இஸ்ரேல் நாட்டில் வாழ்கிற ஒரு தம்பதி, தங்களுடைய இரண்டு பிள்ளைகளையும் நல்லபடியாக வளர்த்தார்கள். அந்தப் பிள்ளைகளும் யெகோவாவுக்குச் சேவை செய்து வருகிறார்கள். அந்தத் தம்பதியால் இதை எப்படி சாதிக்க முடிந்தது? “ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித்தனியா பைபிள் படிப்பு நடத்தினோம்” என்று அவர்கள் சொல்கிறார்கள். இப்படிச் செய்தது அவர்களுக்குப் பிரயோஜனமாக இருந்தது. இப்படிச் செய்வது தங்கள் குடும்பத்துக்கும் பிரயோஜனமாக இருக்குமா என்று அந்தந்த குடும்பத் தலைவர்கள் முடிவு செய்யலாம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
தேவனுடைய ஆலயத்தில் செழிப்பான ஒலிவ மரம்
மிகவும் பயனுள்ள இந்த ஒலிவ மரம் தெய்வீக ஆசீர்வாதங்களை நன்றாகவே சித்தரிக்கிறது. கடவுள் பயமுள்ள ஒரு மனிதன் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறான்? “உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப் போல் இருப்பாள்” என்பதாக சங்கீதக்காரன் பாடினார். “உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.” (சங்கீதம் 128:3) இந்த “ஒலிவமரக் கன்றுகள்” யாவை? சங்கீதக்காரன் இவைகளை பிள்ளைகளுக்கு ஏன் ஒப்பிடுகிறார்?
ஒலிவ மரத்தின் விசேஷம் என்னவென்றால் அதன் அடிமரம் புதிது புதிதாக துளிர் விட்டுக்கொண்டே இருக்கும். வயதாகும் போது அடிமரம், ஒரு காலத்தில் பலன்தந்தது போல கனி கொடுக்காமல் இருக்கலாம். அப்போது இந்த மரத்தை வளர்ப்பவர்கள் பல கன்றுகளை அல்லது இளங்கிளைகளை அப்படியே வளரவிட்டு விடுவார்கள். இவை மரத்தோடு சேர்ந்து அதன் முக்கிய பாகமாகிவிடும். சிறிது காலம் கழித்துப்பார்த்தால் அந்த வலுமிக்க அடிமரத்தைச் சுற்றி மூன்று அல்லது நான்கு கன்றுகள் பந்தியைச் சுற்றியிருக்கும் பிள்ளைகளைப் போலிருக்கும். இந்தக் கன்றுகளுக்கும் தாய்மரத்தின் அதே வேர்கள்தான் இருக்கும். இவை அனைத்தும் சேர்ந்து அமோகமாக கனிகொடுக்கும்.
ஒலிவ மரத்தின் இந்தத் தனிச்சிறப்பான அம்சம், பெற்றோரின் வலுமிக்க ஆவிக்குரிய வேரிலிருந்து பலத்தைப் பெற்று மகன்களும் மகள்களும் விசுவாசத்தில் எவ்வாறு உறுதியாக வளரமுடியும் என்பதை அழகாக விளக்குகிறது. பிள்ளைகள் வளர்ந்துவருகையில், கனிகொடுப்பதில் அவர்களும் சேர்ந்துகொண்டு பெற்றோருக்கு ஆதரவாய் இருப்பர். தங்களோடுகூட தங்கள் பிள்ளைகள் யெகோவாவை சேவிப்பதை பார்க்கும் பெற்றோரின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.—நீதிமொழிகள் 15:20.
ஜனவரி 13-19
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 135-137
“நம் எஜமான் மற்ற எல்லா தெய்வங்களையும்விட உயர்ந்தவர்”
கிறிஸ்து கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்
15 யெகோவாதான் இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்தும் வல்லமையை இயேசுவுக்கு கொடுத்திருக்கிறார். அப்படியென்றால், சர்வ சக்தி படைத்த யெகோவா தேவனால் நிச்சயம் இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. உதாரணத்திற்கு, பெருவெள்ளம் வருவதற்கு முன்பு நோவாவிடம் யெகோவா, ‘இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணுவேன்’ என்று சொன்னார். (ஆதி. 7:4) அதேபோல் யாத்திராகமம் 14:21-ல், ‘கர்த்தர் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்தார்’ என்று வாசிக்கிறோம். அதோடு யோனா 1:4-ல், “கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று” என்றும் வாசிக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும்போது, புதிய உலகத்தில் யெகோவா இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்துவார் என்பதில் நிச்சயமாக இருக்கலாம்.
யெகோவாவின் மாறாத அன்பால் உங்களுக்கு என்ன நன்மை?
