தண்ணீர் நெருக்கடி—நாம் உண்மையில் வறண்டு போய் கொண்டிருக்கிறோமா?
முதலாவதாக 70 சதவிகித பூமியின் மேற்பரப்பை தண்ணீர் மூடிக் கொண்டிருந்தாலும், அவை அனைத்துமே குடிநீராக இல்லை. உதாரணமாக இந்தத் தண்ணீரில் சுமார் 97 சதவிகிதம் சமுத்திரமாக இருக்கிறது. அப்படியென்றால் 3 சதவிகிதமே குடிக்கத்தக்க நீராக இருக்கிறது.
என்றபோதிலும் முக்கால் வாசிக்கும் மேல் இந்த நீர், பூமியின் பனிக்கட்டி பாளமாகவும் துருவங்களில் பனிக்கட்டி முகடுகளாகவும் உறைந்த நிலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு 14 சதவிகிதம் பயன்படுத்திக் கொள்ள முடியாதபடி மிகவும் ஆழத்தில் பூமிக்கு அடியில் இருக்கிறது. மீதமுள்ள தண்ணீர் ஒரு சிறிய 0.027 சதவிகிதம் என்பதாக மதிப்பிடப்படுகிறது. இது ஆறுகளிலும், ஏரிகளிலும் ஓடைகளிலும் பூமியின் கீழும் ஓடும் நீராக உள்ளது. மேற்பரப்பிலுள்ள குடிக்கத்தக்க நீர் மழையாலும் பனிவீழ்ச்சியினாலும் மீண்டும் நிரம்பி விடுகிறது. ஆனால் பூமியின் ஆழத்திலுள்ள நீர் அவ்விதமாக நிரம்புவதற்கு வாய்ப்பில்லை.
வீட்டு உபயோகத்துக்கும் தொழிற்சாலை உபயோகத்துக்கும் மின்சாரத்தை உற்பத்திச் செய்யக்கூடிய மாபெரும் விசையாழியைப் போலில்லாமல் புதிய தண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது. ஆகவே வீட்டில் விசேஷமான அந்தத் தேனீருக்காகவோ அல்லது காப்பிக்காகவோ அல்லது புத்துணர்வு பெற குளிப்பதற்காகவோ தண்ணீர் குழாயை திருப்புகையிலும், தொழிற்சாலை நிறுவனங்களில் அல்லது நீச்சல் குளத்தை மீண்டும் நிரப்புவதற்காக அடைப்பிதழ்களைத் திறக்கும் போதும் தண்ணீரானது அருகிலுள்ள ஆறுகள், ஏரிகள் அல்லது கிணறுகளிலிருந்து வர வேண்டும்.
பூமியில் ஆண்டுதோறும் பெய்யும் மழை அதிகமாக இருந்தபோதிலும், பூமியின் எல்லா பகுதிகளின் மீதும் அல்லது அது சம அளவில் பெய்வதில்லை. பூமியின் சில பகுதிகளில் அதிக அளவு மழை இருக்கையில், மற்ற பகுதிகளில் வருட கணக்கில் மழை இல்லாமலிருக்கலாம். மழை குறைவாக இருக்கும் இடங்களில், நிலத்தை உழ மாபெரும் நீர்பாசன அமைப்புகள் அவசியமாக இருக்கின்றன. இங்கே தண்ணீர் பூமியின் அடியிலிருந்து எடுக்கப்படுகிறது. இவை மீண்டும் நிரப்பப்படாமலோ அல்லது போதிய அளவு நிரப்பப்படாமலோ இருக்கின்றன. இது கிணறுகள் வறண்டு போக காரணமாக இருக்கிறது.
அடிநில நீர் தேக்கங்கள் வறண்டு போய் கொண்டிருக்கின்றன
இந்த அடிநில நீர் தேக்கங்களில் ஒகலல்லா உலகில் மிகப்பெரியதாக இருக்கிறது. மத்திப மேற்கத்திய ஐக்கிய மாகாணங்களின் ஐந்து மாநிலங்களுக்கும் கீழே இது பாய்ந்தோடுகிறது. வீடுகளும் தொழிற்சாலைகளும் நீர் பாசனமும் இதையே நம்பியிருக்கின்றன. ஆனால் அது நிச்சயமாகவே பல இலட்சக்கணக்கான ஆட்களைப் பாதிக்கும் வகையில் ஒரு நெருக்கடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒகலல்லாவிலுள்ள நீரை இப்பொழுது 200000 கிணறுகள் நம்பியிருக்கின்றன. அதனுடைய நீர் மட்டமானது 156000 சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு 30 மீட்டரிலிருந்து 45 மீட்டர் வரை குறைந்து விட்டிருக்கிறது. எழுத்தாளர் ஒருவர், இவ்விதமாக எழுதினார்: “ஒரே ஐஸ் கிரீம் சோடாவினுள் பல சிறு பையன்கள் தங்கள் உறிஞ்சு குழாய்களை வைத்து உறிஞ்சுவது போல, அது வறண்டு போகும் வகையில் வேகமாக அதை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.”
