“கண்டுபிடிப்புகளின் யுகம்”—என்ன விலையில்?
ஸ்பெய்னிலுள்ள விழித்தெழு! நிருபர்
ஓர் அழகிய வண்ணத்துப்பூச்சியை பிடித்துக்கொண்டு, “நான் கண்டுபிடித்ததைப் பாருங்கள்!” என்று சிறுமி கூச்சலிடுகிறாள். பெரியவர்களுங்கூட தங்களுடைய வெகு சமீப கண்டுபிடிப்புகளை விளம்பரப்படுத்த விரும்புகின்றனர்.
மேலும், அதைச் செய்வதற்கு ஒரு சர்வதேசக் கண்காட்சி அல்லது உலகக் கண்காட்சியைவிட சிறந்த இடம் வேறு எங்கே இருக்கிறது? ஏப்ரல் 20 முதல் அக்டோபர் 12, 1992 வரை தென்னக ஸ்பெய்னிலுள்ள செவைல்-ல், இந்த நூற்றாண்டின் கடைசியும் மிகப்பெரியதுமான உலகக் கண்காட்சி, எக்ஸ்போ ’92-ஐ ஏற்பாடு செய்திருந்தது.
எக்ஸ்போ ’92-ன் பொருள் “கண்டுபிடிப்புகளின் யுகம்” என்பதாகும், ஆகவே கடந்தகாலத்திலும் தற்காலத்திலும் மனிதவர்க்கத்தின் கண்டுபிடிப்புகளில் தங்களுடைய பங்கைச் சித்தரிப்பதற்கு பங்குபெற்றவர்கள் முயற்சி செய்தனர். உலகிலுள்ள 111 நாடுகளின் சமையற்கலை, மக்கள் மரபாராய்ச்சி, கட்டடக்கலை, தொழில்நுட்பவியல் ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு தனிச்சிறப்புவாய்ந்த வாய்ப்பு பார்வையாளருக்கு அளிக்கப்பட்டது.
என்றபோதிலும் சமீப ஆண்டுகளில், கண்டுபிடிப்பினால் ஒரு மோசகரமான பாதகம் விளைந்திருக்கிறது. அநேகக் கண்டுபிடிப்புகளின் ஒரு விரும்பத்தகாத துணை-உற்பத்திப்பொருள், பூமியின் வலுவற்ற சுற்றுப்புறச்சூழலைப் பாழாக்குகின்றதாக இருந்திருக்கிறது. ஒரு சிறுமி ஒரு வண்ணத்துப்பூச்சியின் மெல்லிய சிறகுகளை எவ்வாறு சேதப்படுத்தக்கூடுமோ, அதேபோல தொழில்நுட்பவியலின் பொறுப்பற்ற உபயோகம் சரிசெய்யமுடியாத சேதத்தை நம்முடைய கோளத்திற்கு உண்டாக்கலாம்.
இதன் காரணமாகவே, எக்ஸ்போ ’92 அரசாங்க வழிகாட்டி நூல் (Expo ’92 Official Guide) விளக்கியபடி, இலக்கானது “கண்டுபிடிப்பிற்கான மனிதனின் ஆற்றலுக்கு ஒரு பாராட்டை” வெறுமனே அளிப்பது அல்ல, ஆனால் நம்முடைய வலுவற்ற கோளத்தைப் பாதுகாப்பதற்கு தேவையான சர்வதேச ஒருமைப்பாட்டை முன்னேற்றுவிப்பதுமாகும்.
“ஒரு தீவின்மீது உலகம்”
இதற்கு ஏற்பாடு செய்திருந்த நகரமாகிய செவைல் கண்டுபிடிப்பின் பொற்காலத்தில் செழிப்பாக வளர்ந்தது. கிறிஸ்டொஃபெர் கொலம்பஸ் தன்னுடைய கண்டுபிடிப்பின் இரண்டாவது மிகப்பெரிய கடற்பயணத்தில் செவைலிலிருந்து பிரயாணம் செய்தார். நூற்றாண்டு 16-ன் காலப்பகுதியில், அமெரிக்காவிலிருந்து பெரும் அளவில் அநேகமான தங்கமும் வெள்ளியும் ஸ்பானிய கப்பல்களில் செவைலிக்கு ஏற்றப்பட்டது. தங்கக்கட்டி—அநேக பூர்வ ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கிய ஊக்கத்தூண்டுதல்—நகரத்தின் புகழ்வாய்ந்த இடங்களில் ஒன்றாகிய டாரே டெல் ஓரோ-வில் (தங்கக் கோபுரம்) இறக்கப்பட்டது.