16 யெகோவா நமக்கு அடைக்கலமாக இருக்கும்வரை எதை நினைத்தும் நாம் பயப்பட வேண்டியதில்லை. ஆனாலும், சில சமயங்களில் நாம் சோர்ந்துபோய் அப்படியே உட்கார்ந்துவிடலாம். அப்போது யெகோவா என்ன செய்வார்? (சங்கீதம் 136:23-ஐ வாசியுங்கள்.) அவருடைய கைகளால் நம்மைத் தாங்குவார். நம்முடைய கையைப் பிடித்து நம்மைத் தூக்கிவிடுவார். முன்பு செய்ததைப் போலவே மறுபடியும் அவருக்கு சுறுசுறுப்பாகச் சேவை செய்வதற்கு உதவுவார். (சங். 28:9; 94:18) நாம் எப்படிப் பிரயோஜனம் அடைகிறோம்? யெகோவாவின் உதவி நமக்கு எப்போதுமே இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் இரண்டு விஷயங்களை நாம் மறக்க மாட்டோம். ஒன்று, இந்த உலகத்தில் நாம் எங்கிருந்தாலும் அவர் நமக்கு அடைக்கலமாக இருப்பார். இரண்டு, நம்முடைய அன்பான அப்பா யெகோவா நம்மேல் அக்கறையாக இருப்பார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 1248
யா
இந்த ஓரெழுத்து வார்த்தை, யெகோவாவை மனதார புகழ்வதற்காகப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எதிரிகளிடமிருந்து யெகோவா தங்களைக் காப்பாற்றி வெற்றி தந்தபோது சந்தோஷத்தில் இந்த வார்த்தையைக் கடவுளுடைய மக்கள் பயன்படுத்தினார்கள். யெகோவாவின் வல்லமையைப் புகழ்வதற்காகவும் இதைப் பயன்படுத்தினார்கள். சங்கீதம் 104:35-ல்தான் “‘யா’வைப் புகழுங்கள்!” (அல்லேலூயா!) என்ற வார்த்தைகள் முதல்முதலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பைபிளில் மற்ற இடங்களில், “யா” என்ற வார்த்தை பாடல்களிலும் ஜெபங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (யாத் 15:2) ஏசாயா, கடவுளுடைய பெயரை வலியுறுத்துவதற்காக “யா யெகோவா” என்று இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினார். (ஏசா 12:2; 26:4) எசேக்கியா அற்புதமான விதத்தில் குணமான பிறகு, “யா” என்ற வார்த்தையைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதன் மூலம் அவருடைய சந்தோஷத்தைக் காட்டினார். (ஏசா 38:9, 11) இன்னும் சில சங்கீதங்களில், யெகோவா காப்பாற்றியதற்கும், பாதுகாத்ததற்கும், திருத்தியதற்கும் நன்றி சொல்வதற்காக செய்யப்பட்ட ஜெபங்களில் “யா” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.—சங் 94:12; 118:5, 14.
ஜனவரி 20-26
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 138-139
பயத்தில் பின்வாங்காதீர்கள்
சபையில் யெகோவாவைப் புகழுங்கள்
10 பதில் சொல்வதற்குக் கையைத் தூக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்குப் படபடப்பாக இருக்கிறதா? உண்மை என்னவென்றால், பதில் சொல்கிற நிறைய பேருக்கு ஒருவிதமான பயம் இருக்கத்தான் செய்கிறது! உங்களுடைய பயத்தைச் சமாளிப்பதற்கு முன்பு, அந்தப் பயத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். சொல்ல நினைத்ததை மறந்துவிடுவீர்கள் என்றோ தவறாகச் சொல்லிவிடுவீர்கள் என்றோ பயப்படுகிறீர்களா? மற்றவர்களைப் போல அருமையான பதில்களைச் சொல்ல முடியாது என்று கவலைப்படுகிறீர்களா? இப்படிப்பட்ட பயத்தை ஒரு நல்ல அறிகுறி என்று சொல்லலாம். ஏனென்றால், நீங்கள் மனத்தாழ்மையாக இருக்கிறீர்கள் என்பதையும் உங்களைவிட மற்றவர்களை உயர்வாக நினைக்கிறீர்கள் என்பதையும் இது காட்டுகிறது. இந்தக் குணம் யெகோவாவின் பார்வையில் அருமையானது! (சங். 138:6; பிலி. 2:3) இருந்தாலும், நீங்கள் அவரைப் புகழ வேண்டும் என்றும் கூட்டத்துக்கு வந்திருக்கும் மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். (1 தெ. 5:11) அவர் உங்கள்மீது அன்பு வைத்திருப்பதால், உங்களுக்குத் தேவையான தைரியத்தை நிச்சயம் கொடுப்பார்.
சபைக் கூட்டங்களில் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள்
7 முன்பு வந்த காவற்கோபுர இதழ்களில் இருக்கும் ஆலோசனைகளை எடுத்துப் பார்ப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். அதில் ஒரு ஆலோசனை என்னவென்றால், நன்றாகத் தயாரிக்க வேண்டும். (நீதி. 21:5) கூட்டங்களில் பார்க்கப்போகும் விஷயங்களை நீங்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தால், பதில் சொல்லும்போது அந்தளவுக்குப் பயமாக இருக்காது. அதோடு, சுருக்கமாகப் பதில் சொல்லுங்கள். (நீதி. 15:23; 17:27) ஏனென்றால், ஓரிரு வரிகளில் சுருக்கமாகப் பதில் சொல்லும்போது, சரியாகச் சொல்லி முடிப்போமா என்ற பயம் நமக்கு இருக்காது. அதுமட்டுமல்ல, சின்னச் சின்னப் பதில்களைத்தான் சகோதர சகோதரிகளால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். உங்கள் சொந்த வார்த்தைகளில் சுருக்கமாகப் பதில் சொல்லும்போது, நன்றாகத் தயாரித்திருக்கிறீர்கள்... படிக்கிற விஷயங்களை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்... என்றெல்லாம் தெளிவாகத் தெரியும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 862 பாரா 4
மன்னிப்பு
இல்லை. கிறிஸ்தவர்கள் தங்கள் மனதைக் காயப்படுத்துகிறவர்களை மன்னிக்க வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார், அது எத்தனை தடவையாக இருந்தாலும் சரி! (லூ 17:3, 4; எபே 4:32; கொலோ 3:13) நாம் மற்றவர்களை மன்னிக்கவில்லை என்றால் கடவுளும் நம்மை மன்னிக்க மாட்டார். (மத் 6:14, 15) ஒருவர் பெரிய பாவத்தைச் செய்து சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தால்கூட, அவர் உண்மையிலேயே மனம் திருந்தினால் அவருக்கு மன்னிப்புக் கிடைக்கும். அப்போது, சபையில் இருக்கும் எல்லாருமே அவரிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். (1கொ 5:13; 2கொ 2:6-11) ஆனால், பெரிய பாவத்தை வேண்டுமென்றே செய்துகொண்டிருக்கும் ஒருவரை, அதுவும் மனம் திருந்தாத ஒருவரை, கிறிஸ்தவர்கள் மன்னிக்கத் தேவையில்லை. ஏனென்றால், அப்படிப்பட்ட ஒருவர் கடவுளுடைய எதிரியாக ஆகிவிடுகிறார்.—எபி 10:26-31; சங் 139:21, 22.
