ஒரே அவசரம்—ஆனால் சாதனை ஏதுமில்லை?
வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்ற வாகன ஓட்டி நிதானமான வேகத்தில் ஓட்டிக்கொண்டிருப்பதாகக் கருதினான், அதாவது மணிக்கு 80 மைல் (130 கி.மி.) வேகம்! என்றபோதிலும் அவனுடைய வாகனத்தில் பயணம் செய்த பயணிகள் குறிப்பிட்ட வேக கட்டுப்பாட்டிற்குப் பழக்கப்பட்டவர்களாயிருந்ததால், மேற்கு ஜெர்மனியின் அதிவேக போக்குவரத்துகளைக் கண்டு எரிச்சலடைந்தனர். ஏனென்றால், அங்கு குறிப்பிட்ட சில பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் வேக கட்டுப்பாடு கிடையாது. மணிக்கு 80 மைல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த போதிலும், கார்களும், மோட்டார் சைக்கிள்களும் ஒன்றையொன்று முந்திகொண்டிருந்தன! தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவளாய் அந்தப் பயணிகளில் ஒருத்தி: “எல்லாருக்கும் ஏன் இந்த அவசரம்? எல்லாரும் எங்கே போகிறார்கள்?
“ஒருவேளை எந்த இடத்திற்கும் போகவில்லைபோலும்,” என்று அவளுடைய நண்பர் வேடிக்கையாக சொன்னாள். ஏனென்றால், எல்லாரும் ஏதோ ஒரு இடத்திற்குப் போய்க் கொண்டிருப்பதாகத் தெரிந்தது—வேகமாக!
ஆனால் ஏன் எல்லாருக்கும் இந்த அவசரம்? பயணம் செய்வதில் பாதி மகிழ்ச்சி, வழியில் காணும் காட்சிகளைக் கண்டு களிப்பதற்கு நேரம் செலவழிப்பதிலிருக்கிறது என்பதை அவர்கள் மறந்துவிட்டார்களா? வாழ்க்கை உண்மையிலேயே மூச்சுத்திணர ஓடும் நூறு மீட்டர் ஓட்டப்பந்தயமா?
வேகமாகச் செல்லும் கார்கள், வேகமாக சமைக்கும் சமையல் சாதனங்கள் மற்றும் அதிவேக விமானங்கள் பின்வரும் காரியங்களை எதிர்பார்க்கும் ஒரு சகாப்தத்தைக் குறிப்பதாக இருக்கின்றன: விரைவு! துரிதம்! கூடுதல் திறமை! வெகு சிலரே குதிரை வண்டிக்குத் திரும்புவார்கள் என்பது உண்மைதான். இதற்கு அவசரமும் ஒரு காரணம் என்பதைப் பலர் ஒப்புக்கொள்வார்கள். போலீஸை அல்லது மருத்துவரை அழைத்தால் அவர்கள் உங்களிடத்திற்கு நிதானமாக வரமாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
இருந்தாலும், இந்த அவசரம் அவசியந்தானா அல்லது நன்மை பயக்குமா? இல்லை என்பதாக சிலர் உணருகின்றனர். லாஸ் ஆன்ஞலீஸ் டைம்ஸ் பத்திரிகைக்குக் கட்டுரை எழுதுபவர் பின்வருமாறு சொல்கிறார்: “துரத்தப்பட்டும், துரிதப்படுத்தப்பட்டும் ஓயாது வட்டமிடப்பட்டும் [பலர்] இந்த அவசர சகாப்தத்தில் கடிகாரத்தின் கொடுமையின் கீழ் வாழ்க்கை முழுவதையும் அவசரத்திலேயே கழிக்கின்றனர்.”
வேகத்தால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் இன்றைய வாழ்க்கை, தி டொரான்டோ ஸ்டர் குறிப்பிடுவது போல, “கட்டுக்கடங்காத ஒரு கொள்ளைநோய்க்கு—அழுத்தத்திற்கு—வழிநடத்தியிருக்கிறது! அழுத்தம் மக்களை விஷம் போல் பாதித்திருக்கிறது.சொடி மற்றும் நகப்பிளவு முதல் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு வரையான பயமுறுத்தும் பல நோய்களுக்குக் காரணமாக இருப்பதாய்ப் பழிக்கப்படுகிறது. கடிகாரத்தின் அழுத்தத்தின் காரணமாக மானிட உறவுகளுங்கூட கசந்துவிடுகின்றன.
அப்படியிருக்க, நம்முடைய சகாப்தம் ஏன் “ஓர் அவசர சகாப்தமாக” இருக்கிறது? நீங்கள் இப்பொழுது துரிதப்படுத்தப்படுவதாகவும் அழுத்தப்படுவதாகவும் உணருகிறீர்கள் என்றால், இன்னும் ஒரு சில வருடங்களில் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? உங்களுடைய வாழ்க்கையை நன்கு கட்டுப்பாடுடன் நடத்திட—இன்றைய அவசர வாழ்க்கை வேகத்தை எதிர்த்து சமாளித்திட ஏதாவது வழி இருக்கிறதா? (g87 2/22)