என்றபோதிலும், சமீபத்தில், பணம் உள்ளே பொழிந்துகொண்டிருப்பதற்குப் பதிலாக வெளியே வழிந்துகொண்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், எக்ஸ்போ ’92-வுக்காக ஆண்டலூசியஸ் தலைநகரைத் தயார்படுத்துவதற்கு ஆயிரம் கோடி டாலர்கள் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணமெல்லாம் எதை உருவாக்கியிருக்கிறது?
செவைலியின் நகர்ப்புற எல்லையிலுள்ள குவாடல்க்குவிர் ஆற்றினால் உருவாக்கப்பட்ட ஒரு வண்டலாலான தீவாகிய லா கார்ட்டூஹா, பழைய துறவிமடம் மற்றும் பாழடைந்த ஒரு பீங்கான் தொழிற்சாலையின் இடமாகவும் இருந்தது. அது ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்குப் பூங்காவாக, வரிசையாக மரம் நடப்பட்ட சாலைகள், தோட்டங்கள், கால்வாய்கள், மூடப்பட்ட நடைபாதைகள், மற்றும் பளபளப்பான காட்சி மாடங்களாக முழுவதுமாக மாற்றப்பட்டது. இவையெல்லாம் அநேக நேர்த்தியான பாலங்களால் நகரத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. ஸ்பெய்ன் அரசனாகிய யுவான் கார்லஸ் I, புதிய லா கார்ட்டூஹாவை, “ஒரு தீவின்மீது உலகம், உலகத்துக்காக ஒரு தீவு” என்று விவரித்தான். எக்ஸ்போ ’92-க்குச் சென்ற பார்வையாளர்கள் என்ன விதமான உலகைக் கண்டுபிடித்தனர்?
தொழில்நுட்பம் சம்பந்தமானத் திறமைகளைப் போலவே பண்பாடு, சமையற்கலை, பொழுதுபோக்கு ஆகியவற்றை எக்ஸ்போ ’92 வலியுறுத்துவதாகத் தோன்றியது. எழுத்தாளர் சீஸார் ஆலன்ஸு இவ்விதமாகக் கருத்துத் தெரிவித்தார்: “எக்ஸ்போ ’92-ல், முன்னேற்றத்தைப் பற்றிய தளராத நம்பிக்கையிலிருந்து வெறுமனே விஞ்ஞானப்பூர்வமான அல்லது தொழில்நுட்பம் சார்ந்த சாதனைகளைப் பற்றிய ஒரு கவனிக்கத்தக்க அவநம்பிக்கைக்கு நாம் முன்னேறியிருக்கிறோம்.” மேலுமாக, இதில் கலந்துகொண்ட சிறிய நாடுகளின் எண்ணிக்கையின் சாதனையுங்கூட, தொழில்நுட்பம் சார்ந்த அம்சத்திற்கு பதிலாக மனித அம்சத்தையே மேம்படுத்திக் காட்டியது.
தொலைதூர நாடுகளை விஜயம் செய்வதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லாதவர்களுக்கு அத்தகைய நாடுகளுடைய அழகு, மக்கள், வரலாறு ஆகியவற்றின் சிறிதளவான தோற்றத்தைப் பல்வேறு வகைப்பட்ட காட்சி மாடங்கள் அளித்தன. பார்வையாளர்களின் கவனத்திற்காக நியூஜீலாந்து மற்றும் பாப்புவா நியூ கினீ பழங்குடியினரின் நடனங்கள் ரஷ்யர்களின் உயிர்த்துடிப்புள்ள நடனத்தோடும், ஸ்பானிய செவியானாஸ் நடனத்தோடும், நேர்த்தியான இந்தோனேஷிய இன்னிசைகளோடும் போட்டியிட்டன. இசைநாடகத் தயாரிப்புகள், வானவேடிக்கைகள், தெரு பொழுதுபோக்குக் காட்சிகள் ஆகியவை அழகிய வர்ண சூழ்நிலையை அளித்தன.