ஜனவரி 27–பிப்ரவரி 2
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 140-143
நீங்கள் செய்யும் ஜெபத்துக்கு ஏற்ற மாதிரி நடந்துகொள்ளுங்கள்
‘ஞானமுள்ளவர்கள் சொல்கிற வார்த்தைகளைக் கேள்’
13 ஆலோசனை கிடைக்கும்போது அதை கடவுளுடைய அன்புக்கு அடையாளமாக பாருங்கள். யெகோவா நமக்கு சிறந்ததை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். (நீதி. 4:20-22) பைபிள், பைபிள் பிரசுரங்கள், அல்லது அனுபவமுள்ள சகோதர சகோதரிகள் மூலமாக யெகோவா நமக்கு ஆலோசனை கொடுக்கும்போது நம்மேல் வைத்திருக்கிற அன்பைக் காட்டுகிறார். “நம்முடைய நன்மைக்காக நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார்” என்று எபிரெயர் 12:9, 10 சொல்கிறது.
14 என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள், எப்படிச் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்காதீர்கள். சிலசமயம் நமக்கு ஆலோசனை கொடுக்கப்பட்ட விதம் சரியில்லை என்று நாம் நினைக்கலாம். சொல்லப்போனால், ஆலோசனை கொடுப்பவர்களும், அதைச் சுலபமாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கொடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். (கலா. 6:1) நமக்கு ஆலோசனை கொடுத்தவர் அதை இன்னும் நல்ல விதமாகச் சொல்லியிருக்கலாம் என்று நமக்குத் தோன்றினாலும், ஆலோசனை எப்படிக் கொடுக்கப்பட்டது என்பதைப் பார்க்காமல் என்ன ஆலோசனை கொடுக்கப்பட்டது என்பதைப் பார்ப்பது நல்லது. அதற்காக, நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘அவங்க ஆலோசனை சொன்ன விதம் எனக்கு பிடிக்கலதான். ஆனா அதிலிருந்து நான் ஏதாவது கத்துக்க முடியுமா? ஆலோசனை சொன்னவருடைய குறைகள பார்க்காம அவர் சொன்ன விஷயம் எனக்கு எப்படி பிரயோஜனமா இருக்கும்னு பாக்கறேனா?’ என்ன ஆலோசனை கிடைத்தாலும், அது எப்படி நமக்குப் பிரயோஜனமாக இருக்கும் என்று யோசிக்கும்போது ஞானமுள்ளவர்களாக இருப்போம்.—நீதி. 15:31.
இந்தக் கொடிய காலங்களில் ‘சுத்த இருதயத்தை’ காத்துக்கொள்ளுங்கள்
எதிரிகளிடமிருந்து வரும் பிரச்சினைகள், பணக் கஷ்டங்கள், தீராத நோய்கள் ஆகியவற்றால் கடவுளுடைய ஊழியர்கள் சிலர் துவண்டுபோயிருக்கிறார்கள். சில சமயங்களில் அவர்களுடைய இருதயமும் துவண்டுபோயிருக்கிறது. இதுபோன்ற அனுபவம் தாவீது ராஜாவுக்கும் ஏற்பட்டது. அவர் இவ்வாறு சொன்னார்: “என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.” (சங். 143:4) அப்படிப்பட்ட தருணங்களைச் சமாளிக்க எது அவருக்கு உதவியது? கடவுள் தமது ஊழியர்களுக்கு உதவி செய்திருந்ததையும், தனக்கு ஏற்கெனவே பாதுகாப்பு அளித்திருந்ததையும் தாவீது நினைத்துப் பார்த்தார். யெகோவா தமது மாபெரும் பெயருக்கு மகிமை சேர்ப்பதற்காகச் செய்திருந்த எல்லாவற்றைக் குறித்தும் அவர் தியானித்தார். கடவுளுடைய செயல்களைப் பற்றியே ஆழ்ந்து யோசித்தார். (சங். 143:5) நாமும்கூட, நம் படைப்பாளரைப் பற்றியும், அவர் நமக்காக ஏற்கெனவே செய்திருப்பவற்றைப் பற்றியும், தற்போது செய்துவருகிறவற்றைப் பற்றியும் தியானித்தோமென்றால், சோதனைகளின் மத்தியில் சுத்த இருதயத்தைக் காத்துக்கொள்வோம்.
“எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே” திருமணம் செய்யுங்கள்—இந்த காலத்திற்கும் பொருந்துமா?
தாவீது ஒரு சமயம் இப்படி சொன்னார்: “கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்து போகிறது . . . உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.” (சங். 143:5-7, 10) நீங்களும் சில சமயம் தாவீதைப் போல் இப்படி சொல்லலாம். இருந்தாலும் சோர்ந்து போய்விடாதீர்கள். உங்களுக்கு யெகோவா என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறாரோ அதை தெரிந்துகொள்ள பொறுமையாக இருங்கள். பைபிளை படியுங்கள், படித்த விஷயங்களைப் பற்றி ஆழமாக யோசித்துப் பாருங்கள். அப்போது, பைபிள் காலங்களில் தம்முடைய மக்களுக்கு யெகோவா எப்படி உதவி செய்திருக்கிறார் என்று தெரிந்து கொள்வீர்கள். அதோடு, உங்களுக்கு யெகோவா என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறார் என்றும் தெரிந்து கொள்வீர்கள். அப்படி தெரிந்துகொள்ளும்போது, கல்யாண விஷயத்தில் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டுமென்று தீர்மானமாக இருப்பீர்கள்!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 1151
விஷம்
அடையாள அர்த்தம். கெட்டவர்களின் நாக்கு பாம்பின் நாக்கைப் போல இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஏன்? அவர்கள் பொய் பேசி, இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, மற்றவர்களுடைய பெயரைக் கெடுக்கிறார்கள்; இதெல்லாம் விரியன் பாம்பின் விஷம்போல் மற்றவர்களைத் தாக்குகிறது.—சங் 58:3, 4; 140:3; ரோ 3:13; யாக் 3:8.
