சோதிடம் மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறது!
உயிரிழந்த அரசரின் காதலி, கிடத்தப்பட்டிருந்தாள். துக்கத்தில் மூழ்கிப் போயிருந்த ராஜா, இந்தத் துயர சம்பவத்தை முன்னுரைத்திருந்த சோதிடனை அழைத்துவர ஆணையிட்டான். கொலை வெறி தாண்டவமாட, “நீ மிகவும் புத்திசாலியாகவும் கற்று தேர்ந்தவன் போலவும் நடிக்கிறாயே, உன்னுடைய விதி எப்படி இருக்கும் என்று எனக்குச் சொல்” என்று கேட்டான். “அரசே, உங்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்னால், நான் மாண்டுவிடுவேன் என்பதை நான் முன் உணருகிறேன்” என்பதாக அவன் பதிலளித்தான். சமயோசிதமான சிந்தனை இந்தச் சோதிடனின் உயிரைக் காப்பாற்றியது.
இந்தக் கதை உண்மையோ பொய்யோ, முந்தின நூற்றாண்டுகளில், ஆட்சி செய்து கொண்டிருந்த அரசர்களுங்கூட சோதிடர்கள் சொல்வதை உள்ளார்ந்த அக்கறையோடு எடுத்துக் கொண்டார்கள் என்ற உண்மையை இது விளக்குகிறது. பிரான்ஸ் தேசத்து லூயிஸ் XI-ஐ குறித்து ஒரு சரித்திராசிரியன், “சோதிடர்கள் கூட்டமாக . . . அவருடைய பயத்தையும் அவருடைய பணத்தையும் சூறையாடிக் கொண்டிருந்தார்கள்” என்று எழுதினான். 15 மற்றும் 16-வது நூற்றாண்டுகளில் சோதிடத்தின் கீர்த்தி ஐரோப்பாவில் அதன் உச்சநிலையை எட்டியது. பிரபல விஞ்ஞானிகளுங்கூட அதில் நம்பிக்கை வைத்தார்கள்.
ஆனால் சோதிடத்துக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் விரைவிலேயே ஆட்டங்கொள்ள ஆரம்பித்தது. “தொலை நோக்காடியினூடே பார்வையைச் செலுத்தியபோது, முழு அண்ட அமைப்பியலும் இடம் தெரியாமல் அடித்துக் கொண்டுப் போகப்பட்டது . . . வளர்ந்து வந்த விஞ்ஞான அறிவினால் சோதிடம் தூக்கி எறியப்பட்டது” என்பதாக சோதிடம்—வின்ணுலக கண்ணாடி என்ற புத்தகம் ஒப்புக் கொள்கிறது. ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் அதற்குத் தடையுத்தரவைப் பிறப்பித்தன. 20-ம் நூற்றாண்டின் திருப்பத்தில், சரித்திராசிரியர், போச்சே-லெக்லெரக் மேற்கத்திய சோதிடத்தை “நிச்சயமாகவே மறைந்துபோன ஒன்று” என்பதாக விவரித்தார்.
முப்பது வருடங்களுக்கு முன்னால், இங்கிலாந்தில் பல்வேறு குழுக்களிலிருந்து தனி ஆட்களின் கருத்தறிந்து, பொது மக்கள் கருத்தறியும் ஒரு முறையில், 6 சதவிகிதத்தினர் மட்டுமே சோதிடத்தை நம்பியதைக் காட்டியது. இப்பொழுது 80 சதவிகிதத்தினர் இதை நம்புவதாகச் சொல்லப்படுகிறது. பத்திரிகைகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல்களும், செய்தித்தாள்களும் மற்ற தேசங்களில் சோதிடத்தில் பொதுமக்களின் ஆர்வம் வளர்ந்து வருவதைத் தெரிவிக்கின்றன. “செய்தித் தாளை வாங்கிய உடன் நான் பார்க்கும் முதல் காரியம் நட்சத்திரங்களே” என்பதாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு மனிதன் விழித்தெழு! நிருபரிடம் சொன்னான்.
