கிறிஸ்தவர்களும் இன்றைய மனித சமுதாயமும்
“என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.” —மத்தேயு 24:9.
1. கிறிஸ்தவத்தின் குறிப்பிடத்தக்க அடையாளக்குறியாக இருக்கப்போவது என்னவாக இருந்தது?
உலகத்திலிருந்து பிரிந்திருத்தல் பூர்வ கிறிஸ்தவர்களின் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளக்குறியாக இருந்தது. தம்முடைய பரலோக தந்தை யெகோவாவிடம் ஜெபிக்கையில், கிறிஸ்து தம்முடைய சீஷர்களைப்பற்றி சொன்னார்: “நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.” (யோவான் 17:14) பொந்தியு பிலாத்துக்கு முன்பாக வரவழைக்கப்பட்டபோது, இயேசு குறிப்பிட்டார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல.” (யோவான் 18:36) பண்டைய கிறிஸ்தவம் உலகத்திலிருந்து பிரிந்திருத்தல், கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களாலும் சரித்திராசிரியர்களாலும் சான்றளிக்கப்படுகிறது.
2. (அ) காலம் கடந்துசெல்கையில், இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்கும் உலகிற்கும் இடையில் இருந்த உறவில் ஏதாவது மாற்றம் ஏற்படப்போவதாக இருந்ததா? (ஆ) தேசத்தாரின் மதமாற்றத்தின்மூலம் இயேசுவின் ராஜ்யம் வருவதாக இருந்ததா?
2 அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் உலகத்திற்கும் இடையிலான உறவில் ஒரு மாற்றம் வரும் என்றும், உலகம் கிறிஸ்தவத்திற்கு மாற்றப்படுவதன்மூலமாக அவருடைய ராஜ்யம் வரும் என்றும் இயேசு பின்னர் வெளிப்படுத்தினாரா? இல்லை. இயேசுவின் மரணத்திற்குப்பின் அவரைப் பின்பற்றுபவர்கள் ஏவுதலால் எழுதிய எதுவும் அப்படி ஒரு காரியத்தை மறைமுகமாகக்கூட குறிப்பிடவில்லை. (யாக்கோபு 4:4 [பொ.ச. 62-க்கு சற்று முன்னர் எழுதப்பட்டது]; 1 யோவான் 2:15-17; 5:19 [சுமார் பொ.ச. 98-ல் எழுதப்பட்டது]) அதற்கு மாறாக, பைபிள் இயேசுவின் ‘வந்திருத்தலை’யும் அதைத் தொடர்ந்து அவர் ராஜ்ய வல்லமையில் ‘வருவதை’யும், அதன் ‘முடிவில்’ அல்லது அழிவில் உச்சமுடிவடையும் ‘காரிய ஒழுங்குமுறையின் முடிவு’டன் தொடர்புபடுத்துகிறது. (மத்தேயு 24:3, 14, 29, 30; தானியேல் 2:44; 7:13, 14) இயேசு தம்முடைய பரோசீயா அல்லது வந்திருத்தலுக்கான அடையாளத்தைக் கொடுத்தபோது, தம்மை உண்மையாகப் பின்பற்றுபவர்களைக்குறித்துச் சொன்னார்: “அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.”—மத்தேயு 24:9.
இன்று உண்மை கிறிஸ்தவர்கள்
3, 4. (அ) பூர்வ கிறிஸ்தவர்களை ஒரு கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா எப்படி விவரிக்கிறது? (ஆ) என்ன ஒத்த கூற்றுகளில் யெகோவாவின் சாட்சிகளும் பூர்வ கிறிஸ்தவர்களும் விவரிக்கப்படுகின்றனர்?
3 கிறிஸ்தவ நியமங்களுக்கு உண்மையுடன் இருந்து இந்த உலகத்திலிருந்து பிரிந்திருப்பதற்காகவும், அதன் அங்கத்தினர் வெறுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்காகவும் எந்த மதத்தொகுதி பெயரைச் சம்பாதித்துள்ளது? பூர்வ கிறிஸ்தவர்களைப்பற்றிய சரித்திரப்பூர்வமான விவரிப்புகளுக்கு, ஒவ்வொரு அம்சத்திலும் எந்த உலகளாவிய கிறிஸ்தவ அமைப்பு ஒத்திருக்கிறது? இவற்றைக்குறித்து, நியூ கத்தோலிக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது: “பண்டைய கிறிஸ்தவ சமுதாயம், யூத சமுதாயச்சூழலின் மற்றொரு உட்பிரிவு என்று முதலில் எண்ணப்பட்டிருந்தாலும், மிக முக்கியமாக ‘யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும்’ கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாகச் சேவித்த அதன் அங்கத்தினரின் வைராக்கியத்திலும், அதன் இறைமையியல் போதனையிலும் தனித்தன்மை வாய்ந்ததாக நிரூபித்தது (அப்போஸ்தலர் 1.8).”—தொகுதி 3, பக்கம் 694.
