ஏன் இந்த அவசர வாழ்க்கை வேகம்?
நம்முடைய சகாப்தம் ஏன் இந்தளவுக்கு அவசரமான வேகத்தில் ஓடுகிறது? தொழில் புரட்சி ஏராளமான ஓய்வை ஏற்படுத்தும் என்பது அமைதியின் கற்பனை உலகிலிருந்து எழுப்பப்படும் தொலைதூர குரலாக இருக்கிறது. அனைவருக்கும் “குறைந்த வேலை, நிறைய விளையாட்டு” என்று பொருளியல், சமூக வாழ்க்கை மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்து ஆராய்ச்சி நிபுணர்களால் முன்னறிவிக்கப்பட்ட காரியம் செயல்படவில்லை.
ஆம், எழுத்தாளராகிய A. கென்ட் மக்டெளகால் பின்வருமாறு கூறுகிறார்: “ஒரு தலைமுறைக்கு முன்னால் இருந்ததுபோலவே, வேலை சராசரி ஊதியம் பெறுகிறவனின் நேரத்தை எடுத்துக்கொள்கிறது, அதே சமயத்தில், வேலைக்குச் சென்று வரும் நேரம் அதிகம் எடுக்கிறது.”
வாழ்க்கையை எளிதாக ஆக்குவதற்கு மாறாக, நவீன தொழில் நுட்பம் அதை அதிக அவசரமான ஒன்றாக்கிவிட்டிருக்கிறது. விற்பனைத் துறை பேராசிரியர் ஹாரல்டு H.காஸர்ஜியன் சொல்லுகிறார்: “பேரளவான பேச்சுத் தொடர்பு சாதனங்களும் பேரளவான போக்குவரத்துமே நம்மை உருவாக்குகின்றன. நாம் அதிக அழுத்தத்திற்குள் வந்திருக்கிறோம், ஏனென்றால் அவசரப்படுவதற்கு செயற்கைக் காரணங்களை உருவாக்கியிருக்கிறோம். நம்முடைய சொந்த உயர்-அழுத்தக் கல்லறைகளில் நம்மை நாமே புதைத்துக் கொள்ளுகிறோம்.”
முக்கிய அம்சங்கள்
இன்று அநேக தகப்பன்மார்கள் தங்களுடைய குடும்பங்களை ஆதரித்துப் பராமரிப்பதற்காகக் கூடுதலான நேரம் வேலை செய்ய வேண்டியதாகவும், இரண்டு வேலைகளை எடுத்துக்கொள்ள வேண்டியதாகவும் இருக்கிறது: மற்றும் கூடுதலான பெண்கள் வேலை மார்க்கட்டில் பிரவேசிக்கும் கட்டத்திற்குள்ளாகியிருக்கிறார்கள். டெய்லி டெலிகிராஃப் என்ற பத்திரிகையில் பால் ஜான்சன் பின்வருமாறு எழுதினார்: “ஆம், பெண்களின் அனுதின வேலைகள் வர்த்தக தொழில் நுட்பத்தால் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்க, முன்பிருந்ததுபோலவே கடினமாக உழைக்கின்றனர்; அதிக கடினமாகவும் உழைக்கின்றனர் என்பது வேடிக்கையாக இருக்கிறது.”
எனவே ஊதியத்திற்காக ஒரு வேலையில் ஒரு நாள் முழுவதும் செலவழிக்கும் பல பெண்கள் இரண்டாவது வேலைக்காக வீடு திரும்புகின்றனர்—வீட்டையும் பிள்ளைகளையும் கவனிப்பதற்காக மனைவிமார்களுக்கு இருக்கும் கூடுதலான வேலையைக் குறைப்பதற்குக் கணவன்மார்கள் ஒன்றும் செய்வதில்லை என்று ஆய்வுகள் காண்பிக்கின்றன. இதனால் வேலை செய்யும் பெண்களுக்கு நேரம் கிடைப்பது அரிய ஒன்றாகிவிடுகிறது. வேலை செய்யும் பெண்கள் என்ற நூலின் ஆசிரியர்கள் வேலை செய்யும் மனைவி ஒருத்தி பின்வருமாறு சொல்லுவதை மேற்கோள் காட்டுகிறார்: “நான் செய்ய விரும்பும் காரியங்களைச் செய்வதற்கு அல்லது செய்ய வேண்டியவற்றிற்குப் போதுமான நேரம் இல்லாததால் அதிக அழுத்தத்திலிருப்பதாக உணருகிறேன்.”