அருகாமையில் வர இருக்கும் இந்தக் கடுமையான தாக்குதலை ஏற்கெனவே சிலர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். “என்னுடைய 11 கிணறுகளிலும் தண்ணீர் இன்னும் ஒருசில அடிகள் மாத்திரமே இருக்கிறது” என்று ஒரு விவசாயி சொன்னார். “ஐந்து வருடங்களாக இது இப்படித்தான் இருக்கிறது. வேகமாக நான் நீரை விசைக்குழாயில் எடுத்தால் கிணறு காய்ந்து விடுகிறது.” “கடைசியாக நீர் இல்லாமல் போய்விடும். சில இடங்களில் இது நம்முடைய சந்ததியில் நேரிடும்” என்றார் ஒரு எழுத்தாளர். ஒகலல்லா 40 வருடங்களில் காய்ந்து விடும் என்பது சில நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள அநேக அடிநில நீர் தேக்கங்களின் நிலையும் இதுவாகவே இருக்கிறது. பூமிக்குக் கீழிருக்கும் தண்ணீரை மாத்திரமே நம்பியிருக்கும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் அரிசோனாவிலுள்ள மிகப் பெரிய நகரமாகிய டக்ஸனின் அடியிலுள்ள நீர்த்தேக்கம் மிக மோசமான நிலையில் உள்ளது. இங்கே வீடுகள் தொழிற்சாலைகள் பண்ணைகள் மற்றும் செம்பு சுரங்கம் ஆகிய அனைத்துமே இந்தத் தண்ணீரையே நம்பியிருக்கின்றன. 1960 முதற்கொண்டு அதன் அடிநில நீர்மட்டம் 150 அடி கீழிறங்கி விட்டிருப்பதே இதன் விளைவாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அடிநில நீர்த் தேக்கங்களில் எடுக்கப்படும் நீரில் 35 சதவிகிதம் மட்டுமே மீண்டும் நிரம்புகிறது.
சில இடங்களில் இந்த அடிநில நீர் தேக்கம் 160 அடிக்கும் மேல் கீழிறங்கிவிட்டிருக்கிறது. டெக்ஸாஸிலுள்ள எல் பேசோவிலும் மெக்ஸிக்கோவிலுள்ள சியுடாட் ஜூவாரஸிலும் நீரை விசைக்குழாய் மூலம் அளவுக்கு அதிகமாக எடுத்துவிடுவதால் அடிநில நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டிருக்கிறது. மேலும் டல்லாஸ்-போர்ட் வொர்த் மெட்ரோப்பாலிட்டன் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் நீர் மட்டம் 390 அடிக்கும் அதிகமாக குறைந்து விட்டிருக்கிறது. இந்தத் தண்ணீர் கடன் தொடர்ந்தால், அடிநில நீர் கடனைத் தீர்க்க வகையற்ற நிலைக்கு மாத்திரமே இது கொண்டு விட முடியும்.
விசைக்குழாய் மூலம் அதிகமான தண்ணீரை எடுத்து விடுவதால் அடிநில நீர் மட்டம் இறங்குவது மட்டுமல்லாமல், இதனால் கவலைக்குரிய பக்க பாதிப்புகளும் ஏற்படுகின்றன. உதாரணமாக டெக்ஸாஸிலுள்ள ஹொஸ்டன் என்ற முழு நகரமும் மண்ணிலும் களிமண்ணிலும் புதைந்து கொண்டிருப்பதாக 1982 செப்டம்பர் 26-ன் தி நியு யார்க் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது. “காரணம் தண்ணீராகும். கடந்த பத்தாண்டுகளில் பயங்கரமான வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள தேவையை நிறைவு செய்வதற்காக நகரத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள பெரிய நீர் தேக்கங்களிலிருந்து அளவுக்கு அதிகமாக நீர் விசைக் குழாய் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டிருக்கிறது” என்பதாக செய்தித் தாள் அறிவித்தது. “எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய வெறும் அடிநில நீர் மாத்திரமே பயன்படுத்தப்பட்டால் 2020 ஆண்டுக்குள் இது இன்னும் 4.2 மீட்டர்கள் புதைந்து விடக்கூடும்.”