4 “மற்றொரு உட்பிரிவு என்று . . . எண்ணப்பட்டிருந்தாலும்,” “சாட்சிகளாக . . . வைராக்கியத்திலும்,” “அதன் . . . போதனையிலும் தனித்தன்மை வாய்ந்ததாக,” என்ற பதங்களைக் கவனியுங்கள். இப்பொழுது அதே என்ஸைக்ளோப்பீடியா யெகோவாவின் சாட்சிகளை எப்படி விவரிக்கிறது என்பதைக் கவனியுங்கள்: “ஒரு மதப்பிரிவு . . . உலகத்தின் முடிவு ஒருசில வருடங்களுக்குள் வந்துவிடும் என சாட்சிகள் ஆழ்ந்த உறுதியுடன் நம்புகின்றனர். இந்தத் தெளிவான நம்பிக்கையே அவர்களுடைய களைப்பூட்டமுடியாத வைராக்கியத்திற்குப் பின்னிருக்கும் பலத்த உந்துவிக்கும் சக்தியாக இருப்பதாகத் தோன்றுகிறது. . . . நெருங்கிக்கொண்டிருக்கும் அவருடைய ராஜ்யத்தைப்பற்றி அறிவிப்பதன்மூலம் யெகோவாவுக்குச் சாட்சி கொடுப்பதே இந்தப் பிரிவின் ஒவ்வொரு அங்கத்தினருடைய அடிப்படை கடமையாகும். . . . அவர்கள் பைபிளைத் தங்களுடைய நம்பிக்கைக்கு ஒரே ஊற்றுமூலமாகவும் ஒழுக்கநடத்தைக்கான சட்டமாகவும் கருதுகின்றனர் . . . ஓர் உண்மையுள்ள சாட்சியாக இருப்பதற்கு ஒருவர் ஏதாவது ஒரு வழியில் திறம்பட்டவராகப் பிரசங்கிக்கவேண்டும்.”—தொகுதி 7, பக்கங்கள் 864-5.
5. (அ) யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகள் என்ன வழிகளில் தனித்தன்மைவாய்ந்தவையாக இருக்கின்றன? (ஆ) யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகள் வேத எழுத்துக்களுக்கு ஒத்திசைவாக இருப்பதைக் காண்பிக்கும்விதத்தில் உதாரணங்களைக் கொடுங்கள்.
5 யெகோவாவின் சாட்சிகளின் போதனைகள் என்ன வழிகளில் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன? நியூ கத்தோலிக் என்ஸைக்ளோப்பீடியா ஒருசிலவற்றைக் குறிப்பிடுகிறது: “அவர்கள் [யெகோவாவின் சாட்சிகள்] திரித்துவத்தைப் புறமத விக்கிரகாராதனை என்பதாகக் கண்டனம் செய்கின்றனர் . . . அவர்கள் இயேசுவை யெகோவாவின் சாட்சிகளில் மிகப் பெரியவராக, ‘ஒரு தேவனாக’ (அவ்வாறே யோவான் 1.1-ஐ அவர்கள் மொழிபெயர்க்கின்றனர்), ஆனால் வேறொருவருக்கும் அல்லாமல் யெகோவாவுக்கு மட்டுமே கீழ்ப்பட்டவராகக் கருதுகின்றனர். . . . ஒரு மனிதனாக மரணமடைந்து ஓர் அழியாத ஆவிக்குரிய குமாரனாக உயிர்ப்பிக்கப்பட்டார். அவருடைய பாடுகளும் மரணமும், பூமியில் மனிதவர்க்கம் என்றென்றுமாக வாழும் உரிமையைத் திரும்ப பெறுவதற்கு அவர் கொடுக்கவேண்டிய விலையாக இருந்தது. உண்மையில், அந்தப் ‘பெருந்திரளான’ (திருவெளி 7.9) உண்மை சாட்சிகள் ஒரு பூமிக்குரிய பரதீஸில் நம்பிக்கை வைக்கின்றனர்; வெறும் 1,44,000 உண்மையுள்ளவர்களே (திருவெளி 7.4; 14.1, 4) கிறிஸ்துவுடன் பரலோக மகிமையை அனுபவிக்கக்கூடும். துன்மார்க்கர் முழுமையான அழிவை அடைவர். . . . ஞானஸ்நானம்—முழுக்காட்டுதல்மூலமாக சாட்சிகளால் கைக்கொள்ளப்படுவது . . . யெகோவா தேவனைச் சேவிப்பதற்கான அவர்களுடைய ஒப்புக்கொடுத்தலின் வெளிப்படையான அடையாளமாக [இருக்கிறது]. . . . இரத்தமேற்றுதல்களை மறுப்பதன்மூலம் யெகோவாவின் சாட்சிகள் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கின்றனர் . . . அவர்களுடைய தாம்பத்திய உறவும் பாலின ஒழுக்கமும் மிக உறுதியானவையாக இருக்கின்றன.” இந்த வழிகளில் யெகோவாவின் சாட்சிகள் தனித்தன்மைவாய்ந்தவர்களாக இருக்கக்கூடும்; ஆனால் இந்த எல்லாக் குறிப்புகளிலும் அவர்களுடைய நிலைநிற்கை, பைபிளை உறுதியான அடிப்படையாகக் கொண்டது.—சங்கீதம் 37:29; மத்தேயு 3:16; 6:10; அப்போஸ்தலர் 15:28, 29; ரோமர் 6:23; 1 கொரிந்தியர் 6:9, 10; 8:6; வெளிப்படுத்துதல் 1:5.
