ஐ.நா.—அது நாடுகளை ஐக்கியப்படுத்தியிருக்கிறதா?
“நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்தை யார், எப்பொழுது கொண்டுவர முடியும்?” சமாதானம்—அது நிலைக்குமா? என்று 1942-ல் பிரசுரிக்கப்பட்ட சிறு புத்தகத்தில் யெகோவாவின் சாட்சிகள் கேட்ட கேள்விகள் இவை. இரண்டாம் உலக மகா யுத்தத்தால் சர்வதேச சங்கம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் அல்லது பைபிள் குறிப்பிடுவது போல் ‘பாதாளத்தில் அடைக்கப்பட்ட’ நிலையில் இருந்தது. (வெளிப்படுத்துதல் 17:8) இப்படியாக சர்வதேச சங்கம் செயலின்மை என்ற பாதாளத்தில் இருந்துவிடுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
அந்த சமயத்திலேயே யெகோவாவின் சாட்சிகள் அதற்கான பதிலை பைபிளில் கண்டுபிடித்தனர். இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போதே, சமாதானம் என்ற சிறு புத்தகம் பின்வருமாறு முன்னறிவித்தது: “உலக தேசங்களின் கூட்டமைப்பு மீண்டும் எழும்பும்.” இந்த முன்னறிவிப்பு நிறைவேறினதா?
ஏப்ரல் 1945-ல் சான் பிரான்ஸிஸ்கோவின் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. ஐக்கிய நாட்டு சபைக்கான ஒரு சாசணத்தை (உரிமைப் பத்திரம்) நிறைவேற்றுவதற்காக அந்த மாநாடு கூட்டப்பட்டது. மாபெரும் திட்டம் (The Great Design) என்ற புத்தகத்தில், கொர்னீலியா மீக்ஸ், அந்த மாநாடு துவங்குவதற்கு முன்பு என்ன ஏற்பட்டது என்பதை விளக்குகிறார்: “இந்தப் புதிய காரியத்தில் கடவுளுடைய துணை கோரப்பட்டு வாஷிங்டன் கத்தீட்ரலில் ஒரு பெரிய கவர்ச்சியான ஆராதனை நடத்தப்பட்டது. தாங்கள் செய்ய திட்டமிட்டிருக்கும் காரியத்தில் கடவுளுடைய உதவியைத் தங்களுடைய சொற்பொழிவின் ஆரம்பத்திலும் முடிவிலும் நாடுகிறவர்களாயிருந்த பேச்சாளர்கள் எத்தனைபேர் என்பது குறிப்பிடத்தக்கதாயிருந்தது.”
தங்களுடைய சாசணத்தில் கடவுளைக் குறிப்பிட வேண்டும் என்று சிலர் விருப்பம் தெரிவித்தனர். மற்றும் சிலருக்கு அது விருப்பமில்லை. அந்த நாடுகள் ஐக்கியப்படவில்லை, எனவேதான் “கடவுள்” நிராகரிக்கப்பட்டார். இப்படிப்பட்ட கருத்து வேற்றுமை, இதைப் பின்தொடர்ந்து என்ன ஏற்படும் என்ற காரியத்திற்கு முன்னெச்சரிப்பாக இருந்தது. இப்படியாக 51 தேசங்கள் அந்த ஐ.நா. உரிமைப் பத்திரத்தில் கையொப்பமிட்டனர். செயலற்ற நிலையிலிருந்த சர்வதேச சங்கம் அதன் சாம்பலிலிருந்து வெளிவந்தது.
ஐ.நா. எந்த விதத்தில் சர்வதேச சங்கத்திலிருந்து வித்தியாசப்பட்டது? சமாதானத்தைக் காத்துக்கொள்வதில் கூடுதலான வெற்றியைக் கண்டிருக்கிறதா? அது உண்மையிலேயே நாடுகளை ஐக்கியப்படுத்தியிருக்கிறதா?
