வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
© 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
செப்டம்பர் 1-7
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 29
கடவுளுக்குப் பிடிக்காத நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் ஒதுக்கித்தள்ளுங்கள்
சந்தோஷம்—கடவுள் தரும் ஒரு குணம்
யெகோவாவை சந்தோஷப்படுத்தும் காரியங்களைச் செய்வதில் சுறுசுறுப்பாக இருக்கும்போதும் நமக்கு இன்னும் அதிக சந்தோஷம் கிடைக்கும். (சங். 35:27; 112:1) ஏன் அப்படிச் சொல்கிறோம்? “உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்பதற்காகத்தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று பைபிள் சொல்கிறது. “இதைவிட முக்கியமான கடமை மனுஷனுக்கு வேறு இல்லை.” (பிர. 12:13) கடவுளுடைய விருப்பத்தைச் செய்யும் விதத்தில்தான் யெகோவா நம்மை வடிவமைத்திருக்கிறார். அப்படியென்றால், யெகோவாவுக்கு சேவை செய்வதுதான் வாழ்க்கையிலேயே அதிகமான சந்தோஷத்தை நமக்குத் தரும்.
மரணத்தைப் பற்றிய உண்மைகளின் பக்கம் உறுதியாக நில்லுங்கள்!
13 ஒரு சம்பிரதாயத்தை அல்லது பழக்கவழக்கத்தைப் பின்பற்றலாமா வேண்டாமா என்பதில் சந்தேகம் இருந்தால், யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்; தெய்வீக ஞானத்தைத் தரும்படி கேளுங்கள். (யாக்கோபு 1:5-ஐ வாசியுங்கள்.) பிறகு, நம் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்யுங்கள். தேவைப்பட்டால், உங்கள் சபை மூப்பர்களிடம் ஆலோசனை கேளுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் சொல்ல மாட்டார்கள்; இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நியமங்களைப் போன்ற மற்ற பைபிள் நியமங்களைக் கண்டுபிடிக்க உதவுவார்கள். இப்படிச் செய்யும்போது, உங்கள் “பகுத்தறியும் திறன்களை” உங்களால் பயிற்றுவிக்க முடியும். “சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க” இந்தத் திறன்கள் உங்களுக்கு உதவும்.—எபி. 5:14.
“உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்”
12 கடவுள் வெறுக்கும் சம்பிரதாயங்களும் பழக்கவழக்கங்களும். தங்களுடைய கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும்படி, குடும்பத்தாரும் கூடவேலை செய்பவர்களும் கூடப்படிக்கிறவர்களும் நம்மைக் கட்டாயப்படுத்தலாம். யெகோவா வெறுக்கிற கொண்டாட்டங்களிலும் சம்பிரதாயங்களிலும் கலந்துகொள்வதற்கான தூண்டுதல் வரும்போது, அதைச் சமாளிக்க எது நமக்கு உதவும்? யெகோவா அந்தக் கொண்டாட்டங்களை வெறுப்பதற்கான காரணங்களை மனதில் தெளிவாக வைத்துக்கொள்வது நமக்கு உதவும். அதைத் தெரிந்துகொள்ள, நம்முடைய பிரசுரங்களை ஆராய்ச்சி செய்யலாம். அதோடு, அந்தப் பண்டிகைகள் எப்படி ஆரம்பமாயின என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று நன்றாக யோசித்துப் பார்க்கும்போது, ‘நம் எஜமானுக்கு பிரியமானதைத்தான் செய்கிறோம்’ என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். (எபே. 5:10) யெகோவாமீதும் அவருடைய வார்த்தையின்மீதும் நாம் நம்பிக்கை வைத்தால், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயப்பட மாட்டோம்.—நீதி. 29:25.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
‘செயலிலும் உண்மை மனதோடும்’ அன்பு காட்டுங்கள்
மனப்பூர்வமாகப் பாராட்டுங்கள். மற்றவர்களைப் பாராட்ட வாய்ப்புகளைத் தேடுங்கள். பாராட்டுவது மற்றவர்களை ‘பலப்படுத்தும்’ என்று நம் எல்லாருக்கும் தெரியும். (எபே. 4:29) ஆனால், நாம் மனப்பூர்வமாகப் பாராட்ட வேண்டும்; போலியாகப் புகழக் கூடாது. வெறுமனே வாயளவில் எதையாவது சொல்லக் கூடாது. அதேசமயத்தில், தேவையான ஆலோசனையைக் கொடுக்கும் பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது. (நீதி. 29:5) ஒருவருடைய முகத்துக்கு நேராக அவரைப் புகழ்ந்து பேசிவிட்டு, பிறகு அவருடைய முதுகுக்குப் பின்னால் மோசமாகப் பேசினால், நாம் வெளிவேஷக்காரர்களாக இருப்போம். அப்போஸ்தலன் பவுல் உண்மையான அன்பைக் காட்டினார். கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்களுக்குக் கடிதம் எழுதியபோது, அவர்கள் செய்த நல்ல காரியங்களுக்காக அவர்களைப் பாராட்டினார். (1 கொ. 11:2) ஆனால், அவர்களுக்கு அறிவுரை தேவைப்பட்டபோது, அதற்கான காரணத்தை அன்பாகவும் தெளிவாகவும் விளக்கிச் சொன்னார்.—1 கொ. 11:20-22.
செப்டம்பர் 8-14
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 30
‘எனக்கு வறுமையையோ அதிக செல்வத்தையோ கொடுக்காதீர்கள்’
எப்படிப்பட்ட அன்பு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும்?
10 நம் எல்லாருக்குமே பணம் தேவை என்பது உண்மைதான். அது ஓரளவு நம்மைப் பாதுகாக்கும். (பிர. 7:12) ஆனால் அடிப்படைத் தேவைகளுக்கு மட்டும்தான் நம்மிடம் பணம் இருக்கிறதென்றாலும், நம்மால் சந்தோஷமாக இருக்க முடியுமா? கண்டிப்பாக முடியும்! (பிரசங்கி 5:12-ஐ வாசியுங்கள்.) “எனக்கு வறுமையையோ அதிக செல்வத்தையோ கொடுக்காமல், தேவையான அளவு உணவு மட்டும் கொடுங்கள்” என்று யாக்கே என்பவரின் மகன் ஆகூர் எழுதினார். அவர் ஏன் வறுமையை விரும்பவில்லை என்று நம்மால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. திருடனாக மாறி, கடவுளுக்குக் கெட்ட பெயர் கொண்டுவந்துவிடக் கூடாது என்று அவர் நினைத்தார். ஆனால், ஏன் அதிக செல்வத்தையும் அவர் விரும்பவில்லை? “ஏனென்றால், எல்லா வசதிகளும் கிடைத்த திருப்தியில், ‘யார் அந்த யெகோவா?’ என்று நான் கேட்டுவிடக் கூடாது” என்று அவர் எழுதினார். (நீதி. 30:8, 9) கடவுள்மேல் நம்பிக்கை வைக்காமல் செல்வத்தின் மேல் நம்பிக்கை வைக்கும் ஆட்களை நீங்கள்கூட பார்த்திருக்கலாம்.
11 பணத்தை நேசிக்கிறவர்களால் கடவுளைப் பிரியப்படுத்த முடியாது. “யாராலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது; ஏனென்றால், அவன் ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு காட்டுவான்; அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை அலட்சியம் செய்வான். நீங்கள் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது” என்று இயேசு சொன்னார். அதோடு, “பூமியில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதை நிறுத்துங்கள். ஏனென்றால், இங்கே பூச்சியும் துருவும் அவற்றை அழித்துவிடும்; திருடர்களும் திருடிக்கொண்டு போய்விடுவார்கள். அதனால், பரலோகத்தில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அவற்றை அழிக்காது; திருடர்களும் திருடிக்கொண்டு போக மாட்டார்கள்” என்றும் அவர் சொன்னார்.—மத். 6:19, 20, 24.
12 யெகோவாவின் ஊழியர்களில் நிறையப் பேர் எளிமையான வாழ்க்கை வாழ முயற்சி செய்கிறார்கள். அதனால் யெகோவாவுக்கு அதிக நேரம் சேவை செய்யவும், அதிக சந்தோஷமாக இருக்கவும் அவர்களால் முடிகிறது. அமெரிக்காவில் வாழும் ஜாக் என்ற சகோதரர், தன் மனைவியோடு சேர்ந்து பயனியர் சேவை செய்வதற்காகத் தன் தொழிலையும் பெரிய வீட்டையும் விற்றுவிட்டார். “எங்க ஊருல இருந்த எங்களோட நிலத்தயும் அழகான வீட்டையும் விக்கறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். ஆனால், தொழிலில் அவருக்குப் பிரச்சினைகள் இருந்ததால், பல வருஷங்களாக விரக்தியோடுதான் வீடு திரும்புவார். “என்னோட மனைவி ஒழுங்கான பயனியரா இருந்ததால எப்பவுமே ரொம்ப சந்தோஷமா இருந்தா. ‘பெஸ்ட் முதலாளி எனக்கு கிடைச்சிருக்காரு!’ன்னு அடிக்கடி சொல்லுவா. இப்போ நானும் பயனியர் செய்றதுனால, ரெண்டு பேருமே ஒரே முதலாளிக்கு அதாவது யெகோவாவுக்கு வேல செய்றோம்” என்று அவர் சொல்கிறார்.
யெகோவாவுக்குப் பயப்படு, நீ சந்தோஷமாய் இருப்பாய்
◆ 30:15, 16—இந்த உதாரணங்களின் குறிப்பு என்ன?
