சர்வதேசீய பொருட் காட்சிகள் அழியாதிருக்க போராட்டம்
சர்வதேசீய பொருட்காட்சிகளும் உலக கண்காட்சிகளும் பொதுவாக மக்களின் அக்கறையை வெகுவாக தூண்டியிருக்கின்றன. அவை உலகின் வியாபாரத்தையும்கூட உயர்த்தியிருக்கின்றன. ஆனால் இப்பொழுது அவை மறைந்துவிடாதிருக்குமோ என்று யோசிப்பவர்கள் இருக்கின்றனர். இது ஏன்?
கண்காட்சிகள் மற்றும் பொருட்காட்சிகளின் வரலாறும், அவைகளின் நோக்கமும், அண்மையில் நடைபெற்ற பொருட்காட்சியில் கிடைத்த அபிப்பிராயமும் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க உதவி செய்யும்.
தோற்றமும் நோக்கமும்
கிறிஸ்தவத்துக்கு முன்னான காலங்களில், மத்திய கிழக்கில் மதசம்பந்தமான பண்டிகைகள் மற்றும் கூட்டங்களில் கண்காட்சி ஆரம்பமானது. தங்களின் வியாபார சரக்குகளை நடுநிலப் பகுதி முழுவதிலுமாக விற்பதற்கு பினீசியா நாட்டவர் போன்ற வியாபாரிகளுக்கு இது ஒரு வழியை திறந்தது.
நாம் அறிந்திருப்பது போன்ற வர்த்தக கண்காட்சிகள், ஐரோப்பாவில் இடைநிலைக்காலத்தில் தோன்றின. அவை வணிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் வியாபாரத்துக்கு முக்கிய இடங்களாக இருந்தன. கண்காட்சி என்பதற்குரிய ஆங்கில வார்த்தையாகிய “ஃபேர்” என்பது, ஃபரே (பண்டிகை) என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வருவதிலிருந்து இவைகளுக்கு மதசம்பந்தமான பின்னணி இருப்பது தெரிகிறது. இவை இடைகாலத்திய மதசம்பந்தமான கண்காட்சிகள் மற்றும் பண்டிகைகளோடு சம்பந்தப்பட்டவையாக இருந்தன. அதேவிதமாகவே, கண்காட்சி என்பதற்குரிய ஜெர்மன் வார்த்தையாகிய மெஸி என்பது ‘ஆராதனை’ என்று பொருள்படும் மிஸா என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது. (என்சைக்ளோப்பீடியா அமெரிக்கானா, சர்வ தேச பதிப்பு.) ஆனால் காலப்போக்கில் மதசம்பந்தமான பின்னணி காட்1 சியிலிருந்து மறைய, வியாபாரத்துக்கு முக்கியத்துவம் மாற்றப்படலாயிற்று.
இங்கிலாந்திலுள்ள லண்டனில் 1851ல் நடைபெற்ற கிரிஸ்டல் பேலஸ் பொருட்காட்சியில் இதற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தெளிவாக இருந்தது. இதுவே உண்மையில் முதல் சர்வதேசீய பொருட்காட்1 சியாகவும் அதற்கு பின் வந்தவைகளுக்கு ஒரு மாதிரியாகவும் கருதப்பட்டது. “பிரிட்டிஷ் நாட்டு சரக்குகளையும் செய்தொழிலாக்க முறைகளையும் உலகுக்கு அறிமுகஞ்செய்து வைத்து இதன் மூலமாக பொருள் தேவையை ஊக்குவிப்பதே” அதன் நோக்கமாக இருந்தது. அது வெற்றியடைந்ததா?
என்சைக்ளோப்பீடியா அமெரிக்கானா பதிலளிக்கிறது: “பிரிட்டிஷ் நாட்டவர் மற்ற ஆட்களின் முதல் தரமான கலையையும் கைத்தொழிலையும்பற்றி கற்றுக்கொண்டது மட்டுமின்றி, பார்வையாளர்கள் . . . பிரிட்டிஷ் நாட்டு சரக்குகள், இயந்திர சாதனங்கள் மற்றும் உற்பத்தி உத்திகளை நுட்பமாக தெரிந்துக் கொண்டனர். உடனடியாக, பிரிட்டிஷ் சரக்குகளுக்கு ஆர்டர்கள் குவிய ஆரம்பித்தன.”