தலைமைக் காரியதரிசி
அதிக பலமுள்ள திறமை வாய்ந்த அமைப்புக்கு அஸ்திபாரம் ஃப்ராங்க்லின் D. ரூஸ்வல்ட், வின்ஸ்டன் சர்ச்சில், மற்றும் ஜோசப் ஸ்டாலின் ஆகியவர்களாலும் அவர்களுடைய ஆலோசகர்களாலும் போடப்பட்டது. அந்த மனிதர்கள் மூன்று பெரும் தேசங்களை (முப்பெரும் வல்லாட்சிகளை)—ஐக்கிய மாகாணங்கள் ஐக்கிய ராஜ்யம் மற்றும் சோவியத் யூனியன் ஆகிய தேசங்களை மாஸ்கோ, டேரான், யால்டா மற்றும் டம்பர்ட்டன் ஓக்ஸ் (வாஸிங்டன் D.C.) ஆகிய இடங்களில் நடந்த மாநாடுகளில் பிரதிநிதித்துவம் செய்தனர். உண்மையில், ஜனாதிபதி ரூஸ்வல்ட் தானே “ஐக்கிய நாட்டு சங்கம்” என்ற பெயரை முடிவில் தெரிந்தெடுத்தார்.
ஐ.நா.-வின் பொது மாநாடு தனது முதல் கூட்டத்தை ஜனவரி 1946-ல் நடத்தியது. பிப்ரவரி 1-க்குள்ளாக ஐ.நா. அதன் முதல் தலைமைக் காரியதரிசியை அதாவது நார்வேயை சேர்ந்த திரிக்வீ லீ-யை நியமித்தது. தனது நியமிப்பை அவர் எப்படி கருதினார்? “அமைதியின்மை, வறுமை மற்றும் வல்லாட்சிக்கான போட்டி மிகுந்த இந்த உலகில் சமாதானத்தையும் முன்னேற்றத்தையும் நிலைநாட்ட அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய அகில உலக சங்கத்தின் தலைமைக் காரியதரிசி பதவிக்கு நான் பொறுத்தப்பட்டிருக்கிறேன். என்னுடைய கனவுகள் காணாத ஒரு சவாலாக அது இருந்தது. . . . நான் என்னையே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்ட கேள்வி, இந்த மாபெரும் பொறுப்பு ஏன் நார்வேயை சேர்ந்த ஒரு வழக்கறிஞனுக்கு வரவேண்டும்?”
இதற்கு முன் இருந்த சர்வதேச சங்கத்தைப் போலவே இந்தச் சங்கத்தின் தலைமை செயலாளரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படவில்லை. ஆண்ட்ரூ பாய்டு என்ற எழுத்தாளர்படி, தலைமை செயலாளருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு எந்தளவுக்குச் செல்லும் என்பதை ஐ.நா.வின் ஸ்தாபகர்கள் ஊகிக்கவில்லை. ஒரு மாவுப் பானை மீது பதினைந்து மனிதர்கள் (Fifteen Men on a Powder Keg) என்ற தனது புத்தகத்தில் பாய்டு கூறுகிறார்: “இந்தப் புதிய உலக அமைப்பின் பிரதான அதிகாரி அதன் சர்வதேச சக்திகளையும் இயக்க வேண்டும் என்ற காரியத்தை அவர்கள் [அந்த முப்பெரும் தலைவர்கள்] சற்றும் நினைத்துப் பார்க்க வில்லை.” அவர் தொடர்ந்து சொல்கிறார்: “அவரைத் தங்கள் உயிரினமாக, ஒரு அப்பாவி சிருஷ்டியாக நோக்கினார்கள்.”
என்றபோதிலும் ஐ.நா.வின் சாசணத்தில் 99-வது ஷரத் மிகத் தெளிவாக குறிப்பிடுவதாவது: “செயலாளர் தன்னுடைய கருத்தில் சர்வதேச சமாதானமும் பாதுகாப்பும் காக்கப்படுவது ஆபத்திலிருக்கிறது என்று உணர்ந்தால் அந்தக் காரியத்தை பாதுகாப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வரலாம்.” (சாய்வெழுத்து எங்களுடையது) திரிக்வீ லீ எழுதியதாவது: “இந்த சட்ட பிரிவு ஐக்கிய நாட்டு சங்கத்தின் செயலாளருக்கு, இதுவரை எந்த தனிப்பட்ட நபரோ அல்லது எந்த ஒரு தேசத்தின் பிரதிநிதியோ பெற்றிராத உலக அரசியல் பொறுப்பை கொடுத்திருக்கிறது.” எனவே இவர் மிக வல்லமை வாய்ந்த நபராக இருப்பார்.