பிப்ரவரி 3-9
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 144-146
“யெகோவாவைக் கடவுளாக வணங்குகிற மக்கள் சந்தோஷமானவர்கள்!”
வாசகர் கேட்கும் கேள்விகள்
1. இந்தச் சங்கீதத்தில் இருக்கிற மற்ற வசனங்களைக் கவனியுங்கள். பொல்லாதவர்களின் பிடியிலிருந்து தங்களை ‘காப்பாற்றும்படி’ நீதிமான்கள் கேட்பதாக 11-ம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 12-ம் வசனம், “அப்போது” என்ற வார்த்தையோடு தொடங்குகிறது. இதிலிருந்து, 12-14 வரையிலான வசனங்கள் நீதிமான்களுக்குக் கிடைக்கப்போகிற ஆசீர்வாதங்களைப் பற்றிச் சொல்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தக் கருத்துதான் 15-ம் வசனத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வசனத்தில், “சந்தோஷமானவர்கள்” என்ற வார்த்தையை இரண்டு தடவை பார்க்க முடிகிறது. அந்த இரண்டு தடவையுமே அது நீதிமான்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதாவது, “யெகோவாவைக் கடவுளாக வணங்குகிற” மக்களை பற்றிக் குறிப்பிடுகிறது.
2. இந்தப் புரிந்துகொள்ளுதல், கடவுளுக்கு உண்மையாக இருக்கிற மக்களுக்குக் கிடைக்கப்போகிற ஆசீர்வாதங்களைப் பற்றிச் சொல்கிற மற்ற வசனங்களோடு ஒத்துப்போகிறது. எதிரிகளிடமிருந்து இஸ்ரவேல் தேசத்தை விடுதலை செய்த பிறகு, கடவுள் அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தருவார் என்றும், செழிப்பாக வாழ வைப்பார் என்றும் தாவீது உறுதியாக நம்பினார். இந்தச் சங்கீதத்தில் அவருடைய நம்பிக்கை பளிச்சென்று தெரிகிறது. (லேவி. 26:9, 10; உபா. 7:13; சங். 128:1-6) உதாரணத்துக்கு, “உங்களுடைய குழந்தைகுட்டிகளும் வயல்களின் விளைச்சலும் ஆடுமாடுகளின் குட்டிகளும் கன்றுகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்று உபாகமம் 28:4-ல் சொல்லப்பட்டிருக்கிறது. தாவீதின் மகனான சாலொமோனின் ஆட்சியில், முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு சமாதானத்தையும் செழிப்பையும் அந்தத் தேசம் அனுபவித்தது. சாலொமோனின் ஆட்சியில் நிலவிய சூழ்நிலை, மேசியாவின் ஆட்சியில் வரப்போகிற சூழ்நிலையைப் படம்பிடித்துக் காட்டியது.—1 ரா. 4:20, 21; சங். 72:1-20.
உங்கள் நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ளுங்கள்
16 என்றென்றும் வாழப்போகிறோம் என்ற நம்பிக்கை கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் அருமையான பரிசு. அந்த வாழ்க்கைக்காகத்தான் நாம் ஆசையோடு காத்திருக்கிறோம். அந்த நாள் நிச்சயம் வரும்! இந்த நம்பிக்கை நங்கூரம் போல இருக்கிறது. சோதனைகள் வந்தாலும், துன்புறுத்தல் வந்தாலும், சாவே வந்தாலும்கூட உறுதியாக இருக்க அது நமக்கு உதவுகிறது. நம்முடைய நம்பிக்கை ஒரு தலைக்கவசம் போலவும் இருக்கிறது. அது நம் யோசனைகளைப் பாதுகாக்கிறது. அதனால், கெட்டதை வெறுக்கவும் நல்லதைச் செய்யவும் நம்மால் முடிகிறது. பைபிள் தரும் நம்பிக்கை, கடவுளிடம் நெருங்கிப்போக நமக்கு உதவுகிறது. நம்மேல் அவர் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று புரிந்துகொள்ளவும் உதவுகிறது. நம் நம்பிக்கையை எப்போதும் பிரகாசமாக வைத்துக்கொண்டால் நம் வாழ்க்கையும் ரொம்பப் பிரகாசமாக இருக்கும்.
17 ரோமர்களுக்குக் கடிதம் எழுதியபோது, “நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (ரோ. 12:12) கடவுளுக்கு உண்மையாக இருந்தால் பரலோகத்தில் என்றென்றும் வாழ முடியும் என்று பவுல் உறுதியாக நம்பினார். அதை நினைத்து அவர் சந்தோஷப்பட்டார். நாமும் நம் நம்பிக்கையை நினைத்து சந்தோஷப்படலாம். ஏனென்றால், யெகோவா தன் வாக்கைக் காப்பாற்றுவார் என்று நமக்குத் தெரியும். சங்கீதக்காரன் எழுதியதுபோல், ‘எப்போதுமே உண்மையோடு நடந்துகொள்கிற’ “யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.”—சங். 146:5, 6.