அதே ஆண்டில் தி நியு யார்க் டைம்ஸ், ஆரிசோனா மாநிலத்திலும் இதே நிலைமையிருப்பதை அறிவித்திருந்தது. பூமியில் பெரும் வெடிப்புகள், சில இடங்களில் 400 அடி ஆழமான வெடிப்புகள் 11.2 கிலோ மீட்டர் நீளத்துக்கு இருப்பது அறிவிக்கப்பட்டிருந்தது. விவசாயத்துக்கும் நகரங்களில் வாழ்பவர்களுக்கும் தண்ணீர் வழங்க, அடிநில நிரை பெரிய அளவில் விசைக்குழாய் மூலம் வெளி கொண்டு வருவதால் ஏற்படும் நேரடியான விளைவாக இருந்தன இந்தப் பிளவுகள். அடிநில நீர் மட்டம் வெகுவாக குறைந்து விடும்போது அதற்கு மேலேயுள்ள மேற்பரப்பு இறங்கி, ஆழத்திலுள்ள அடிநிலப் பாறை வரையாக 400 அடி ஆழத்துக்கு மாபெரும் பிளவுகளை இவை உண்டு பண்ணுகின்றன. மேலுமாக ப்ளாரிடா மாநிலத்தில் அடிநில நீரை அளவுக்கு அதிகமாக விசைக்குழாய் மூலம் எடுத்து விடுவது அதிகமான விளம்பரத்துக்குக் காரணமாயிருந்திருக்கிறது. தண்ணீரை எடுத்துக் கொண்டே இருப்பது அடிநிலத்தை அரித்து வீழ்த்தி புதை குழிகளை உண்டு பண்ணியதால் அவை வீடுகளையும் மோட்டார் வண்டிகளையும் விழுங்கி விட்டிருக்கின்றன.
ஐக்கிய மாகாணங்களின் அடிநில நீர் நெருக்கடியைப் பற்றிய எச்சரிப்புக்களைச் செய்தித் துறை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இது தேசீய கவலையாக உள்ளது. “அடிநில நீர் ஒரே சீராக குறைந்து கொண்டே வருவது தேசத்துக்கும் நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கும் நம்முடைய வாழ்க்கையின் தரத்துக்கும் அச்சுறுத்தலாக இருப்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது” என்பதாக ஐக்கிய மாகாணத்தின் பிரதிநிதிகள் சபையின் ஜான் P.ஹாமர்ஷிமிட் தெரிவித்தார். வளமான ஒரு தேசம் இல்லாத தண்ணீருக்கு தணியாத ஒரு தேவையை உருவாக்கியுள்ளது” என்பதாக ஒரு ஐக்கிய மாகாண சட்ட மாமன்ற மேலவை உறுப்பினர் குறிப்பிட்டார். “அடிநில நீர் வறண்டு போனால் அதுவே முடிவாக இருக்கும். அவைகள் மீண்டும் நிரம்ப ஒரு ஆயிரம் வருடங்கள் ஆகும்.”
“50 ஆண்டு காலத்தில் ஊற்றுகள் இல்லை”
சட்ட மாமன்ற மேலவை உறுப்பினர் டேனியல் மாயினிஹான் சொன்னார்: “நீங்கள் எண்ணெய் இல்லாமல் வாழமுடியும். ஆன்பில்லாமல் வாழமுடியும். ஆனால் நீங்கள் தண்ணீரில்லாமல் வாழமுடியாது . . . தென் மேற்குக்கு கீழே தண்ணீரை அளவுக்கு அதிகமாக எடுத்துவிட்டதால் 50 ஆண்டு காலத்தில் ஊற்றுகள் இல்லை. மன்னித்து விடு நண்பனே, தண்ணீர் தீர்ந்தவிட்டது. இது மெய்யான மாற்றமுடியாத நெருக்கடியாகும் என்பதாக சட்ட மாமன்ற மேலவையில் நான் ஒரு சமயம் சொன்னேன்.” 1985, மார்ச் 18 ஐக்கிய மாகாணங்கள் செய்திகள் மற்றும் உலக அறிக்கை பத்திரிக்கை முடிவாக ஒரு குறிப்பை சேர்த்துக் கொள்கிறது. “தண்ணீர் தீர்ந்து போகிறது என்ற கருத்து பெரும்பாலான அமெரிக்க நாட்டவருக்குச் செயற்கையான ஒன்றாகத் தோன்றக்கூடும். ஆனால் அதிகதிகமான நீர் பண்பியல் ஆய்வாளர்களும் பொறியாளர்களும் சுற்றுப்புறச் சூழல் வல்லுநர்களும் ‘வளமான தேசத்தின் தண்ணீர் தீர்ந்து போய் கொண்டிருக்கிறது என்பதாக உறுதியாக தெரிவிக்கிறார்கள்.
