விளம்பரம் கிறிஸ்தவ மதத்தின் சக்திவாய்ந்த ஆயுதம்
இயேசு கிறிஸ்துவின் மரணத்தைப் பின்தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் சிதறடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்கள். K.S. லட்டூரெட் எழுதிய கிறிஸ்தவ மதத்தின் சரித்திரம் (History of Christianity) என்ற புத்தகத்தில் அவர் எழுதியதாவது: “புறமத ஆச்சாரங்களில் பங்குகொள்ள மறுத்ததால் கிறிஸ்தவர்கள் நாத்திகர் என்று அழைக்கப்பட்டனர். புறமத பண்டிகைகள், புறமத விசுவாசங்களிலும் பழக்கவழக்கங்களிலும் ஒழுக்கங்களிலும் முழுமையாக வேரூன்றியிருப்பதாய்க் கிறிஸ்தவர்கள் கருதிய பொது பொழுதுபோக்குகள் ஆகியவற்றிலிருந்து அவர்கள் விலகியிருந்ததால் மனித குலத்தையே வெறுக்கும் கூட்டத்தினராகப் பரிகசிக்கப்பட்டனர்.”
அன்றறியப்பட்ட உலகில் கிறிஸ்தவ மதம் இவ்வித எதிர்ப்பின் மத்தியில் பிழைத்து பரவியது என்பது உண்மையிலேயே விசித்திரமான ஒன்று. அது எப்படி கூடிய காரியம்? அந்த இரகசியத்தின் ஒரு பகுதி பிரசங்கிப்பில் அல்லது வெளியரங்கமாக அறிவிப்பதில் அடங்கியிருந்தது!
செயல்பட ஊக்குவிக்கும் வகையில் பிரசங்கிப்பவரும் போதிப்பவரும் என்று இயேசுவின் வேலையை விவரிப்பவராய்ப் பேராசிரியர் C.J. கேடெள ஆரம்பக்கால சர்ச்சும் உலகமும் (The Early Church and the World) என்ற புத்தகத்தில் எழுதுகிறார்: “பிறரை இணங்கச்செய்யும் வேலை வார்த்தையும் செயலிலுமாகிய இரு வழிகளிலும் தொடரப்பட வேண்டும். எனவே அவருடைய வாழ்க்கையிலும் போதனையிலும் வெளியரங்கமாக அறிவித்தல் அதிகம் உட்படுகிறது. அவருடைய ஆரம்பக்கால போதனையிலும்—அவருடைய சீஷர்களின் போதனையிலும்—பெரும்பகுதி பொதுமக்களுக்கு வெளியரங்கமாக அறிவிக்கப்பட்டது.” இயேசுவின் மரணத்துக்குப் பின்னர் அவருடைய சீஷர்களின் செயல் குறித்து குறிப்பிடுபவராய், கேடெள தொடர்ந்து கூறுவதாவது: “வெளியரங்கமாக அறிவித்தல் அதிகம் விரும்பப்பட்டது. சாட்சிகள் நேரடியாக ஒளிவுமறைவின்றி சாட்சி கொடுத்தனர்.”
நாம் எப்படிப்பட்ட ஆட்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்? கிறிஸ்தவ மதத்தின் ஆரம்பக்கால ஆண்டுகள் (The Early Years of Christianity) என்ற நூலில் எட்மண்டு டெ பிரெசன்ஸ் விவரிக்கிறார்: “போதனைகள் . . . இருதயத்திலிருந்து வெளிவந்த, கற்றறியப்படாத பேச்சு. பேச்சாளர்களாக இருந்தது அப்போஸ்தலர்கள் மட்டும் அல்ல; கடவுளுடைய மகத்துவங்களைக் குறித்து மற்ற கிறிஸ்தவர்களும் அவ்வளவு சரளமாகப் பேசினார்கள்.” கிறிஸ்தவர்கள் தங்களுக்குத் தாங்களே விளம்பரதாரர்கள், அவர்கள் எல்லாருமே தாங்கள் பொதுவாக செய்யும் பிரசங்க வேலையிலும் கற்பிக்கும் வேலையிலும் தங்களுடைய விசுவாசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாய் ஈடுபட்டார்கள்.