எப்படிப்பட்ட அன்பு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும்?
19 சாத்தானுடைய உலகத்தில் கிட்டத்தட்ட 6,000 வருஷங்களாக மனிதர்கள் கஷ்டப்படுகிறார்கள். இந்தக் கடைசி நாட்களில், தங்களையும் பணத்தையும் சுகபோகத்தையும் முக்கியமாக நினைப்பவர்கள்தான் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பற்றித்தான் அவர்கள் யோசிக்கிறார்கள். தங்களுடைய ஆசைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்களால் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியாது! அதற்குப் பதிலாக, “யாக்கோபின் கடவுளைத் துணையாகக் கொண்டிருப்பவன் சந்தோஷமானவன். தன் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் சந்தோஷமானவன்” என்று பைபிள் சொல்கிறது.—சங். 146:5.
20 யெகோவாவின் ஊழியர்கள் உண்மையிலேயே அவரை நேசிக்கிறார்கள். அதோடு, ஒவ்வொரு வருஷமும் நிறையப் பேர் அவரைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரை நேசிக்க ஆரம்பிக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது? கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்துகொண்டு இருக்கிறது என்பதையும், நம்மால் கற்பனைகூட செய்ய முடியாத ஆசீர்வாதங்களை அது சீக்கிரத்தில் கொண்டுவரும் என்பதையும் காட்டுகிறது. யெகோவாவுக்கு விருப்பமானதைச் செய்து அவரை சந்தோஷப்படுத்தும்போது, நமக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்கும். யெகோவாவை நேசிக்கிறவர்கள் என்றென்றும் சந்தோஷமாக இருப்பார்கள்! அடுத்த கட்டுரையில், சுயநலமான அன்பு என்னென்ன கெட்ட குணங்களை வளர்க்கும் என்பதையும், அவை யெகோவாவின் ஊழியர்கள் காட்டும் குணங்களுக்கு எப்படி நேர்மாறாக இருக்கின்றன என்பதையும் பார்ப்போம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 111 பாரா 9
மிருகங்கள்
மிருகங்களை நாம் அன்பாகவும் கரிசனையாகவும் நடத்த வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. யெகோவா மிருகங்களுக்கு உயிர் கொடுத்து, அவற்றுக்குத் தேவையானதையும் தந்து, அவற்றை அன்போடு கவனித்துக்கொள்கிறார். (நீதி 12:10; சங் 145:15, 16) அவர் இஸ்ரவேலர்களுக்குத் திருசட்டத்தைக் கொடுத்தபோது, வீட்டு விலங்குகளை நன்றாகக் கவனித்துக்கொள்ளும்படி கட்டளை கொடுத்தார். (யாத் 23:4, 5; உபா 22:10; 25:4) ஓய்வுநாட்களில் மிருகங்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.—யாத் 20:10; 23:12; உபா 5:14.
பிப்ரவரி 10-16
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 147-150
யெகோவாவைப் புகழ நிறைய காரணங்கள் இருக்கின்றன
“‘யா’வைப் புகழுங்கள்!”—ஏன்?
5 இஸ்ரவேலர்களை ஒரு தேசமாக மட்டும் யெகோவா ஆறுதல்படுத்தவில்லை, அங்கிருந்த ஒவ்வொரு இஸ்ரவேலரையும் அவர் ஆறுதல்படுத்தினார். இன்றும் அவர் அப்படிச் செய்கிறார். “உள்ளம் உடைந்தவர்களை அவர் குணமாக்குகிறார். அவர்களுடைய காயங்களுக்குக் கட்டுப் போடுகிறார்” என்று சங்கீதக்காரன் எழுதினார். (சங். 147:3) வியாதியில் கஷ்டப்படுகிறவர்கள்மேலும் மனச்சோர்வால் தவிப்பவர்கள்மேலும் யெகோவா அக்கறையாக இருக்கிறார். நமக்கு ஆறுதல் சொல்லவும் நம் உள்ளத்தின் காயங்களைக் குணமாக்கவும் அவர் ஆர்வமாக இருக்கிறார். (சங். 34:18; ஏசா. 57:15) நமக்கு இருக்கும் எந்தவொரு பிரச்சினையையும் சமாளிக்க அவர் நமக்கு ஞானத்தையும் பலத்தையும் தருகிறார்.—யாக். 1:5.
6 அடுத்ததாக, சங்கீதக்காரன் வானத்தைப் பார்த்து, யெகோவா “நட்சத்திரங்களை . . . எண்ணுகிறார்” என்றும் “அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார்” என்றும் சொன்னார். (சங். 147:4) சங்கீதக்காரனால் நட்சத்திரங்களைப் பார்க்க முடிந்தது. ஆனால், எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்பதைப் பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. இன்று, நம் பால்வீதி மண்டலத்தில் மட்டும் நூறு கோடிக்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று சிலர் சொல்கிறார்கள். நம் பிரபஞ்சத்திலோ நூறாயிரங்கோடி நட்சத்திர மண்டலங்கள் இருக்கலாம்! மனிதர்களால் நட்சத்திரங்களை எண்ண முடியாது; ஆனால், படைப்பாளரால் எண்ண முடியும். சொல்லப்போனால், அவை ஒவ்வொன்றுக்கும் அவர் பெயர் வைத்திருக்கிறார். அப்படியென்றால், அவை ஒவ்வொன்றைப் பற்றியும் அவருக்குத் தெரியும் என்றுதானே அர்த்தம்! (1 கொ. 15:41) ஒவ்வொரு நட்சத்திரமும் எங்கே இருக்கிறது என்று தெரிந்துவைத்திருக்கும் கடவுளுக்கு உங்களைப் பற்றியும் தெரியும், இல்லையா? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எப்படி உணருகிறீர்கள், உங்களுக்கு என்ன தேவை என்பதெல்லாம் அவருக்குத் தெரியும்!
