“புற்றுநோய்—நான் அதை முறியடித்துக் கொண்டிருக்கிறேன்”
டெக்ஸாஸில் வசிக்கும் 60 வயதுகளிலிருக்கும் ரோஸ்மேரி எல்லோருடனும் கலகலப்பாக பழகும் சுபாவமுள்ளவள். 1964-ல் இறுதியான மாதவிடாய் சமயத்தின்போது அவளுக்கு ஒரு கழலை இருப்பது தெரியவந்தது. இங்கே அவள் தன்னுடைய உற்சாகமூட்டும் கதையைச் சொல்கிறாள்:
முதல் முறையாக என்னுடைய மார்பில் ஒரு கட்டி இருப்பதை நான் கவனித்தபோது, அது என்னவாக இருக்குமோவென்று எனக்குக் கவலையாக இருந்தது. ஆகவே ஒரு பரிசோதனைக்காக என்னுடைய கணவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு உட்கார்ந்துகொண்டு தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் அந்தச் சமயத்தில் தானே மிகவும் திகிலாக எனக்கு இருந்தது. கடைசியாக எனக்கு ஒருவேளை மார்பில் புற்றுநோய் இருக்கக்கூடும் என்பதாக சொல்லப்பட்டபோது, யாரோ என்னை வயிற்றில் உதைப்பதுபோல உணர்ந்தது எனக்கு நினைவிருக்கிறது. அதைத் தொடர்ந்து என்ன சிகிச்சையை எடுப்பது என்பதைத் தீர்மானிக்கமுடியாத ஒரு இரண்டக நிலை. சில மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று அவசரப்படுத்தினார்கள். மற்றவர்கள் மாற்று சிகிச்சையை பரிந்துரைத்தார்கள். நாங்கள் எவ்விதமாக தீர்மானித்தோம்?
மார்பில் வரும் பெரும்பாலான கட்டிகள் வெற்றுக்கழலைகளாக இருக்கின்றன என்றும் அது ஒருவேளை புற்றுக்கழலையாக இருப்பதற்கு சாத்தியமிருக்கிறது என்றும் மருத்துவ நண்பர் ஒருவர் என்னுடைய கணவரிடம் சொன்னார். வருகின்ற விளைவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அறுவை சிகிச்சையைத் தாமதிப்பதா அல்லது உறுத்திக்கொண்டிருந்த கழலையை அப்புறப்படுத்திவிடுவதா? அறுவை சிகிச்சையை செய்துகொள்வதென இருவருமாகச் சேர்ந்து முடிவு செய்தோம். கழலை அறுத்தெடுக்கப்பட்டு அது வெற்றுக்கழலை என்பது தெரிவிக்கப்பட்டது. அப்போதுதானே எனக்கு நிம்மதியாக இருந்தது.
1965-ல் என்னுடைய மார்பில் வேறொரு கழலை இருப்பதை நான் கவனித்தேன். இது என்னுடைய முன்னேற்றத்தில் பின்செல்வதாக இருந்தபோதிலும் ஒரு தோல்வியாக இல்லை. மறுபடியுமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அந்தக் கட்டியும்கூட வெற்றுக் கழலையாக இருந்தது. இரண்டு வருடங்களாக தொந்தரவு எதுவும் இல்லாதபோது எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது. பின்னர் 1967-ல் மூன்றாவது கட்டி ஒன்று அதே மார்பில் தோன்றியது. மருத்துவர்கள் இதைக் கவனமாக ஆய்வு செய்தபோது, இது புற்றுக்கழலை என்பது காண்பிக்கப்பட்டது. மார்பு நீக்கப்பட வேண்டும். ஆகவே ஒரு மாதத்துக்குப் பின்பு இந்த அறுவை சிகிச்சையை நான் செய்துகொண்டேன்.
எந்தப் பிரச்னைகளும் இல்லாமல் எட்டு வருடங்கள் கடந்தன. புற்றுநோயை முறியடித்துவிட்டதாக நான் நினைக்க ஆரம்பித்தேன். ஆனால் 1975-ல் என்னுடைய அடுத்த மார்பில் ஒரு கட்டியை நான் பார்த்தேன். என்னுடைய கடந்த கால அனுபவத்தை முன்னிட்டு, மருத்துவர்கள் அடுத்த மார்பையும் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கிவிட வேண்டும் என்று சொன்னார்கள். புற்றுநோய் பரவாதிருப்பதை உறுதி செய்துகொள்ள மின்காந்த ஆற்றல் சிகிச்சையையும் அவர்கள் எனக்கு அளித்தார்கள். இந்தச் சிகிச்சை முறை எனக்கு மிகவும் பயமாக இருந்தது என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். ஏன் அப்படி?
ஒவ்வொரு சமயமும் மின்காந்த ஆற்றல் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளும் மற்ற ஆட்களோடு நான் காத்திருக்க வேண்டும். முகத்திலும் இந்தச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய மற்ற இடங்களிலும் ஒரு சிவப்பு வண்ண சாயம் பூசப்படுகிறது. அது அகோரமான ஒரு காட்சியாக இருக்கும். பின்னர் இதற்காகவே உள்ள இந்த விசேஷமான அறைக்குள் நான் தனியாகவே செல்ல வேண்டும். கண்ணுக்குத் தெரியாத இந்தச் சக்தி என்னுடைய கெட்ட திசுக்களையும் அதே சமயத்தில் நல்ல திசுக்களையும் அழித்துவிடுகிறது என்பதை நான் அறிந்திருந்தபடியால் இதெல்லாம் எனக்குப் பயங்கரமாகத் தோன்றுகிறது. என்றாலும் சுமார் 15 வாரங்களில் 30 தடவைகள் இந்த மின் காந்த ஆற்றல் சிகிச்சையை நான் பெற்றுக்கொண்டேன். அப்போதிருந்து என் முதுகிலும் தலையிலும் இரண்டே சிறிய வெற்றுக்கழலைகளுக்காக மாத்திரமே நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறேன்.