சர்வதேசீய பொருட்காட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது, உலக குழு ஒன்றைக் கொண்டு இவற்றை சமாளிப்பது பொருத்தமானதாக காணப்பட்டது. (பக்கம் 27-லுள்ள பெட்டியில், பிரபலமான சில உலக கண்காட்சிகள் மற்றும் பொருட்காட்சிகளின் பகுதியளவான பட்டியலை காணலாம்.) இதற்கிசைவாக 1928-ல் பிரான்ஸிலுள்ள பாரீஸில் “உலக கண்காட்சிகளின் எண்ணிக்கையையும் அதை நடத்தும் முறையையும் ஒழுங்குபடுத்துவதற்காக” உயர் அதிகாரிகளின் மாநாடு ஒன்றை நடத்த 35 தேசங்கள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. 1931-ல் இந்த மாநாடு இந்த கூட்டங்களை மேற்பார்வை செய்ய BIE-வை (பீரோ இன்டர்நேஷனல் டெஸ் எக்ஸ்போஸிஷன்ஸ்) நிறுவியது.
எக்ஸ்போ 86: 1986 உலக பொருட்காட்சி
கனடாவிலுள்ள வான்கூவரில் 1986 மே 2 முதல் அக்டோபர் 13 வரை நடந்த எக்ஸ்போ 86, மிக அண்மையில் நடைபெற்ற சர்வதேசீய பொருட்காட்சியாகும். இதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 173 ஏக்கர் நிலத்தில் 90 காட்சி மாடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 54 தேசங்கள் இதில் கலந்துக் கொண்டன. எக்ஸ்போ 86-ன் பொருள் “போக்குவரத்தும் செய்தி இணைப்பும்” என்பதாகும். “இயங்கிக் கொண்டிருக்கும் உலகம்—தொடர்பு கொண்டிருக்கும் உலகம்” என்பது அதன் முக்கிய கூற்றாக இருந்தது. அதன் நடுவிலிருந்தது, 17 மாடி துரு பிடிக்காத இரும்பினாலான ஒரு கவிகை மாடமாகிய எக்ஸ்போ நிலையமாகும். இதில் மற்ற காரியங்களோடுகூட 500 இருக்கைகள் கொண்ட ஒரு திரையரங்கம் இடம் பெற்றிருந்தது. எட்டு மாடி உயரமுள்ள திரையில் எவ்விடத்திலிருந்தும் திரைப்படங்களை பார்க்கக்கூடிய வசதி இதிலிருந்தது!
சோவியத் நாடும் அமெரிக்காவும் போக்குவரத்திலும் செய்தி இணைப்புத் துறையிலும் தங்களின் சாதனைகளை காட்ட தங்கள் விண்வெளி ஊர்திகளையும் துணைக் கோள்களையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். ஆயினும் பொருட்காட்சியில் கண்ணைக்கவர்ந்து ஈர்த்தது கனடா ப்ளேஸிலிருந்த கனடா காட்சி மாடமாகும். இது சுமார் 187 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரமாண்டமான கட்டிடமாகும். இது “நிரந்தரமாக பெடரல் அரசு காம்ப்ளெக்ஸாக” இருக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது. வான்கூவர் துறைமுகத்தில் அலைதாங்கியின் மீது கட்டப்பட்ட இது சொகுசு பயண நீராவிக் கப்பலும் ஐந்து மாபெரும் பாய்மரக் கப்பல்களும் இணைந்து, கடலில் பயணத்துக்கு தயாராக இருப்பது போல காட்சியளிக்கிறது.
எக்ஸ்போ முடிந்த பின்பு, கனடா ப்ளேஸ் உலக வர்த்தக மையமாக மாறியது. இதற்கு அது உகந்ததாக இருக்கின்றது. உள்ளே, இது இரண்டு கால் பந்தாட்டக் களங்களைப் போல அத்தனை பெரியதாக இருக்கிறது. இங்கு 5,000 பேருக்கு இடவசதியும், கூட்டங்களை நடத்த 23 பெரிய அறைகளும், 500 அறை தங்கல் விடுதியும் ஒரு நடன கூடமும் உண்டு.
“அது உண்மையில் பயனுள்ளதாக இருந்ததா?”
