சோதிடம்—அது தீங்கற்ற ஒரு விளையாட்டா?
“வாழ்க்கையும் விதியும் நட்சத்திரங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன . . . [சோதிடம்] தீங்கற்ற ஒரு காரியம் என்றெல்லாம் நினைப்பது முட்டாள்தனமாகும். அது ஏதோ ஒரு விஞ்ஞானமாக இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்பதாக சமீபத்தில் பிரிட்டனிலுள்ள சோதிடன் பேட்ரிக் மோர் சொன்னான்.
என்றாலும் நடைமுறையான ஒரு நோக்குநிலையிலிருந்து காரியங்களைப் பார்க்கும்போது சோதிடம் நிச்சயமாகவே தீங்கானது என்ற முடிவுக்கு வரவே ஒருவர் வற்புறுத்தப்படுகிறார்.
‘நட்சத்திரங்களின் மீது பழியைப் போட்டுவிடுங்கள்!’
தங்களுடைய செயல்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதிலிருந்து ஆட்களை பின்வாங்கச் செய்வது சோதிடத்திலுள்ள மறுக்கமுடியாத அபாயங்களில் ஒன்றாக இருக்கிறது. உதாரணமாக, விவாகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பொருத்தமில்லாத ஜாதகங்களையுடைய தம்பதிகளைப்பற்றி தென் ஆப்பிரிக்காவிலுள்ள சோதிடர் பின்வருமாறு சொன்னார்: “அவர்களுடைய விவாகத்துக்குப் பாக்கியம் இல்லை. அவர்கள் விவாகரத்துச் செய்துகொள்ள வேண்டும் என்று பலருக்கு நான் சொல்லியிருக்கிறேன்.”
ஆனால் இதைச் சிந்தித்துப் பாருங்கள்: நட்சத்திரங்களும் கோள்களும் சரியாக பொருந்தவில்லை என்பதற்காக விவாகத்தை முறித்துக்கொள்வது நியாயமாக இருக்குமா? பிரச்னைகளையுடைய தம்பதிகள் தங்களுடைய செயல்களுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு, உதவியை நாடினால் அது மேலாக இருக்குமல்லவா? விவாக பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் பைபிளில் நடைமுறையான புத்திமதிகள் அநேகம் இருக்கின்றன. (உதாரணமாக எபேசியர் 5:22-25 பார்க்கவும்) இதைப் பின்பற்றியிருக்கும் அநேகர் இதுவே சரியான உதவியாக இருப்பதைக் கண்டு தங்களுடைய விவாகங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவருடைய பிரச்னைகளுக்கு நட்சத்திரங்களின்மீது பழியைப் போடுவதைவிட இது நிச்சயமாகவே மேலானதாக இருக்கிறது!
மேலும் வாழ்க்கையில் நாம் செய்யும் அநேக தவறுகளைப் பற்றி என்ன? அவைகளுக்கு நியாயம் கற்பிக்க சோதிடத்திடமாகச் செல்வது நல்வாழ்வுக்குத் துணை செய்வதாக இருக்குமா? ஒருசில வருடங்களுக்கு முன்னால் ப்ளாரிடாவிலுள்ள மியாமியில் (அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள்) ஒரு மனிதன் திருடியதற்காகவும், கற்பழித்ததற்காகவும், வலிய சென்று தாக்கியதற்காகவும் குற்றஞ்சாட்டப்பட்டான். குற்றச்சாட்டுக்கு எதிராக அவன் விளக்கம் என்னவாக இருந்தது? “கிரகங்கள் பொருத்தமில்லாத வரிசையில் இருப்பதன்” காரணமாக அவனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது என்று சொன்ன மூன்று சோதிடர்களை அவன் குற்றஞ்சாட்டினான். இதுபோன்ற ஒரு விவாதத்தைப் பின்பற்றும்போது அது ஒரு நபரைத் தவறான வழியில் தானே கொண்டு செல்லும்.
மேலுமாக தேசத்தலைவர்கள் போன்ற பொறுப்புள்ள மனிதர்கள் வழிநடத்துதலுக்காக நட்சத்திரங்களைப் பார்க்க ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். மனிதனின் விதி–சோதிடத்தின் உள இயல்பு என்ற புத்தகத்தில் கைன் டர்னர் பின்வரும் இந்தத் திகிலூட்டும் நினைப்பூட்டுதலைக் கொடுக்கிறார்: “கடந்த காலங்களில் ராஜாக்களும் அரசர்களும் எப்பொழுதும் தங்கள் சோதிடர்களை அருகாமையில் வைத்துக் கொண்டிருந்தனர். அண்மையில் இரண்டாவது உலகப் போரின் சமயத்திலுங்கூட, ஹங்கேரி தேசத்தைச் சேர்ந்த சோதிடர் லூயி டி வுல், பிரிட்டனின் போர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். ஒருசில அதிகாரிகளின் வெற்றியையும் ஒருசில யுத்தங்களின் வெற்றியையும் அவர் பிரிட்டனுக்கு முன்னுரைத்தார். ஹிட்லர் அவருடைய ஜாதகத்தின்படி அவருடைய சோதிடர்களிடமிருந்து என்ன ஆலோசனையைப் பெற்று வந்தார் என்பதையுங்கூட பிரிட்டன் தேசத்துப் போர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கக்கூடியவராகவும் இவர் இருந்தார். அரசியல்வாதிகளில் அநேகர் இன்று வழிநடத்துதலுக்காக நட்சத்திரங்களைப் பார்ப்பதாகவுங்கூட சிலர் சொல்லுகிறார்கள்.