பிரச்னைகள் எழும்போது அவற்றை சமாளித்து மேற்கொள்ள செயலாளரின் செல்வாக்கு 1961-ல் ஏற்பட்ட காங்கோ பிரச்னையின்போது, திரிக்வீ லீ-க்குப் பின் பதவியேற்ற டேக் ஹாமர்ஸ்கோல்ட் அந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர பதினெட்டு நாடுகளிலிருந்து 20,000 பேர் கொண்ட சேனையையும் தொழில் வல்லுநர்களையும் திரட்டிய அளவுக்கு வளர்ந்தது. 1964-ல் அந்த பதவியில், ஊ தாண்ட், ஒரே சமயத்தில் செயற்பட்ட ஐ.நா.வின் சமாதானம் காக்கும் முப்பெரும் படைப் பிரிவுகளுக்கு காரணமாய் இருந்தார்.
தற்போதைய தலைமைக் காரியதரிசி பெரூ நாட்டைச் சேர்ந்த சேவியர் பீரெஸ் டி கியூலர் இன்றும் சைப்ரலிலும் மத்திய கிழக்கிலும் செயல்பட்டு வரும் அமைதி காக்கும் ஐ.நா. படையை இயக்கி வருகிறார். மேலும் அவர் நியூ யார்க்கிலுள்ள ஐ.நா. தலைமை காரியாலயத்தில் இருக்கும் 7,400 பேர் கொண்ட தலைமைச் செயலகத்தின் தலைவராகவும் இருக்கிறார். மற்ற நாடுகளில் ஐ.நா.-வின் ஆசி பெற்ற துறைகளில் சுமார் 19,000 பேர் பணி புரிகின்றனர். ஆகிலும், இந்தளவுக்கு மானிட வாய்ப்பு வளமுடையதாக இருந்தப் போதிலும் கடந்த 40 ஆண்டுகளில் போர்கள் ஏற்படாத வண்ணம் அவற்றை தடுத்து நிறுத்துவதில் ஐ.நா. திறமை வாய்ந்த நிறுவனமாக நிரூபித்திருக்கிறதா?
அது குலைக்கிறது, ஆனால் கடிக்க முடியாது
அந்தக் கடைசி கேள்விக்குப் பதில் ஆம் என்றும் இல்லை என்றும் இருக்க வேண்டும். 1919-ல் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சங்கம் இருபது ஆண்டுகளுக்குப் பின்பு இரண்டாம் உலக மாக யுத்தம் ஏற்பட்டபோது மரித்தது. ஸ்தாபிக்கப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்கு பின்பு ஐ.நா. இன்னும் நின்று கொண்டிருக்கிறது. ஒரு மூன்றாம் உலக மகா யுத்தம் இன்னும் ஏற்படவில்லையென்றாலும் பயங்கரமான பல யுத்தங்கள் ஏற்பட்டு லட்சக்கணக்கான ஆட்கள் அதன் கொடிய பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். கொரியா போர் (1950-53), மத்திய கிழக்கு போர் (1948-49, 1967, 1973), இந்தோ சீனா/வியட்நாம் போர் (1945-54 மற்றும் 1959-75) ஆகிய போர்கள் உடனே நம் மனதிற்கு வருகின்றன. எனவே தர்க்கரீதியான கேள்வி, ஏன் ஐ.நா.-வால் அந்தப் போர்களை தடுக்க முடியவில்லை? என்தாகும்
ஐ.நா.-வின் அங்கத்தினர் எந்தளவுக்கு அது திறம்பட செயல்படுவதற்கு அனுமதிக்கிறார்களோ அந்தளவுக்கு இந்த அமைப்பு திறம்பட்ட ஒன்றாய் நிகழும் என்று ஐ.நா.-வின் அதிகாரிகள் பதிலளிக்கின்றனர். போலந்து நாட்டின் வெளியுறவு மந்திரி திரு. ஸ்டீஃபன் ஓல்ஸோஸ்கி மே 9, 1985 தேதிட்ட தனது கடிதத்தில் குறிப்பிட்டதாவது: “அரசியல் நோக்கங்களில் உறுப்பு நாடுகளின் தகுந்த பிரதிபலிப்பும் ஆதரவும் இருந்தால்தான் இந்த அமைப்பின் பரிபூரண தீர்மானங்கள் எதிர்பார்க்கப்பட்ட நடைமுறையான பலன்களைக் கொடுக்க முடியும். இல்லாவிட்டால், நல்ல பலன்களைக் காணமுடியாது. திடீர் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் பாதையில் செல்வதை நிறுத்தி அதை மாற்றியமைப்பதில் மனிதவர்க்கம் வெற்றிபெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.”