பிழைத்திருக்க பெலன்
முதல் கட்டி எனக்குத் தோன்றியது முதற்கொண்டு இப்பொழுது அதற்கு 22 வருடங்களுக்குப் பின்பு, இன்னும் உயிரோடிருப்பதற்காக நான் உண்மையில் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இந்தச் சோதனையான காலங்களில் எனக்கு உதவி செய்திருப்பது என்ன? முதல் காரியம் எனக்குப் பக்க பலமாக இருந்த என்னுடைய கணவர்.
சிகிச்சைக்கு உட்பட, ஒவ்வொரு சமயமும் நான் மருத்துவமனைக்குச் சென்றபோது, என் கணவர் எனக்குத் துணையாக வந்தார். நீங்கள் ஒரு மருத்துவமனைக்குச் செல்லும்போது, உங்களுக்கு ஆதரவாக ஒரு நல்ல நண்பரோ அல்லது உறவினரோ உங்களுக்கு நிச்சயமாகத் தேவை என்று நான் நினைக்கிறேன். அவர் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவராக இல்லாமல் பலமுள்ள, நம்பிக்கையுள்ள ஒரு நபராக இருக்க வேண்டும். எளிதில் அழுவது என்னுடைய சுபாவமாக இருந்தது. அதை இன்னும் அதிகமாக்கிவிடுகிறவர் எனக்கு உதவியாக இருக்கமாட்டார்.
மருத்துவர்களும் பெரும் உதவியாக இருப்பதை நான் கண்டேன். அதிர்ஷ்டவசமாக அப்பொழுது நிபுணராக இருந்த டாக்டர் ஜேம்ஸ் தாம்ஸன் எனக்குச் சிகிச்சை அளித்தார். அறுவை சிகிச்சை அறையிலும் கூட அவர் மிகவும் பரிவோடு நடந்துகொண்டார். என் நிலைமையைப் பற்றி அவர் இரக்கமில்லாமல் பேசவோ அல்லது மூடி மழுப்பவோ இல்லை.
என் நிலைமையை நினைத்து வருந்திக்கொண்டே இல்லாமலிருக்க நான் கற்றுக்கொண்டேன். எப்பொழுதும் என்னுடைய மனதையும் வாழ்க்கையையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு வாசிப்பதென்றால் மிகவும் ஆசை. ஆனால் அவை மகிழ்ச்சியான செய்தியையுடையவையாக இருக்க வேண்டும். சோகமான விஷயங்களைக் குறித்து சிந்திக்க எனக்கு விருப்பமில்லை. டெலிவிஷனில் காண்பிக்கப்படும் மருத்துவமனை கதைகளை நான் பார்க்க விரும்புவதில்லை.
நான் வியாதியாக இருந்தபோது, எனக்கு உதவியது என்ன? நான் வெகுவாக போற்றிய விஷயங்களில் ஒன்று, விரைவில் ஆரோக்கிமடையுங்கள் என்ற செய்தியைக் கொண்டுவந்த வாழ்த்துதல்களும் கடிதங்களுமே. இத்தனை அநேகம்பேர் என்னைப் பற்றி யோசிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதே அத்தனை உற்சாகமளிப்பதாக இருந்தது. நீங்கள் வியாதியில் இருக்கையில் உங்களைப் பார்க்க, பலர் வருவதை எப்பொழுதும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆனால் அவர்களுடைய வாழ்த்துதல்களைப் பெற்றுக்கொள்வது மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. என்னைப் பார்க்க வந்தவர்களில், கட்டியெழுப்பும் விதமாகவும் நம்பிக்கையோடும் பேசியவர்களை நான் நிச்சயமாகவே போற்றுகிறேன். மூன்று வருடங்களுக்கு முன்னால் புற்று நோயால் உயிரிழந்த ஒரு உறவினரைப் பற்றி தெரிந்துகொள்ள எவரும் விரும்புவதில்லை! ஆகவே வியாதியாக இருப்பவர்களைப் பார்க்க வருகிறவர்கள் உணர்ச்சிகளை மதித்து பேசுவது போற்றப்படுகிறது.
நிச்சயமாகவே யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக என்னுடைய விசுவாசமே எனக்குப் பக்கபலமாக இருந்திருக்கிறது. என்னால் முடிந்தவரை கிறிஸ்தவ ஊழியத்திலும் என்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறேன். கடவுளுடைய புதிய ஒழுங்கையும் உயிர்த்தெழுதலையும் பற்றிய பைபிள் ஆதாரமுள்ள நம்பிக்கையை பிரசங்கிப்பதும் கற்பிப்பதும் என்னுடைய சொந்த விசுவாசத்தை ஆழமாக்கிக்கொள்ள எனக்கு உதவியிருக்கிறது. இப்பொழுது 1986-ல், நான் இன்னும் உயிரோடிருந்து, யெகோவாவினுடைய சேவை சம்பந்தமான நடவடிக்கைகளால் என்னுடைய வாழ்க்கையை நிரப்பிக்கொள்ள முடிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.—அளிக்கப்பட்டது.
சமீப ஆண்டுகளில், புற்றுநோய் சிகிச்சையில் பெறப்பட்டுள்ள முன்னேற்றத்தால், கழலையை வெறுமென எடுத்துவிடுவது மட்டுமே சிலருக்குத் தேவையாக இருக்கிறது. என்றபோதிலும் எந்தச் சிகிச்சையைத் தெரிவுசெய்வது என்பது அநேக காரியங்களின் பேரில் சார்ந்ததாக இருக்கிறது. (g86 10/8)