ஏன் இந்த மறுபிறப்பு? ஒரு இத்தாலிய பெண்ணிடம் அவளும் மற்றவர்களும் ஏன் சோதிடர்களைக் கலந்து பேசுகிறார்கள் என்று கேட்டபோது, “இன்றைய உலகில் அநேக காரியங்கள் தவறாக போய் கொண்டிருக்கிறது” என்பதாக அவள் பதிலளித்தாள். ஆம், “கையாளுவதற்குக் கடினமாக இருக்கும் காலங்களில்” நாம் வாழ்ந்து வருகிறோம். (2 தீமோத்தேயு 3:1) சோதிடம் தேவையான வழிநடத்துதலைக் கொடுப்பதாக சிலர் நம்புகிறார்கள். சோதிட நட்சத்திரம் இவ்விதமாக மறுபடியுமாக தோன்றியிருக்கிறது. இந்தப் பொருளின் பேரில் புத்தகங்கள் ஏராளமாக பெருகிவிட்டன. சம்பாஷணையைத் துவங்குவதற்கு “உங்கள் சின்னம் எது” என்று கேட்பது மிகவும் பிரபலமாகிவிட்டது. பொருந்தாத சின்னங்களையுடைய சில ஆட்கள் நாட்குறித்தலையுங்கூட மறுத்துவிடுகிறார்கள்.a
இது இத்தனை பிரபலமாக இருந்தபோதிலும் சோதிட முன்கணிப்புகள் இன்னும் ஓரளவு சந்தேகத்துக்கு இடந்தருகிற கூற்றையே அடிப்படையாக கொண்டிருக்கின்றன: அதாவது ஒருவருடைய பிறப்பின் சமயத்தில் சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்களின் நிலை, அவருடைய ஆளுமையையும் அவருடைய எதிர்காலத்தையும் வெளிப்படுத்துகிறது என்பதே ஆகும். என்றபோதிலும், சோதிடத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்கள், ஒருவர் எவ்வளவு பணம் தர மனமுள்ளவராக இருக்கிறார் என்பதைப் பொறுத்து, ஒரு சில வரிகள் முதல் பல பக்கங்கள் வரையாக ஜாதகங்களை எழுத தயங்குவது கிடையாது. சைக்காலஜி டுடே என்ற பத்திரிகையின்படி, “ஜாதகங்களைக் கணிப்பதில் லட்சக்கணக்கான பணம் செலவிடப்படுகிறது. ஆம், அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஜான் வீலர், தம்முடைய தேசம் 20,000 சோதிடர்களையும் 2000 வானாராய்ச்சியாளர்களை மட்டுமே கொண்டிருப்பதைக் குறித்து அண்மையில் குறைபட்டுக் கொண்டார்.
மேற்கத்திய தேசங்களில், சோதிடம் அத்தனை சக்தியுடன் உயிர்ப் பெற்று மீண்டும் வந்திருப்பதன் காரணமாக காலஞ்சென்ற ஸ்விஸ் நாட்டு மனோ தத்துவ நிபுணர் கார்ல் ஜங்க் பின்வருமாறு எழுதினார்: 300 ஆண்டுகளுக்கு முன்னால் அதை விரட்டி அடித்த பல்கலைக்கழக கதவுகளை அது வந்து தட்டுகிறது.” உண்மையில் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் இப்பொழுது சோதிடத்தைக் கற்பிக்கின்றன. ‘சோதிடத்தில் கொஞ்சம் உண்மை இருக்கக்கூடுமா?’ என்று ஒருவர் கேட்கலாம். (g86 5/8)
[அடிக்குறிப்புகள்]
a ஒவ்வொரு வருடமும் சூரியன் இராசி மண்டல நட்சத்திரக் கூட்டங்கள் என்றழைக்கப்படும் 12 நட்சத்திரக் கூட்டங்களைக் கடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டத்துக்கும் ஒரு “சின்னம” இருக்கிறது. நீங்கள் பிறந்த சமயத்தில் சூரியன் எந்தச் சின்னத்தைக் கடந்து சென்றதோ அதுவே உங்கள் சின்னமாக கருதப்படுகிறது என்பதாக சோதிடர்கள் சொல்லுகிறார்கள்.