பேராசையை ஒருபோதும் திருப்திசெய்ய முடியாது என்பதை அவை விளக்குகின்றன. அட்டைகள் பெருந்திண்டிகள் போல் இரத்தத்தின் மீதுண்கிறதுபோல், பேராசையுள்ளவர்கள் எப்போதுமே மேலும் அதிக பணத்தையும் வல்லமையையும் கேட்கிறார்கள். அதேவிதமாக, பாதாளமும் ஒருபோதும் திருப்தியடையாமல், மரணத்துக்கு இரையாகிறவர்களைப் பெறத்தக்கதாக எப்போதும் திறந்து இருக்கிறது. மலட்டுக் கர்ப்பமும் குழந்தைகளுக்காக அழுகின்றது. (ஆதியாகமம் 30:1) வறண்ட நிலம் மழைத் தண்ணீரைக் குடித்துவிடுகிறது, மறுபடியும் வறண்டதாகிவிடுகிறது. மேலுமாக அதில் எறியப்பட்ட பொருட்களை விழுங்கிவிட்டிருக்கும் அக்கினி, அருகிலுள்ள மற்ற பொருட்களையும் எரிப்பதற்கு தன் நெருப்பை அனுப்புகிறது. பேராசையுள்ளவர்களும் அப்படியே இருக்கிறார்கள். ஆகிலும் தெய்வீக ஞானத்தால் வழிநடத்தப்படுகிறவர்கள் இப்பேர்ப்பட்ட தன்னலத்தால் முடிவில்லாமல் தூண்டப்பட்டு நடத்தப்படுவதில்லை.
வரவுக்கேற்ற செலவு செய்வது எப்படி?
சேமித்து வைத்து வாங்குங்கள். அதெல்லாம் இந்தக் காலத்திற்குச் சரிப்பட்டுவராது என்று நினைக்காதீர்கள். பணப் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க இதுவே மிகச் சிறந்த வழி. சேமித்து வைத்துப் பொருள் வாங்கினால், கடன் தொல்லை... எக்கச்சக்கமான வட்டி... போன்ற அடுக்கடுக்கான பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். தவணையில் வாங்கினால், பொருளுக்குரிய பணத்தைவிட அதிகமாகக் கொடுக்க வேண்டியிருக்கும். சின்னஞ்சிறிய ஜீவனான எறும்பே, “அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.” இப்படி முன்கூட்டியே சேர்த்து வைப்பதால், எறும்பு ‘ஞானமுள்ளது’ என பைபிள் சொல்கிறது.”—நீதிமொழிகள் 6:6-8; 30:24, 25.
என்றென்றும் யெகோவாவின் விருந்தாளியாக இருங்கள்!
18 பணத்துக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று நாம் யோசித்துப் பார்ப்பது ரொம்ப முக்கியம். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் அடிக்கடி பணத்தைப் பற்றியும் என்ன வாங்கலாம் என்பதைப் பற்றியுமே யோசித்துக்கொண்டிருக்கிறேனா? நான் கடன் வாங்கியிருந்தால், கடன் கொடுத்தவருக்குப் பணம் தேவைப்படாது என்று நினைத்துக்கொண்டு அதைத் திருப்பித் தராமல் இழுத்தடிக்கிறேனா? பணம் இருப்பதால் என்னை நானே பெரிய ஆளாக நினைத்துக்கொள்கிறேனா, மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்கத் தயங்குகிறேனா? சில சகோதர சகோதரிகளுக்குப் பணம் இருக்கிறது என்பதற்காக அவர்கள் பண ஆசைபிடித்தவர்கள் என்று முடிவுகட்டிவிடுகிறேனா? நிறைய பணம் வைத்திருப்பவர்களிடம் மட்டும் நான் நெருங்கிப் பழகிவிட்டு, வசதி இல்லாதவர்களைவிட்டு ஒதுங்கியிருக்கிறேனா?’ இந்தக் கேள்விகளை நாம் யோசித்துப் பார்ப்பது முக்கியம். ஏனென்றால், யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளிகளாக இருக்கும் பெரிய ஆசீர்வாதம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதை இழக்காமல் இருப்பதற்கு, பண ஆசை இல்லாமல் நாம் வாழ வேண்டும். அப்படிச் செய்தால், யெகோவா ஒருபோதும் நம்மைக் கைவிட மாட்டார்!—எபிரெயர் 13:5-ஐ வாசியுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w09 4/15 பக். 17 பாரா. 11-13
படைப்பில் பளிச்சிடும் யெகோவாவின் ஞானம்
11 நமக்கு முக்கியமான பாடங்களைப் புகட்டும் இன்னொரு சிறிய விலங்கு, குழிமுசல் என்றழைக்கப்படுகிற கற்பாறை வளைக்கரடி ஆகும். (நீதிமொழிகள் 30:26-ஐ வாசியுங்கள்.) அது பார்ப்பதற்கு ஒரு பெரிய முயலைப் போல் இருக்கிறது; ஆனால் சிறிய, உருண்டையான காதுகளையும் குட்டையான கால்களையும் கொண்டிருக்கிறது. இந்தச் சிறிய பிராணி கற்பாறைகளில் குடியிருக்கிறது. ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அதன் கூரிய பார்வை அதற்குக் கைகொடுக்கிறது; அதோடு, கற்பாறைகளிலுள்ள பொந்துகளும் இடுக்குகளும் பதுங்கிக்கொள்ள அதற்கு இடமளிக்கின்றன. “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பதற்கு ஏற்றாற்போல் வாழும்படியே அந்தக் கற்பாறை வளைக்கரடிகள் படைக்கப்பட்டுள்ளன; அதனால் அவை பாதுகாப்பையும் பெறுகின்றன, குளிர்காலத்தில் கதகதப்பையும் பெறுகின்றன.
12 கற்பாறை வளைக்கரடியிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? முதலாவதாக, இந்த விலங்கு ஆபத்தில் மாட்டிக்கொள்ளாதபடி உஷாராக நடந்துகொள்கிறது. அதன் கூரிய பார்வையைக் கொண்டு எதிரிகளைத் தூரத்திலிருந்தே கண்டுபிடித்துவிடுகிறது; அதோடு, தஞ்சமளிக்கும் ‘வீடுகளாகிய’ பொந்துகளுக்கும் இடுக்குகளுக்கும் அருகிலேயே எப்போதும் இருக்கிறது. அதேபோல் நாமும், கூரிய ஆன்மீகப் பார்வையுடன், சாத்தானின் உலகத்தில் மறைந்திருக்கும் ஆபத்துக்களைக் கண்டுகொள்ள வேண்டும். “தெளிந்த புத்தியுடன் இருங்கள், விழித்திருங்கள்; உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று அலைந்து திரிகிறான்” என்று அப்போஸ்தலன் பேதுரு கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை தந்தார். (1 பே. 5:8) இயேசு பூமியில் இருந்தபோது, தம் உத்தமத்தைக் குலைப்பதற்குச் சாத்தான் எடுத்த எல்லா முயற்சிகளையும் முறியடிக்க எப்போதும் உஷாராகவும் கவனமாகவும் இருந்தார். (மத். 4:1-11) இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்கு எப்பேர்ப்பட்ட முன்னுதாரணம்!
13 நாம் உஷாராக இருப்பதற்கு ஒரு வழி, ஆன்மீகப் பாதுகாப்புக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்வதாகும். கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதையும் கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் செல்வதையும் நாம் ஒருபோதும் அசட்டை செய்யக் கூடாது. (லூக். 4:4; எபி. 10:24, 25) அதுமட்டுமல்ல, கற்பாறை வளைக்கரடிகள் ஒன்றுகூடி வாழ்வதுபோல் நாமும் நம் சக கிறிஸ்தவர்களோடு ‘ஒன்றுகூடி வாழ’ வேண்டும்; அப்போதுதான், “ஒருவருக்கொருவர் ஊக்கம்பெற” முடியும். (ரோ. 1:12) யெகோவா அளிக்கும் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதன் மூலம், சங்கீதக்காரனாகிய தாவீது சொன்னதுபோல் நாமும் இப்படிச் சொல்வோம்: ‘கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமுமாய் இருக்கிறார்.’—சங். 18:2.
செப்டம்பர் 15-21
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 31
ஒரு அம்மாவின் அன்பான ஆலோசனைகளிலிருந்து பாடங்கள்
உங்கள் பிள்ளைகளின் மனதில் ஒழுக்கநெறிகளைப் பதியவையுங்கள்
செக்ஸ் பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்லுங்கள். செக்ஸ் சம்பந்தமான எச்சரிப்புகளைக் கொடுப்பது அவசியம்தான். (1 கொரிந்தியர் 6:18; யாக்கோபு 1:14, 15) என்றாலும், செக்ஸ் என்பது சாத்தானின் கண்ணி என்று மட்டுமே பைபிள் சொல்வதில்லை; உண்மையில் அது கடவுள் தந்த பரிசு என்பதாகவே சொல்கிறது. (நீதிமொழிகள் 5:18, 19; உன்னதப்பாட்டு 1:2) உங்கள் டீன்-ஏஜ் பிள்ளையிடம் செக்ஸில் உள்ள ஆபத்துக்களைப் பற்றி மட்டுமே சொன்னால், அவர்களுக்கு அதைப் பற்றிய தவறான எண்ணம் ஏற்படும், அது பைபிளுக்கு முரணானது என்ற எண்ணமும் வந்துவிடும். “பாலியல் ஒழுக்கக்கேட்டைப் பற்றியே என் அப்பா, அம்மா எப்பவும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்; அதனால், செக்ஸ் என்றாலே தப்பு என்ற தவறான எண்ணம் எனக்கு வந்துவிட்டது” என்று பிரான்சில் வசிக்கும் கொரின்னா என்ற இளைஞி சொல்கிறாள்.