6 இந்த ரோமன் கத்தோலிக்க படைப்பு, 1965-ல் (இந்தக் கட்டுரை எழுதப்பட்ட வருடமாகத் தோன்றுகிறது) “சாட்சிகள் இன்னும் தாங்கள் வாழ்ந்துவந்த சமுதாயத்தின் பாகமாக இருப்பதாகக் கருதவில்லை” என்று தொடர்ந்து சொல்கிறது. காலம் கடந்துசென்று, யெகோவாவின் சாட்சிகள் அதிக எண்ணிக்கையாகி, “ஒரு மதப்பிரிவாக இல்லாமல் ஒரு சர்ச்சின் பண்புக்கூறுகளை அதிகமதிகமாக” எடுத்துக்கொள்ளும்போது, அவர்களும் இந்த உலகத்தின் பாகமாகிவிடுவர் என்று இந்த எழுத்தாளர் நினைத்ததாகத் தோன்றுகிறது. ஆனால் அது உண்மையாக நிரூபிக்கவில்லை. இன்று, 1965-ல் இருந்ததைவிட நான்கு மடங்குக்கும் அதிகமான சாட்சிகளாகியும், யெகோவாவின் சாட்சிகள் இந்த உலகம் சம்பந்தமாக தொடர்ந்து தங்களுடைய நிலையைக் காத்துவந்திருக்கின்றனர். இயேசு “உலகத்தானல்லாததுபோல,” “அவர்களும் உலகத்தாரல்ல.”—யோவான் 17:16.
பிரிந்திருந்தாலும் விரோதிகளாக அல்ல
7, 8. பூர்வ கிறிஸ்தவர்களைக்குறித்து உண்மையாய் இருந்ததுபோலவே, இன்று யெகோவாவின் சாட்சிகளைக்குறித்து எது உண்மையாக இருக்கிறது?
7 இரண்டாம் நூற்றாண்டில் தன் மதத்தை ஆதரித்து வாதிடுபவரான ஜஸ்டின் மார்டரால் சொல்லப்பட்ட பூர்வ கிறிஸ்தவர்களின் வாதத்தைக் குறிப்பிடுபவராய், ராபர்ட் M. கிரான்ட் பூர்வ கிறிஸ்தவமும் சமுதாயமும் (Early Christianity and Society) என்ற தன்னுடைய புத்தகத்தில் எழுதினார்: “கிறிஸ்தவர்கள் புரட்சிக்காரர் என்றால் அவர்கள் தங்களுடைய இலக்கை அடைவதற்காக மறைந்திருப்பார்கள். . . . சமாதானம் மற்றும் நல்லொழுங்கு நடவடிக்கைகளில் அவர்கள் பேரரசரின் மிகவும் நல்ல நண்பராக இருக்கின்றனர்.” அதேவிதமாக, இன்று யெகோவாவின் சாட்சிகள் உலகெங்கும் சமாதானத்தை விரும்பும் ஒழுங்குள்ள குடிமக்கள் என்பதாக அறியப்பட்டிருக்கின்றனர். எந்த வகையான அரசாங்கங்களும், யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து பயப்படுவதற்கு எதுவுமில்லை என்று அறிந்திருக்கின்றனர்.