பலருக்கு பாலுறவு நெறிகளில் மாற்றங்களும் உயர்ந்துகொண்டிருக்கும் விவாக ரத்துக்களும் அவசர வாழ்க்கை வேகத்திற்குக் காரணமாயிருக்கின்றன. எப்படி? குடும்ப உறவுகள் என்ற நூலில் ஒரு கட்டுரை பின்வருமாறு விளக்குகிறது: “நம்முடைய சமுதாயம் [ஐக்கிய மாகாணங்கள்] கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களில் 79% அதிகரிப்பைக் கண்டிருக்கிறது. . . . இன்றைய நிலை கடந்த எந்த ஒரு காலத்திலும் இருந்ததைவிட மிகுந்து காணப்படுகிறது.” ஒற்றைப் பெற்றோராக இருந்து, இளைஞரைப் பயிற்றுவிப்பதும், கடைக்குச் சென்று வருவதும், சமையல் செய்வதும், சுத்தம் செய்வதும் ஒருவருக்கு வாழ்க்கை ஓய்வற்ற ஒன்றாக, அவசர வாழ்க்கையாக இருப்பதாகத் தென்படக்கூடும்.
மற்ற அம்சங்கள்
மற்ற சிறிய காரணங்களுங்கூட இன்றைய அவசர வாழ்க்கை வேகத்திற்கு உரமூட்டியிருக்கின்றன.
குறுகிய வாழ்க்கை—“ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்,” என்று பைபிள் கூறுகிறது. “அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.” (யோபு 14:1, 2) இந்த பைபிள் வசனத்தின் உண்மையை உணர்ந்தவர்களாக அநேகர் தங்களுடைய வாழ்க்கையை அவசரமுள்ளதாக்கியிருக்கின்றனர், அதில் எவ்வளவு செய்யமுடியுமோ அவ்வளவையும் அதில் நெருக்கியிருக்கின்றனர். “புசிப்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்பது அவர்களுடைய தத்துவம்.—1 கொரிந்தியர் 15:32.
அநிச்சய வாழ்க்கை—“ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும் . . . போதது,” என்கிறான் ஞானமுள்ள அரசனாகிய சாலொமோன். ஏன்? “ஏனென்றால் அவர்களெல்லாருக்கும் சமயமும் எதிர்பாராத சம்பவமும் நேரிடுகிறது,” என்று அவன் விளக்கினான். (பிரசங்கி 9:11) எனவே ஏதாவது எதிர்பாராத சம்பவம் தங்களுடைய இலக்கை அடையாதபடி செய்துவிடுமோ என்ற பயத்தால் மக்கள் தங்கள் இலக்கை அடைந்திட அவசரப்படுகிறார்கள்.
ஏதோ ஒன்றை இழந்துவிடுவோமோ என்ற பயம்—சிறு பிள்ளைகளைப் போல பெரியவர்களும் நிதானம் இழந்தவர்களாக, கவனிக்கும் திறத்தில் குறைந்தவர்களாக ஏதோ ஒரு புதிய காரியத்தை அவசரத்துடன் செய்து முடிக்க முற்படுகிறவர்களாக இருக்கிறார்கள். தற்போதுள்ள காரியத்தைத் தாங்கள் நிதானமாக அனுபவிக்க முடியாது, ஏனென்றால், எதிர்காலத்தை அனுபவிப்பதற்கு அவர்கள் அவசரப்படுகிறார்கள்.
அமைதியின்மையும் பொறுமையின்மையும்—அமைதியின்மையுடன் பொறுமையின்மையை இணைத்திடுங்கள். உங்கள் வாகனத்திற்குப் பின்னால் வரும் வாகனங்களைப் பார்ப்பதற்கான கண்ணாடியில் அந்த வாகன ஓட்டியை நீங்கள் புரிந்துகொள்ள முடிகிறது. தனக்கு முன்னாலிருக்கும் ஒவ்வொரு வாகனமும் தன்னை அவமதிப்பதாகக் கருதி அவை அனைத்தையும் முந்திச் செல்வதற்கு முற்படுகிறான். அநேக சந்தர்ப்பங்களில் காரணமின்றி அப்படிச் செய்கிறான். சில சமயங்களில் நீங்கள் அவரை அடுத்த சாலை சந்திப்பு விளக்கில் சந்திக்கிறீர்கள்!
சலிப்பு—தங்களுடைய வேலையை அல்லது அநுதின செயல்களைச் சலிப்புதட்டுவதாக அல்லது உற்சாகமற்றதாகக் காணம்போது சிலர் ஓய்வு நடவடிக்கைகளுக்குக் கூடுதலான நேரத்தைக் கொண்டிருப்பதற்காக அவசியமான தீமைகள் என்று தாங்கள் கருதுகின்ற இவற்றை அவசரமாக செய்துமுடிக்க நினைக்கிறார்கள்.
“நேரமே பணம்”—சிலர் இந்த நியமத்தின் பேரில்—மற்றும் கடிகாரத்தின் பேரில்—வாழ்கிறார்கள். பத்து ரூபாய் மிச்சப்படுத்தும் நோக்கத்துடன் தங்கள் ஓய்வு நேரத்தையும் விடுமுறை நாட்களையுங்கூட பயன்படுத்திக்கொள்வதில்லை. திருப்தியற்றவர்களாய் பொருளுடைமைகளை சேர்த்துவைப்பதற்காக அவர்கள் எப்பொழுதுமே அவசரத்தில் வாழ்கிறார்கள், அவற்றை அனுபவிப்பதற்குங்கூட நேரம் இல்லை.