எட்வர்டு கிபன் ரோம சாம்ராஜ்யத்தின் சரிவும் வீழ்ச்சியும் (Decline and Fall of the Roman Empire) என்ற தன்னுடைய நூலில் “ரோம சேனைக்காக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகள் கிறிஸ்தவ மிஷினரிகள் தமஸ்குவிலிருந்து கொரிந்துவுக்கும் இத்தாலியிலிருந்து ஸ்பன் அல்லது பிரிட்டனின் கடைமுனைக்கும் செல்ல வசதியான மார்க்கமாக இருந்தது.” கிபன் தொடர்ந்து கூறுகிறார்: “டயோக்ளீஷியன் மற்றும் கான்ஸ்டன்டைன் ஆட்சிக்கு முன்னால் கிறிஸ்துவைப் பற்றிய விசுவாசம் எல்லா மாகாணங்களுக்கும் சாம்ராஜ்யத்தின் எல்லா மாநகர்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டிருந்தது என்று நம்புவதற்கு மிகப் பலமான காரணம் இருக்கிறது.”
தங்களுடைய விசுவாசத்தைப் பரப்புவதற்குக் கிறிஸ்தவர்கள் எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்தினர். பைபிள் மொழிபெயர்ப்பாளராகிய எட்கார் குட்ஸ்பீட் கிறிஸ்தவ மதம் அச்சகத்திற்குச் செல்கிறது (Christianity Goes to Press) என்ற தன்னுடைய நூலில் வெளிப்படுத்துவதாவது: “அவர்கள் அசாதாரண அளவில் புத்தகங்கள் வாங்குகிற, புத்தகங்கள் வாசிக்கிற மக்களாயிருந்தனர். அவர்கள் மொழிபெயர்க்கும் மக்களாகவும் புத்தகப் பிரசுரிப்பாளர்களாகவும் இருந்தனர். . . . (பொ.ச. 140-ல்) கிறிஸ்தவ பிரசுரிப்பாளர்கள் . . . பக்க இணைப்புகளையுடைய புத்தக முறையிடம், தொகுப்பேட்டு முறையிடம் திரும்பினர், அது நடைமுறையாகவும் . . . வசதியாகவும் இருப்பதைக் கண்டனர், இது அவர்களுடைய நூல் வடிவமாக அமைந்தது.”
20-வது நூற்றாண்டு விளம்பரம்
கிறிஸ்தவ விசுவாசத்தை உலகமுழுவதும் அறிவிப்பதில் தங்களுடைய முதல் நூற்றாண்டு உடன் ஊழியர்களைப் போலவே, யெகோவாவின் சாட்சிகளும் இன்று அதற்காக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும் வைராக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கின்றனர். கீழ்க்காணும் 20-வது நூற்றாண்டு சிறப்பு அம்சங்களைக் கவனியுங்கள்:
●1914. “சிருஷ்டிப்பின் புகைப்பட-நாடகம்” (Photo-Drama of Creation). இந்த நாடகம் புகைப்பட ஸ்லடுகளும் ஓடும் படங்களும் கொண்டதும், பதிவுத்தட்டுகளில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் பேச்சுகளும் இசையும் அப்படங்களுக்கு இசைவுபடுத்தப்பட்டதுமாக இருந்தது. இந்தச் செயல்திட்டம் பேசும் திரைப்படங்களுக்கு ஒரு முன்னோடியாக அமைந்தது.