8 ஒரு தென்னமெரிக்க பதிப்பாசிரியர் எழுதினார்: “எந்த ஓர் அரசியல் ஆட்சிமுறைக்கும் யெகோவாவின் சாட்சிகள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று நம்பவேண்டுமானால், ஒரு குருட்டுப் பிடிவாதமுள்ள, மிகவும் சந்தேகத்திற்குரிய கற்பனை தேவைப்படுகிறது; ஒரு மத அமைப்பு எந்த அளவிற்கு விரோத மனப்பான்மையின்றி சமாதானத்தை நேசிப்பதாக இருக்கமுடியுமோ அந்த அளவிற்கு அவர்கள் இருக்கிறார்கள்.” லாப்ஷெக்ஸியான் டி கான்ஷியன்ஸ் (மனச்சாட்சிப்பூர்வமான தடை) என்ற தன்னுடைய புத்தகத்தில், ஷான்பையர் காட்லேன் எழுதுகிறார்: “சாட்சிகள் அதிகாரிகளுக்கு முழுமையாகக் கீழ்ப்பட்டும் பொதுவாகச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தும் இருக்கின்றனர்; அவர்கள் தங்கள் வரிகளைச் செலுத்துகின்றனர்; இந்த உலகத்தின் விவகாரங்களைப்பற்றி கவலை கொள்ளாதவர்களாய் இருப்பதால், அரசாங்கங்களைக் கேள்விகேட்கவோ, மாற்றவோ, அல்லது அழிக்கவோ முயலுவதில்லை.” தாங்கள் முழுமையாகக் கடவுளுக்கென்று ஒப்புக்கொடுத்திருக்கும் தங்கள் வாழ்க்கையை அரசாங்கம் கேட்கும்போது மட்டுமே, யெகோவாவின் சாட்சிகள் கீழ்ப்படிய மறுக்கின்றனர் என்று காட்லேன் தொடர்ந்து கூறுகிறார். இதில் அவர்கள் பூர்வ கிறிஸ்தவர்களை மிகவும் ஒத்திருக்கின்றனர்.—மாற்கு 12:17; அப்போஸ்தலர் 5:29.
ஆட்சிபுரியும் வகுப்பினரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டனர்
9. உலகத்திலிருந்து பிரிந்திருப்பதைக்குறித்ததில், பூர்வ கிறிஸ்தவர்களுக்கும் நவீன நாளைய கத்தோலிக்கருக்கும் இடையிலான ஒரு முனைப்பான வித்தியாசம் என்ன?
9 பெரும்பான்மையான ரோமப் பேரரசர்கள் பூர்வ கிறிஸ்தவர்களைத் தவறாகப் புரிந்துகொண்டு அவர்களைத் துன்புறுத்தினர். பொ.ச. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகச் சிலரால் எண்ணப்படும் தி எபிஸில் டு டியோக்னிடஸ் இதன் காரணத்தைக் காண்பிப்பதாய் அறிவிக்கிறது: “கிறிஸ்தவர்கள் உலகத்தில் வாழ்கின்றனர், ஆனால் அவர்கள் உலகத்தில் ஈடுபட்டவர்களாய் இல்லை.” மறுபட்சத்தில், இரண்டாம் வாடிகன் ஆலோசனை சபையில், சர்ச்சைப்பற்றிய கொள்கைப்பிடிவாதமான சட்ட அமைப்பில், கத்தோலிக்கர் “உலகியல்சார்ந்த விவகாரங்களில் ஈடுபடுவதன்மூலம் கடவுளுடைய ராஜ்யத்தைத் தேடவேண்டும்” என்றும் “உலகம் பரிசுத்தப்படும்படியாக உள்ளிருந்து நாம் உழைக்க வேண்டும் என்றும்,” குறிப்பிட்டது.
10. (அ) ஆளும் வகுப்பினரால் பூர்வ கிறிஸ்தவர்கள் எவ்வாறு கருதப்பட்டனர்? (ஆ) யெகோவாவின் சாட்சிகள் பெரும்பாலும் எவ்வாறு கருதப்படுகின்றனர், அவர்களுடைய பிரதிபலிப்பு என்ன?
10 பூர்வ கிறிஸ்தவர்கள் “ஒருவிதமான வெறுக்கத்தக்க ஆர்வமிக்கவர்கள்” என்று ரோமப் பேரரசர்கள் கருதியதாக சரித்திராசிரியராகிய E. G. ஹார்டி குறிப்பிடுகிறார். “ஒரு வினோதமான மதப்பிரிவாக [கிறிஸ்தவர்கள்] அவர்கள் கண்டதை எவ்வளவு வெறுப்போடு பண்பட்ட கிரேக்கரும் ரோம அதிகாரிகளும் வைத்திருந்தனர்,” என்பதைப்பற்றி பிரஞ்சு சரித்திராசிரியர் ஏடியன் டிராக்மா கூறுகிறார். பொதுவாக, ஆளும் வகுப்பினர் கிறிஸ்தவத்தின் உண்மையான தன்மையைக்குறித்து அறியாதவர்களாக இருந்தனர் என்று இளைய பிளைனி, பிதானியாவின் ரோம ஆளுநர், பேரரசர் டிராஜன் ஆகியோர் மத்தியிலிருந்த தொடர்பு காண்பிக்கிறது. அதேவிதமாக இன்றும், யெகோவாவின் சாட்சிகள் உலகின் ஆளும் வகுப்பினரால் அடிக்கடி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டும், இகழப்பட்டுங்கூட இருக்கின்றனர். இருப்பினும், இது சாட்சிகளை ஆச்சரியப்படுத்துவதோ திகைப்பூட்டுவதோ இல்லை.—அப்போஸ்தலர் 4:13; 1 பேதுரு 4:12, 13.