பொருட்காட்சி நடத்தப்பட்ட இடம் மேம்படுத்தப்பட்டிருப்பதையும், கட்டிடங்கள் தொடர்ந்து பயனுள்ளவையாக இருப்பதையும் முன்னிட்டு சிலர், செலவு எத்தனை ஆனாலும் உலக பொருட்காட்சி பெருமதிப்புடையதே என்று சொல்கிறார்கள். புதிய வேலைகள் உருவாக்கப்பட்டிருப்பதையும் சுற்றுலாத்துறை வளர்ந்திருப்பதையும், வரிப்பணத்தையும், புதிய போக்குவரத்து அமைப்பையும், பாலங்களையும் நெடுஞ்சாலைகளையும் மற்ற இரண்டாம் பட்ச நன்மைகளையும் அவர்கள் சுட்டிக் காண்பிக்கிறார்கள்.
பொருட்காட்சியில் குடும்பங்களுக்கு கிடைக்கும் முழுநிறைவான பொழுதுபோக்கை அநேகர் உயர்வாக போற்றுகிறார்கள். எக்ஸ்போவில் ஒவ்வொரு காட்சி மாடத்திலும் கல்வி சம்பந்தமான காட்சிகள் வைக்கப்பட்டிருந்ததோடுகூட பொருட்காட்சியின் ஒரு பகுதியில் திரையரங்கங்களில் திரைப்படங்களும் நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற 43,000 க்கும் மேல் இலவசமான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அந்தச் சூழ்நிலைமை எழுத்தாளர் ஒருவரை பின்வருமாறு அதைக் குறித்து எழுதும்படிச் செய்தது: “அதைச் சுற்றி நடந்துச் செல்வதே இன்பமான அனுபவமாக இருக்கிறது.” அவைகளில் ஒரு திரைப்படம், “மிகச் சிறந்த உயிரோட்டமுள்ள சிறு கதை பிரிவில் அகாடமி பரிசுக்காக முன்மொழியப்பட்டது.”
ஆனால் “உண்மையில் அது பயனுள்ளதாக இருந்ததா?” என்பதாக செய்தித் தாள் ஒன்று கேள்வி எழுப்பியது. எக்ஸ்போ 86-ன் கடைசி நாளன்று, கனடா நாட்டு செய்தித்தாள் எதிர்பட வேண்டியிருந்த கோடிக்கணக்கான ரூபாய் கடனைப்பற்றிய விஷயத்தை அறிமுகஞ்செய்கையில், “நாளை பின்விளைவுகள் ஆரம்பமாகின்றன” என்று அது குறிப்பிட்டது.
செலவுகளும் கடனும்
“கண்காட்சி சுமார் 453 கோடி ரூபாய் பற்றாக்குறையோடு முடிந்தது” என்பதாக தி டொரான்டோ ஸ்டர் அறிவிப்பு செய்தது. கடந்த காலங்களில் பொருட்காட்சிகளை நடத்தியதன் விளைவாக ஏற்பட்ட நஷ்டங்கள் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட பெட்டியில் காணப்படுகின்றன. எக்ஸ்போ 86 ஒரு விதிவிலக்கல்ல. ஆம் 220 லட்சம் பார்வையாளர்கள் வந்திருந்தார்கள்—எதிர்பார்த்ததற்கும் மேலாக இது இருந்தது. உலகம் முழுவதிலும் இதற்கு மிகச் சிறந்த இலவச விளம்பரம் கிடைத்தது. 60 தேசங்களில் 10,000 பத்திரிகையாளர்கள் இதைக்குறித்து எழுத ஒப்புக் கொண்டனர். எட்டு ஆண்டுகளாக இதற்காக தயாரிப்புகள் செய்யப்பட்டன. இதற்கு “தீவிரமான உலகளாவிய விற்பனை விளம்பர ஏற்பாடு” இருந்தது. இருந்தபோதிலும் இதில் பணம் நஷ்டமானது.
என்றாலும், பொருளாதாரம் முன்னேற வாய்ப்பிருக்கிறதல்லவா? “மாகாணத்தின் பொருளாதார நெருக்கடி, போதைப் பொருளை பயன்படுத்துகிறவன் நாடுகிறது போன்ற வேகமான விறுவிறுப்பை பெற்றுக் கொண்டது. ஆனால் எதிர்பார்த்த சர்வ தேசீய முதலீடு கிடைக்கவில்லை” என்றது ஒரு அறிக்கை. வேலையில்லா திண்டாட்டம், எக்ஸ்போ நடைபெறுவதற்கு முன்னிருந்த நிலைக்குச் சென்றுவிட்டது.