●1920. “இப்பொழுது வாழும் இலட்சக்கணக்கானோர் ஒருபோதும் மரிக்க மாட்டார்கள்.” இரண்டாண்டு காலமாக, விளம்பர பலகைகளும் செய்தித்தாள்களும் உலகமுழுவதும் தனிப்பட்ட விதத்தில் செய்யப்பட்ட பரந்த விளம்பர திட்டங்களும் பிரபலமான இந்தச் சொற்பொழிவையும் அத்துடன் வெளியான சிறுபுத்தகத்தையும் விளம்பரப்படுத்தியது.
●1922. “ராஜாவையும் ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள்.” இதுதான் சீடர் பாய்ன்ட், ஒஹையோ, மாநாட்டின் சவால்மிகுந்த பொருள். “ராஜாவையும் ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்,” என்ற ஊக்குவிப்பு அந்தச் சமயம் முதல் தனிப்பட்டவிதத்தில் அறிவிப்பாளர்களாக யெகோவாவின் சாட்சிகளுக்கு செயல்படுவதற்கான வேகத்தை வகுத்தளித்தது.
●1924. காவற்கோபுர சங்கத்தின் வானொலி நிலையம் (WBBR, Watch Tower Society’s Radio Station). வானொலி நிலைய ஒலிபரப்பை பயன்படுத்திக்கொள்ள அமைக்கப்பட்டது. 1933 ஓர் உச்சநிலைக் கண்ட ஆண்டு. அப்பொழுது பைபிள் செய்தியை ஆறு கண்டங்களில் விளம்பரப்படுத்துவதற்காக யெகோவாவின் சாட்சிகள் 408 நிலையங்களைக் கொண்ட ஓர் ஒலிபரப்பு இணைப்பு ஏற்பாடு பயன்படுத்தப்பட்டது.
●1934. தூக்கிச்செல்லக்கூடிய ஒலிப்பதிவுப்பெட்டிகளும் நிமிடத்துக்கு 78 முறை சுற்றும் ஒலிப்பதிவுத்தட்டுகளும். அந்தச் சமயத்தில் நவீனமாயிருந்த இந்தத் தொடர்பு சாதனத்தை யெகோவாவின் சாட்சிகள் பத்து ஆண்டுகளாக பயன்படுத்தினர், தேவையைப் பூர்த்திசெய்ய ஏறக்குறைய 20,000 ஒலிப்பதிவுப்பெட்டிகளை உற்பத்திச் செய்தனர்.
பலமான கடைசி சாட்சி!
இரண்டாம் உலக மகா யுத்தம் 1945-ல் முடிவுக்கு வருகையில் யெகோவாவின் சாட்சிகள் ஈடு இணையற்ற அளவுக்குப் பிரசங்க ஊழியத்தில் இறங்க ஆயத்த நிலையிலிருந்தனர். தம்முடைய சீஷர்கள் தம்மைவிட “பெரிய கிரியைகளைச்” செய்வார்கள் என்று இயேசு சொன்னார். இது அவர்கள் செய்யும் பிரசங்க வேலையின் அளவில் இருக்கும். இந்தத் தீர்க்கதரிசனம் எவ்வளவு உண்மையாக நிரூபித்துவிட்டிருக்கிறது!—யோவான் 14:12.
1987-ம் ஆண்டில், 210 நாடுகளிலுள்ள முப்பத்திநான்கு இலட்சம் சாட்சிகள் பிரசங்கிப்பதிலும் கற்பிப்பதிலும் 70 கோடி மணிநேரத்தை செலவுசெய்திருக்கின்றனர். “நீங்கள் உலகில் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலுஞ்சரி, யெகோவாவின் சாட்சிகளைச் சந்திக்காமல் இருக்க முடியாது,” என்கிறார் சர்ச் ஆப் இங்கிலாந்தின் பாதிரி ஜாக் ரெளண்டில். மேலும் அவர் குறிப்பிடுவதாவது: “தங்களுடைய சாட்சி வேலையைக் கடைவீதிகளிலும், பொது மேடைகளிலிருந்தும், எங்கெல்லாம் ஆட்களைக் காண முடிகிறதோ அங்கெல்லாம் செய்கிறார்கள். ஆனால் சாட்சிகளின் தனித்தன்மைவாய்ந்த முறை என்னவெனில், தங்களை அனுமதிக்கும் எந்த ஒரு வீட்டிற்குள்ளும் பிரவேசித்து அங்குள்ளவர்களுக்குச் செய்தியை அளிப்பதாகும். அநேக சமயங்களில் அவர்கள் வீட்டு வாசற்படிக்குமேல் அனுமதிக்கப்படுவதில்லை, அவ்விதம் இருக்கும்போது அவர்கள் வாசற்படியையே மேடையாக பயன்படுத்திக்கொள்வார்கள்.”