எனவே, உங்கள் பிள்ளைகளிடம் செக்ஸ் பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்லுங்கள். மெக்சிகோவைச் சேர்ந்த நாடியா என்ற தாய் சொல்கிறார்: “செக்ஸ் என்பது ஒரு அழகான விஷயம், இயற்கையான விஷயம். மனிதர்கள் அனுபவிப்பதற்காக யெகோவா தேவன் அதைக் கொடுத்திருக்கிறார். ஆனால், கல்யாணமானவர்கள் மட்டுமே அதில் ஈடுபட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டும்தான் சந்தோஷம் கிடைக்கும், இல்லையென்றால் துக்கம்தான் மிஞ்சும்; இந்தக் கருத்தை என்னுடைய டீன்-ஏஜ் பிள்ளைகளுக்குப் புரியவைக்க நான் எப்போதுமே முயற்சி செய்தேன்.”
ijwhf கட்டுரை பக். 4 பாரா. 11-13
மதுபானத்தைப் பற்றி பிள்ளைகளிடம் பேசுங்கள்
இதைப் பற்றி பேச நீங்கள் முதல் படி எடுங்கள். “மதுபானத்தை பயன்படுத்துறத பத்தி சின்ன பிள்ளைங்களுக்கு சரியா புரியாம இருக்கலாம்” என்று பிரிட்டனை சேர்ந்த மார்க் என்ற அப்பா சொல்கிறார். “குடிக்கிறது சரியா தப்பானு என்னோட எட்டு வயசு பையன்கிட்ட கேட்டேன். அவன் ரிலாக்ஸா இருக்குற சமயத்தில இதபத்தி கேட்டேன். அவன் மனசில இருக்கிறத என்கிட்ட சொல்றதுக்கு இது ரொம்ப உதவியா இருந்துச்சு” என்றும் அவர் சொல்கிறார்.
மதுபானத்தைப் பற்றி அவர்களிடம் பலமுறை பேசும்போது, நீங்கள் சொல்லித்தருவது அவர்கள் மனதில் ஆழமாகப் பதியும். சாலைப் பாதுகாப்பு, செக்ஸ் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசும்போது மதுபானத்தைப் பற்றியும் பேசுங்கள். உங்கள் பிள்ளையின் வயதைப் பொருத்து இப்படிச் செய்யுங்கள்.
முன்மாதிரி வையுங்கள். ஸ்பான்ஞ் எப்படி அதைச் சுற்றி இருப்பதை உறிஞ்சிவிடுமோ அப்படித்தான் பிள்ளைகளும் தங்களைச் சுற்றி இருப்பவர்களைப் போலவே நடந்துகொள்கிறார்கள். மற்றவர்களைவிட பெற்றோர்களைப் பார்த்துதான் பிள்ளைகள் அதிகம் கற்றுகொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால், மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் மதுபானத்தை பயன்படுத்தினீர்கள் என்றால், பிரச்சினைகளுக்கு மதுதான் மருந்து என்று உங்கள் பிள்ளை முடிவுக்கட்டிவிடும். அதனால், நீங்கள் நல்ல முன்மாதிரி வையுங்கள். மதுபானத்தைச் சரியாக பயன்படுத்துவது உங்கள் பொறுப்பு.
மனத்தாழ்மையாக இருக்க பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்
மற்றவர்களுக்கு உதவி செய்ய சொல்லிக்கொடுங்கள். “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள். (அப்போஸ்தலர் 20:35) எப்படி? ஷாப்பிங் செய்வதற்கோ, பயணம் செய்வதற்கோ, பழுதுபார்க்கும் வேலை செய்வதற்கோ யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறது என்பதைப் பற்றி உங்கள் பிள்ளையோடு சேர்ந்து பட்டியல் போடுங்கள். அவர்களுக்கு உதவி செய்யும்போது, உங்கள் பிள்ளையையும் உங்களோடு கூட்டிக்கொண்டு போங்கள். மற்றவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதால் உங்களுக்குக் கிடைக்கும் சந்தோஷத்தையும் திருப்தியையும் உங்கள் பிள்ளை பார்க்கட்டும். இப்படி, உங்கள் முன்மாதிரியால், மனத்தாழ்மையாக இருப்பதைப் பற்றி உங்கள் பிள்ளைக்குச் சொல்லித்தர முடியும்.—பைபிள் அறிவுரை: லூக்கா 6:38.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
இளம் சகோதரிகளே—முதிர்ச்சியுள்ள பெண்களாக ஆகுங்கள்
12 பேச்சுத் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். கிறிஸ்தவர்களுக்கு பேச்சுத் திறமை முக்கியம். இதைப் பற்றி யாக்கோபு இப்படி சொன்னார்: “ஒவ்வொருவரும் நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.” (யாக். 1:19) மற்றவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்கும்போது அவர்கள்மேல் “அனுதாபத்தை” காட்டுவோம். (1 பே. 3:8) ஒருவர் என்ன சொல்கிறார் அல்லது எப்படி உணர்கிறார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் பொருத்தமான கேள்விகளைக் கேளுங்கள். பிறகு, என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை யோசிக்க சில நொடிகள் எடுத்துக்கொள்ளுங்கள். (நீதி. 15:28, அடிக்குறிப்பு) உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் சொல்வது உண்மைதானா? அது அவரை உற்சாகப்படுத்துமா? அவர்மேல் மரியாதையும் அன்பும் இருக்கிறதை காட்டுமா?’ பேச்சுத் திறமையுள்ள முதிர்ச்சியான சகோதரிகளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 31:26-ஐ வாசியுங்கள்.) அவர்கள் பேசுவதைக் கவனியுங்கள். நீங்கள் எந்தளவுக்கு இந்தத் திறமையை வளர்த்துக்கொள்கிறீர்களோ அந்தளவுக்கு மற்றவர்களோடு உங்களுக்கு நல்ல பந்தம் இருக்கும்.
செப்டம்பர் 22-28
பைபிளில் இருக்கும் புதையல்கள் பிரசங்கி 1-2
அடுத்த தலைமுறைக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுங்கள்
“[இந்த] விஷயங்களை உண்மையுள்ள ஆட்களிடம் சொல்”
3 நம்மில் நிறைய பேர் நம்முடைய வேலைகளைச் சந்தோஷமாகச் செய்கிறோம். இந்த வேலைகளை எவ்வளவு நாள் செய்ய முடியுமோ, அவ்வளவு நாள் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆதாமுடைய நாட்களில் இருந்தே எல்லாருக்கும் வயதாகிறது. அதனால், ஒரு தலைமுறை போகிறது, இன்னொரு தலைமுறை வருகிறது. இளம் வயதில் தாங்கள் செய்த வேலைகளை வயதானவர்களால் இப்போது செய்ய முடிவதில்லை. (பிர. 1:4) இது யெகோவாவின் மக்களுக்குச் சவாலாக இருக்கிறது. இன்று, பிரசங்கிப்பு வேலை வளர்ந்துகொண்டே போகிறது. நல்ல செய்தி நிறைய பேருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக யெகோவாவின் அமைப்பு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால், புதிய முறைகளைக் கற்றுக்கொள்வது சில சமயங்களில் வயதானவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். (லூக். 5:39) அதோடு, வயதாகும்போது இயல்பாகவே மக்களுக்கு பலமும் தெம்பும் குறைந்துவிடுகிறது. (நீதி. 20:29) அதனால், யெகோவாவின் அமைப்பில் கூடுதல் பொறுப்புகளை எடுத்துச் செய்ய, இளைஞர்களுக்கு வயதானவர்கள் பயிற்சி கொடுக்க வேண்டும். இப்படிச் செய்வது அன்பானதாகவும், நடைமுறையானதாகவும் இருக்கும்!—சங்கீதம் 71:18-ஐ வாசியுங்கள்.
4 அதிகாரத்தில் இருக்கிற வயதானவர்களுக்கு, தங்களுடைய பொறுப்புகளை இளைஞர்களுக்குக் கொடுப்பது எப்போதுமே சுலபமாக இருப்பதில்லை. தாங்கள் ஆசை ஆசையாக செய்துவந்த பொறுப்புகளை விட்டுக்கொடுப்பது சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம். இன்னும் சிலர், தாங்கள் அந்த வேலையை வழிநடத்தவில்லை என்றால், அது சரியாக நடக்காது என்று நினைத்து கவலைப்படலாம். மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்க தங்களுக்கு நேரம் இல்லை என்றும் அவர்கள் நினைக்கலாம். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்? தங்களுக்குப் பொறுப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
பைபிள் புத்தக எண் 21—பிரசங்கி
3 என்ன கருத்தில் சாலொமோன் ராஜா கூட்டிச்சேர்ப்பவர், அவர் எதற்காக கூட்டிச்சேர்த்தார்? தன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் அவர்களோடு தற்காலிகமாக தங்கியிருந்த நண்பர்களையும் கூட்டிச்சேர்த்தார். இவர்கள் அனைவரையும் யெகோவா தேவனுடைய வணக்கத்திற்கு கூட்டிச்சேர்த்தார். முன்பு எருசலேமில் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டியிருந்தார். அதை பிரதிஷ்டை செய்யும்போது கடவுளின் வணக்கத்துக்காக அவர்கள் எல்லாரையும் கூடிவரும்படி அழைத்தார் அல்லது கூட்டிச்சேர்த்தார். (1 இரா. 8:1) இப்போது பிரசங்கி புத்தகத்தின் மூலம் தன்னுடைய ஜனத்தை இவ்வுலகத்தின் வீணான, பயனற்ற செயல்களைவிட்டு தூரமாக விலக்கி, பயனுள்ள செயல்களுக்குக் கூட்டிச்சேர்க்க விரும்பினார்.—பிர. 12:8-10.
செப்டம்பர் 29–அக்டோபர் 5
பைபிளில் இருக்கும் புதையல்கள் பிரசங்கி 3-4
உங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்துங்கள்
டெக்னாலஜி உங்கள் வாழ்க்கையில்
● டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தினால் உங்கள் கல்யாண வாழ்க்கை நன்றாக இருக்கும். உதாரணத்துக்கு, சில கணவன்-மனைவி, அவர்கள் வேலைக்காக வெளியே போகும்போது ஒருவரோடு ஒருவர் பேசுவதற்காக ஃபோனை பயன்படுத்துகிறார்கள்.