எனவே ஐ.நா. ஊக்குவிக்கும் சக்தியாக மட்டுமே இருக்க முடியும், தடுத்து நிறுத்தும் அதிகாரத்தையுடைய காவல்துறை அதிகாரத்தை அல்லது சக்தியைக் கொண்டில்லை. அது உண்மையில் ஓர் உலக பட்டி மன்றமாகத்தான் இருக்கிறது. தேசங்கள் விருப்பப்பட்டால் தங்களுடைய குறைகளை எடுத்துச் சொல்வதற்குரிய வாக்குவாதம் நடத்தும் இடமாக இருக்கிறது. முன்னாள் செயலாளர் கர்ட் உவால்தீம் எழுதினார்: அவர்கள் பிரச்னையை பாதுகாப்பு சபையிடம் கொண்டுவர தயாராக இல்லை என்றால், ஐக்கிய நாட்டு சபை உதவி செய்ய முடியாது . . . பாதுகாப்பு சபையின் தீர்மானங்களிலிருந்து வழிவிலகுதல், அல்லது அசட்டை செய்தல் அதன் கெளரவத்தை அழித்து நிலையை பலவீனப்படுத்துகிறது . . . இது ஐக்கிய நாடுகள் சபையின் சரித்திரத்திலே காணப்படும் மிக ஆபத்தான ஒரு போக்கு என்று நான் கருதுகிறேன்.”
என்றபோதிலும் தேசங்கள் தங்களுடைய பிரச்னைகளை ஐ.நா.-வில் சமர்ப்பித்தால் அது அநேகமாக ஒருவரையொருவர் குற்றம் கண்டுபிடிக்கும் விதமாக ஆகிவிடுகிறது. ஐ.நா. அரசியல் பிரச்சார ஸ்தலமாக ஆகிவிடுகிறது. இப்படியிருக்க நீங்கள் ஒருவேளை பின்வருமாறு கேட்கக்கூடும். 1 எப்படி அதன் செல்வாக்கை சமாதானத்திற்காக பயன்படுத்தக்கூடும்? ஐ.நா.-வின் அதிகாரிகள் கொடுக்கும் விடை, ஐ.நா. பிரச்னைகளை பொதுபடையாக வெளிப்படுத்தி உலகத்தினுடைய அபிப்பிராயங்களை மாற்றியமைப்பதன் மூலம் அரசாங்கங்கள் தகுந்த விதத்தில் பிரதிபலிக்கும்படியாகச் செய்கிறது. ஆனால், அதுதானே ஒரு போர் எற்படாத வண்ணம் அதை தடுத்து நிறுத்த எந்தவிதமான இராணுவ நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத நிலையிலிருக்கிறது. அப்படியிருக்க ஐ.நா.-வின் சொந்த இராணுவ படைபலத்தைப் பற்றியது என்ன?