வாய்மூல விளம்பரத்தின் ஊதியப் பங்கு மிக அதிகம், அந்த ஆண்டினூடே 2,30,000-க்கும் அதிகமான புதிய சாட்சிகள் முழுக்காட்டப்பட்டார்கள். இயேசு கிறிஸ்துவின் மரண ஆண்டு நினைவு ஆசரிப்புக்கு ஏறக்குறைய தொண்ணூறு இலட்சம் மக்கள் அவர்களுடைய ராஜ்ய மன்றங்களில் கூடிவந்தார்கள்.
உலகமுழுவதுமுள்ள அவர்களுடைய அச்சகங்களிலிருந்து இலட்சக்கணக்கான புத்தகங்களும், சிறுபுத்தகங்களும், துண்டுப்பிரதிகளும் 200 மொழிகளில் பெருக்கெடுத்துவருகின்றன. காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள்தான் உலகில் மிக அதிகமாக விநியோகிக்கப்படும் மத பத்திரிகைகள். இவை இரண்டும் சேர்ந்து மாதந்தர விநியோகிப்பு 4.6 கோடி பிரதிகள். ஆனால் இவை ஒருபோதும் வர்த்தக விளம்பரங்களைக் கொண்டிருந்ததில்லை. சாட்சிகளின் புத்தகங்களில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தின் விநியோகிப்பு 116 மொழிகளில் 10.6 கோடி பிரதிகளாகும்! அவர்கள் பிரசுரிக்கும் பைபிள் அடிப்படைக்கொண்ட மற்ற புத்தகங்கள் ஒவ்வொன்றும் பல இலட்சங்களாகும்.
ஆம், மனிதனுடைய விவகாரங்களை விரைவில் மாற்றிமைக்கப்போகும் நீதியுள்ள அரசாங்கமாகிய கடவுளுடைய ராஜ்யத்தையும் அதன் ராஜாவையும் விளம்பரப்படுத்துவதற்கு யெகோவாவின் சாட்சிகள் நன்கு ஆயத்தமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நோக்கமுடையதாயிருக்கும் அவர்களுடைய உற்சாகமிகுந்த விளம்பரம் உண்மையிலேயே ஒரு சக்திவாய்ந்த கிறிஸ்தவ ஆயுதம்! (g88 2⁄8)
[பக்கம் 9-ன் படங்கள்]
பிரசங்க ஊழியத்தில் ஒலிப்பதிவுப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன
அந்நாட்களில், புகைப்பட-நாடகம் குறித்த விளம்பரம் திரளான ஆட்களைக் கவர்ந்தது
[பக்கம் 10-ன் படங்கள்]
ஏறக்குறைய 54,000 சபைகளிலிருக்கும் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிக்கின்றனர்
சாட்சிகள் இப்பொழுது 200-க்கும் அதிகமான நாடுகளில் பிரசங்கிக்கின்றனர்
உலகமுழுவதும் இதுபோன்ற அச்சகங்களிலிருந்து இலட்சக்கணக்கான பைபிள் பிரசுரங்கள் ஏறக்குறைய 200 மொழிகளில் வெளிவருகின்றன