காரணம் என்னவாக இருப்பினும், உங்களுடைய வாழ்க்கை ஒருவேளை அவசர ஓட்டமாக இருக்கக்கூடும். அப்படியென்றால், கேள்வியானது . . .
அது உங்களை எங்கே வழிநடத்துகிறது?
ஒரு காரியம், நவீன அவசர வாழ்க்கை வேகம் அழுத்தம் சம்பந்தப்பட்ட பல வியாதிகளில் விளைவடைந்திருக்கிறது. ஆனால் “பதறிய காரியம் சிதறிப்போம்” என்ற பழமொழி மனிதரின் மற்ற செயல்களிலும் உண்மையாக இருந்துவருகிறது. உதாரணமாக, ஆர்ஸ்ட்லீஷ் ப்ராக்ஸிஸ் என்ற ஜெர்மன் பத்திரிகை பின்வருமாறு அறிக்கை செய்கிறது: “சாலை போக்குவரத்து விபத்துக்களின் முதல் காரணம் அளவுக்கு மிஞ்சிய வேகமாகும்.”
அடிப்படை தொழில் திறமைகளில் சிறந்து விளங்க நினைக்கும் ஒரு பள்ளி மாணவன் ஒரு வேலையைப் பெற்று அதைக் காத்துக்கொள்வதைக் கடினமாகக் காண்பான். அவசரமாக சாப்பிடும் ஒருவன் அஜீரணம் போன்ற வயிற்றுக் கோளறையும் மற்றும் பல நோய்களையும் பெறுகிறான். “வார்த்தைகளில் பதறுகிற” ஒரு மனிதன் மற்றவர்களை இக்கட்டான நிலைக்குள்ளாக்குகிறவனாகவும், புண்படுத்துகிறவனாகவும் அல்லது நட்பை முறிக்கிறவனாகவும் இருக்கக்கூடும். (நீதிமொழிகள் 29:20) விவாகத் துணையைத் தேடுவதில் அவசரப்படும் ஒருவன், விவாகரத்து செய்வதற்கும் விரைகிறவனாயிருக்கும் நிலையில் தன்னைக் காண்பான்.
பொருளுடைமைகளைப் பெறுவதற்கும், வாழ்க்கைப் பணியில் முன்செல்வதற்கும், ஒரு குடும்பத்தை அமைத்துக்கொள்வதற்கும் அல்லது வாழ்க்கையில் மிகுந்ததைப் பெறுவதற்கும் அவசரப்படுகிறவர்களைப் பற்றியதென்ன? உண்மைதான், அப்படிப்பட்ட காரியங்களை நாடுவது தன்னில்தானே தவறுடையதாயில்லை. ஆனால் அப்படி நாடுவது கட்டுக்கடங்காத வேகத்தைக் கொண்ட போட்டியாக மாறும்போது, மக்களுக்குப் பின்னால் எப்படி நன்மை பயக்கும்?
பூர்வீக அரசன் சாலொமோன் அப்படிப்பட்ட காரியங்களை நாடினான், ஆனால் அவன் வந்த முடிவு: “என் கைகள் செய்த சகல வேலைகளையும் நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.”—பிரசங்கி 2:11.
எனவே இன்றைய அவசர வாழ்க்கை வேகத்தை எதிர்த்து சமாளித்து, சம்பந்தப்பட்ட விதத்தில் ஓர் அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்கு வழி இருக்கிறதா? (g87 2/22)
[பக்கம் 5-ன் பெட்டி]
இன்றைய அவசர வாழ்க்கை வேகம்
“துரிதப்படுத்தப்பட்டு அளவுக்கு மிஞ்சி சாதித்திடும் தன்மை இன்றைய அழுத்தம் மிகுந்த சமுதாயத்தில் [எப்பொழுதும் இருக்கிறது]” என்று தி நியு யார்க் டைம்ஸ் கூறுகிறது. “ரயில் நிலையத்திற்கு ஒருவன் ஓடுவதும், ஒரு சில நிமிடங்களில் இன்னொருவன் அவனைப் பின்தொடருவதும், அடைவதற்குறியதும், அதைக் கடந்துவிடுவதற்குரியதுமான இலக்குகளினால் அலுவலகத்தினர் அலைக்கழிக்கப்படுவதும், செயல் திட்டத்தை நிறைவேற்றுவதில் முன்நிலையில் இருக்கக் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதும், தனக்குப் பொறுப்பைப் பெற்றுதரும் காரியங்களைச் செய்வதற்கு தன்னாலானவற்றிற்கும் அதிகத்தைச் செய்கிறவனுமான ஒருவனைத் தத்ரூபமாகக் காண்கிறோம்.”