‘எங்கும் இதற்கு விரோதமாகப் பேசப்படுகிறது’
11. (அ) பூர்வ கிறிஸ்தவர்களைப்பற்றி என்ன காரியங்கள் சொல்லப்பட்டன, யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி என்ன காரியங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன? (ஆ) ஏன் யெகோவாவின் சாட்சிகள் அரசியலில் கலந்துகொள்வதில்லை?
11 பூர்வ கிறிஸ்தவர்களைப்பற்றி இவ்வாறு சொல்லப்பட்டது: “எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கி”றோம். (அப்போஸ்தலர் 28:22) பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில், கிறிஸ்தவம் மனித சமுதாயத்தின் அடிமட்ட பகுதியினருக்குத்தான் கவர்ச்சிகரமாக இருந்ததென புறமத செல்சஸ் உரிமைபாராட்டினார். அதேவிதமாகவே, யெகோவாவின் சாட்சிகளைக்குறித்தும், “அவர்கள் பெரும்பாலும் சமுதாயத்தின் பின்தங்கியவர்களிலிருந்து கவர்ந்திழுக்கப்படுகின்றனர்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. சர்ச் சரித்திராசிரியர் அகஸ்டஸ் நெயான்டர், “கிறிஸ்தவர்கள் உலகத்திற்கு மரித்தவர்களாகவும், வாழ்க்கையின் எல்லா காரியங்களிலும் பிரயோஜனமற்றவர்களாகவும் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டனர்; . . . மேலும் எல்லாரும் அவர்களைப்போல் இருந்தால் வாழ்க்கையின் போக்கு என்னவாகும் என்று கேட்கப்பட்டது” என்று அறிக்கையிட்டார். யெகோவாவின் சாட்சிகள் அரசியலில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதால், அவர்கள் அடிக்கடி மனித சமுதாயத்தின் பயனற்ற பகுதியெனவும் குற்றஞ்சாட்டப்படுகின்றனர். ஆனால் அவர்கள் அரசியலில் சுறுசுறுப்பானவர்களாக இருந்துகொண்டு, அதே நேரத்தில் மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கை என்பதாகச் சொல்லும் கடவுளுடைய ராஜ்யத்தின் அறிவிப்பாளர்களாகவும் எப்படி இருக்க முடியும்? யெகோவாவின் சாட்சிகள் அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளை மனதில் கொள்கின்றனர்: “கிறிஸ்து இயேசுவின் நல்ல படைவீரனைப்போல் துன்பத்தில் பங்குகொள்ளுங்கள். படையில் சேர்ந்துகொண்ட எவனும் அன்றாட வாழ்க்கை அலுவல்களில் ஈடுபடுவதில்லை. ஏனென்றால் தன்னை அதில் சேர்த்துக்கொண்டவனைத் திருப்தி செய்வது அவனுடைய நோக்கமாக இருக்கிறது.”—2 தீமோத்தேயு 2:3, 4, ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வெர்ஷன், ஒரு பரவலான பதிப்பு.
12. பிரிந்திருத்தலின் எந்த முக்கியமான அம்சத்தில் யெகோவாவின் சாட்சிகள் பூர்வ கிறிஸ்தவர்களை ஒத்திருக்கின்றனர்?
12 கிறிஸ்தவத்தின் ஒரு சரித்திரம் (A History of Christianity) என்ற தன்னுடைய புத்தகத்தில் K. S. லாட்யூரெட் எழுதுகிறார்: “கிரேக்க ரோம உலகுடன் பூர்வ கிறிஸ்தவர்கள் வேறுபட்டிருந்த பிரச்னைகளில் ஒன்று யுத்தத்தில் கலந்துகொள்ளுதலாகும். நம்முடைய காலம் வரையாக நிலைத்திருக்கும் முதல் மூன்று நூற்றாண்டுகளின் எந்தக் கிறிஸ்தவ நூலும் கிறிஸ்தவர்கள் யுத்தங்களில் கலந்து கொள்வதை ஆதரித்து எழுதவில்லை.” எட்வர்ட் கிப்பனின் தி டிக்லைன் அன்ட் ஃபால் ஆஃப் தி ரோமன் எம்பையர் குறிப்பிடுகிறது: “ஓர் அதிக புனிதமான கடமையைத் துறக்காமல், கிறிஸ்தவர்கள் படைவீரராக, அரசியல் அதிகாரிகளாக, அல்லது அரசர்களாக பதவி ஏற்பது கூடாததாக இருந்தது.” அதேவிதமாக, யெகோவாவின் சாட்சிகள் கண்டிப்பான நடுநிலைமையை ஏற்றுக்கொண்டு, ஏசாயா 2:2-4 மற்றும் மத்தேயு 26:52-ல் வரையறுக்கப்பட்டுள்ள பைபிள் நியமங்களைப் பின்பற்றுகின்றனர்.