உயிரையும் மரணத்தையும் உட்படுத்தும் தீர்மானங்கள் கிரகங்களின் நிலையைச் சுற்றிவரக்கூடும் என்பது உங்களுக்குத் தீங்கற்றதாக தெரிகிறதா?
வருவது கூறும் சக்திக்குப் பின்னால்
சில சமயங்களில் சோதிடர்கள் முன்னுரைப்பது நடந்துவிடுகிறது. ஆனால் உண்மையில் நட்சத்திரங்களை வாசிப்பதால் இது நடக்கிறதா? ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு, மறைந்த உளநோய் வல்லுநர் வெர்னன் க்ளார்க், சோதிடர்கள் சிலரின் திறமைகளைச் சோதித்தார். அவர் அவர்களிடம் 10 பேரைப் பற்றிய தகவல்களைக் கொடுத்து இரண்டு ஜாதகங்களோடு அவற்றைப் பொருத்துமாறு கேட்டார். சோதிடர்கள் குறிப்பிடத்தக்க வகையில் இதில் வெற்றி கண்டார்கள்! மூன்று சோதிடர்கள் அவை அனைத்தையுமே சரியாக பொருத்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சோதிடர் டால்லீ, பத்தில் ஏழு பேருடையதைச் சரியாக பொருத்தியிருந்தார். அவரின் வெற்றிக்குக் காரணமென்ன? வெறுமென நட்சத்திரங்களைப் பார்ப்பதைக் காட்டிலும் அதிகம் உட்பட்டிருந்தது. “ஒவ்வொன்றையும் மதிப்பிடுவதற்கு ஒரு சோதிடருக்குக் குறைந்த பட்சம் அரை மணி நேரமாகும். அதாவது மொத்தம் 10 மணி நேரங்கள் ஆகும்.” என்பதாக அவர் குறிப்பிட்டார். என்றாலும் அந்தச் சமயத்தில் அவருக்கு அதிகமான வேலை இருந்ததால், “ஒவ்வொன்றுக்கும் ஒரே ஒரு நிமிடம்” தானே அவர் எடுத்துக் கொண்டார். அப்படியென்றால், அவருடைய வெற்றிக்குச் “சோதிடம் மட்டுமே” உதவியாக இருக்கவில்லை. “ஒருவித பொது நிலையான புலனுணர்வுக்கப்பாற்பட்ட சக்திதானே அதற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்பதாக நினைக்கிறேன்” என்று லீ ஒப்புக்கொள்கிறார்.
அநேக சோதிடர்கள் இதே விதமாகவே மாயமான ஒரு சக்திக்கு நிகிரான ஒன்றைப் பயன்படுத்துவதாக ஒப்புக் கொண்டிருப்பது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. கடவுளைப் பிரியப்படுத்துவதில் அக்கறையுள்ள ஆட்களுக்கு இது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது. ஏசாயா 1:13-ல் கடவுள் திட்டவட்டமாக “மாயமான சக்தியைப் பயன்படுத்துவதை நான் சகிக்க மாட்டேன்” என்று சொல்கிறார். ஏன்? வருவது கூறும் சக்தியையுடைய ஆட்கள் அநேகமாக பேய்த்தனமான ஆவிகளின் கட்டுப்பாட்டின் கீழிருப்பதாக பைபிள் காண்பிக்கிறது. (அப்போஸ்தலர் 16:16-18 ஒப்பிடவும்) ஆகவே சில சமயங்களில் சோதிட முன்கணிப்புகள் பேய்களின் வார்த்தையாக இருக்கக்கூடும்—இவைகள் கடவுளுக்கும் அவரைச் சேவிக்கும் ஆட்களுக்கும் யாவரும் அறிந்த சத்துருக்களாக இருக்கிறார்கள்! பேய்களின் வழிநடத்தலை நாடுகிறவர்களுக்குத் தீங்கு மட்டுமே வரக்கூடும்!
சோதிடம்—ஒரு மதமா?