“‘யா’வைப் புகழுங்கள்!”—ஏன்?
7 நீங்கள் என்ன கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை யெகோவாவால் புரிந்துகொள்ள முடியும். அவற்றைச் சமாளிப்பதற்கு உங்களுக்கு உதவ அவருக்குச் சக்தி இருக்கிறது. (சங்கீதம் 147:5-ஐ வாசியுங்கள்.) சமாளிக்கவே முடியாத அளவுக்கு கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாக நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். ஆனால், உங்கள் வரம்புகளைப் பற்றி யெகோவாவுக்குத் தெரியும்; நீங்கள் “மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்.” (சங். 103:14) நாம் அபூரணர்களாக இருப்பதால், செய்த தவறுகளையே திரும்பத் திரும்ப செய்துவிடலாம்; அதனால் சோர்வடைந்து விடலாம். ஒருவேளை, தெரியாமல் ஏதோவொன்றைப் பேசிவிட்டு, பிறகு அதை நினைத்து வருத்தப்படலாம். தவறான ஆசைகள் நமக்குள் அவ்வப்போது எட்டிப் பார்க்கலாம் அல்லது மற்றவர்கள்மேல் நாம் பொறாமைப்படலாம். இதுபோன்ற பலவீனங்கள் யெகோவாவுக்கு இல்லை என்றாலும், தவறு செய்யும்போது நாம் எப்படி உணருகிறோம் என்பதை அவரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.—ஏசா. 40:28.
“‘யா’வைப் புகழுங்கள்!”—ஏன்?
18 தன்னுடைய மக்களாக இருப்பதற்காக, பூமியில் இருக்கிற எல்லா தேசங்களிலிருந்தும் பூர்வ இஸ்ரவேல் தேசத்தை யெகோவா தேர்ந்தெடுத்திருந்தார் என்பது சங்கீதக்காரனுக்குத் தெரியும். அந்தத் தேசத்துக்கு மட்டும்தான் கடவுளுடைய ‘வார்த்தையும்’ அவருடைய ‘விதிமுறைகளும்’ கிடைத்தன. (சங்கீதம் 147:19, 20-ஐ வாசியுங்கள்.) இன்று, நாம் கடவுளுடைய பெயரால் அழைக்கப்படுவது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்! அவரைப் பற்றி தெரிந்திருப்பதற்காக... அவருடைய வார்த்தை நம்மை வழிநடத்துவதற்காக... அவரோடு நெருங்கிய நட்பை வைத்திருப்பதற்காக... நாம் நன்றியோடு இருக்கிறோம். சங்கீதம் 147-ன் எழுத்தாளரைப் போலவே ‘“யா”வைப் புகழவும்,’ அப்படிப் புகழும்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் நமக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 316
பறவைகள்
பறவைகளுடைய அற்புதமான உடல் அமைப்பும் வடிவமைப்பும் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கின்றன. (சங் 148:1, 10) பறவைகளின் சிறகுகளில் நிறைய சின்னச் சின்ன பாகங்கள் இருக்கின்றன. அவை ரொம்பவே சிக்கலான விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பறவையின் எலும்புகளுக்குள் வெற்றிடமாக இருக்கும். அதனால் பறவைகள் கனமே இல்லாமல் லேசாக இருக்கும், இது பறப்பதற்கு உதவியாக இருக்கும். இப்படிப்பட்ட அற்புதமான வடிவமைப்பு இன்றிருக்கும் விமானங்களின் வடிவமைப்பையே மிஞ்சிவிடுகிறது. பிரமிக்க வைக்கும் இந்தப் படைப்பு, யெகோவா எப்பேர்ப்பட்ட அற்புதமான படைப்பாளர் என்பதைக் காட்டுகிறது, அவருக்குப் புகழ் சேர்க்கிறது.
பிப்ரவரி 17-23
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 1
இளைஞர்களே—யார் சொல்வதைக் கேட்பீர்கள்?
பரிசைப் பெறுவதிலிருந்து உங்களைத் தடுக்க எதையும் அனுமதிக்காதீர்கள்!
16 நீங்கள் ஒரு டீனேஜரா? உங்கள் அப்பா அம்மா உங்களைப் புரிந்துகொள்வதில்லை என்றும், ரொம்பவே கறாராக நடந்துகொள்கிறார்கள் என்றும் நினைக்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவை வணங்குவதா வேண்டாமா என்று யோசிக்கும் அளவுக்கு நீங்கள் போய்விடலாம். ஆனால், நீங்கள் யெகோவாவைவிட்டுப் போனால் ஒரு விஷயத்தைச் சீக்கிரத்தில் புரிந்துகொள்வீர்கள். அதாவது, உங்கள் அப்பா அம்மாவோ கிறிஸ்தவ சபையில் இருக்கும் நண்பர்களோ உங்களை நேசிக்கும் அளவுக்கு இந்த உலகத்தில் யாருமே உங்களை நேசிக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
17 உங்கள் அப்பா அம்மா உங்களைத் திருத்தவே இல்லையென்றால், அவர்களுக்கு உங்கள்மீது அக்கறை இருக்கிறது என்று நீங்கள் நினைப்பீர்களா? (எபி. 12:8) ஒருவேளை, அவர்கள் உங்களைத் திருத்தும் விதம் உங்களுக்கு வெறுப்பாக இருக்கலாம். ஆனால் அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காதீர்கள். அவர்கள் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும், ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்றும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நிதானமாக இருங்கள்; உணர்ச்சிவசப்படாதீர்கள்! “அறிவுள்ளவன் அளவோடு பேசுவான். பகுத்தறிவு உள்ளவன் அமைதியாக இருப்பான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 17:27) ஆலோசனை எப்படிக் கொடுக்கப்பட்டாலும் சரி, அதை ஏற்றுக்கொள்ளவும் அதிலிருந்து கற்றுக்கொள்ளவும் பழகிக்கொள்ளுங்கள். இப்படி, முதிர்ச்சியுள்ள ஒரு நபராக ஆவதே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும்! (நீதி. 1:8) யெகோவாவை நேசிக்கும் அப்பா அம்மா கிடைத்தது ஒரு பெரிய பாக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். வாழ்வெனும் பரிசு உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள்; அதற்கு உதவ விரும்புகிறார்கள்.