கடந்தகால மற்றும் தற்கால கண்டுபிடிப்புகள்
கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் உலகம் எவ்வளவு அதிகமாக மாறியிருக்கிறது என்பதைப் பார்வையாளர் காணமுடிந்தது. லா கார்ட்டூஹாவின் புதுப்பிக்கப்பட்ட துறவிமாடத்தின் ஒரு கண்காட்சி 1492-ல்—ஐரோப்பாவில் மட்டுமல்ல, ஆனால் அமெரிக்க நாடுகள், கிழக்கத்திய மற்றும் இஸ்லாமிய உலகிலும்கூட—வாழ்க்கை எப்படி இருந்தது என்று காட்டியது. அந்தச் சமயத்தில் அந்த நான்கு பிரதேசங்களும் சமுத்திரங்கள், பாலைவனங்கள், அல்லது அவநம்பிக்கையினால் ஒன்று மற்றொன்றிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்த மிகப்பெரியத் தீவுகளைப் போல் இருந்தன.
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, சுற்றுப்புறச்சூழலோடு தயவாக இருப்பதற்கு எக்ஸ்போ ’92 குறிக்கோள் வைத்தது. முதல் முறையாக ஒரு சர்வதேசக் கண்காட்சியில் பாதுகாப்புச் செயலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒரு முப்பரிமாண விளக்கப்படம், எவ்விதமாக சமீப கண்டுபிடிப்புகள்—ஓசோன் அடுக்கில் துளை போன்றவை—நம்முடைய கோளத்திற்கு மனிதன்-உண்டுபண்ணிய அச்சுறுத்தல்களைச் சிறப்பாகக் காண்பித்திருக்கிறது என்பதை விளக்கியது. சுற்றுப்புறச்சூழல் கண்காட்சி மாடம் பொருளாதார வளர்ச்சியை பாதுகாப்புச் செயலோடு சமநிலைப்படுத்துதல் சார்ந்த பிரச்னையைப் பகுத்தாராய்ந்தது, அமேசான் மழைக் காட்டின் சிறிய அளவு மாதிரியைக் கொண்டிருந்த இயற்கை கண்காட்சி மாடம் இந்த விலைமதிப்பற்ற மழைக்காடு எவ்வாறு எளிதில் தாக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தியது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய தோட்டத் திட்டங்களில் ஒன்றில் 30,000 மரங்களும் 3,00,000 புதர்ச்செடிகளும் லா கார்ட்டூஹா தீவில் நடப்பட்டன. குறிக்கோளானது, கண்காட்சிப் பகுதியை அழகுபடுத்துவதும், நம்முடைய கண்டுபிடிப்பு சுற்றுப்புறச்சூழலை அழிப்பதற்கு வழிநடத்தக்கூடாது என்ற செய்தியைத் தெரியப்படுத்துவதுமாகும். சிகப்பு மற்றும் மஞ்சள் நிற தண்ணீர் லில்லிகள் ஒரு செயற்கை தொலைத்தொடர்பு துணைக்கோளுக்கு அடுத்ததாக இருந்தன, ஜாகரன்டா மரங்கள் தவிர்க்கமுடியாத ஒற்றைத் தண்டவாள ரெயிலுக்குக்கீழ் மலர்ந்திருந்தன, மற்றும் விஸ்தாரமான பச்சைப் புற்தரைகள் ஒரு சிக்கலான இழை ஒளி தொலைத்தொடர்பு அமைப்புமுறையை மூடியிருந்தது.