13. யெகோவாவின் சாட்சிகள்மேல் என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன, ஆனால் உண்மைகள் என்ன காண்பிக்கின்றன?
13 யெகோவாவின் சாட்சிகள் குடும்பங்களில் பிளவுகளை உண்டாக்குவதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றனர். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அங்கத்தினர் யெகோவாவின் சாட்சிகளாவதால் பிரிவுற்றிருக்கும் குடும்பங்கள் இருப்பது உண்மைதான். இது சம்பவிக்கும் என்று இயேசு முன்னறிவித்தார். (லூக்கா 12:51-53) இருப்பினும், இந்தக் காரணத்துக்காக திருமணங்கள் முறிவது விதிவிலக்காக இருப்பதைப் புள்ளிவிரங்கள் காண்பிக்கின்றன. உதாரணமாக, பிரான்சில் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில், 3 திருமண தம்பதிகளில் ஒருவர் சாட்சியல்லாத மணத்துணைவராக இருக்கிறார். இருந்தாலும், இந்தக் கலப்புத் திருமணங்களிலுள்ள மணவிலக்கு விகிதம் அங்குள்ள தேசிய சராசரியைவிட அதிகமாக இல்லை. ஏன்? அப்போஸ்தலர்கள் பவுலும் பேதுருவும், அவிசுவாசிகளை மணந்துகொண்ட கிறிஸ்தவர்களுக்கு ஞானமான, ஏவப்பட்ட அறிவுரையைக் கொடுத்துள்ளார்கள்; யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடைய வார்த்தைகளைப் பின்பற்ற முயலுகின்றனர். (1 கொரிந்தியர் 7:12-16; 1 பேதுரு 3:1-4) ஒரு கலப்புத் திருமணம் பிளவுபட்டால், பெரும்பாலும் அதற்கான முன்முயற்சி சாட்சியல்லாத துணையிடமிருந்தே எப்போதும் வருகிறது. மறுபட்சத்தில், திருமண துணைகள் யெகோவாவின் சாட்சிகளாகி, தங்களுடைய வாழ்க்கையில் பைபிள் நியமங்களைப் பொருத்திப் பிரயோகிக்கத் துவங்கியதால் எத்தனையோ ஆயிரக்கணக்கான திருமணங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.
கிறிஸ்தவர்கள், திரித்துவ கொள்கையினர் அல்ல
14. பூர்வ கிறிஸ்தவர்களுக்கு எதிராக என்ன குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது, இது ஏன் முரண்பாடானதாக இருக்கிறது?
14 ரோம பேரரசில், பூர்வ கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்றாகிய அவர்கள் நாத்திகர்கள் என்பது முரண்பாடானதாக இருக்கிறது. டாக்டர் அகஸ்டஸ் நெயான்டர் எழுதுகிறார்: “புறமதத் தெய்வங்களை மறுதலிப்பவர்கள், நாத்திகர்கள், . . . என்பதே மக்கள் மத்தியில் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொதுப் பெயராக இருந்தது.” உயிருள்ள சிருஷ்டிகரை, பல கடவுட்களை அல்ல, வழிபட்ட கிறிஸ்தவர்கள், ‘தேவர்களே அல்லாத, மனுஷர் கைவேலையான மரமும் கல்லுமானவற்றை’ வழிபட்டுவந்த புறமதத்தினரால் நாத்திகர்கள் என்று பெயரிடப்படுவது எவ்வளவு வினோதமாக இருக்கிறது.—ஏசாயா 37:19.
15, 16. (அ) சில மதவாதிகள் யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி என்ன சொல்லியிருக்கின்றனர், ஆனால் இது என்ன கேள்வியை எழுப்புகிறது? (ஆ) யெகோவாவின் சாட்சிகள் உண்மையில் கிறிஸ்தவர்கள் என்று எது காட்டுகிறது?
15 இன்று யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவர்கள் என்பதைச் சில கிறிஸ்தவமண்டல அதிகாரிகள் மறுக்கும் உண்மை அதைப்போலவே முரண்பாடானதாக இருக்கிறது. ஏன்? ஏனென்றால் சாட்சிகள் திரித்துவத்தை நிராகரிக்கின்றனர். கிறிஸ்தவமண்டலத்தின் ஒருபக்கம் சாய்ந்த விளக்கத்தின்படி, “கிறிஸ்துவைக் கடவுளாக ஏற்பவர்களே கிறிஸ்தவர்கள்.” இதற்கு மாறாக, ஒரு நவீன அகராதி, “கிறிஸ்தவன்” என்ற பெயர்ச்சொல்லை, “இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்து அவருடைய போதனைகளைப் பின்பற்றும் ஒருவர்” என்றும் மேலும் “கிறிஸ்தவம்” என்பது “இயேசு கிறிஸ்துவின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டதும், அவர் கடவுளுடைய மகன் என நம்புவதுமான ஒரு மதம்,” என்றும் விளக்குகிறது. எந்தத் தொகுதி இந்த விளக்கத்திற்கு மிக நெருக்கமாக பொருந்துகிறது?