“ஐ லவ் யூ, உன்ன பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்னு அனுப்புற சின்ன மெசேஜ் கூட உங்க கணவன்/மனைவியை உங்களுக்கு எவ்ளோ பிடிக்கும்னு காட்டும்.”—ஜோனத்தான்.
● நீங்க டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் உங்கள் கல்யாண வாழ்க்கையில் பிரச்சினைகள் மட்டும்தான் இருக்கும். உதாரணத்துக்கு, சிலர் நாள் முழுவதும் ஃபோனும் கையுமாக இருப்பதால் தங்கள் கணவன்/மனைவி உடன் நேரம் செலவிட முடியாமல் போய்விடுகிறது.
“நிறைய நேரம் என் கணவர் என்கிட்ட பேச வருவாரு. ஆனா நான் ஃபோனே கதினு இருக்குறதுனால அவரு என்கிட்ட பேசாம போயிடுவாரு.”—ஜூலிசா.
● “நான் என் ஃபோன பயன்படுத்துற அதே நேரத்துல என்னோட துணை கிட்டயும் ரொம்ப நல்லாவே பேச முடியும்” என்று சிலர் சொல்கிறார்கள். “‘ஒரே நேரத்துல நிறைய விஷயங்களை செய்ய முடியும்’ என்று சொல்லி சிலர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்” நிறைய வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது நல்லது என்று இன்றைக்கு நிறையப்பேர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல, சொல்லப்போனால் செய்துகொண்டிருக்கிற வேலையைக்கூட சொதப்பிவிடுவார்கள்” என்று மனிதர்களின் சமூக வாழ்க்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்கிற ஷெரி டர்கிள் சொல்கிறார்.”
“ஃபோன் நோண்டிக்கிட்டே என்னோட கணவர் என்கிட்ட பேசுனா எனக்கு சுத்தமா பிடிக்காது. அப்படி பேசுனா என்ன விட அந்த ஃபோனு தான் அவருக்கு ரொம்ப முக்கியம்னு எனக்குத் தோணும்.”—சாரா.
என்ன கற்றுக்கொள்கிறோம்: டெக்னாலஜியை பயன்படுத்தும் விதத்தால் உங்கள் கல்யாண வாழ்க்கை வரமாகவும் மாறலாம், சாபமாகவும் ஆகிவிடலாம்.
“‘யா’வின் ஜுவாலை” அணையாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்
12 இன்று கணவன் மனைவிகள் எப்படி ஆக்கில்லா-பிரிஸ்கில்லாள் தம்பதியைப் போல் நடந்துகொள்ளலாம்? உங்களுக்கும் உங்கள் துணைக்கும் என்னென்ன வேலைகள் இருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள். அதில் சில வேலைகளை நீங்கள் தனியாகச் செய்வதற்குப் பதிலாக ஒன்றாகச் சேர்ந்து செய்ய முடியுமா? உதாரணத்துக்கு, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் சேர்ந்து ஊழியம் செய்தார்கள். நீங்களும் அப்படிச் செய்ய அடிக்கடி நேரம் ஒதுக்குகிறீர்களா? ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் மற்ற வேலைகளையும் ஒன்றாகச் சேர்ந்து செய்தார்கள். நீங்களும் உங்கள் துணையும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யாமல் இருக்கலாம். ஆனால், வீட்டு வேலைகளை ஒன்றாகச் சேர்ந்து செய்யலாம், இல்லையா? (பிர. 4:9) ஒரு வேலையைச் செய்ய ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருக்கும்போது ஒரே டீமாக இருப்பதுபோல் உணருவீர்கள், பேசுவதற்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். ராபர்ட்-லின்டா தம்பதிக்குக் கல்யாணமாகி 50 வருஷத்துக்கும் மேல் ஆகிறது. ராபர்ட் இப்படிச் சொல்கிறார்: “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நாங்கள் ரொம்ப பிஸியாக இருப்பதால் பொழுதுபோக்கிற்காக ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடுவது எங்களுக்குக் கஷ்டம். ஆனால், நான் பாத்திரங்களைக் கழுவும்போது என் மனைவி அதையெல்லாம் துடைத்து வைப்பாள். நான் தோட்ட வேலை செய்யும்போது அவள் எனக்கு ஒத்தாசையாக இருப்பாள். அப்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். இந்த மாதிரி விஷயங்களை ஒன்றாகச் சேர்ந்து செய்யும்போது நாங்கள் இன்னும் நெருக்கமாகிறோம். அதோடு, எங்களுக்குள் இருக்கும் அன்பும் பாசமும் அதிகமாகிக்கொண்டே போகிறது.”
13 கணவனும் மனைவியும் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் அன்னியோன்னியமாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இதைப் பற்றி பிரேசில் நாட்டில் இருக்கும் ஒரு சகோதரி சொல்லும்போது, “ஒரே வீட்டில் இருக்கிறோம் என்பதற்காக ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடுகிறோம் என்று நாம் தப்புக்கணக்குப் போட்டுவிடலாம். ஏனென்றால், இன்று நம் கவனத்தைத் திசைதிருப்புவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதனால், என் கணவரோடு சேர்ந்து இருப்பது மட்டும் போதாது, அப்படி சேர்ந்து இருக்கும்போது என் கவனமெல்லாம் அவர்மேல்தான் இருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டேன்” என்று சொல்கிறார். இந்த விஷயத்தில் ப்ரூனு-டேஸ் தம்பதி ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறார்கள். சகோதரர் ப்ரூனு இப்படிச் சொல்கிறார்: “நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடும்போது, எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது என்பதற்காக எங்கள் ஃபோனைக்கூட எடுத்து வைத்துவிடுவோம்.”
14 ஆனால், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடவே பிடிக்கவில்லையா? ஒருவேளை, ஒருவருக்குப் பிடித்தது இன்னொருவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இல்லையென்றால், இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் கடுப்பேத்திக்கொண்டே இருக்கலாம். அப்போது என்ன செய்வது? ஆரம்பத்தில் நாம் பார்த்த நெருப்பு உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். எடுத்தவுடனேயே அது குபுகுபுவென்று எரிய ஆரம்பித்துவிடாது. விறகுகளைப் போடப்போடத்தான் அது நன்றாக எரிய ஆரம்பிக்கும். முதலில் சின்னச் சின்ன விறகுகளைப் போடுவோம், பிறகு பெரிய பெரிய விறகுக் கட்டைகளைப் போடுவோம். அதேபோல், நீங்கள் ஏன் தினமும் உங்கள் துணையோடு கொஞ்ச நேரமாவது செலவு செய்யக் கூடாது? உங்கள் இரண்டு பேருக்குமே பிடித்த விஷயத்தை மட்டும் அப்போது செய்யுங்கள், சண்டை வருவதுபோல் எதையும் செய்துவிடாதீர்கள். (யாக். 3:18) இப்படி, சின்னதாக ஆரம்பிப்பதுகூட போகப்போக உங்களுக்கு இடையில் இருக்கும் அன்பை மறுபடியும் கொழுந்துவிட்டு எரிய வைக்கும்.
“‘யா’வின் ஜுவாலை” அணையாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்
3 “‘யா’வின் ஜுவாலை” அணையாதபடி பார்த்துக்கொள்ள, கணவனும் மனைவியும் யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள உழைக்க வேண்டும். ஆனால், யெகோவாவோடு இருக்கும் பந்தம் எப்படி அவர்களுடைய திருமண வாழ்க்கைக்கு உதவி செய்யும்? யெகோவாவோடு இருக்கும் நட்பை அவர்கள் பெரிதாக நினைக்கும்போது, அவருடைய அறிவுரைகளை உடனடியாகக் கேட்டு நடப்பார்கள். அதனால், அன்பைத் தணிய வைக்கும் பிரச்சினைகளை அவர்களால் தவிர்க்கவும் சமாளிக்கவும் முடியும். (பிரசங்கி 4:12-ஐ வாசியுங்கள்.) யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்திருப்பவர்கள் அவரைப் போலவே நடந்துகொள்ளவும்... அவருடைய குணங்களை வளர்த்துக்கொள்ளவும்... முயற்சி எடுக்கிறார்கள். உதாரணத்துக்கு, கரிசனையோடும் பொறுமையோடும் நடந்துகொள்கிறார்கள், மற்றவர்களைத் தாராளமாக மன்னிக்கிறார்கள். (எபே. 4:32–5:1) கணவனும் மனைவியும் இப்படிப்பட்ட குணங்களைக் காட்டும்போது, ஒருவரை ஒருவர் சுலபமாக நேசிக்க முடியும். லீனா என்ற சகோதரிக்குக் கல்யாணமாகி 25 வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டது. அவர் இப்படிச் சொல்கிறார்: “யெகோவாவோடு நெருக்கமாக இருக்கும் ஒருவர்மேல் அன்பும் மரியாதையும் காட்டுவது ஈஸி.”
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
தடையுத்தரவின் மத்தியிலும் தொடர்ந்து யெகோவாவை வணங்குங்கள்
14 மற்றவர்களிடம் என்ன தகவல்களைச் சொல்கிறீர்கள் என்பதில் ஜாக்கிரதையாக இருங்கள். தடையுத்தரவு போடப்பட்டிருக்கும் சமயத்தில், “பேசாமல் இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது” என்பதை ஞாபகம் வைத்துக்கொள்வது முக்கியம். (பிர. 3:7) சில விஷயங்களை ரகசியமாக வைக்க வேண்டியது அவசியம். உதாரணத்துக்கு, சகோதர சகோதரிகளுடைய பெயர்கள் என்ன... கூட்டங்கள் எங்கே நடக்கின்றன... எப்படி ஊழியம் செய்கிறோம்... ஆன்மீக உணவு நமக்கு எப்படிக் கிடைக்கிறது... போன்ற விஷயங்களை ரகசியமாக வைக்க வேண்டும். அதிகாரிகளிடம் இந்த விஷயங்களைச் சொல்லக் கூடாது. அதோடு, நம் நாட்டில் அல்லது வெளிநாடுகளில் இருக்கிற நண்பர்களிடமோ சொந்தக்காரர்களிடமோ இந்த விஷயங்களைச் சொல்லக் கூடாது. அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி! நாம் கவனமாக இல்லையென்றால், சகோதரர்களை ஆபத்தில் சிக்க வைத்துவிடுவோம்.—சங்கீதம் 39:1-ஐ வாசியுங்கள்.