வரி செலுத்துபவருக்காகும் செலவு குறைவதில்லை. கனடா ப்ளேஸ் போன்ற அழகிய ஒரு கட்டிடம் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருப்பினும், அது புதுப்பிக்கப்படுவது அவசியமாக இருக்கும். வெறுமென அதன் உள்ளமைப்புகளை அகற்றுவதற்கு மாத்திரமே 13 கோடி ரூபாய் செலவாகும். புதுப்பிப்பதற்கு ஏற்கெனவே சுமார் 23 கோடி ரூபாய் செலவாகிவிட்டது. ஆனால் பொருட்காட்சிகளின் தரம் குறைந்துவிடும் என்பதைக் காண்பிக்க மற்ற காரியங்கள் இருக்கின்றன.
தரம் குறைவதற்கு மற்ற காரணங்கள்
எழுத்தாளர் ஒருவர் சொன்னதாவது: “நாம் தொழில் நுட்பத்தை சந்தேகிக்க ஆரம்பித்துவிட்டோம்; குறைந்தபட்சம் அது இனிமேலும் நம்மை பிரமிக்கச் செய்வதில்லை.” அது முழுமையான பிரமிப்பை நம்மில் உண்டாக்குவதில்லை.
கனடா தேசத்து விஞ்ஞானி டேவிட் சூசுக்கி எக்ஸ்போ 86 ஐக் குறித்து சொன்னதாவது: “செயற்கை புத்திக்கூர்மை, விண்வெளிப் பயணம் மற்றும் அணுஆற்றலின் கூட்டிணைவைப்பற்றிய நம்பிக்கையூட்டும் பிரகாசமான செய்தியின் மத்தியில், (அது) இந்த நடவடிக்கையை பயனற்றதாக்கிவிடும். இராணுவ பின்விளைவுகளை, தனியார் தொழிற்சாலைகள் அறுவடை செய்ய இருக்கும் அளவிடமுடியாத இலாபத்தை அல்லது வரபோகின்ற மாற்றங்களின் சமுதாய, சுற்றுப்புறச் சூழல் சார்ந்த மற்றும் தனிப்பட்ட பின்விளைவுகளைக் குறித்து குறிப்பாக எதையும் தெரிவிக்கவில்லை.”
அக்கறை குறைந்து வருவதற்கு கொடுக்கப்பட்ட மற்ற காரணங்களில் பின்வருவதும் அடங்கும்: “உலக கண்காட்சிகள், இனிமேலும் தொழில்துறையில் முன்னேறியுள்ள உலகுக்கு, முன்னேற்றத்தை தீர்மானிக்கும் ஒரு அளவுகோலாக இல்லை.” “இன்று உலகில் வியப்புணர்வு மிகவும் குறைந்துவிட்டது . . . மக்கள் . . . அவர்களுடைய தொலைகாட்சிப் பெட்டியிலேயே உலகின் எல்லா அதிசயங்களையும் பார்த்துவிடுகிறார்கள்.” “கடந்த சில பத்தாண்டுகளாக எக்ஸ்போக்களின் பெருக்கம், சில ஆட்களுக்கு வெறுப்புத்தட்டும்படியாக செய்துவிட்டிருக்கிறது.”
பொருட்காட்சிகளுக்கு என்ன எதிர்காலம்?
‘வகைவாரியாக அதிகமான கண்காட்சிகளும் குறைந்த பட்கம் அமெரிக்காவிலாவது, இதில் அதிகமான தோல்விகளும், உலக கண்காட்சிப் பற்றிய கருத்தை மறுபரிசீலனை செய்வதற்கு வழிநடத்தியிருக்கிறது’ என்பது எக்ஸ்போ 86 ஆணையர் தலைவரின் கருத்தாக இருக்கிறது. மேலுமாக அது எக்ஸ்போ 86 நடைபெறுவதற்கு முன்பே சொல்லப்பட்ட கருத்தாகும்.