ஐ.நா.-வின் ஒரு பிரசுரம் இப்படியாக பதிலளிக்கிறது. இந்த இராணுவம் [பாதுகாப்பு குழுவினால் அல்லது பேறவையால் அதிகாரமளிக்கப்பட்டால்] போர் மீண்டும் எழுவதை தடுப்பதற்கும் அமைதி நிலைநாட்டப்பட்டு அதை காத்துக் கொள்வதற்கும் துணை புரிகிறது. இதற்காகவே அமைதிக்குரிய ஒப்பந்த நடவடிக்கைகள், அதற்கான வாய்ப்புகளை கவனித்தல், உண்மைகளை கண்டுபிடித்தல் போன்ற அதிகாரம் அமைதி காக்கும் படை பிரிவினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. . . . அவர்கள் ஆயுதம் தரித்தவர்களாய் இருந்த போதிலும் தங்களுடைய போர் ஆயுதங்களை தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். (சாய்வெழுத்து எங்களுடையது.) இப்படியாக, மற்றவர்கள் போரில் ஈடுபடாதபடி அறிவுரை மூலம் தூண்டி செயல்மாற்றச் செய்வதும், அதில் தாங்கள் ஈடுபடுவதை தவிர்ப்பதுமே அவர்களுடைய நோக்கம்.
எனவே, இது உண்மையில் ஐ.நா.-வை என்னவாக ஆக்கியிருக்கிறது? குலைப்பதற்கு அனுமதிக்கப்பட்டு ஆனால் கடிப்பதற்கு அனுமதிக்கப்படாத காவல் நாயாக ஆக்கியிருக்கிறது. ஆனால், குலைக்கும் நாய் எச்சரிப்புக் குரலையாவது எழுப்புகிறது. அப்படியென்றால் ஐ.நா. ஏன் திறமையற்றுineffective காணப்டுகிறது?
உண்மையான வல்லமை எங்கே இருக்கிறது
ஆண்ட்ரூ பாய்டு, கருத்துபடி, ஐ.நா.-வின் பிரச்னைகள் முப்பெரும் வல்லாட்சிகளால் அதன் சாசனத்திலேயே இணைக்கப்பட்டுவிட்டது. அவர் விளக்குகிறார்: “தாங்கள் ஏற்கனவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் அமைப்பு முறையை தீர்மானித்து விட்டார்களென்றும், அது மகா வல்லாட்சிகளால் கட்டுப்படுத்தப்படும் என்றும், மற்ற சிறு உறுப்பு நாடுகளிடம் சாதாரணமாக சொல்லிவிட்டனர் . . . இந்த முப்பெரும் வல்லாட்சிகளால் (சீனரும் ப்ரான்சும் விசேஷமான கூட்டு உறுப்பினர்கள்) சேர்ந்து எடுக்கப்படும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய நாட்டு சபை ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்ற காரியத்தில் ரூஸ்வெல்ட், சர்ச்சில் மற்றும் ஸ்டாலின் ஆகியவர்களுக்கிடையே முழ ஒப்புதல் இருந்தது.”
பாய்டு தொடர்ந்து கூறுகிறார்: “அந்த மூவரால் உருவாக்கப்பட்ட ஒரு முறை, தங்களுடைய மாபெரும் இராணுவ பலத்தின் எந்த ஒரு பகுதியையாவது சிறிய நாடுகளடங்கிய ஒரு தொகுதியின் கட்டுப்பாட்டுக்கு, அல்லது ஐ.நா.-வின் தலைமைக் காரியதரிசியின் கட்டுப்பாட்டுக்கு . . . அல்லது சர்வதேச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு அல்லது வேறு எந்த ஒரு கட்டுப்பாட்டுக்கும் சமர்ப்பிக்கப் போவதில்லை.” ஆக, தங்களுடைய வல்லமையையும் கட்டுப்பாட்டையும் அவர்கள் எப்படி காத்துக் கொண்டனர்?
பாய்டு தொடர்ந்து விளக்கம் அளிக்கிறார்: “அந்த மூவரும் ஒருவரையொருவர் நம்பவில்லை. ஒருவருக்கொருவர் எதிராகவும் சிறிய உறுப்பு நாடுகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகார உரிமைகளுக்கு எதிராகவும் தங்களைக் காத்துக்கொள்ளும் கேடயம்தான் தடுப்பாணை உரிமை. தடுப்பாணை உரிமை என்பது என்ன? மறுப்பு வாக்கின்மூலம் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடை செய்யும் உரிமை. 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு சபையின் 5 நிரந்திர உறுப்பினருக்கு (சீனா, ப்ரான்ஸ், சோவியத் யூனியன், ஐக்கிய ராஜ்யம் மற்றும் ஐக்கிய மாகாணங்களுக்கு) உரியது. எனவே, பாதுகாப்பு சபையின் முக்கியமான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு இந்த ஐந்து வாக்குகள் உட்பட குறைந்தபட்சம் ஒன்பது வாக்குகள் தேவை. என்றபோதிலும் வாக்குரிமை செலுத்தாதிருந்தால் அல்லது நடுநிலைமை தாங்குதல்தானே தடுப்பாணையாகக் கருதப்படுவதில்லை.