அக்டோபர் 6-12
பைபிளில் இருக்கும் புதையல்கள் பிரசங்கி 5-6
நம்முடைய மகத்தான கடவுளுக்குப் பயபக்தி காட்டுவது எப்படி?
w08 8/15 பக். 15-16 பாரா. 17-18
மரியாதைக்குரிய விதத்தில் நடந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்
17 நாம் யெகோவாவை வணங்கும்போது மரியாதைக்குரிய விதத்தில் நடந்துகொள்வதற்கு விசேஷ கவனம் செலுத்த வேண்டும். “நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்” என பிரசங்கி 5:1 சொல்கிறது. மோசேயும் யோசுவாவும் பரிசுத்தமான இடத்தில் இருந்தபோது தங்களுடைய காலணிகளைக் கழற்றிப்போடுமாறு கட்டளையிடப்பட்டார்கள். (யாத். 3:5; யோசு. 5:15) பயபக்தி அல்லது மரியாதை காட்டுவதற்கு அடையாளமாக அவர்கள் இதைச் செய்ய வேண்டியிருந்தது. இஸ்ரவேலில் இருந்த ஆசாரியர்கள் தங்களுடைய “நிர்வாணத்தை மூடும்படிக்கு” சணல்நூல் கால்சட்டைகளை அணிய வேண்டியிருந்தது. (யாத். 28:42, 43) இதனால் அவர்கள் பலிபீடத்தில் சேவை செய்யும்போது தங்கள் நிர்வாணம் தெரியாதபடி மறைத்துக்கொள்ள முடிந்தது. ஆசாரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மதிப்பு மரியாதையை வெளிக்காட்டுவதற்கு கடவுள் கொடுத்துள்ள நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது.
18 வழிபாட்டில் மரியாதைக்குரிய விதத்தில் நடந்துகொள்வது மற்றவர்களுக்கு மதிப்பு மரியாதை கொடுப்பதையும் குறிக்கிறது. நமக்கு மதிப்பு மரியாதை கிடைக்க வேண்டுமானால் நாமும் அவ்வாறே நடந்துகொள்ள வேண்டும். நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை வெறும் நடிப்பாகவோ வெளிவேஷமாகவோ இருக்கக்கூடாது. அது மனிதர் பார்வைக்காக அல்லாமல் கடவுள் பார்க்கிற விதமாக இருக்க வேண்டும்; அதாவது, இருதயத்திலிருந்து வர வேண்டும். (1 சா. 16:7; நீதி. 21:2) மதிப்பு மரியாதை காட்டுவதை நம் உடன்பிறந்த குணமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்; அது நம் நடத்தையில், மனப்பான்மையில், பிறருடன் உள்ள உறவில் வெளிப்பட வேண்டும். நம்மைப்பற்றி நாம் கருதும் விதத்திலும் உணரும் விதத்திலும்கூட அது வெளிப்பட வேண்டும். சொல்லப்போனால், எல்லாச் சமயங்களிலும் நாம் சொல்கிற, செய்கிற எல்லாக் காரியங்களிலும் அது பளிச்செனத் தெரிய வேண்டும். நம்முடைய நடத்தை, உடை, அலங்காரம் ஆகியவற்றில் அப்போஸ்தலன் பவுலின் இந்த வார்த்தைகளை மனதில்கொள்ள வேண்டும்: “இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.” (2 கொ. 6:3) நாம், “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்க” வேண்டும்.—தீத். 2:9–12.
w09 11/15 பக். 11 பாரா 21
உங்கள் ஜெபங்களுக்கு மெருகூட்ட பைபிளைப் படியுங்கள்
21 இயேசு முழு விசுவாசத்துடனும் பயபக்தியுடனும் ஜெபம் செய்தார். உதாரணமாக, லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கு முன், ‘அவர் வானத்தை நோக்கி, “தகப்பனே, என் ஜெபத்தைக் கேட்டதற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன். நீங்கள் எப்போதுமே என் ஜெபத்தைக் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும்”’ என்று சொன்னார். (யோவா. 11:41, 42) இப்படிப்பட்ட பயபக்தியையும் விசுவாசத்தையும் உங்களுடைய ஜெபங்கள் காட்டுகின்றனவா? இயேசுவின் பயபக்திமிக்க மாதிரி ஜெபத்தைக் கருத்தூன்றிப் படியுங்கள்; அப்படிப் படிக்கும்போது, யெகோவாவின் பெயர் பரிசுத்தமாவதும், அவருடைய அரசாங்கம் வருவதும், அவருடைய சித்தம் செய்யப்படுவதும் அதில் முக்கிய அம்சங்களாக இருப்பதைக் கவனிப்பீர்கள். (மத். 6:9, 10) அப்படியானால், யெகோவாவின் அரசாங்கம் வருவதிலும், அவருடைய சித்தம் செய்யப்படுவதிலும், அவருடைய புனிதமான பெயர் பரிசுத்தப்படுவதிலும் அதிக ஆர்வமாய் இருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய ஜெபங்கள் காட்டுகின்றனவா? காட்ட வேண்டும்.
“நீ ஏதாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்று”
12 நீங்கள் ஞானஸ்நானம் எடுத்தபோது, யெகோவாவுக்குச் சேவை செய்ய உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்தப்போவதாக யெகோவாவிடம் சத்தியம் செய்தீர்கள். அதோடு, அவருடைய தராதரங்களைப் பின்பற்ற உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யப்போவதாகவும் சத்தியம் செய்தீர்கள். ஆனால், ஞானஸ்நானம் ஒரு ஆரம்பப்படிதான்! நாட்கள் போகப் போக நாம் நம்மையே சோதித்துப் பார்க்க வேண்டும். ஒருவேளை நாம் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்: ‘ஞானஸ்நானம் எடுத்ததிலிருந்து இன்னைக்கு வரைக்கும் எனக்கும் யெகோவாவுக்கும் இருக்குற பந்தம் தொடர்ந்து பலப்பட்டு வருதா? நான் இன்னும் யெகோவாவுக்கு முழு இதயத்தோடு சேவை செய்றேனா? (கொலோ. 3:23) நான் அடிக்கடி ஜெபம் செய்றேனா? தினமும் பைபிள் வாசிக்கிறேனா? தவறாம கூட்டங்கள்ல கலந்துக்குறேனா? முடிஞ்ச போதெல்லாம் தவறாம ஊழியம் செய்றேனா? இதுல ஏதாவது ஒண்ணுல என்னோட ஆர்வம் கொஞ்சம் குறைஞ்சிருக்கா?’ யெகோவாவுடைய சேவையில் நாம் செயலற்றவர்களாக ஆகிவிடும் ஆபத்து இருப்பதாக அப்போஸ்தலன் பேதுரு நம்மை எச்சரித்தார். விசுவாசத்திலும், அறிவிலும், சகிப்புத்தன்மையிலும், கடவுள்பக்தியிலும் வளர்வதற்கு கடினமாக முயற்சி செய்தால் நாம் செயலற்றவர்களாக ஆகிவிட மாட்டோம்.—2 பேதுரு 1:5-8-ஐ வாசியுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
வாசகர் கேட்கும் கேள்விகள்
ஏழைகளை ஒடுக்கி, நீதியைப் புரட்டுகிற ஓர் அதிகாரியைப் பற்றி பிரசங்கி 5:8 சொல்கிறது. அப்படிப்பட்ட அதிகாரி, தனக்கும் மேல் ஓர் அதிகாரி இருப்பதையும், அவர் தன்னை கவனித்துக்கொண்டிருப்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், இவர்கள் இரண்டு பேருக்கு மேலும் உயர் அதிகாரிகள் இருக்கலாம். வருத்தமான விஷயம் என்னவென்றால், இந்த அதிகாரிகள் எல்லாருமே ஊழல் பேர்வழிகளாக இருக்கலாம். இப்படி எல்லா மட்டத்தில் இருக்கிற அதிகாரிகளும் அநியாயம் செய்வதால், சாதாரண மக்கள் அவதிப்பட வேண்டியிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், உயர் அதிகாரிகளைக்கூட யெகோவா கவனித்துக்கொண்டிருக்கிறார் என்ற உண்மை நமக்கு ஆறுதலைத் தருகிறது. அதனால், யெகோவாவிடம் நாம் உதவி கேட்கலாம். நம் பாரத்தையெல்லாம் அவர்மேல் போட்டுவிடலாம். (சங். 55:22; பிலி. 4:6, 7) “தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்குத் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக யெகோவாவுடைய கண்கள் இந்தப் பூமி முழுவதையும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன” என்பது நமக்குத் தெரியும்.—2 நா. 16:9.
அப்படியென்றால், பிரசங்கி 5:8-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? ஒவ்வொரு அரசாங்க அதிகாரிக்கும் மேல் ஓர் உயர் அதிகாரி இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். அதைவிட முக்கியமாக, எல்லா அதிகாரிகளுக்கும் மேல் உன்னத அதிகாரியான யெகோவா இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். இன்று, தன் மகன் மூலம் அவர் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். அந்த மகனான இயேசு கிறிஸ்துவைத்தான் தன்னுடைய அரசாங்கத்தின் அரசராக நியமித்திருக்கிறார். எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிற சர்வ வல்லமையுள்ள கடவுளான யெகோவாவும் சரி, அவருடைய மகனும் சரி, எப்போதும் நீதியாகவும் நியாயமாகவும்தான் நடந்துகொள்வார்கள்.