16 தான் யார் என்பதைப்பற்றிய இயேசுவின் சொந்த அத்தாட்சியை யெகோவாவின் சாட்சிகள் ஏற்றுக்கொள்கின்றனர். அவர் குறிப்பிட்டார்: “நான் . . . தேவனுடைய குமாரன்,” “நான் குமாரனாகிய தேவன்” என்பதாக அல்ல. (யோவான் 10:36; ஒப்பிடவும் யோவான் 20:31.) கிறிஸ்துவைப்பற்றிய அப்போஸ்தலன் பவுலின் ஏவப்பட்ட கூற்றை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்: “அவர் கடவுளுடைய ரூபத்தில் இருந்தும், கடவுளுடன் சமமாயிருப்பதைப் பற்றிக்கொள்ளும் ஒன்றாகக் கருதவில்லை.”a (பிலிப்பியர் 2:6, தி நியூ ஜெருசலெம் பைபிள்) நம் கிறிஸ்தவத்திலுள்ள புறமத நம்பிக்கைகள் (The Paganism in Our Christianity) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது: “இயேசு கிறிஸ்து ஒருபோதும் அப்படிப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க காரியத்தை [ஓர் உடன்சமமான திரித்துவம்] குறிப்பிடவில்லை; மேலும் புதிய ஏற்பாடில் எங்குமே ‘திரித்துவம்’ என்ற அந்த வார்த்தை காணப்படுவதில்லை. நம்முடைய கர்த்தரின் மரணத்திற்கு முந்நூறு வருடங்களுக்குப் பின்னரே அந்தக் கருத்து சர்ச்சால் ஏற்றுக்கொள்ளப்பட்டது; மேலும் அந்தக் கருத்தின் தோற்றம் முழுமையாக புறமதத்துடையதாக இருக்கிறது.” யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்துவைப்பற்றிய பைபிள் போதனையை ஏற்றுக்கொள்கின்றனர், அவர்கள் கிறிஸ்தவர்கள், திரித்துவக் கொள்கையினர் அல்ல.
கலப்பு விசுவாசமாக இல்லை
17. எல்லாவற்றையும் உட்படுத்தும், அல்லது கலப்பு விசுவாச இயக்கத்தில் ஏன் யெகோவாவின் சாட்சிகள் ஒத்துழைப்பதில்லை?
17 யெகோவாவின் சாட்சிகளுக்கு விரோதமாகச் சொல்லப்படும் மற்றுமிரண்டு குறைகள் என்னவென்றால், அவர்கள் கலப்பு விசுவாச இயக்கத்தில் பங்கெடுக்க மறுக்கின்றனர் என்பதும் “பலவந்தப்படுத்தி மதமாறச்செய்தல்” என்று அழைக்கப்படுவதில் ஈடுபடுவதுமேயாகும். இந்த இரண்டு அவதூறுகளும் பூர்வ கிறிஸ்தவர்கள்மீதும் சுமத்தப்பட்டன. கிறிஸ்தவமண்டலம், அவளுடைய கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், மற்றும் புராட்டஸ்டன்ட் பாகங்களுடன் சேர்ந்து, மறுக்கமுடியாத வகையில் இந்த உலகத்தின் ஒரு பாகமாக இருக்கிறது. இயேசுவைப் போலவே, யெகோவாவின் சாட்சிகள் “உலகத்தாரல்ல.” (யோவான் 17:14) கலப்பு விசுவாச இயக்கங்கள் மூலமாக, கிறிஸ்தவமற்ற நடத்தையையும் நம்பிக்கைகளையும் முன்னேற்றுவிக்கும் மத அமைப்புகளுடன் அவர்கள் எவ்வாறு தங்களை இசைவித்துச்செல்லக்கூடும்?