எனவே தடுப்பாணை உட்படுத்தப்பட்டிருக்கும் ஐ.நா. சாசணம் “வல்லாட்சிகள் வாய்ச்சண்டையில் ஈடுபடுவார்கள் என்ற எதிர்பார்ப்பை பிரதிபலித்தது.” இப்படிப்பட்ட ஆரம்பத்தைக் கொண்டிருந்த “ஐக்கிய” நாடுகள் நல்லதோர் துவக்கத்தை கொண்டில்லை.
ஆகிலும் நாம் இப்பொழுது 1986-ம் ஆண்டில் இருக்கிறோம், இதுவரையாக மூன்றாம் உலக மகா யுத்தம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. உலக விவகாரங்களில் இன்னும் ஒரு சுறுசுறுப்பான பாகத்தை வகித்துவருகிறது. எனவே ஐ.நா. சமாதானத்துக்கான கடவுளுடைய வழியாக இருக்கம் என்று நம்புவது நியாயமானதா?
(g10/22 85)
[பக்கம் 6-ன் பெட்டி]
ஐ.நா. தலைமைக் காரியதரிசியும் அவர் எதிர்பட்ட சில பிரச்னைகளும்
திரிக்வீ லீ (1946-53)______________கொரியா, மத்திய கிழக்கு, பெர்லின் பிளாக்கேட் போர்
டேக் ஹாமர்ஸ்கோல்ட் (1953-61______________காங்கோ போர்; ஹங்கேரியில் சோவியத் தலையீடு; மத்திய கிழக்கு போர்
ஊ தாண்ட் (1961-71)______________ வியட்நாம் போர்; நைஜீரியா/பயாப்ரா போர்; ரொடீஷியாவில் போர் நிலை; இந்தியா/பாக்கிஸ்தான் போர்; செக்கஸ்லோவேக்கியாவில் சோவியத் தலையீடு; மத்திய கிழக்கு போர்; ஸைப்ரஸ் மற்றும் கியூபா போர் நிலைகள்
கர்ட் உவால்தீம் (1972-81)______________வியட்நாம் போர்; கம்பூச்சியா, அப்கானிஸ்தான், மத்திய கிழக்கு போர்கள்
ஜேவியர் பீரெஸ் டி கியுலர்(1982-)______________லெபனன், அப்கானிஸ்தான் போர்கள்; ஈரான் மற்றும் ஈராக் போர்
[பக்கம் 4-ன் படம்]
திக்வீ லீ கேட்டுக்கொண்ட கேள்வி, ‘ஏன் இந்த மாபெரும் பொறுப்பு என் மீது விழுந்திருக்கிறது?’
[படத்திற்கான நன்றி]
UN photo
[பக்கம் 5-ன் படம்]
ஊ தாண்ட், ஒரே சமயத்தில் ஐ.நா.-வின் சமாதானம் காக்கும் முப்பெரும் படைப் பிரிவுகள் மீதும் அதிகாரப் பொறுப்பு வகித்து வந்தார்
[படத்திற்கான நன்றி]
UN photo
[பக்கம் 7-ன் படம்]
கர்ட் உவால்தீம், “ஐக்கிய நாடுகள் சபையின் சரித்திரத்திலே காணப்படும் மிக ஆபத்தான ஒரு போக்கைக்” குறித்து எழுதினார்
[படத்திற்கான நன்றி]
UN photo
[பக்கம் 7-ன் படம்]
ஜேவியர் பீரெஸ் டி கியுலர் ஏறக்குறைய 26,000 பேர் கொண்ட பணியாளர் தொகுதிக்குத் தலைமைத் தாங்கி வருகிறார்