அக்டோபர் 13-19
பைபிளில் இருக்கும் புதையல்கள் பிரசங்கி 7-8
‘துக்க வீட்டுக்குப் போங்கள்’
துக்கப்படுவோருக்கு ஆறுதல் அளியுங்கள்
12 துக்கத்தில் தவிப்பவர்களை சபையில் இருப்பவர்களாலும் ஆறுதல்படுத்த முடியும். (1 தெசலோனிக்கேயர் 5:11-ஐ வாசியுங்கள்.) “உடைந்த உள்ளம்” உள்ளவர்களை நீங்கள் எப்படிப் பலப்படுத்தலாம், எப்படி ஆறுதல்படுத்தலாம்? (நீதி. 17:22) “பேசுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, பேசாமல் இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது” என்பதை ஞாபகத்தில் வையுங்கள். (பிர. 3:7) “துக்கப்படுறவங்க அவங்களோட எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளியில சொல்றதுதான் நல்லது. அதனால, நீங்க செய்ய வேண்டிய ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா, அவங்க சொல்றத காதுகொடுத்து கேளுங்க, இடையில பேசாதீங்க” என்று கணவனை இழந்த டேலென் சொல்கிறார். யுனெயா என்பவருடைய அண்ணன் தற்கொலை செய்துகொண்டார். அவர் இப்படிச் சொல்கிறார்: “அவங்க எந்தளவு துக்கப்படுறாங்கனு உங்களால முழுசா புரிஞ்சுக்க முடியலன்னாலும், அவங்க எப்படி உணர்றாங்கனு புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்க. அதுதான் ரொம்ப முக்கியம்.”
வேதனையைச் சமாளிக்க மற்றவர்களுக்கு உதவுங்கள்
15 வில்லியம் என்ற சகோதரரைப் பற்றி இப்போது பார்க்கலாம். கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு அவருடைய மனைவி இறந்துவிட்டார். “என் மனைவிய பத்தி மத்தவங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி பேசுறப்ப, அவ மேல மத்தவங்க அன்பும் மரியாதையும் வெச்சிருந்தாங்கனு என்னால நல்லா புரிஞ்சுக்க முடியுது. இப்படி மத்தவங்க கொடுத்த ஆதரவு எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. எனக்கு ரொம்ப ஆறுதலாவும் இருந்துச்சு. என்னோட மனைவி எனக்கு ஒரு பொக்கிஷம் மாதிரி! என் வாழ்க்கையில அவ ரொம்ப உறுதுணையா இருந்தா” என்று அவர் சொல்கிறார். கணவரைப் பறிகொடுத்த லில்லி என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “என்கூட சேர்ந்து மத்தவங்க ஜெபம் பண்றப்பவும், ஒண்ணு ரெண்டு வசனங்கள வாசிக்கிறப்பவும் எனக்கு ஆறுதலா இருக்கும். மத்தவங்க என் கணவர பத்தி பேசுறதும், என் கணவர பத்தி நான் பேசுறப்போ மத்தவங்க காது கொடுத்து கேட்குறதும் எனக்கு உதவியா இருக்கு.”
“அழுகிறவர்களோடு அழுங்கள்”
16 துக்கப்படுகிற சகோதர சகோதரிகளுக்காக, அவர்களோடு சேர்ந்தோ அல்லது தனியாகவோ ஜெபம் செய்வது அவர்களுக்கு உதவியாக இருக்கும். அவர்களோடு சேர்ந்து ஜெபம் செய்யும்போது, ஒருவேளை உங்களுக்கு அழுகை வரலாம் அல்லது உங்கள் வார்த்தைகள் தடுமாறலாம். அதனால், ஜெபம் செய்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும், இதயத்திலிருந்து நீங்கள் செய்யும் ஜெபம் அவர்களுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கும். “சில சமயங்கள்ல சகோதரிகள் எனக்கு ஆறுதல் சொல்ல வர்றப்போ, ‘எனக்காக ஜெபம் செய்ய முடியுமா’னு அவங்ககிட்ட கேட்பேன். ஆரம்பத்துல வார்த்தைகள் வராம அவங்க தடுமாறுவாங்க. ஆனா ஒவ்வொரு தடவையும், கொஞ்ச நேரத்துலயே அவங்க வார்த்தைகள்ல இருக்குற தடுமாற்றம் சரியாயிடும். அதுமட்டுமில்ல, இதயத்துல இருக்குறதையெல்லாம் கொட்டி அவங்க ஜெபம் செய்வாங்க. அவங்களோட பலமான விசுவாசமும் அன்பும் அக்கறையும் என்னோட விசுவாசத்தை பலப்படுத்தியிருக்கு” என்று டேலென் சொல்கிறார்.
“அழுகிறவர்களோடு அழுங்கள்”
17 ஒவ்வொருவரும் எத்தனை நாட்களுக்குத் துக்கமாக இருப்பார்கள் என்பதை யாராலும் தெரிந்துகொள்ள முடியாது. ஒருவர் தன் அன்பானவரை மரணத்தில் பறிகொடுக்கும்போது, ஆரம்பத்தில் அவருடைய நண்பர்களும் சொந்தக்காரர்களும் அவருடன் இருப்பார்கள். ஆனால், சில மாதங்களிலேயே அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள். அதற்குப் பிறகும்கூட, அன்பானவரை மரணத்தில் பறிகொடுத்தவருக்கு ஆறுதல் தேவை. அதனால், அவருக்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருங்கள். “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 17:17) துக்கப்படுகிறவர்களுக்கு நம்முடைய உதவி தேவைப்படும்வரை, நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.—1 தெசலோனிக்கேயர் 3:7-ஐ வாசியுங்கள்.
18 துக்கப்படுகிறவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திடீரென்று சோகத்தில் மூழ்கிவிடலாம். வருஷாவருஷம் வருகிற ஏதோவொரு நாள்... சில வேலைகளைச் செய்கிற சமயம்... ஏதோவொரு இசை... ஃபோட்டோ... வாசனை... சத்தம்... அல்லது குறிப்பிட்ட ஒரு பருவகாலம்... இப்படி ஏதோவொரு காரணத்தால் அவர்கள் துக்கத்தில் மூழ்கிவிடலாம். தன் துணையை இழந்து துக்கத்தில் தவிக்கும் ஒரு சகோதரனுக்கோ சகோதரிக்கோ, தன்னுடைய துணை இல்லாமல் முதல் தடவையாக ஒரு விஷயத்தைச் செய்வது ரொம்ப வேதனையாக இருக்கலாம். உதாரணத்துக்கு மாநாட்டுக்கோ, நினைவுநாள் அனுசரிப்பு நிகழ்ச்சிக்கோ அல்லது வேறெதாவது நிகழ்ச்சிக்கோ போவது அவருக்கு ரொம்ப வேதனையாக இருக்கலாம். “என் மனைவி இறந்ததுக்கு அப்புறம் வந்த எங்களோட கல்யாண நாள், எனக்கு தாங்க முடியாத வலியையும் வேதனையையும் தரும்ணு நினைச்சேன் . . . அதை சமாளிக்குறது அவ்வளவு சுலபமா இருக்கல. ஆனா, நான் தனியா இருக்க கூடாதுங்கிறதுக்காக, நெருங்குன நண்பர்கள்கூட சேர்ந்து நேரம் செலவு செய்ய சில சகோதர சகோதரிகள் ஏற்பாடு செஞ்சாங்க” என்று ஒரு சகோதரர் சொல்கிறார்.
19 குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டும்தான் துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் தேவை என்று நினைத்துவிடாதீர்கள். “வருஷாவருஷம் வர்ற ஏதாவது ஒரு நாள்ல மட்டும் இல்லாம, வேற சமயங்கள்லயும் மத்தவங்க எனக்கு உதவுறதும்... நேரம் செலவு செய்றதும்... எனக்கு ரொம்ப பிரயோஜனமா இருக்கு . . . இந்த மாதிரி திட்டம் போடாம எதேச்சையா நடக்குற விஷயங்கள் ரொம்ப உதவியாவும் ஆறுதலாவும் இருக்கு” என்று யுனெயா சொல்கிறார். ஒருவருடைய துக்கத்தையோ தனிமை உணர்வையோ நம்மால் முழுமையாக நீக்கிப்போட முடியாது என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்காக சில விஷயங்களைச் செய்வதன் மூலம் நாம் அவர்களை ஆறுதல்படுத்தலாம். (1 யோ. 3:18) “கஷ்டமான ஒவ்வொரு அடியையும் நான் எடுத்து வைச்சப்போ, அன்பான மூப்பர்கள் என்னை வழிநடத்துனாங்க. அதுக்காக நான் யெகோவாவுக்கு ரொம்ப நன்றியோடு இருக்கேன். யெகோவா என்னை அவரோட கைக்குள்ள வைச்சு தாங்குறத என்னால உணர முடிஞ்சது” என்று கேபி சொல்கிறார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
‘இதனால் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்’
18 சில சமயங்களில், ஒரு சகோதரரோ அல்லது சகோதரியோ நம்மைக் கஷ்டப்படுத்திவிட்டால், அவர்களிடம் அதைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும் என்று நமக்குத் தோன்றும். ஆனால் அதற்கு முன்பு நம்மை நாமே இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்வது நல்லது. ‘என்ன நடந்தது என்று முழுமையாக எனக்குத் தெரியுமா?’ (நீதி. 18:13) ‘என்னைக் கஷ்டப்படுத்துவதற்காக இதை வேண்டுமென்றேதான் அவர் செய்தாரா?’ (பிர. 7:20) ‘நானும் எப்போதாவது இதுபோன்ற தவறைச் செய்திருக்கிறேனா?’ (பிர. 7:21, 22) ‘நான் இதைப் பற்றி அவரிடம் போய்ப் பேசினால், இருப்பதைவிட பிரச்சினை இன்னும் மோசமாகுமா?’ (நீதிமொழிகள் 26:20-ஐ வாசியுங்கள்.) நேரமெடுத்து நம்மை நாமே இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டால், அவர்கள்மேல் இருக்கிற அன்பினால் பிரச்சினையைப் பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டுவிடுவோம்.