அண்மைக்கால கண்காட்சிகள் பலவற்றில், குறைந்து கொண்டே வரும் மக்களின் எண்ணிக்கை, அவைகளுக்கு ஏற்பாடு செய்து அவைகளை ஊக்குவிப்பவர்களின் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியர்கள் ஏப்ரல் 30-ம் தேதி துவங்கிய எக்ஸ்போ 88-ஐ பிரிஸ்பேனில் கொண்டிருந்தார்கள். “தொழில்நுட்ப காலத்தில் ஓய்வு” என்பது அதன் பொருளாக இருந்தது. எக்ஸ்போ 86-க்கு கிட்டிய வெற்றி இதற்கும் கிடைத்ததா? இவை மறைந்துவிடாதிருக்க வேண்டுமானால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூட்டத்தை கவரவும் சர்வ தேசீய பொருட்காட்சிகளில் ஏற்படும் பெரும் நஷ்டத்தை தவிர்க்கவும் ஏதாவது செய்யப்பட வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. (g88 1⁄8)
[பக்கம் 27-ன் பெட்டி/படம்]
பிரபலமான சில உலக கண்காட்சிகளும் சர்வதேசீய பொருட்காட்சிகளும்
◼ 1893 சிக்காகோ உலக கண்காட்சிக்கு 275 லட்சம் ஆட்கள் வருகை தந்திருந்தார்கள்; சுற்றுவட்டவரையில் மக்கள் அமர்வதற்காக இருக்கைகளைத் தாங்கிக் கொண்டு செங்குத்தாகச் சுழலும் மாபெரும் சக்கரம் உலகில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
◼ 1939–40-ன் நியு யார்க் உலக கண்காட்சி, “நாளைய உலகம்” என்ற அதன் பொருளை எடுத்துக் காட்ட ட்ரைலான் மற்றும் கோளம் வடிவத்திலுள்ள கட்டிடங்களைக் கொண்டிருந்தது. இந்தப் பொருட்காட்சிக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடி 50 லட்சமாகும்.
◼ 140 அடி உயர துரு பிடிக்காத இரும்பு கோளத்தை சிறப்பு அம்சமாகக் கொண்டிருந்த நியு யார்க்கில் நடைபெற்ற மற்றொரு கண்காட்சி (1964–65) “புரிந்துக் கொள்ளுதலின் மூலமாக அமைதி” என்ற பொருளை உயர்த்திக் காண்பித்தது. கண்காட்சிக்கான செலவு வரவைவிட 26 கோடி ரூபாய் அதிகமானது.
◼ கனடாவிலுள்ள மான்டிரீலில், (1,000 ஏக்கர்கள்) நடைப்பெற்ற எக்ஸ்போ 67-ல், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் வந்திருந்தார்கள். 60-க்கும் மேற்பட்ட தேசங்கள் கலந்துக் கொண்டன. இது மிகப்பெரிய வெற்றியாக கருதப்பட்டது. ஆனால் இது, “390 கோடி ரூபாய் பற்றாக்குறையை விட்டுச் சென்றது.”
◼ எக்ஸ்போ 70 (815 ஏக்கர்கள்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜப்பானிலுள்ள ஓசாக்காவுக்கு 6,42,18,770 பேர் வந்திருந்தனர். 77 தேசங்கள் இதில் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.
◼ அமெரிக்காவின் டெனேஸியிலுள்ள நாக்ஸ்வில்லி (1982); வந்திருந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடி 11 லட்சம்.
◼ அமெரிக்காவிலுள்ள நியு ஆர்லீன்ஸ் (1984) 73 லட்சம் ஆட்கள் வந்திருந்தார்கள். இதன் முடிவில் 130 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டது.
◼ ஜப்பானிலுள்ள சுக்குபா (252 ஏக்கர்கள்) (1985); 2 கோடி 3 லட்சம் பேர் வந்திருந்தார்கள்.
[படத்திற்கான நன்றி]
Background photo: Library of Congress
[பக்கம் 25-ன் படங்கள்]
மேலே: ஒற்றைக் கோளம், நியு யார்க் உலக கண்காட்சி, 1964–65
இடது பக்கம்: அணுவின் உள்ளமைப்பின் ஒரு காட்சி, ப்ரஸல்ஸ் உலக கண்காட்சி, 1958
கீழே: எக்ஸ்போ நிலையம், வான்கூவர் கண்காட்சி, 1986
[பக்கம் 26-ன் படங்கள்]
எக்ஸ்போ 86 காட்சிகள், வான்கூவர்