உலகம் முழுவதிலும் மற்ற தேசங்களும் தங்களின் அடிநில நீர் அமைப்புகள் வேகமாக குறைந்து கொண்டு வருவதைக்குறித்து மனங்கசந்து புலம்பிக் கொண்டிருக்கின்றன. 70-ம் ஆண்டுகளில், தென் இந்தியாவில் விவசாயத்துக்காக அதிக அளவில் அடிநில நீரை எடுத்து விட்டதால் நீர்மட்டம் சுமார் முப்பது மீட்டர் குறைந்து விட்டிருக்கிறது. சீனாவின் வடக்கு மாகாணங்களில் அதிக அளவு நீரை விசைக்குழாயின் மூலமாக எடுத்து விட்டிருப்பதால் முக்கியமாக இதையே நம்பியிருக்கும் பத்து பெரிய நகரங்கள் பயங்கரமான பிரச்னையை எதிர்படுகின்றன. 1950 முதற்கொண்டு தண்ணீர் வற்றிக் கொண்டிருப்பதால் இந்த நகரங்களில் சில, 20-30 செ.மீட்டர் கீழே புதைந்து கொண்டு வந்திருக்கின்றன.
பூமிக்கு அடியிலுள்ள நீர், சமுத்திரத்தின் அருகாமையிலிருக்கும் போது பிரச்னை சிக்கலாகிவிடுகிறது. அடிநில நீரை அதிகமாக எடுத்து விடுவதால் சமுத்திரத்திலுள்ள உப்பு நீர் உள்ளே வந்து குடிநீரின் தூய்மையைக் கெடுத்துவிடுகிறது. இஸ்ரேல், சீரியா மற்றும் அராபிய வளைகுடாவில் நிலத்துக்கு அடியில் தண்ணீருக்கிடையே இந்த மோதல் இருந்து வருகிறது.
சோவியத் குடியரசின் நிலையையும் தண்ணீருக்கான அதன் போராட்டத்தையும் பற்றிய சரியான ஆதாரங்கள் மற்ற தேசங்களினுடையதைப் போல் இல்லாவிட்டாலும் இதுவும் அதே போன்ற பிரச்னைகளையே எதிர்படுகின்றது. வளர்ச்சியடையாத தேசங்கள், குறிப்பாக மக்கள் தொகை வெடித்துக் கொண்டிருக்கும் இடங்களில், தண்ணீருக்காக ஜீவன் அல்லது மரணம் என்ற போராட்டம் இருந்து வருகிறது. குறைந்து கொண்டிருக்கும் தண்ணீர், உலகம் முழுவதிலும் வேகமாக ஒரு பயங்கரமான நெருக்கடியாக மாறிக் கொண்டுவருகிறது.
உங்களுக்குத் தண்ணீர் ஏராளமாக இருந்தாலும் கூட, அடுத்த கட்டுரை காண்பிக்கிற விதமாகவே, இந்தத் தண்ணீர் நெருக்கடியால் நீங்களும் கூட பாதிக்கப்படலாம். (g86 11/22)
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“நீங்கள் எண்ணெய் இல்லாமல் வாழலாம், அன்பில்லாமலும் கூட வாழலாம், ஆனால் தண்ணீரில்லாமல் வாழமுடியாது.”
[பக்கம் 14-ன் வரைப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
97% பூமியின் தண்ணீர் உப்பு நீராக கடலில் இருக்கிறது
2.973% குடிநீர் பனிக்கட்டி பாளங்களிலும், துருவப் பகுதிகளில் பனிமுகடுகளிலும்,
ஆழத்திலுள்ள நீர்த் தேக்கங்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளது
0.027% ஏரிகள், ஆறுகள் மற்றும் ஆழமில்லாத நீர் தேக்கங்களில் கிடைக்கிறது.