அநேகக் காட்சி மாடங்கள் வடிவிலோ கட்டிட பொருளிளோ பாரம்பரிய கட்டிட கலையை வெளிகொணர்வதாகவும் கவர்ச்சிகரமாகவும் இருந்தன. ஜப்பானிய காட்சி மாடம் உலகிலேயே மிகப்பெரிய மரத்தாலான கட்டிடமாக இருப்பதாக உரிமைபாராட்டப்பட்டது, ஸ்விட்சர்லாந்து ஆட்களோ ஒரு நேர்த்தியான காகிதத்தாலான கோபுரத்தைக் கட்டினர். மொராக்கோ ஓர் அராபிய அரண்மனையையும் ஐக்கிய அரபுக் கூட்டாச்சி ஒரு சிறிய மாளிகையையும் கட்டினர். நியூஜிலாந்தின் காட்சி மாடத்தின் முகப்புத்தோற்றம் முழுவதுமாக நீர்வீழ்ச்சியும், தத்ரூபமாகக் காட்சித் தருகின்ற கீரிச்சிடுகிற கடற்பறவைகளின் குடியேற்றமும் ஒரு செங்குத்தான பாறையாகவும் இருந்தது, இந்தியாவின் மரத்தாலான காட்சி மாடம் ஒரு மிகப்பெரிய மயில் தோகையினால் அழகு செய்யப்பட்டிருந்தது.
புழுக்கமான செவைலியன் கோடை காலத்தில் உஷ்ணத்தைத் தணிப்பது எப்பொழுதும் ஒரு பிரச்னையாயிருக்கிறது. எக்ஸ்போ அமைப்பாளர்கள் இயல்பான முறையில் பிரச்னைக்குப் பரிகாரம் நாடி, நூற்றாண்டுகளுக்கு முன்பாக செவைலில் வசித்த மூர்ஸ் இனத்தவர்களின் தொன்மை மாட்சியுடைய வழிமுறைகளைப் பயன்படுத்தினர். வெப்பத்தை அதிக சகிக்கத்தக்கதாக்க எண்ணற்ற நீர் ஊற்றுகள், நீர் துளிகளின் செயற்கையான முகில்கள், அவற்றோடு சேர்ந்து மரங்கள், புதர்ச்செடிகள், நிழலிடப்பட்ட நடைபாதைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினர்.
“நம்முடைய காலத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு”
கொலம்பஸ் தன்னுடைய முதல் கடற்பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னால், லா கார்ட்டூஹாவிலுள்ள பழைய துறவிமாடத்தில் அவர் தங்கினார். அவருடைய கடற்பயணம் கண்டுபிடிப்பின் யுகத்திற்கு வழிநடத்தியதை இந்தக் கண்காட்சிக் கொண்டாடியது. ஆனால் அநேகத் துறைகளில் ஐந்து நூற்றாண்டுகளாக முன்னேற்றம் இருந்தும், எதிர்காலத்தை மனிதஇனம் அதிக கவலையோடு நோக்குகிறது. “ஒன்றுசேர்ந்த நாட்டங்களும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையும், அடிப்படையில் தேசங்கள் மத்தியில் பேச்சு வார்த்தையிலும் பரஸ்பர புரிந்துகொள்ளுதலிலும் சார்ந்திருக்கிறது,” என்று அரசனாகிய யுவான் கார்லஸ் I குறிப்பிட்டுக் காட்டினார்.
அதன் காரணமாக எக்ஸ்போ ’92, “சமாதானம், நல்ல அயலாராக இருக்குந்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டின் செய்தியை நம்முடைய . . . கிரக பூமியின் அனைத்து குடிமக்களுக்கும் அளி”ப்பதற்கு நாடியது—நாட்பட்ட விதமாக பிளவுபட்ட உலகத்தை நோக்குகையில் இது ஒரு சுலபமான இலக்கு அல்ல. அரசாங்க வழிகாட்டி நூல் (Official Guide) உணர்ந்த விதமாகவே, “உண்மையில், இந்த நியமங்களின் அடிப்படையிலான ஒரு புதிய ஒழுங்குமுறை நம்முடைய காலத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும்.” (g92 12/22)
[பக்கம் 25-ன் படம்]
செவைலியின் புகழ்வாய்ந்த 13-ஆம் நூற்றாண்டு டாரே டெல் ஓரோ (தங்கக் கோபுரம்)
[பக்கம் 26-ன் படம்]
ஒரு தொலைத்தொடர்பு துணைக்கோள் காட்சிப் பொருளுக்கு அடுத்து இருந்த தண்ணீர் லில்லிகள்
[பக்கம் 27-ன் படம்]
மொராக்கோவின் காட்சி மாடம் மூரிஸ் இனத்தவர்களின் ஓர் அரண்மனை மாதிரியைப் பிரதிபலிக்கிறது