ஆனால் சிலர் சோதிடத்தில் தங்களுக்குத் தற்செயலாகத்தானே ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்பதாகச் சொல்லுகிறார்கள். என்றபோதிலும் தற்செயலாக ஏற்படும் அக்கறைத் தெய்வ வழிபாட்டுக்கு ஒத்த ஒன்றாக வளர்ந்துவிடக்கூடும். சோதிடத்துக்கு எதிராக வெளியிடப்பட்ட முன்னால் சொல்லப்பட்ட அறிக்கையில் கையொப்பமிட்ட ஒரு விஞ்ஞானி பின்வருமாறு சொன்னார்: “சிலருக்குச் சோதிடம், தப்பியோடுவதற்குரிய ஒரு வழியாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை . . . மற்றவர்களுக்குச் சோதிடம், ஒரு தெய்வீக வெளிப்படுத்தலாக, சுத்தமான சத்தியமாக—அதாவது ஒரு உண்மை மதமாக மாறிவிட்டிருக்கிறது. ஜாதக முன்கணிப்புகளை தங்களில் நிறைவேறும் தீர்க்கதரிசனங்களாக ஆவதற்கு அனுமதிக்கும் ஒரு மனசாய்வு சிலருக்கு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கியர்கள். சோதிடம் இந்த அளவுக்கு ஒரு நபரைக் கட்டுப்படுத்தும்போது அது நிச்சயமாகவே ஒரு மதமாக ஆகிவிடுகிறது.
சோதிடம் உண்மையில் பூர்வ பாபிலோனிய மதத்தின் பாகமாக இருந்தது. ஆனால் இந்த மதம் அவளுக்கு நன்மையைக் கொண்டு வந்ததா? மறுபட்சத்தில், பூர்வ பாபிலோனுக்கு எதிராக பைபிளில் பின்வரும் இந்த அறிவிப்புக் கொடுக்கப்பட்டிருந்தது: “உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் சோதிடரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும் அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.” (ஏசாயா 47:13) பாபிலோனிய சோதிடர்களின் முன்கணிப்பு நகரத்தை நிரந்தரமான அழிவிலிருந்து காப்பாற்ற முடியவில்லை.—ஏசாயா 13:19, 20.
பாபிலோனிய மதத்தின் செல்வாக்குகள் அவளோடு அழிந்து போகாமல் இருந்தது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. “பாபிலோனிலிருந்து கல்தேயர்கள் சோதிடத்தை எகிப்துக்கும் அதிக முக்கியமாக கிரீஸுக்கும் எடுத்துச் சென்றார்கள்” என்பதாக சோதிடத்தின் சரித்திரம் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.
ஆகவே சோதிட மதத்தைப் பின்பற்றுவது ஆபத்தானதாக இருக்கிறது. ஏன்? ஏனென்றால் பைபிளின் பிரகாரம், பாபிலோனிய நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட எல்லா மதங்களும் அழிக்கப்பட இருக்கின்றன. ஆம் பூர்வ பாபிலோனின் வீழ்ச்சி, இந்த எதிர்கால அழிவைச் சுட்டிக் காண்பிக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 18:4-ல் நாம் பின்வருமாறு எச்சரிக்கப்படுகிறோம்: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும் அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.”
ஆகவே சோதிடத்தைத் “தீங்கற்ற ஒரு விளையாட்டு” என்று நிச்சயமாகவே சொல்ல முடியாது. (உபாகமம் 18:10-12 ஒப்பிடவும்) அதைக் கடைபிடிப்பது, ஆபத்தான பேய்த்தனமான செல்வாக்குகளின் கீழ் வருவதற்கும், கடவுளோடு ஒருவருடைய நட்பை இழப்பதற்கும் முதல்படியாக இருக்கக்கூடும். (2 கொரிந்தியர் 6:17, 18) உண்மைதான் நம் அனைவருக்கும் வழிநடத்துதல் தேவையாக இருக்கிறது. ஆனால் வழிநடத்தலுக்காக பைபிளிடமாக திரும்புவது எத்தனைப் பாதுகாப்பானதாகவும் மேலானதாகவும் இருக்கக்கூடும்! (சங்கீதம் 119:105) கடவுளுடைய வார்த்தைக்குச் செவி கொடுப்பவர்கள், வாழ்க்கைப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்குச் சோதிடம் கொடுக்கத் தவறும் நடைமுறையான உதவியைப் பெற்றுக் கொள்கிறார்கள். (g86 5/8)
[பக்கம் 8-ன் படம்]
தென் ஆப்பிரிக்காவிலுள்ள சோதிடர் சொல்லுகிறார்: “அவர்களுடைய விவாகத்துக்கு பாக்கியம் இல்லை. அவர்கள் விவாகரத்துச் செய்துகொள்ள வேண்டும் என்று பலருக்கு நான் சொல்லியிருக்கிறேன்.”
[பக்கம் 9-ன் படம்]
பூர்வ பாபிலோனின் சோதிட நம்பிக்கை அவளுக்கு அழிவு வராமல் தடுத்திடவில்லை