w05 2/15 பக். 19-20 பாரா. 11-12
நம் கிறிஸ்தவ அடையாளத்தைக் காத்துக்கொள்ளுதல்
11 மனிதனை அல்ல, கடவுளைப் பிரியப்படுத்த நாடுங்கள். ஒரு தொகுதியை சேர்ந்தவர்களென ஓரளவுக்கு நம்மை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புவது இயல்பே. நம் எல்லாருக்கும் நண்பர்கள் தேவை; மற்றவர்கள் நம்மை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளும்போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறோம். பருவ வயதில், ஏன் அதற்குப் பிறகும்கூட சகாக்களின் அழுத்தம் பலமான செல்வாக்கு செலுத்தலாம்; மற்றவர்களைப் போலிருக்க வேண்டும் அல்லது அவர்களைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற பலமான ஆசையை அது நம்மில் தூண்டிவிடலாம். ஆனால் நண்பர்களும் சகாக்களும் நம்முடைய நலனைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதில்லை. சில சமயங்களில் தவறான காரியங்களைச் செய்வதில் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொள்வதற்கு மட்டுமே நம்முடைய நட்பை நாடுகிறார்கள். (நீதிமொழிகள் 1:11-19) சகாக்கள் தவறான காரியங்களை செய்ய வற்புறுத்துகையில் அதற்கு இணங்கிவிடும் ஒரு கிறிஸ்தவர் பொதுவாக தான் யார் என்ற அடையாளத்தை மூடிமறைக்க முயலுகிறார். (சங்கீதம் 26:4) “உலகிலுள்ள மக்களைப் போன்று ஆவதற்காக உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள்” என அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். (ரோமர் 12:2, ஈஸி டு ரீட் வெர்ஷன்) உலகம் தரும் எந்தவொரு அழுத்தத்திற்கும் இணங்கிவிடாமல் அதை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான உள் பலத்தை யெகோவா அளிக்கிறார்.—எபிரெயர் 13:6.
12 மற்றவர்களின் அழுத்தங்கள் கிறிஸ்தவ அடையாளத்தை நம் மனதிலிருந்து எடுத்துப்போடும் அச்சுறுத்தலை எதிர்ப்படுகையில், பொதுவான கருத்துக்களை அல்லது பெரும்பாலோரின் போக்குகளைவிட கடவுள் மீதுள்ள உண்மைப் பற்றுறுதியே மிக முக்கியமானது என்பதை நினைவில் வைக்க வேண்டும். யாத்திராகமம் 23:2-ல் உள்ள நியமம் நமக்கு பாதுகாப்பு அரண் போல் அமைகிறது: “தீமை செய்ய திரளான பேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக” என அது சொல்கிறது. யெகோவாவால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமாவென பெரும்பாலான இஸ்ரவேலர் சந்தேகித்தபோது, காலேப் அந்தப் பெரும்பாலாரோடு சேர்ந்துகொள்ள உறுதியாக மறுத்தார். கடவுளுடைய வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் என அவர் நம்பினார், அதனால் அவர் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டார். (எண்ணாகமம் 13:30; யோசுவா 14:6-11) அவ்வாறே நாமும் கடவுளோடுள்ள பந்தத்தைக் காத்துக்கொள்வதற்காக, பிரபலமான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தப்படுகையில் துளியும் இணங்கிவிடாமல் இருக்கிறோமா?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 846
முட்டாள்
பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் “முட்டாள்” என்ற வார்த்தை வெறுமனே அறிவுதிறன் குறைவாக இருக்கும் ஆட்களைக் குறிப்பதில்லை. புத்தியில்லாமல் நடந்துகொள்கிறவர்களையும் கடவுளுடைய நெறிமுறைகள்படி வாழாதவர்களையும்தான் பொதுவாக அந்த வார்த்தை குறிக்கிறது. அப்படிப்பட்ட ஆட்களைப் பற்றி விவரிக்க வெவ்வேறு எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகள் பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.—நீதி 1:22; 12:15; 17:7; 13:1; லூ 12:20; கலா 3:1; மத் 23:17; 25:2.
பிப்ரவரி 24–மார்ச் 2
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 2
தனிப்பட்ட படிப்பை ஏன் ஆசை ஆசையாகப் படிக்க வேண்டும்?
‘தொடர்ந்து சத்தியத்தில் நடங்கள்’
16 பைபிளை வாசிப்பதும், அதை ஆராய்ச்சி செய்து படிப்பதும் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், சத்தியத்தை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு, ‘அதை விடாமல் தேடுங்கள், தொடர்ந்து தேடுங்கள்’ என்று யெகோவா நம்மிடம் சொல்கிறார். (நீதிமொழிகள் 2:4-6-ஐ வாசியுங்கள்.) அப்படி முயற்சி எடுத்து படிக்கும்போது நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். கோரீ என்ற சகோதரர், அவர் பைபிளை எப்படிப் படிப்பார் என்பதைப் பற்றிச் சொல்கிறார். அவர் ஒருசமயத்தில் ஒரு வசனத்தை எடுத்துக்கொள்வார். “அதுல இருக்கிற எல்லா அடிக்குறிப்புகளையும், இணை வசனங்களையும் பார்ப்பேன். கூடுதலா ஆராய்ச்சியும் செய்வேன். . . . இப்படி செய்யுறப்போ பைபிள்ல இருந்து என்னால நிறைய விஷயங்கள கத்துக்க முடியுது!” என்று அவர் சொல்கிறார். நாம் அவரைப் போல படித்தாலும் சரி, வேறு விதத்தில் படித்தாலும் சரி, நேரம் எடுத்து பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்கும்போது, சத்தியத்தை எவ்வளவு உயர்வாக நினைக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.—சங். 1:1-3.