அக்டோபர் 20-26
பைபிளில் இருக்கும் புதையல்கள் பிரசங்கி 9-10
பிரச்சினைகளைச் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள்
ஒருபோதும் ‘யெகோவாமீது கோபம்கொள்ளாதீர்’
20 நம்முடைய பிரச்சினைகளுக்கான உண்மையான காரணத்தை மறந்துவிடாதீர்கள். சில பிரச்சினைகளுக்கு நாம்தான் காரணம் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். (கலா. 6:7) பிரச்சினைகளுக்கு யெகோவாவைக் குற்றப்படுத்தக் கூடாது. ஏன்? இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒரு காரை படு வேகமாக ஓட்ட முடியும் என்பதற்காக, அதன் டிரைவர் வளைவிலும் அதைப் படு வேகமாக ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டு விடுகிறது. விபத்திற்கு அந்தக் காரின் தயாரிப்பாளரைக் குறைசொல்ல முடியுமா? முடியாது. அது போலவே, யெகோவா நமக்குச் சுயமாகத் தீர்மானிக்கும் சுதந்திரத்தைத் தந்திருக்கிறார். அதே சமயத்தில், ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கான வழிமுறைகளையும் வழங்கியிருக்கிறார். அப்படியிருக்க, நாம் செய்யும் தவறுகளுக்கு கடவுளை எப்படிக் குற்றப்படுத்த முடியும்?
21 நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் நாம் செய்யும் தவறுகள்தான் காரணம் என்பது எப்போதுமே உண்மை அல்ல. “எதிர்பாரா வேளைகளில் ஏற்படுகிற அசம்பாவிதங்களால்” சில துயரங்கள் நேரிடுகின்றன. (பிர. 9:11, NW) அதோடு, துன்பங்களுக்கெல்லாம் முக்கிய காரணம் பிசாசாகிய சாத்தான் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. (1 யோ. 5:19; வெளி. 12:9) அவன்தான் நம் எதிரி, யெகோவா அல்ல.—1 பே. 5:8.
மனத்தாழ்மையுள்ளவர்கள் யெகோவாவுக்குத் தங்கமானவர்கள்!
10 நமக்கு மனத்தாழ்மை இருந்தால், நாம் நினைப்பதுபோல்தான் எல்லாமே நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டோம். வாழ்க்கையை உள்ளபடி ஏற்றுக்கொள்வோம். அப்போது வாழ்க்கையை நடத்துவது சுலபமாக இருக்கும். ஏனென்றால், சிலசமயங்களில் அநியாயமும் அக்கிரமமும் நம் கண்ணில் படலாம். “வேலைக்காரர்கள் குதிரைமேல் உட்கார்ந்து போவதையும், இளவரசர்கள் வேலைக்காரர்களைப் போல் நடந்துபோவதையும் பார்த்தேன்” என்று ஞானியான சாலொமோன் ராஜா சொன்னார். (பிர. 10:7) திறமைசாலிகளுக்கு எல்லா சமயத்திலும் மதிப்பு கிடைப்பதில்லை. ஆனால், அவ்வளவாகத் திறமை இல்லாதவர்களுக்குச் சிலசமயங்களில் அதிக மதிப்பு கிடைக்கிறது. இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்காமல், வாழ்க்கையின் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதுதான் ஞானமானது என்று சாலொமோன் சொன்னார்.—பிர. 6:9.
பயனுள்ள பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கிறீர்களா?
நாம் வாழ்க்கையை அனுபவித்து மகிழ வேண்டுமென்றே யெகோவா விரும்புகிறார் என பைபிள் தெளிவாகக் கூறுகிறது. உதாரணமாக, “பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர் வகைகளையும் முளைப்பிக்கிறார். மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டு பண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்” என்று சங்கீதம் 104:14, 15 சொல்கிறது. நாம் உயிர் வாழத் தேவையான உணவை யெகோவா வழங்குகிறார். அவர் பயிர்களை விளையச் செய்கிறார், அதனால்தான் நமக்குத் தானியமும் எண்ணெயும் திராட்சமதுவும் கிடைக்கின்றன. உயிர் வாழ திராட்சமது அவசியமில்லை என்றாலும் ‘மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்குவதற்காக’ இதையும் அவர் தருகிறார். (பிர. 9:7; 10:19) ஆம், நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமென்றும் நம் இதயம் ‘சந்தோஷத்தால் நிரம்பி’ வழிய வேண்டுமென்றும் யெகோவா விரும்புகிறார்.—அப். 14:16, 17.
2 ஆகவே, எப்போதாவது ‘வானத்துப் பறவைகளைக் கூர்ந்து கவனிப்பதற்கோ,’ “காட்டுப் பூக்கள் பூப்பதை” பார்ப்பதற்கோ நேரம் செலவிடுவதில் எந்தத் தவறுமில்லை. இவையெல்லாம் நமக்குப் புத்துணர்ச்சி அளிக்கலாம், நம் வாழ்வுக்கு இனிமை சேர்க்கலாம். (மத். 6:26, 28; சங். 8:3, 4) ஆனந்தமும் ஆரோக்கியமுமான வாழ்வு “கடவுள் அளித்த நன்கொடை.” (பிர. 3:12, 13, பொது மொழிபெயர்ப்பு) பொழுதுபோக்கிற்காக நாம் செலவிடும் நேரமும் யெகோவா தந்த நன்கொடையின் ஓர் அம்சமே. ஆகவே, கடவுளுக்குப் பிரியமான விதத்தில் அதை நாம் பயன்படுத்த வேண்டும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
“பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே” பேசுங்கள்
11 தீங்கிழைக்கும் வீண்பேச்சு, இல்லாததையும் பொல்லாததையும் பேசுதல். பொதுவாக மனிதர்கள் அடுத்தவர்களைப் பற்றி அளவளாவுகிறார்கள். ஆனால், மற்றவர்களைப் பற்றி பேசுவதே தவறா? மற்றவர்களைப் பற்றி ஏதாவது நல்ல விஷயத்தையோ உபயோகமான விஷயத்தையோ பேசினால் அதில் எந்தத் தவறுமில்லை. உதாரணமாக, சமீபத்தில் யார் ஞானஸ்நானம் பெற்றார்கள், ஆன்மீக ரீதியில் யாருக்கெல்லாம் உதவி தேவை என்பதைப் பற்றி பேசுவதில் தவறில்லை. முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்கள் மற்றவர்களுடைய நலனில் அதிக அக்கறை காட்டினார்கள்; சக விசுவாசிகளைப் பற்றிய அவசியமான தகவலைப் பரிமாறிக்கொண்டார்கள். (எபேசியர் 6:21, 22; கொலோசெயர் 4:8, 9) என்றாலும், உண்மைகளைத் திரித்துக் கூறினால் அல்லது அந்தரங்க விஷயங்களை அலசினால் அது தீங்கிழைக்கும் வீண்பேச்சாகிறது. இதைவிட அபாயம் என்னவென்றால், அது மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுவதற்கு வழிநடத்தலாம், அப்படிப்பட்ட பேச்சு பயங்கர கெடுதலை உண்டாக்கிவிடும். இல்லாததையும் பொல்லாததையும் பேசுவது என்றால் “ஒருவர்மீது பொய் குற்றம் சாட்டி . . . அவருடைய நற்பெயரைக் கெடுத்து அவர்மீது களங்கம் கற்பிப்பதாகும்.” உதாரணமாக, இயேசுவின் நற்பெயரைக் கெடுப்பதற்காக பரிசேயர்கள் அவர்மீது அபாண்டமாகப் பழிசுமத்தினார்கள். (மத்தேயு 9:32-34; 12:22-24) இல்லாததையும் பொல்லாததையும் பேசுவது பெரும்பாலும் சண்டை சச்சரவுக்கு வழிவகுக்கிறது.—நீதிமொழிகள் 26:20.
12 பேசும் திறன் எனும் பரிசை ஒருவர் அவதூறு பேசவோ பிரிவினை ஏற்படுத்தவோ பயன்படுத்தினால் அவரை யெகோவா பொறுத்துக்கொள்ள மாட்டார். ‘சகோதரர்களுக்கு இடையே சண்டை சச்சரவுகளை மூட்டிவிடுகிறவர்களை’ அவர் வெறுக்கிறார். (நீதிமொழிகள் 6:16-19) “இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன்” என்பதற்கான கிரேக்க வார்த்தை டையபோலோஸ்; இது சாத்தானுடைய பட்டப்பெயர்களில் ஒன்று. கடவுளுக்கு எதிராக அவன் இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவனாக இருப்பதால் “பிசாசு” என்று அழைக்கப்படுகிறான். (வெளிப்படுத்துதல் 12:9, 10) இப்படிப்பட்ட பேச்சைத் தவிர்க்காவிட்டால் ஒரு கருத்தில் நாமும் பிசாசைப் போலாகிவிடுவோம். இல்லாததையும் பொல்லாததையும் பேசுவது பாவ இயல்புக்குரிய செயல்களான ‘கருத்துவேறுபாடுகளையும்’ ‘பிரிவினைகளையும்’ தூண்டுவதால் கிறிஸ்தவ சபையில் அதற்கு இடமில்லை. (கலாத்தியர் 5:19-21) எனவே, ஒருவரைப் பற்றி உங்கள் காதுக்கு எட்டிய தகவலை மற்றவர்களிடம் சொல்வதற்கு முன்பு உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இது உண்மையா? இதை நான் மற்றவர்களிடம் சொன்னால் அவர்மீது அன்பு காட்டுவதாக இருக்குமா? இந்த விஷயத்தை நான் மற்றவர்களிடம் சொல்லித்தான் ஆகவேண்டுமா?’—1 தெசலோனிக்கேயர் 4:11-ஐ வாசியுங்கள்.