18 பூர்வ கிறிஸ்தவர்களைப்போல, தாங்கள் மட்டுமே உண்மையான மதத்தைக் கடைப்பிடிப்பதாக நம்புவதற்காக யார் யெகோவாவின் சாட்சிகளை நியாயமான முறையில் குற்றஞ்சாட்ட முடியும்? கத்தோலிக்க சர்ச்சுங்கூட, கலப்பு விசுவாச இயக்கத்துடன் ஒத்துழைப்பதாகப் பாசாங்குத்தனமாக உரிமைபாராட்டிக்கொண்டிருக்கையில், இவ்வாறு அறிக்கைசெய்கிறது: “இந்த ஒரே உண்மையான மதம் கத்தோலிக்க மற்றும் அப்போஸ்தல சர்ச்சில் தொடர்ந்து நிலைத்திருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்; ‘நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்’ என்று அப்போஸ்தலரிடம் சொன்னபோது எல்லா மனிதருக்கும் அதைப் பரப்பும் வேலையை இதனிடமே ஒப்படைத்தார்.” (வாடிகன் ஆலோசனை சபை II, “மத சுதந்திரத்தைப்பற்றிய அறிவிப்பு”) தெளிவாகவே, அத்தகைய நம்பிக்கை, களைப்பூட்டமுடியாத வைராக்கியத்துடன் சீஷராக்குவதற்குச் செல்லும்படி கத்தோலிக்கரை உந்துவிப்பதற்குப் போதுமானதாக இல்லை.
19. (அ) யெகோவாவின் சாட்சிகள் எதைச் செய்ய தீர்மானமாய் இருக்கின்றனர், என்ன உள்நோக்குடன்? (ஆ) பின்தொடரும் கட்டுரையில் எது சிந்திக்கப்படும்?
19 யெகோவாவின் சாட்சிகள் அத்தகைய வைராக்கியத்தைக் கொண்டிருக்கின்றனர். கடவுள் விரும்பும் வரையாக அவர்கள் தொடர்ந்து சாட்சிகொடுப்பதற்குத் தீர்மானமாய் இருக்கின்றனர். (மத்தேயு 24:14) அவர்களுடைய சாட்சிபகருதல் வைராக்கியமானது, ஆனால் வலுக்கட்டாயமாய் கருத்துக்களை பிறர்மீது திணிக்கும் தன்மையுடையதல்ல. அது அயலாருக்கான அன்பினால் தூண்டப்பட்டது, மனிதவர்க்கத்தின்மீதான வெறுப்பினால் அல்ல. மனிதவர்க்கத்தில் எத்தனைபேரால் முடியுமோ அத்தனைபேரும் இரட்சிக்கப்படுவர் என்று அவர்கள் நம்புகின்றனர். (1 தீமோத்தேயு 4:16) பூர்வ கிறிஸ்தவர்களைப் போலவே, அவர்கள் “எல்லா மனுஷரோடும் சமாதானமாயி”ருக்க முயலுகின்றனர். (ரோமர் 12:18) அவர்கள் இதை எப்படிச் செய்கிறார்கள் என்பது பின்தொடரும் கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a திரித்துவக் கொள்கை சம்பந்தமாக இந்தப் பகுதியின் கலந்தாலோசிப்பிற்கு, தி உவாட்ச்டவர், ஜூன் 15, 1971, பக்கங்கள் 355-6-ஐ பார்க்கவும்.
விமர்சிப்பதற்கு
◻ பூர்வ கிறிஸ்தவர்களைத் தனிப்படுத்திக்காட்டியது எது, யெகோவாவின் சாட்சிகள் எப்படி அவர்களைப்போல இருக்கின்றனர்?
◻ தாங்கள் நல்ல குடிமக்கள் என்று யெகோவாவின் சாட்சிகள் என்ன வழிகளில் காண்பிக்கின்றனர்?
◻ ஆளும் வகுப்பினர் பூர்வ கிறிஸ்தவர்களை எவ்வாறு கருதினர், அது இப்போது ஏதும் வித்தியாசமாக உள்ளதா?
◻ தாங்கள் சத்தியத்தைக் கொண்டிருக்கின்றனர் என்ற உறுதியான நம்பிக்கை சாட்சிகள் என்ன செய்யும்படி அவர்களைத் தூண்டுகிறது?
6. யெகோவாவின் சாட்சிகள் என்ன நிலைநிற்கையைக் காத்துவந்திருக்கின்றனர்? ஏன்?
18. (அ) தாங்கள் மட்டுமே உண்மை மதத்தைக் கடைப்பிடிக்கின்றனர் என்று உரிமைபாராட்டுவதற்காக ஏன் யெகோவாவின் சாட்சிகள் குற்றஞ்சாட்டப்படக்கூடாது? (ஆ) தாங்கள் உண்மையான மதத்தைக் கொண்டிருப்பதாக நம்பிக்கொண்டிருக்கையில், ரோமன் கத்தோலிக்கர் எதைக் கொண்டில்லை?
[பக்கம் 12-ன் படம்]
கடவுள் விரும்பும் வரையாக தொடர்ந்து சாட்சி கொடுப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் தீர்மானமாய் இருக்கின்றனர்
[பக்கம் 17-ன் படம்]
பிலாத்து சொன்னார்: “இதோ! இந்த மனுஷன்”—உலகத்தின் பாகமாக இராதவர்.—யோவான் 19:5
[படத்திற்கான நன்றி]
“Ecce Homo” by A. Ciseri: Florence, Galleria d’Arte Moderna / Alinari/Art Resource, N.Y.