உண்மையான ஞானம் சத்தமாக அழைக்கிறது
3 ஞானம் என்பது, நமக்குத் தெரிந்த விஷயங்களை வைத்து நல்ல முடிவுகளை எடுக்கும் திறனைக் குறிக்கிறது. ஆனால், உண்மையான ஞானம் என்பது அது மட்டுமே கிடையாது. “யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானத்தைப் பெறுவதற்கு முதல் படி. மகா பரிசுத்தமானவரைப் பற்றித் தெரிந்துகொள்வதுதான் புத்தியை பெறுவதற்கு வழி” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 9:10) அப்படியென்றால், முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு, ‘மகா பரிசுத்தமானவரைப் பற்றித் தெரிந்துகொள்ள’ வேண்டும். அதாவது, நாம் முடிவெடுக்க வேண்டிய விஷயத்தைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் நாம் படிக்க வேண்டும். அப்படிச் செய்தால், நமக்கு உண்மையான ஞானம் இருப்பதைக் காட்டுவோம்.—நீதி. 2:5-7.
4 யெகோவாவினால் மட்டும்தான் நமக்கு உண்மையான ஞானத்தைக் கொடுக்க முடியும். (ரோ. 16:27) ஏன் அப்படிச் சொல்லலாம்? முதலாவதாக, அவர் படைப்பாளராக இருப்பதால் தன்னுடைய படைப்புகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார், முழுமையாகப் புரிந்துவைத்திருக்கிறார். (சங். 104:24) இரண்டாவதாக, யெகோவா செய்யும் எல்லாமே அவருடைய ஞானத்தைக் காட்டுகிறது. (ரோ. 11:33) மூன்றாவதாக, யெகோவா தரும் ஞானமான அறிவுரைகள் எப்போதுமே பிரயோஜனமாக இருக்கின்றன. (நீதி. 2:10-12, 14) நமக்கு உண்மையான ஞானம் வேண்டுமென்றால், இந்த மூன்று முக்கியமான விஷயங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதில் வைத்து எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டும்.
பிள்ளைகளே, உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்!
2 கடவுள்தான் நம்மைப் படைத்தார் என்பதை இன்று நிறைய பேர் நம்புவதில்லை. நீங்கள் ஓர் இளம் யெகோவாவின் சாட்சியா அல்லது அவரைப் பற்றி கற்றுக்கொண்டிருப்பவரா? அப்படியென்றால், நம்மை யெகோவாதான் படைத்தார் என்பதை எப்படி நிரூபிப்பது என்று நீங்கள் நிறைய தடவை யோசித்திருக்கலாம்! நாம் கேட்கிற அல்லது படிக்கிற விஷயத்தைப் பற்றி கவனமாக யோசிக்க பைபிள் உதவுகிறது. “நல்யோசனை உன்னைக் காப்பாற்றும்” என்று பைபிள் சொல்கிறது. எப்படி? பொய்யான கருத்துகளைக் கேட்காமல் இருக்கவும் யெகோவாமீதுள்ள விசுவாசத்தைப் பலப்படுத்தவும் நல்யோசனை உங்களுக்கு உதவும்.—நீதிமொழிகள் 2:10-12-ஐ வாசியுங்கள்.
3 யெகோவாமீது பலமான விசுவாசம் இருக்க வேண்டுமென்றால், அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். (1 தீ. 2:4) அதனால், பைபிளையும் நம் பிரசுரங்களையும் வாசிக்கும்போது, அதில் என்ன இருக்கிறது என்று யோசிப்பது முக்கியம். அதோடு, நீங்கள் என்ன வாசிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். (மத். 13:23) இப்படி வாசிக்கும்போது, யெகோவாதான் நம்மைப் படைத்தார், அவரிடமிருந்துதான் பைபிள் வந்தது என்பதற்கு நீங்கள் நிறைய ஆதாரங்களைக் கண்டுபிடிக்கலாம். (எபி. 11:1) இதை எப்படிச் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 1211 பாரா 4
உத்தமம்
யெகோவாமீதும் நம்மைக் காப்பாற்ற அவருக்கு இருக்கும் சக்திமீதும் நமக்கு நம்பிக்கையும் ஆழமான விசுவாசமும் இருந்தால்தான் நம்மால் உத்தமமாக இருக்க முடியும். அதாவது, முழு அன்பையும் முழு பக்தியையும் அவருக்குக் காட்ட முடியும். (சங் 25:21) உத்தமமாக நடப்பவர்களுக்கு ஒரு “கேடயம்” போலவும், ஒரு “கோட்டை” போலவும் இருப்பதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (நீதி 2:6-8; 10:29; சங் 41:12) உத்தமமாக நடப்பவர்கள், யெகோவாவுடைய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதனால் கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி வாழ அவர்கள் முயற்சி செய்வார்கள். இதனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்கும். (சங் 26:1-3; நீதி 11:5; 28:18) குற்றமற்றவர்களுக்குப் பிரச்சினைகள் வரலாம், மரணம்கூட வரலாம். ஆனால், அவர்கள் படும் கஷ்டங்களை யெகோவா நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார், அவர்களை ஆசீர்வதிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்.—யோபு 9:20-22; சங் 37:18, 19, 37; 84:11; நீதி 28:10.