அக்டோபர் 27–நவம்பர் 2
பைபிளில் இருக்கும் புதையல்கள் பிரசங்கி 11-12
சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்
படைப்பைப் பயன்படுத்தி யெகோவாவைப் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்
16 குடும்பங்கள் அமைதியான சூழலில் ஜாலியாக சந்தோஷமாக இருக்க யெகோவாவுடைய படைப்புகள் உதவி செய்கின்றன. இதனால் குடும்பத்தில் இருக்கிறவர்களுக்குள் அன்பு அதிகமாகிறது. “சிரிப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது,” “துள்ளிக் குதிப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது” என்று பைபிளும் சொல்கிறது. (பிர. 3:1, 4 அடிக்குறிப்பு.) நமக்குப் பிடித்த விஷயங்களையெல்லாம் செய்து சந்தோஷமாக இருப்பதற்காகவே அழகழகான இடங்களை இந்தப் பூமியில் யெகோவா படைத்து வைத்திருக்கிறார். குடும்பத்தோடு இயற்கையைச் சுற்றிப்பார்க்கப் போவது நிறைய பேருக்குப் பிடித்திருக்கிறது. அவர்கள் இயற்கைக் காட்சிகள் இருக்கிற கிராமங்கள்... மலைப்பகுதிகள்... கடற்கரைகள்... போன்ற இடங்களுக்கெல்லாம் போகிறார்கள். சில பிள்ளைகளுக்கு பார்க்கில் ஓடியாடி விளையாடுவது பிடிக்கும். மிருகங்களைப் பார்த்து ரசிப்பது பிடிக்கும். ஆற்றில், ஏரியில், கடலில் நீச்சல் அடிக்க பிடிக்கும். இயற்கையை ரசித்துக்கொண்டே பொழுதைப் போக்குவதற்கு யெகோவாவுடைய படைப்பில் எவ்வளவு அருமையான விஷயங்கள் இருக்கின்றன!
கடவுள் தந்திருக்கும் உயிர் என்ற பரிசை உயர்வாக மதியுங்கள்
6 பைபிள், நாம் எப்படி ஆரோக்கியமாக இருக்கலாம்... எதைச் சாப்பிடலாம்... எதைச் சாப்பிடக் கூடாது... என்றெல்லாம் சொல்லும் ஒரு புத்தகம் கிடையாது. ஆனால், இந்த விஷயங்களைப் பற்றி யெகோவா என்ன யோசிக்கிறார் என்று அது சொல்கிறது. உதாரணத்துக்கு, நம் உடலைக் கெடுக்கும் “தீய காரியங்களை” நாம் விட்டொழிக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பதாக அது சொல்கிறது. (பிர. 11:10) அளவுக்கு அதிகமாகக் குடிக்கவோ சாப்பிடவோ கூடாதென்றும் பைபிள் சொல்கிறது; ஏனென்றால், அந்த இரண்டுமே நம் உயிருக்கு ஆபத்தானவை. (நீதி. 23:20) எதை... எவ்வளவு... சாப்பிட வேண்டும் அல்லது குடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் விஷயத்தில் நாம் சுயக்கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்.—1 கொ. 6:12; 9:25.
7 கடவுள் தந்திருக்கும் உயிர் என்ற பரிசுக்காக நாம் மனதார நன்றி காட்டுவதற்கு ஒரு வழி என்ன? நம்முடைய யோசிக்கும் திறனைப் பயன்படுத்தி நல்ல முடிவுகளை எடுப்பதுதான். (சங். 119:99, 100; நீதிமொழிகள் 2:11-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்பதையெல்லாம் நன்றாக யோசித்து முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை, நமக்கு ஏதாவது ஒரு சாப்பாடு ரொம்ப பிடிக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், அது நம் உடம்புக்குச் சேராது என்று நமக்குத் தெரிந்திருக்கலாம். அப்படியென்றால், அதைச் சாப்பிடாமல் இருப்பதுதானே புத்திசாலித்தனம்? அதேபோல், நம் உடம்புக்குத் தேவையான அளவுக்கு நன்றாகத் தூங்கும்போதும்... தவறாமல் உடற்பயிற்சி செய்யும்போதும்... நம்மை சுத்தமாக வைத்துக்கொள்ளும்போதும்... நம் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளும்போதும்... நாம் புத்திசாலிகள் என்று காட்டுவோம்.
‘கடவுளுடைய வார்த்தையின்படி செய்கிறவர்களாக இருங்கள்’
2 யெகோவாவுடைய ஊழியர்களாக நாம் எல்லாருமே சந்தோஷமாக இருக்கிறோம். நம்முடைய சந்தோஷத்துக்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒரு முக்கிய காரணம்: கடவுளுடைய வார்த்தையை நாம் தினமும் படிப்பதும், அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும்தான்.—யாக்கோபு 1:22-25-ஐ வாசியுங்கள்.
3 ‘கடவுளுடைய வார்த்தையின்படி செய்வதால்’ நமக்கு நிறையப் பலன்கள் கிடைக்கின்றன. அதில் ஒரு முக்கியமான பலன்: நம்மால் யெகோவாவைச் சந்தோஷப்படுத்த முடிகிறது. யெகோவாவைச் சந்தோஷப்படுத்துகிறோம் என்ற உணர்வு நமக்கும் சந்தோஷத்தைத் தருகிறது. (பிர. 12:13) அதோடு, கடவுளுடைய வார்த்தையின்படி செய்வதால் நம்முடைய குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கிறது, சகோதர சகோதரிகளிடம் நல்ல நட்பையும் வைத்துக்கொள்ள முடிகிறது. இது உண்மை என்பதை நீங்களே ருசித்திருப்பீர்கள்! அதுமட்டுமல்ல, யெகோவாவை வணங்காத மக்களுக்கு வருகிற நிறையப் பிரச்சினைகளை நம்மால் தவிர்க்க முடிகிறது. இதைப் பற்றி தாவீது ராஜாகூட சொன்னார். அவர் எழுதிய ஒரு பாடலில், யெகோவாவின் சட்டங்கள், ஆணைகள், நீதித்தீர்ப்புகள் பற்றியெல்லாம் சொல்லிவிட்டு, கடைசியில் இப்படி முடித்தார்: “அவற்றின்படி நடக்கும்போது மிகுந்த பலன் கிடைக்கிறது.”—சங். 19:7-11.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
பைபிளின் ஆசிரியர் யார்?
2 விஷயங்கள் கடவுளுடைய வழிநடத்துதலால் கொடுக்கப்பட்டாலும், எழுத்தாளர்கள் அதைத் தங்களுடைய பாணியில் எழுதினார்கள். சொல்லப்போனால், கடவுளுடைய செய்தியை எழுதுவதற்கு அவர்கள் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. உதாரணமாக, பைபிளிலுள்ள பிரசங்கி புத்தகத்தின் எழுத்தாளர், ‘இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க . . . வகைதேடினேன்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்’ என்று சொல்கிறார். (பிரசங்கி 12:10) தான் எழுதிய சரித்திரப்பூர்வ பதிவைத் தொகுப்பதற்கு எஸ்றா குறைந்தது 14 தகவல் மூலங்களிலிருந்து செய்திகளைச் சேகரித்தார்; ‘தாவீது ராஜாவின் நாளாகமக் கணக்கு,’ ‘யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகம்’ போன்றவை அவற்றில் சில. (1 நாளாகமம் 27:24; 2 நாளாகமம் 16:11) சுவிசேஷ எழுத்தாளரான லூக்கா, ‘ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்து . . . அவைகளை ஒழுங்காய் எழுதினார்.’—லூக்கா 1:3, 4.
3 பைபிளின் சில புத்தகங்கள் அவற்றை எழுதிய எழுத்தாளருடைய சுபாவங்களை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, லேவி என்றழைக்கப்பட்ட மத்தேயு, இயேசுவின் சீஷராவதற்கு முன்னால் வரி வசூலிப்பவராக இருந்தார்; அதனால், எண்ணிக்கையைக் குறிப்பிடுகையில் விசேஷ கவனம் செலுத்தினார். இயேசு ‘முப்பது வெள்ளிக்காசுகளுக்கு’ காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ற விவரத்தைச் சொன்ன சுவிசேஷ எழுத்தாளர் இவர் ஒருவரே. (மத்தேயு 27:3; மாற்கு 2:14) வைத்தியரான லூக்கா மருத்துவ விவரங்களைத் துல்லியமாக எழுதியுள்ளார். உதாரணமாக, எப்படிப்பட்ட நிலையிலிருந்த சிலரை இயேசு சுகப்படுத்தினார் என விளக்கியபோது, ‘கடும் ஜுரம்,’ “குஷ்டரோகம் நிறைந்த” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். (லூக்கா 4:38; 5:12; கொலோசெயர் 4:14) பெரும்பாலும், எழுத்தாளர்கள் தங்களுடைய சொந்த வார்த்தைகளிலும் பாணியிலும் கருத்துகளை எழுதுவதற்கு யெகோவா அனுமதித்தார் என்பது இதன்மூலம் தெரியவருகிறது. அதேசமயத்தில், தம்முடைய செய்தியைத் தெரிவிப்பதற்கும் எழுதப்பட்டவை துல்லியமாக இருப்பதற்கும் அவர்களுடைய எண்ணங்களை அவர் வழிநடத்தினார்.—நீதிமொழிகள் 16:9.